“இவர் தான் அண்ணா நம்மட மாமியிட …அதுதான் இந்திரன் மாமாட மாமியிட அக்காட மகன்..’’ நீளமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள், சட்டென்று முகத்தில் தோன்றிய மின்னல் நகையுடனும் குறும்புடனும், “அதை ஏன்ணா கேக்கிறீங்க! கட்டினா என்னைத் தான் கட்டுவன் என்று ஒத்தக் காலில நின்று கெஞ்சோ கெஞ்சென்று சாப்பாடு தண்ணியில்லாம கெஞ்சினதால…அதுவும் இப்பத் தான் இவரின்ர ஆக்கினை பொறுக்காமல் யோசிச்சு முடிவு சொல்லுறன் என்று சொல்லியிருக்கிறன்.’’ என, அவள் கூறிய விதத்தில் அங்கிருந்த இறுக்கம் மெல்ல விலக, அவள் சொல்லச் சொல்ல வசியின் முகம்போன போக்கைப் பார்த்துக் கொண்டேயிருந்த தனா, வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்.
தான் சொன்னதற்கு, தன் தமையனின் மனம் திறந்த சிரிப்பை இத்தனை வருடங்களின் பின்னால் ஆனந்தக் கண்ணீர் வடிய பார்த்திருந்தாள் நிதி.
வசியோ, நிதியின் கேலியில் அவள் மனமகிழ்வை உணர்ந்து உள்ளுக்குள் மலர்ந்தாலும், வெளியில் செல்லமாக முறைத்தபடி பத்திரம் காட்டியவன், தனாவின் அருகில் வந்தமர்ந்து அன்பாகத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
இதைப் பார்த்து இந்திரன் கண்கள் கலங்க, தன்னைச் சுதாகரித்துக் கொண்ட நிதி அறிமுகப் படலத்தைத் தொடர்ந்தாள்.
“அண்ணா, இவர் தான் நம்ம மாமாவோட மூத்த மகன், பெயர் ரஞ்சன்…அதுமட்டும் இல்ல…இத்தனை நாளும் எனக்கு நீங்க இல்லாத குறையைத் தீர்த்து வைத்தவர் இவர் தான்.’’ என்று சொல்ல, ரஞ்சன் முகத்தில் கருநிழல் படிந்து கணத்தில் கடந்து சென்றதைத் தனா தவிர்ந்த மற்றவர்களால் நன்றாகவே உணர முடிந்தது.
அடுத்து, ஓரமாக அமைதியாக அமர்ந்திருக்கும் காயாவைப் பார்த்த நிதி, முகத்தில் மின்னலுடன் எல்லோரையும் ஒருபார்வை பார்த்தவள், “அண்ணா…இவா என்ர தங்கச்சி காயா.’’ என்றாள் குறும்பு கூத்தாடும் குரலில்!
“என்னது தங்கச்சியா?!’’ அதிர்ந்தான் தனா.
“அப்ப…இதை ஏன் இவ்வளவு நேரமாகச் சொல்லவில்லை…’’ என்றவாறே காயாவை நோக்கி ஏழ எத்தனிக்க அவனைப் பிடித்து அமர்த்தினாள் நிதி.
“அண்ணா அவசரப்படாதீங்க…முழுதாகச் சொல்லும் வரை பொறுங்க!’’ என்று கட்டளை இட்டவள், மீண்டும் ஒருமுறை அங்கிருந்தவர்களை விழிகளால் தொட்டு மீண்டவள்,
“தங்கச்சி என்றால் நம்மோட பிறந்தாத்தானா அண்ணா? அப்படி இல்ல. இந்தா இருக்கிறாரே நம்ம மச்சான் ரஞ்சன்…அவரைக் கட்டப் போற முறையில் இவா தங்கச்சி…இப்ப இவர்…’’ என்று வசியை கைகாட்டியவள்,
“என்னைக் கட்டியே தீருவன் என்று அடம்பிடிக்கிற மாதிரித் தான் இந்தப் பெரியமனிசியும் கட்டினால் ரஞ்சனைத் தான் கட்டுவன் என்று அடம்பிடிச்சுக் கொண்டு நிக்கிறா. ஆனால், ரஞ்சன் இதுக்கெல்லாம் லேசில தலையாட்டுற ஆள் என்றா நினைக்கிறீங்க? ம்ம்ம்…இல்லவே இல்ல. அவர் இன்னும் பதிலே சொல்லேல்ல. அதுதான் காயா முகத்தில அவ்வளவு சோகம்…’’ கட கடவெனச் சொல்லி முடிக்கவும், “நிதீ…’’ என்று உறுமியபடி ரஞ்சன் எழவும் சரியாக இருந்தது.
