அத்தியாயம் 12
அன்று இரவு வீடு வந்த சயந்தன், முதல் வேலையாக, “நீ ஏதும் சீராளனிட்ட காசு கேட்டியாமா?” என்று ஷர்மினியை விசாரித்தான்.
“இல்..லையே அண்ணா.”
“எனக்கு அனுப்பி இருக்கிறார். வேண்டாம் எண்டு சொன்னா, ‘அண்டைக்கு நீங்க உங்கட தங்கச்சிக்குப் பாசம் காட்டின மாதிரி நான் என்ர மச்சினனுக்குப் பாசம் காட்டுறன்.’ எண்டு சொல்லுறார்.” என்று சிரித்தான் அவன்.
அவர்களுக்குள் அழகான புரிதலுடன் கூடிய நட்பொன்று ஆரம்பம் முதலே இழையோடிக்கொண்டுதான் இருந்தது. அந்த நெருக்கத்தில் இருவருமே இலகுவாகப் பேசி, கிண்டல் செய்து சிரிப்பது வழமைதான்.
அப்படி இன்றும் கதைத்துக்கொண்டதில் தன் தங்கையின் கணவன் நல்ல மனிதன் என்கிற எண்ணம், எப்போதும்போல இப்போதும் வலுப்பெற்றிருக்க முகம் மலர்ந்திருந்தது சயந்தனுக்கு.
சொந்தம் என்று தன்னை மதித்து, அவன் செய்திருந்த அன்புச் செயலில் நெகிழ்ந்திருந்தான்.
“உனக்கும் சாறி எடுத்துக் குடுக்கச் சொன்னவர். அது மட்டும் வாங்கினனான். இந்தா… இது மிச்சக் காசு. நீ போகேக்க தேவைப்படும். பக்குவமா எடுத்து வை. எனக்கு அன்பாக் கதைச்சு வாழ்த்துச் சொன்னதே போதும். காசு வேண்டாமாம் எண்டு சொல்லிவிடு! நானே திரும்ப திரும்பச் சொல்லுறது மரியாதை இல்ல.” என்று சந்தோசமாய்ச் சொல்லி, அவளிடம் சேலையையும் காசையும் கொடுத்துவிட்டுப் போனான் அவன்.
எதற்கும் தடுமாறாத தமையனின் திடமான அன்பில் அவள் கண்ணோரங்கள் கசிந்தன.
அவள் கணவனும் சளைத்தவனன்று! அவனுக்கு அவளோடுதான் கோபம். மச்சினனுக்கு முறையான மரியாதையைக் கொடுத்துவிட்டானே!
ஆனாலும், தமையனுக்காக அந்தக் காசிலிருந்து ஒரு ரூபாயும் செலவு செய்யவில்லை அவள். அவளிடம் அண்ணாவை குறைவாகக் கதைதான் தானே! என்ன கோபம் என்றாலும் அவளைக் கதைக்கத்தானே அவனுக்கு உரிமையுண்டு!
திருமணத்துக்கு அழைக்க என்று தமையனோடு மாமியார் வீட்டுக்குச் சென்றாள் ஷர்மினி.
உள்ளுக்குள் உதறல். சயந்தனுக்கு இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாது. மறைக்க நினைக்கவில்லைதான். முதலில் இது இவ்வளவு தூரத்துக்குப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறகு, கணவன் தாயின் கதையைக் கேட்டுக்கொண்டு தன்னோடு கதைப்பதில்லை என்று சொல்லி, அவன் மீதான மதிப்பை அவர்கள் மனதில் குறைக்க மனமில்லை.
அதோடு, அவர்களுக்குத் தெரியாமலேயே வந்த பிரச்சனை அப்படியே போய்விடும், எதற்காக வீண் கவலையை அவர்களுக்குக் கொடுப்பான் என்று சொல்லாமலேயே விட்டிருந்தாள்.
இப்போது, மாமி அவளைக் கண்டதும் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தாள். நடுங்கிக்கொண்டே போக, நல்லகாலத்துக்கு மாமனார் மட்டுமே வீட்டிலிருந்தார். நல்லமுறையில் வரவேற்றுக் கதைத்தார்.
“ஷர்மினி அங்க நிக்கிறதால உங்களுக்குப் பிரச்சனை இல்லையே?” அழைப்பிதழை முறையாகக் கொடுத்து அழைத்துவிட்டு, மெல்லக் கேட்டான் சயந்தன்.
“அதுக்கு என்ன தம்பி. அவா அங்கேயே நிக்கட்டும். இங்க சும்மா இருக்கிறதுக்கு அங்க இருந்தா உங்களுக்கும் உதவி, உங்கட அம்மாக்கும் ஆறுதல்தானே.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.
திருமணம் நல்லபடியாக முடிந்தது.
