24
மாதத்தில் ஒரு தடவை, மனோகரும் கிருஷ்ணனும் தம் வைத்தியர் குழுவுடன் சேர்ந்து இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர் .
அப்படி ஒருநாள் மருத்துவமுகாமில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, மணல்திட்டு ஒன்றில் சுயநினைவின்றிக் கிடந்ததாகக் கூறி, தலையில் அடிபட்ட காயத்துடன் மீனவர்களால் தூக்கி வரப்பட்டான் ஒருவன்.
நினைவின்றி இருந்தவனுக்கு மனோகரின் மருத்துவக் குழுவினரே மருத்துவம் செய்தனர். ஆனால், அவன் நினைவு இலேசில் திரும்பவில்லை .
நெடுநெடுவென்று வளர்ந்து, இன்னமும் குழந்தை முகம் மாறாமல் இருந்த அந்த பதின்பருவம் மதிக்கத்தக்க இளைஞனின் தோற்றம் பார்த்து, அவனுக்கு மருத்துவம் பார்த்த மனோகருக்கு ஏதோ இனம்புரியாத ஒரு பாசம் அவன் மேல் உருவானது வியப்பே!
ஆதரவுக்கோ துணைக்கோ யாருமின்றி, தன்னுணர்வும் இன்றிக் கிடந்தவனில், அப்படியொரு உணர்வு அவருக்கு ஏற்பட இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. ஆம்! அவர்களுக்கென்று குழந்தைச் செல்வத்தை கடவுள் அருளியிருக்கவில்லை.
ஒரு விடயம் எவ்வளவு தான் முக்கியம் என்றாலும், அது தமக்கு கிடைக்காது போய், பெற்றுக்கொள்ள இருக்கும் வழிகளும் பயனற்றுப் போய், இனிக் கிடைக்கவே கிடைக்காது என்றாகிப் போனால் என்ன மனநிலை இருக்குமோ அம்மனநிலையில் ஆழ்ந்து தவித்தனர் மனோகரும் விமலாவும்.
கடைசியில், ‘நம்ம கையில் எதுவும் இல்லாத போது நமக்கு விதிச்சது இதுதான் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும்!’ என நினைத்துத் தம் மனத்தைச் சாந்தப்படுத்த முயன்றதில் மனோகர் வெற்றி பெற்றாலும், ’என்னால் ஒரு குழந்தையைப் பெற முடியவில்லையே!’ என்ற ஏக்கத்தில் விமலா வீட்டினுள் முடங்கத் தொடங்கியிருந்த காலம் அது.
இப்படி, தன்னைத் தான் ஒடுக்கிக் கொண்டு, மற்றவர்களைத் தவிர்த்து தனிமையில் வாடும் விமலாவை, அதிலிருந்து வெளிக்கொணரும் வழி தெரியாது தவித்த அவரின் அன்புக்கணவரும், தங்கைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தமையனும், தம்மால் அவளைத் தேற்ற முடியவில்லையே என்று மனம் குமைந்து கொண்டிருந்த நேரத்தில், இப்படி வந்து படுத்திருந்தவனால் கவரப்பட்டு, ஏதோ ஒரு மன ஊந்துதலில் அவனைக் குணப்படுத்த முடிவெடுத்த மனோகர், தன்னுடன் இருந்த கிருஷ்ணனிடமும் கலந்தாலோசித்தவர், உரிய ஏற்பாடுகளின் பின்னர் அவனைத் தம் வைத்தியாசாலையில் அனுமதித்துச் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்.
வைத்தியத்தாலும் நல்ல கவனிப்பாலும் நினைவு திரும்பி உடல்தேறிய அந்த இளைஞனோ, தானே யார் என்று தெரியாது பழைய நினைவுகளை எல்லாம் மொத்தமாக இழந்து விட்டான் எனச் சிலநாட்களில் அறிந்து கொண்ட மனோகரும் கிருஷ்ணனும், ஏன் அந்த இளைஞனுமே செய்வதறியாது திகைத்துத் தான் போயினர்.