“உனக்கு உண்மையாகவே கழன்று போச்சுது போல. என்ன அலட்டுற?’’ ஒருமுறையும் இல்லாதவாறு அவள் மீது சீறி விழுந்தவன், நிதி சொன்னதற்கு மறுப்பின்றி அமைதிகாக்கும் தந்தையையும் வசியையும் அடங்காக் கோபத்துடன் பார்த்தான்.
“நான் ஒன்றும் அலட்ட இல்லை; நீங்களே காயாவைக் கேட்டுப் பாருங்க; முதல் ஏன் இப்படிக் கத்துறீங்க? வந்திருக்கிற இடத்தில…’’ கடித்த பல்லுக்கிடையில் மல்லுக்கு நின்றாள் நிதி.
காயா மௌனமாகத் தலைகுனிவதைக் கண்ட ரஞ்சன், ‘அடி பாவி! இதுதானா விசயம்? இவள் இந்த காயாவை என்னோட தள்ளித்தள்ளி விட்டது.’ என்று நினைத்துக் கோபம் கொண்டவன்,
“வந்த இடத்தில நான் கதைக்கிறனா? அதை நீர் சொல்லுறீர் என்ன.’’ அடங்கிய குரலில் சீறியவன், “நான் கொஞ்ச நேரம் வெளியில நிற்கிறன்.’’ சீறலாகவே சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து சென்றான்.
அவன் அப்படிச் சென்றதும் தோள்களைக் குலுக்கிக் கொண்ட நிதி, ‘அப்பாடா ஒருமாதிரி இந்த விசயத்தை ரஞ்சனுக்குச் சொல்லியாச்சி;இனி என்ன நடக்குது என்று பார்ப்போம்.’ என நினைத்துக் கொண்டவள், தங்கள் இந்தச் சண்டையை விசித்திரமாக வேடிக்கை பார்க்கும் தமையனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தவள்,
“இதெல்லாம் பெரியகதை அண்ணா…ஆறுதலாச் சொல்லுறன் சரியா?’’ என்றவள், “எங்க அண்ணியைக் காணேல்ல?’’ என்று தேடவும் தான், “குடிக்க ஏதும் குடு…’’ என்று தான் அனுப்பிய மனைவி, அவர்களுக்கு எதுவும் கொடுக்கவுமில்லை வெளியில் வரவும் இல்லை என்றுணர்ந்த தனா, அவளைத் தேடச் செல்ல ஏழ, அவன் கையை விடாமல் பற்றியவாறே தானும் எழுந்தாள் நிதி.
தன்னுடன் சேர்ந்து எழுந்தவளைக் கனிவுடன் பார்த்தான் தனா. அவள் மனநிலையைத் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிந்ததால் பரிவோடு அவள் தலையைத் தடவினான்.
“நீங்க கொஞ்சம் இருங்க…இதோ வருகிறேன்.‘’என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “சரி வா… போய்ப் பார்த்திட்டு வருவோம்.’’ என்று நிதியிடம் சொல்லிக்கொண்டே நகர்ந்து, சமையலறை நோக்கிச் சென்றவன், வரவேற்பறையை ஒட்டியதாக இருந்த அறையிலிருந்து தாயின் மெல்லிய விசும்பல் ஒலி கேட்கவும் அந்த அறையை நோக்கிச் சென்றான்.
உறவுகள் யாருமற்று, தன் மாமா மாமியே உறவாகக் கொண்டு வாழும் கண்ணனைத் தன் உயிராக விரும்பிய ஜனனி, எவ்வளவோ தடைகளுக்குப் பிறகுதான் அவன் கரம் பிடித்தாள்.