மகிழினியின் கையைப் பற்றிக்கொண்டு, “அம்மா நல்லா கஷ்டப்பட்டுட்டா அண்ணி. அவாவை கடைசிவரைக்கும் உங்கட அம்மா மாதிரி நீங்கதான் பாத்துக்கொள்ள வேணும். சுவிஸுக்கு போனபிறகு கட்டாயம் மாதம் மாதம் செலவுக்கு நான் காசு அனுப்புவன். அது என்ர பொறுப்பு. அவவுக்கு வேண்டியதைச் செய்து பாக்கவேண்டியது உங்கட பொறுப்பு அண்ணி!” என்றாள் கண்ணீரோடு.
“அதெல்லாம் இவர் எனக்கு ஏற்கனவே சொல்லிட்டார். நீ ஒரு ரூபாவும் அனுப்ப தேவையில்லை. மாமி எங்கட பொறுப்பு. நீ சந்தோசமா இருந்தா போதும்!” என்று அணைத்துக்கொண்டாள் அவள்.
நல்லவளாகப் பார்த்து அண்ணாவுக்குக் கட்டிவைத்துவிட்டோம் என்று மனம் நிறைந்து போயிற்று அவளுக்கு!
அவளின் கணவன் வீட்டிலிருந்தும் எல்லோரும் வந்திருந்தார்கள். அவளிடம் குறைந்திருந்த நகைகளைக் கவனித்துவிட்டுப் புருவங்களைச் சுருக்கினார் தேவகி. மணமக்களுக்கு அவள் அணிவித்துவிட்ட நகைகள் வேறு சந்தேகத்தைக் கிளப்பின.
மகனிடம் சாடை மாடையாக விசாரித்து, அவளுக்கு அவன் பணம் எதுவும் அனுப்பவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தவருக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிடுவது சிரமமாக இருக்கவில்லை.
நாட்கள் நகர, அண்ணாவும் அண்ணியும் எளிமையாய், சந்தோசமாய் வாழும் வாழ்க்கையைப் பார்க்கையில், அவர்கள் வாழ்ந்த அந்த ஒரு வாரம் கண்முன்னே வந்து வதைத்தது.
சுகமான அந்த நினைவுகளை மறக்கமுடியாமல் அல்லாடினாள். இவன் பாசம் காட்டாமலேயே இருந்திருக்கலாம். உலகத்திலேயே நீ மட்டும்தான் முக்கியம் என்பதுபோல் அவளை உணரவைத்துவிட்டு, இப்போது மருந்துக்கும் திரும்பிப் பாராதவனின் செயல், அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது.
வயிற்றில் வீற்றிருந்த மகவு வேறு, கணவனின் அருகண்மைக்கும் அவனின் ஆறுதல் பேச்சுக்கும் இன்னுமின்னும் ஏங்க வைத்தது.
நான் பிழையே செய்திருந்தாலும் என்னைத் தாங்கியிருக்க வேண்டாமா என்று குழந்தையாய் மனம் சிணுங்கியது.
தாய்மை அடைந்திருந்த உள்ளம், அவள் என்ன செய்தாலும் மன்னித்திருக்க வேண்டும் என்கிற சலுகையைக் கணவனிடம் எதிர்பார்த்தது.
அவளுக்காக அவன் நிற்க வேண்டாம். ஒரு ஆறுதல் வார்த்தை கூட வேண்டாம். ‘என்னத்துக்கடி இப்பிடிச் செய்தாய்?’ என்கிற கோபமான ஒற்றைக் கேள்வி கூடப் போதுமே! அத்தனையையும் கொட்டிவிடுவாளே! அதன்பிறகு கணவன் எவ்வளவு திட்டினாலும் வாங்கிக்கொள்ளத் தயாராகத்தானே இருக்கிறாள். அவளின் மனக்குமுறல்களை அவளும் யாரிடம் தான் கொட்டுவாள்?
அவளின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலே போய்க்கொண்டிருந்ததில் மனதில் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது.
ஏழ்மை நிறைந்து கிடந்தாலும் மனதில் அமைதியும் சந்தோசமும் நிறைந்து வழிந்த நாட்கள் எங்கோ தொலைவில் சென்றுவிட, இன்றோ மனதிலும் சுமை வயிற்றிலும் சுமை.
தன்னைத் தானே சுமப்பது கூடச் சுமையாகிப் போனது. என்ன வாழ்க்கை இது? இதற்குத்தானா உலகத்தில் இல்லாத அத்தனை கனவுகளையும் கண்டோம்? காதல் சொட்டும் பாடல்களின் வரிகளோடு கண்களை மூடிக் கனவுகளில் மிதந்தோம்? எல்லாம் இந்த நரக வேதனைக்குத்தானா என்று மனம் அரிக்கத் துவங்கியது.