இந்த விடயமனைத்தையும் கணவன் மூலம் அறிந்து கொண்ட விமலா, முதலில், ‘அய்யோ பாவமே! சொந்த பந்தமும் இல்லாமல் தான் யாரென்றும் தெரியாமல் என்றால், அது எப்படி வேதனையைத் தரும்!’ என அப்பையனில் ஏற்பட்ட இரக்கத்தின் காரணமாக அவனைப் பார்க்கவென்று வைத்தியசாலைக்குச் சென்றவர், பின்னர், நாளாந்தம் அவனுக்குச் சாப்பாடு கொண்டு சென்று கொஞ்ச நேரமிருந்து அளவளாவிச் சென்றவர், அவன் குணமடைந்து முகாம் திரும்ப வேண்டிய நிலை வரவும் வெகுவாகத் துடித்துப் போனார்.
தன்னையறியாமலேயே அவனில் தான் பாசம் வைத்துள்ளதை அப்போது உணர்ந்து கொண்டவர், அவன் தன்னுடனேயே தன் பிள்ளையாக இருக்கட்டும் என்று கணவர், தமையன் இருவரிடமும் தீர்மானமாகச் சொல்ல, அதைக் கேட்ட அவர்கள் மட்டுமின்றி, மற்றய அவர்கள் உறவுகளுமே திகைத்து முதலில் மறுத்தாலும், இறுதியில் வென்றது விமலாவும் அவர் பாசமும் தான்!
அன்றிலிருந்து, விமலா ஆசையாக அழைக்கும் ‘கண்ணன்’ என்பதையே தன் அடையாளமாகக் கொண்டு, விமலா மனோகர் தம்பதிகளின் செல்ல மகனாகிப் போனான் இவன்.
அதுவரை முகாமிலும் அவனை யாருமே தேடியதாக தகவல் கிடைக்காததால், தம்முடனே இருக்கட்டும் என்று அதற்கான நடைமுறைகளைச் செய்த மனோகர், இயல்பிலேயே மிகவும் கெட்டித்தனம் மிக்கவனாக அவன் இருந்தபடியால், படிக்க வைத்து, ஆர்வமுள்ள துறையில் மேல்படிப்பும் படிக்கவைத்து, இன்று தங்கள் வைத்தியசாலையையும், தங்கள் வீட்டு இளவரசி ஜனனியையும் அவன் பொறுப்பில் ஒப்படைத்துள்ளனர்.
வைத்தியசாலையில் தான் கண் விழித்ததில் இருந்து தனது பழைய நினைவுகளைத் தொலைத்ததையும், தான் எப்படிப்பட்ட நிலையில் இங்கு வந்து சேர்ந்தான் என்பதையும் அறிந்து கொண்ட கண்ணனும்,
‘‘ஐயோ நான் இனி என்ன செய்வது? எங்கு செல்வது? என் உறவுகள் யார்?’’ என்று விடை தெரியாக் கேள்விகள் சூழ கலங்கிக் கொண்டிருந்தவன், பாசமாக அரவணைத்த விமலாவின் அன்பில் ஒன்றி, தன் முழுச் சம்மதத்துடனேயே தன் பெற்றவர்களாக விமலாவையும் மனோகரையும் ஏற்றுக் கொண்டாலும், தான் யார் என்று தெரியாததால் உள்ளத்தில் கலங்கிக் கொண்டிருந்ததை அறிந்த மனோகர், அவன் பற்றி இலங்கையில் எப்படியாவது அறிந்து கொள்ளலாம் என முயன்றாலும், அதிலும் பெரிதாக வெற்றி கிடைக்காது போகவே, அமைதியாக இருந்து விட்டார்.
அதில் அவர் சுயநலமும் இருந்ததுவோ?
அவன் வந்தபின் மனைவியின் முகத்தில் கண்ட அமைதியும் கலகலப்புமே, அவரை அமைதியாக இருக்கச் செய்து விட்டது எனலாம். மொத்தத்தில் அவன் அவர்கள் பிள்ளையாகிப் போனான்.
என்றாலும் இத்தனை நாட்களாக, ‘யார் பெற்ற பிள்ளையோ? பெற்றவர்கள் எப்படித் தவிப்பார்களோ!’ என்று மனோகர் மனதிலிருந்த குற்றவுணர்வு இன்று காணாமல் போயிருந்தாலும், அவன் இனித் தங்கள் உரிமையில்லையே என்ற ஏக்கம் போட்டு வாட்ட, நிதி தன் அண்ணன் என்று கூறும் தனஜ்சயன், கண்ணனாக தங்களுடன் வாழும் கதையை இறுகிய முகத்துடன், துயரம் தோய்ந்த குரலில் சொல்லி முடித்தார் மனோகர்.