அதற்குப்பின், அவன் அன்பு முழுவதும் தனக்கே தனக்கு என்று பெருமைப்பட்டு, அதில் மூழ்கி, தன்னைவிட பாக்கியசாலி யாருமேயில்லை என்று மகிழ்ந்திருந்தாலும், தான் யாரென்று தெரியாமல் கணவன் உள்ளுக்குள் வருந்துவதையும் அறிந்தெயிருந்தாள். அப்படி அவன் வருந்தும் போதெல்லாம் அவன் யார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்திருக்கின்றாள்.
ஆனால், இன்று அது உண்மையான போதோ, அதன் மூலம் தன் கணவனின் அன்பைப் பகிரவென்றொருத்தி அடாவடியாய் வந்து, அவனை விட்டு இம்மியும் அகலாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்தவளால், அக்காட்சியைச் அவ்வளவு சுலபத்தில் சகித்துக் கொள்ளவே முடியாமல் இருந்தது.
ஜனனியின் மனநிலையை ஒத்த நிலையில் தான், விபரமனைத்தும் அறிந்த பெரியவர்களான விமலாவும் மனோகரும் இருந்தனர். எப்பாடுபட்டும் எக்காரணத்தைச் சொல்லியும், தம் மனதைத் தேற்றிக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட பத்துவருடங்கள், கண்ணனைத் தம் சொந்தமகனாகக் கருதி, அவன் சிரிப்பில் மகிழ்ந்து, அவன் முகச்சிணுக்கத்தில் வருத்தத்தில் தாங்களும் வருந்தி வாழ்ந்தவர்களால், இனி அவன் தங்கள் உரிமையில்லை என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தது.
நிஜம் வந்து முன்னால் அமர்ந்திருக்கையில், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கிருஷ்ணனின் மனதில் இருந்த நம்பிக்கை கூட இவர்கள் மனத்தில் இருக்கவில்லை.
இனி, கண்ணன் அவன் தாய், தந்தை, குடும்பம் என்று இலங்கைக்கே சென்று விடுவான் என்ற எண்ணம் அவர்களைப் போட்டு வதைக்க, அதைப்பற்றிக் கதைத்து அழுது கொண்டிருந்த விமலாவும் மனோகரும், தங்களுடன் வந்து கட்டியழும் மருமகளைத் தேற்றும் வழி தெரியாது திகைத்துப் போய் அமர்ந்திருந்தனர்.
இவர்கள் மூவரும் தம்முள் கதைத்துக் குமுறுவதையெல்லாம், வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர் தனாவும் நிதியும்.
அவர்கள் கதைப்பதையும் அழுவதையும் கேட்ட நிதி, மெல்ல, தான் இதுவரை பற்றியிருந்த தனாவின் கரங்களை விடுவித்தாள்.
‘இதுவரைக்கும் என்ர அண்ணாவே இல்ல, முழுதாய் இந்தப் பிறப்பில எங்களால அவனைக் காண முடியாத இடத்துக்குப் போயிட்டான் என்று இருந்தம். இப்ப அவன் சீரும் சிறப்புமாகத் தனக்கென ஒரு குடும்பத்தோட வாழ்ந்து கொண்டிருக்கிறதைக் கண்டிட்டன். எனக்கு அது போதும். என்ர அண்ணா எங்க…யாரோட இருந்தால் என்ன? அவர் நல்லா சந்தோசமா இருந்தால் அதுவே எனக்குப் போதும்.’ என நினைத்துக் கொண்டது அவள் வெள்ளை மனம் .
மெல்ல முன்னே நடந்து விமலாவின் முன்னால் சென்று நின்றவள், இதுவரைத் தம்முடன் ஒருவார்த்தை கூட கதைக்காத அவரைப் பார்த்து, “அம்மா’’ பாசமாய் அழைத்தாள்.
நிதியின் அழைப்பாலும் அருகில் நிற்கும் தனாவின் திடீர் வருகையாலும் திகைத்து விழித்த மூவரும், தாம் கதைத்தவற்றை அவர்கள் கேட்டிருப்பார்கள் என்ற சங்கடத்துடன் அமர்ந்திருக்க, விமலாவின் முன்னால் நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்த நிதி, அவர் கைகள் இரண்டையும் அன்புடன் பற்றிக்கொண்டவள், தன் பார்வையை அவர் முகத்தில் நிலைக்க விட்டு உறுதி நிறைந்த குரலில் ஒரு தீர்மானத்துடன் கதைக்கத் தொடங்கினாள்.