இதற்கிடையில், இனி அவள் விமானப் பயணம் செய்யலாம் என்றதும் அண்ணா மற்றும் உதயனோடு அவளின் மாமாவையும் அழைத்துக்கொண்டு சென்று, அனைத்தையும் செய்துவிட்டு வந்தாள்.
அடுத்த இரண்டு வாரங்களில் விசா வந்துவிட்டபோதும் அவளோடு எடுத்துக் கதைக்கவில்லை அவன். அவள் என்னென்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் மாமியார் வீட்டிலிருந்து தகவல்களாகவே வந்தன. அல்லது, சயந்தன் மூலம் சொல்வித்தான்.
அவளைத் தள்ளி நிறுத்திய அவனது ஒவ்வொரு செய்கையும் அவள் நெஞ்சைப் புண்ணாக்கிக்கொண்டே இருந்தன.
ஒருவித விரக்தி அவளைச் சூழத் துவங்கிற்று! போகத்தான் வேண்டுமா என்றுகூட நினைத்தாள். குழந்தையோடு இருப்பவளைத் திரும்பிப் பார்க்காதவனிடம் குழந்தைக்காகப் போக முடிவு செய்தாள்.
அப்போ நான்? என் மனம்? என் வாழ்க்கை? உள்ளம் அழுதாலும் தயாரானாள்.
முதல் விமானப்பயணம், வயிற்றில் குழந்தையோடு தனியாகப் போகப்போகிறாள். நெஞ்சில் படபடத்துக்கொண்டே இருந்தது. இவ்வளவு பயந்த கோழையாக எப்போது மாறினாள்?
அளவற்ற அன்பைக் கொட்டி, அவளைப் பலகீனப்படுத்திவிட்டு இன்று யாரோபோல் தள்ளி நின்று வதைக்கிறானே. கணவனின் தெம்பான வார்த்தைகளுக்காக மனம் ஏங்கிற்று!
ஆதரவான அவனின் ஒற்றை வார்த்தை, அவளைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று, அவனிடம் சேர்ப்பித்துவிடும் வல்லமை கொண்டதாய்த் தோன்றிற்று!
எல்லோருக்கும் அழைத்து என்னென்ன செய்யவேண்டும் என்றெல்லாம் சொன்னவன் அவளுக்கு மட்டும் அழைக்கவேயில்லை. கடைசியாக அவளுக்கும் அழைத்தான். விமானநிலையத்தில் பயணத்துக்காக வந்திறங்கியபோது!
“பாஸ்போர்ட், விசா எல்லாம் கொண்டுவாறாய் தானே.” என்று கேட்டான்.
“ம்ம்.” எதிர்பார்ப்போடு பதில் சொன்னாள்.
“டிக்கெட்?”
அதையெல்லாம் விட்டுவிட்டு வருவாளா?
“ஓம்.”
அவனுக்கும் எவ்வளவோ கதைக்க வேண்டும் போலத்தான் இருந்தது. அவள் குரலில் தெரிந்த நடுக்கம் வேறு, தனியாக வந்துவிடுவாளா என்கிற பயத்தைக் கூட்டிற்று! ஆறுதலாய்ப் பேசி, தைரியம் கொடுக்கத்தான் மனமும் உந்தியது.
அதுநாள் வரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த கோபத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர இயலாமல், “வேற.. என்ன? கவனமா வா.” என்றான்.
அவ்வளவுதானா? அவ்வளவே தானா? இந்தச் சம்பிரதாயக் கேள்விகளை எல்லோருமே கேட்பார்களே. துக்கப்பந்து ஒன்று தொண்டையைக் கவ்விப்பிடித்து நசுக்கியது.
இன்று ஏறி நாளைதான் அவனிடம் போய்ச் சேரப்போகிறாள். அதற்கு இந்த ஒற்றை வார்த்தை போதுமா?
அவன் புறப்பட்டுச் சென்ற அந்த நாள் நினைவில் வந்தது. அவள் பிறந்து வளர்ந்த ஊரில், வீட்டினரோடுதான் இருக்கப்போகிறாள் என்று தெரிந்தும் எத்தனை கவனங்களை, எத்தனை புத்திமதிகளை, எத்தனை தைரியங்களைத் தந்தான். கொழும்பில் இருந்த நாட்களைச் சொல்லவே தேவையில்லை. இன்று தனியாகப் பிரயாணம் செய்யப் போகிறவளுக்குக் கவனமா வா என்கிற ஒற்றை வார்த்தை போதுமாகிப் போனதா?
கண்ணீரோடு நிமிர்ந்தபோது, அபியும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது.
ஒரு முடிவோடு சென்று அவள் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டாள். கன்னத்தில் வழியத் துவங்கிய கண்ணீரோடு கையை விடுவிக்க அவள் முனைய, “கடைசியா.. ஒரே ஒருக்கா.” என்றாள் கண்ணீரோடு.