பின், கண்ணனின் மறுபுறம் அமர்ந்திருந்த மனைவியை ஏறிட்டார் மனோகர். வாய்பொத்தி மனக்குமுறலை அடக்க முயன்றபடி, கண்ணீருடன் அமர்ந்திருந்தார் அவர்.
‘இவளால் இதையெல்லாம் எப்படித் தாங்க முடியும்? இவன் இனி நமக்கு உரிமையில்லாதவன்! இதை இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்?’ என்று நினைத்துக் குழம்பியவர், அந்த நினைவு தரும் வேதனையைச் சகிக்க முடியாமல் அவ்விடம் விட்டெழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
தந்தை சொன்னதையும், அவர் வேதனையுடன் எழுந்து சென்றதையும், எதுவுமே சொல்லாது அழும் தாயையும் பார்த்த கண்ணனுக்கு, என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தது.
அவன் மூளை ஒழுங்காகச் சிந்திக்க மறுத்து அடம்பிடித்தது.
அவனைப் பொறுத்த மட்டில், இதுவரை நிதி தன்னை அண்ணன் என்று சொன்னதற்குச் சான்றாக தன் உடன் பிறப்பு என்று சொல்லும் வகையில் தன் உருவத்தை ஒத்திருந்தும், அவன் தாயாய் தந்தையாய் நினைவில் நிறைந்து இருப்பது விமலாவும் மனோகருமே!
நிதியின் பாசத்தை, அவள் தன்னைக் கண்டு துடித்த துடிப்பைப் பொய் என்று சொல்லி மறுக்கவோ தவிர்க்கவோ அவனால் இனி எப்படி முடியாதோ, அதேபோல் விமலா, மனோகர் உறவும் அவன் மட்டில் இன்றியமையாததே! மறுக்க முடியாததே!
இந்த எண்ணத்துடன் தன்னருகில் அமர்ந்திருந்து குமுறும் தாயைப் பார்த்தவன், இவ்வளவு நேரத்தில் முதன் முதலாக வாய் திறந்தான்.
“அம்மா… என்னம்மா இது? அழாதேங்க. இப்ப என்ன நடந்திட்டுது சொல்லுங்க? நான் யாரென்று தெரியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டோம். என்னோடு சேர்ந்து நீங்களும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க. நான் சும்மா ஏதோ பொழுது போக்காக பேஸ் புக் ஆரம்பித்து, இப்ப பாருங்க…அதில எங்க கல்யாணப்படம் போட்டதும் ஜனனி தான்.” என்றவன் நிதானித்தான்
“எனக்கு இன்னும் நினைவு வரவில்லை என்றாலும், நான் யாரென்று இவர்கள் சொல்வது…அப்படிச் சொல்வதைக் கேட்கும் போதே மனசுக்கு எவ்வளவு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்குத் தெரியுமாம்மா?!’’ என்றவாறே விமலாவை அணைத்துக் கொண்டான்.
“இங்க பாருங்க, முதல் இந்த அழுகையை நிறுத்துங்க. எது எப்படியிருந்தாலும், நான் உங்க மகன்…நீங்க என் அம்மா! இதை யாராலும் எக்காலத்திலும் மாற்ற முடியாதம்மா.‘’ என்றவன், அழுகையில் குழுங்கியவரை தேற்றும் வார்த்தைகளை பொறுக்கி எடுத்து உதிர்த்தான்.
மகனின் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்ட விமலா வந்திருப்பவர்களின் முன்னால் தான் உடைந்துவிட்டதை உணர்ந்து மெல்ல மெல்ல அடங்கினார்.
தன் கையைப் பிடித்த பிடியை விடாது ஒட்டி அமர்ந்திருக்கும் நிதியை ஆதரவாக ஏறிட்டவனும், மெல்ல மெல்ல திடமான கண்ணனாகினான். அதன் பின்னர்தான் நிதியுடன் வந்த யாரையுமே தான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்பதே அவன் நினைவில் வந்தது.
‘அட இதில வேற யாரெல்லாம் எனக்கு என்ன என்ன முறையில் சொந்தம்?’ என்று எண்ணியவன், சற்றுத் தள்ளி, அழுதபடியே சுவரில் சாய்ந்து நிற்கும் மனைவியிடம் திரும்பி, “ஜனனி, எல்லோருக்கும் குடிக்க ஏதும் கொடுங்கோவன்; அதோட மத்தியானம் சமையலுக்கும் சொல்லுங்க.’’ என்றான், திடமான குரலில்.