“அம்மா! நாங்க இல்லவே இல்லை என்றிருந்த எங்கட அண்ணாவை அப்பிடியே முகாமில பத்தோட பதினொன்றாக விட்டிராமல் , பராமரிச்சு, அவருக்கு என்று ஒரு அழகான வாழ்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீங்க. அதுக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நன்றி என்று சொல்லால சொல்லவும் முடியாது.’’ என்று சொல்லி நிதானித்தாள். எவ்வளவு கட்டுப்படுத்தியும் கேளாமல் சொரியும் கண்ணீரைத் துடைத்து, தன் வழமையான நிமிர்வுடன் அவரை பார்த்தாள்.
“அதனால…அதனால…நீங்க இப்பக் கதைச்ச மாதிரி…பயந்த படி எதற்குமே அவசியம் இல்லம்மா.
என்ர வீட்டைப் பொறுத்தமட்டில எங்கட அண்ணா எப்பவோ எங்களை விட்டுப் போய்ட்டார். அது அப்பிடியே இருக்கட்டும்மா. எனக்குத் தெரிஞ்சதை நான் இன்னும் அவையளிட்ட சொல்லவே இல்ல, இனியும் சொல்ல மாட்டன்.
நீங்க எதற்கும் பயப்படாதேங்க, நானும் கூட உங்களுக்குத் தொந்தரவு தர மாட்டன். எனக்கு என்ர அண்ணா எங்கயிருந்தாலும் சந்தோசமாக இருந்தால் போதும்.
எல்லாத்துக்கும் மேல அவருக்கே கொஞ்சமும் எங்கள ஞாபகம் இல்ல. நானும் கடவுளிட்ட வேண்டுறன்மா, காலத்துக்கும் அவருக்கு எங்கட நினைவு வராமலே இருக்கட்டும் என்று, ஏனென்றால் பழைய ஞாபகம் வந்தால் நிச்சயமாக அவர்…’’ என்றவள், பொங்கிய அழுகையை மென்று விழுங்கியவாறே மெல்ல எழுந்து, “இப்ப நாங்க போய்ட்டு வாறம்.’’ வாசலை நோக்கித் திரும்பினாள்.
தன்னை கண்டதில் இருந்து விட்டு விலகாமல் இருந்தவள், அவர்கள் கதைப்பதைக்கேட்டுவிட்டு விலகிச் செல்லவும் மெலிதாகத் திடுக்கிட்டுப் போனான் தனா. அவள் விமலாவின் முன்னால் மண்டியிட்டு அமரவும்,
‘என்ன செய்யப் போறாள்?’ என்று பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருத்தவன், அவள் சொன்னதைக் கேட்டுப் பிரமை பிடித்து நிற்க, அவள் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்ட மற்றைய மூவரும், ‘தம்மை விட வயதில் சிறு பெண்…எவ்வளவு எளிதாகத் தீர்வு சொல்லிப் போய் வருகிறேன் என்று செல்கிறாள்.’ என எண்ணியவர்கள், அதுவே அவள் தன் தமையனில் கொண்டிருந்த பாசத்தையும், அவள் நல்ல மனத்தையும் அவர்களுக்கு உணர்த்த, விரைந்து எழுந்த விமலா ஒரே எட்டில் அவளை அடைந்து அவளை அப்படியே அணைத்துக் கொண்டவர்,
“நான் இதுவரை எனக்கு ஒரு மகன் மட்டும் என்று தான் நினைத்திருந்தேன் ராசாத்தி! இப்பப் பார், எவ்வளவு அருமையா ஒரு மகள் எனக்கு கிடைத்திருக்கிறாள். இதை விட எனக்கு வேற என்ன வேண்டும்.’’ என்று கண்ணீர் விட, ஜனனியும் நிதியை மறுபுறம் அணைத்துக் கொண்டு விசும்பத் தொடங்கினாள்.
இந்தப் பாசம் நிறைந்த அழகிய காட்சியால், தாமும் கண்கள் கலங்கி அவர்களையே விழியெடுக்காது பார்த்து நின்றனர் மனோகரும் தனாவும் !