மெல்லிய திகைப்புடன் பார்த்தாள் அபி.
“எனக்கும் உனக்குமிடைல என்ன வந்து இவ்வளவு தூரத்துக்கு எங்களைப் பிரிச்சது எண்டு தெரியாது. ஆனா, உன்ர அண்ணாட கலியாணத்துக்கு வாறதுக்கு என்ன உடுப்புப் போடலாம் எண்டு யோசிச்சுக்கொண்டு இருந்த என்னட்டத்தான் வந்து அவர் தன்ர விருப்பத்தைச் சொன்னவர். அந்த நிமிசம் எனக்கும் அவரைப் பிடிச்சிப் போச்சு. இது உனக்கு விளங்குமா தெரியேல்ல. உன்ர மனம் எதிர்பாக்கிற மாதிரியான ஒருத்தர், உனக்கு முன்னால வந்து நிண்டு காதலிக்கிறன் எண்டு சொன்னா உன்னாலையும் மறுக்க ஏலாமத்தான் போகும். அப்பிடி ஒரு ஆள் உனக்கு முன்னால வந்து நிக்கேக்கதான் உனக்கும் அது விளங்கும். அதுக்குப் பிறகாவது என்னோட பழையமாதிரி கதை.” என்று அவள் சொன்னபோது, குற்ற உணர்வு தாக்க அவளை அணைத்துக்கொண்டு உடைந்துபோனாள் அபி.
“சொறியடி ஷர்மி! உண்மையாவே சொறியடி! நான்தான் லூசுத்தனமா எதையெதையோ நினச்சு… ப்ச்!” தன் மனதைச் சொல்லமுடியாமல் கண்ணீர் வடித்தாள் அவள்.
ஆனால், ஷர்மினிக்கு அதுவே போதுமானதாக இருந்தது. “நீ எனக்கு எந்த விளக்கமும் சொல்லவேண்டாம். இதே போதும்.” என்று தானும் கட்டிக்கொண்டாள்.
இருவர் கண்களிலும் சந்தோசக் கண்ணீர்.
தேவகியைப் பார்க்க அவரும் கலங்கிப்போய் நிற்பது தெரிந்தது. அப்போதும் அவர் சொன்ன வார்த்தைகளில் மனம் முரண்டிக்கொண்டுதான் நின்றது. ஆனாலும் இங்கிருந்து போகையில் எல்லாவற்றையும் முடித்துவிட்டுப் போக நினைத்தாள்.
அவரிடம் சென்று, “நான் ஏதாவது பிழை செய்திருந்தா மன்னிச்சிக் கொள்ளுங்கோ மாமி. தெரிஞ்சு ஒண்டும் செய்யேல்ல. அண்டைக்கு வீட்டைவிட்டுப் போயிருக்கக் கூடாது. கோபத்துல யோசிக்காம நடந்திட்டன். சொறி மாமி.” என்றவள், அவர் காலில் விழுந்து வணங்கவும், வயிற்றுப் பிள்ளைக்காரியின் அந்தச் செயல் அவர் நெஞ்சைச் சுட்டுவிட்டது.
அவர் கேட்ட கேள்வியே அவரைப் பார்த்துக் கேவலமாய்ச் சிரிப்பது போலிருக்க, அவர் கண்களிலும் கண்ணீர்.
ஏறிவிட்ட வயது இறங்கிவந்து மன்னிப்புக் கேட்க விடாமல் மறுக்க, “என்னென்னவோ நடந்துபோச்சு. அதையெல்லாம் விடம்மா. விட்டுட்டுக் கவனமாப் போ. ரெண்டுபேரும் சந்தோசமா இருங்கோ. பிள்ளை பத்திரம்.” என்றார் கண்ணீரோடு.
மறைமுகமாய்த் தன் மனதையும் அவர் உரைத்துவிட்டதில் ஆறுதலாய் உணர்ந்தாள் ஷர்மினி.
ஒரு சின்ன விட்டுக்கொடுப்பு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந்தது. ரோசம் பாராமல் இதை முதலே செய்திருக்கலாமோ என்று ஷர்மியும், தேவையில்லாமல் அவளையும் ஒதுக்கி நாமும் ஒதுங்கிப்போனோமே என்று அபியும், பெரிய மனுசியாய் நடந்திருக்கலாமோ என்று தேவகியும் ஒரே நேரத்தில் தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்.
ஆனால், சிலநேரங்களில் காலமும் நேரமும் கூட மனமாற்றங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதும் உண்மைதானே.
அருகிலிருந்தபோது உருவாகிவிட்ட விரிசலை, பிரிந்து செல்லும்போது ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு, தன் எதிர்காலம் நோக்கி மனதில் பாரத்துடன் நடக்கத் துவங்கியிருந்தாள் ஷர்மினி.

