அத்தியாயம் 13
ஒருவழியாகச் சுவிஸ், ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோயிருந்தாள். தலையை வேறு சுற்றிக்கொண்டு வந்தது.
அப்படியே கண்களை மூடிச் சாய்ந்துகொள் என்று தளர்ந்துபோயிருந்த உடல் கெஞ்சினாலும், கணவனைக் காணப்போகிறோம் என்கிற ஒற்றை உந்து சக்தி, அவளை உந்தித் தள்ளியதில் வெளியே வந்தாள்.
‘லக்கேஜ்’களைச் சேகரித்துக்கொண்டு வெளியே வந்தவளைக் கண்ட சீராளன் திகைத்துப்போனான்.
சோர்ந்து தொய்ந்த தேகம் முடியாமல் நடைபயில, விழி முழுக்கத் துயரத்தைச் சுமந்துகொண்டு, மெலி மெலி என்று மெலிந்து பிள்ளை வயிற்றோடு கண்ணெல்லாம் உள்ளுக்குப்போய் என்று அவனால் பார்க்க முடியவில்லை.
முக்கியமாக அந்தக் கண்களில் உயிர்ப்பே இல்லை. அன்று செழிப்போடும் செந்தழிப்போடும், ‘கருமம் கருமம்’ என்று கண்களை மூடியவள் கண்ணுக்குள் வந்துபோக, அவளை இந்தக் கோலத்துக்கா மாற்றி விட்டிருக்கிறோம் என்று திகைத்து நின்றுவிட்டான்.
அவன் முகத்தைப் பார்த்துவிடும் தாகத்தில் வந்தவளின் கண்கள், வேகமாகச் சுற்றிச் சுழன்று கணவனைக் கண்டதும் தன்னை மீறிக் கலங்கின.
உயிரிலும் உள்ளத்திலும் இரண்டறக் கலந்த உருவம் கண்முன்னே! ஓடிப்போய்க் கட்டிக்கொண்டு கதறத் துடித்த துடிப்பை, அவளைக் கண்டபிறகும் அசையாது நின்றிருந்தவனின் இறுக்கம் தடைபோட்டு நிறுத்தியது. ஆர்ப்பரித்த அத்தனை உணர்வுகளும் அடங்கிப்போயிற்று.
அவளைக் கண்டபிறகுமா அவனிடம் மாற்றமில்லை? மிகப்பெரிய அடியாயிருந்தது அது. எந்த உணர்வையும் காட்டாது அவன் நிற்க நாம் மட்டும் அழுகிறோமே. சட்டென்று பார்வையைத் தள்ளிக்கொண்டு வந்த வண்டிலின் மீது பதித்தாள்.
நிதானமாகக் காலடி எடுத்துவைத்து அவன் அவளை நெருங்கியபோது, அந்த நேரத்திலும் கணவனின் அருகண்மையில் அவளிதயம் படபடத்தது.
அவனுக்கே உரிய வாசத்தை நாசி நுகர்ந்தபோது, வலிமையான வனப்புமிகுந்த கரங்கள் வண்டிலைப் பற்றியபோது, “விடு!” என்ற வார்த்தை காதில் மோதியபோது அவன் மார்பினில் தஞ்சமாகிவிட அவளுக்குள் எழுந்த உந்துதலில் சற்றே நிலை குலைந்துதான் போனாள்.
அவனுக்கு முன்னே அவளின் கோபதாபங்கள் அத்தனையும் பொடிப்பொடியாக நொருங்கிப் போகிறதே. அவனுக்கு அப்படி இல்லையோ? அப்படியான தாக்கத்தை அவளின் பிரசன்னம் அவனுக்கு வழங்கவில்லையோ? உள்ளத்தில் அடிவாங்கினாள்.
அவன் கால்கள் நகரத் துவங்கின. வலியோடு அவனைப் பார்த்துவிட்டுப் பாதடி பின்பற்றினாள் துணைவி.
எத்தனை மாதத்துக்குப் பிறகு கண்டிருக்கிறான். கேட்பதற்கு ஒன்றுமே இல்லையா? விசாரிப்பதற்கு எதுவுமே இல்லையா? ஒரு சிரிப்பு? ஒரு அணைப்பு? அவள் மட்டும் அவன் மீதிருந்த அத்தனை மனஸ்தாபங்களையும் மறந்துவிட்டு அவன் மார்பினில் தஞ்சமாகிவிட ஏன் துடிக்கிறாள்? விழிகள் அவனிடம்தானே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.
காரின் பின்பக்கம் அவளின் உடமைகளை ஏந்திக்கொண்டது. முன் கதவினை அவன் திறந்துவிட்டதைக் கூடக் கவனிக்காமல், கலங்கும் விழிகளை அவனுக்குக் காட்டிவிடாது ஏறி அமர்ந்துகொண்டாள்.
“பெல்ட்டை போடு.”
‘ஓ! உனக்கு என்னோட கதைக்கக்கூடத் தெரியுமா?’ மிகப்பெரிதாக ஏமாந்துபோன உள்ளம் குமுறியது.
எப்படி இருக்கிறாய் என்கிற ஒற்றைக் கேள்விக்குப் பஞ்சமாகிப்போனதா? வேகமெடுக்கத் துவங்கிய கார், வேகவீதியில் ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்த மற்றைய கார்களுடன் தன்னையும் போட்டியில் இணைத்துக்கொண்டது.