அதுவரை மௌனமாயிருந்த ஜனனியின் தந்தை, இத்தனை வருடங்களாகக் கண்ணனுக்குப் பழைய நினைவுகள் திரும்பாததாலும், அவனைத் தேடி யாருமே முகாமிற்கு வராததாலும், அவனைத் தேடி சொந்தங்கள் வருவார்கள் என்ற நினைப்பையே அழித்திருந்தார்; அறவே மறந்திருந்தார்.
எவ்வளவோ முறை தன் மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க யோசித்தவர், இது மகளின் விருப்பம் மட்டும் என்று இருந்திருந்தால் நிச்சயமாக எப்படியும் அதைத் தட்டிக் கழித்திருப்பார் தான்.
இங்கு இதுவே தன் தங்கையின் விருப்பமும் என்று தெரிந்ததும், சம்மதம் என்று தலையாட்டி மணம் முடித்துக் கொடுத்தவர், இப்படி சொந்தம் கொண்டாடிக் கொண்டு, ஒரு கூட்டமே வந்து நிற்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், இவ்வளவுக்கு வந்த பின்னால் எதுவும் அவசரப்பட்டு பயனில்லை என்று நினைத்தவர், கண்ணன் அந்தளவிற்கு தன் மகளையோ, தான் பாசமாகத் தாய், தந்தை என்று பழகியவர்களையோ தூக்கியெறிந்து செல்லமாட்டான் என்று அவனில் இருந்த நம்பிக்கையில் நினைத்துக் கொண்டவர்,
“அப்ப கண்ணன்…நான் ஹாஸ்பிட்டலுக்குப் போகிறேன். வீட்டுக்கு இந்த விசயம் இப்பத் தெரிய வேண்டாம். மாலை நான் போய்ச் சொல்வது தான் சரியா இருக்கும், அதுவரை தெரியத் தேவையில்லை. இவங்களும் கொஞ்சம் ஆறுதலா நிற்கட்டும்.’’ என்றவர், மற்றவர்களிடமும் சுருக்கமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறினார்.
தமையன் வெளியேறிய கையோடு தானும் எழுந்த விமலா, “அப்பா எங்கே என்று பார்த்துக்கொண்டு வாரேன்; இருங்க.” உள்ளே சென்று விட்டார்.
தாயாரும் உள்ளே செல்ல, நிதியுடன் வந்தவர்கள் பெரும்சங்கடத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த கண்ணன், “நிதி’’ என்று அழைக்கவும், விழிகள் விரித்து அதிசியமாகப் பார்த்தாள் அவள்.
“அய்யோண்ணா! ஞாபகம் வந்திட்டுதா? நாம முந்தி சின்னதில…’’ ஆர்வம் கொப்பளிக்கத் தொடங்கியவள், அவன் முகம் போன போக்கைப் பார்த்தே சொல்லத் தொடங்கியதை பாதியில் முழுங்கிக் கொண்டாள்.
என்றாலும், துக்கத்தில் சுருண்ட மனத்தை மிகவும் முயன்று நிலைப்படுத்தியவள், “அண்ணா…நான் உங்களுக்கு இவையள் ஒருவரையும் அறிமுகப்படுத்த இல்லையே… பார்த்தீங்களா…நான் ஒரு மடச்சி!’’ என்றபடி, தன் முன்னால் அமர்ந்திருந்த இந்திரனைக் காட்டி, “இவர் நம்மட மாமா அண்ணா. அம்மாட ஒன்றுவிட்ட அண்ணன். இவையளோட தான் நான் ஒன்பது வயசில இருந்து கிட்டத்தட்ட பத்துவருசமா நெதர்லாந்தில இருக்கிறன்.’’ அடைக்கும் குரலைச் சீராக்கிக் கொண்டு கூறினாள்.
பின், வசியை காட்டி, “இவர் தான்…’’ என்று தொடங்கியவள் சிறிது நேரம் மௌனித்து, தன்னைச் சுற்றியுள்ள இறுக்கமும் அமைதியும் சஞ்சலமுமான நிலையைப் போக்கி, தான் மனதில் உணரும் மகிழ்வை வெளிப்படுத்தவும், அதையே மற்றவர்களிடையேயும் கொண்டு வர நினைத்தவள்,