ஷர்மினியின் செல் இசைக்க, ஹாண்ட் பாக்கினைத் திறந்து எடுத்துப்பார்த்தாள்.
‘அண்ணா’ என்கிற ஒற்றைச் சொல், அவளின் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிப் பார்த்தது.
“சுகமா போய்ச் சேர்ந்திட்டியா? ஒரு பிரச்சினையும் இல்லையே.” அழைப்பை ஏற்றதும் பயமும் பதட்டமும் தொனிக்க அவசரமாய்க் கேட்டான் அவன்.
“ஓம் அண்ணா. ஒரு பிரச்சினையும் இல்ல” என்று இவள் சொல்லி முடிக்க முதலே பாய்ந்தான் உதயன்.
“அத எடுத்துச் சொல்லமாட்டியாடி எரும. போய் இறங்கி எவ்வளவு நேரமாயிற்றுது? இன்னும் ஃபோன் வரல்லே, என்னவோ ஏதோ எண்டு பயந்து சாகிறம் நாங்க!” அவளின் அழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து, வராததால் என்னவோ ஏதோ என்று பதறியதில் ஆத்திரப்பட்டான்.
மனதுக்குள் இதமாய் இறங்கியது, அந்தக் கோபம்.
“சொறியடா. கொஞ்சம் டென்சன். எங்க போறது, எங்க வாறது எண்டு ஒண்டும் தெரியேல்ல. அதான்… மற்ற ஆக்கள் போறதைப் பாத்து பாத்து வந்ததுல லேட்டாகிட்டுது.”
உதயனுக்குப் புரிந்தது அவள் நிலை. அருகிலிருந்தவனுக்கும் விளங்க முகம் கன்றியது.
“சரிசரி விடு! மனுசனைக் கண்டதும் எங்களை மறந்திட்டாய். இந்தப் பொம்பிளைகளே இப்பிடித்தான்.” கேலி பேசி அவளைச் சமாதானம் செய்தான் அவன்.
சாதாரணமாக இருந்திருக்க, ‘உனக்கு அப்பிடி எத்தினை பொம்பிளைகளைத் தெரியும்?’ என்று கேட்டு அவனை ஒருவழியாக்கி இருப்பாள்.
இப்போதோ, அந்த அன்பில் கண்கள் கசிய, “அம்மாவைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளடா.” என்று சொல்லும்போதே தேம்பிவிட்டாள் ஷர்மினி.
“ஏய் லூசு! என்னத்துக்கு அழுகிறாய்? ஏதும் பிரச்சினையா?” இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவன் எண்ணியிருக்கையில் அவள் அழவும், எதையாவது கதைத்துப் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டாளோ என்று பயந்து விசாரித்தான்.
அவர்கள் பேசிக்கொள்வது அவனுக்கும் கேட்டதில், அருகிலிருந்தவனின் உடல் விறைத்துக்கொண்டே போயிற்று! விட்டால், அவனைப் பெரும் கொடுமைக்காரனாகவே சித்தரித்துவிடுவாள் போல.
“ஒரு பிரச்சினையும் இல்ல. அம்மாவை விட்டுட்டு வந்ததுதான்…” என்று அவள் சொல்ல, “நீ மாமிய நினச்சுக் கவலைப் படாத. மகிழினி இருக்கிறாள். நான், சயந்தன் எல்லாரும் இருக்கிறம். பிறகு என்ன? உன்ர வாழ்க்கையைச் சந்தோசமா வாழப்பார். சும்மா கோவத்தை இழுத்துப் பிடிக்காத. நீ சந்தோசமா இருந்தா மட்டும்தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருப்பம். அவருக்கும் என்ன மனக்குறையோ ஆருக்குத் தெரியும்? பொறுமையாக் கேட்டு விளங்கப்படுத்து. ரெண்டுபேரும் ஒண்டா இருந்து கதைச்சுப் பிரச்னையைத் தீருங்கோ.” சயந்தன் அருகில் இல்லாததைப் பயன்படுத்தி வேகவேகமாய் அவன் சொல்ல, ஆறாய்ப் பெருகிய கண்ணீரை மாறி மாறித் துடைத்துக்கொண்டே, “ம்ம்” கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஷர்மினி.
அருகில் இருந்தவனுக்குள் அது நெருப்பைக் கிளறி விட்டது போலிருந்தது.
அவனிடம் வந்து சேர்ந்ததற்கா இத்தனை அழுகை? அவர்களைப் பிரிந்திருக்க முடியவில்லை என்றால் எதற்கு இங்கு வந்தாளாம்? எப்போதுமே அவளுக்கு அம்மா வீடும், அம்மா வீட்டு ஆட்களும்தான் முக்கியம்!
ஆத்திரம் தலைக்கேற, ஃபோனைப் பிடுங்கிச் சுழற்றி எறிந்தான்.
அதிர்ந்து திகைத்தவளிடம், “இனி நீ அவனோட கதைச்ச… நடக்கிறதே வேற!” என்று, ஆத்திரத்தில் உடல் விறைக்க விரல் நீட்டி எச்சரித்தவனின் உறுமலில் சர்வமும் அடங்கியது அவளுக்கு.
அதிர்ந்த விழிகள் அவனிடமே நிலைத்துவிட அசையக்கூட மறந்தாள்.
அவளின் கணவனுக்கு இப்படி ஒரு ஆக்ரோச முகம் கூட உண்டா, என்ன?
தன் விருப்பத்தை நின்று சாதித்துக்கொள்வான். கொஞ்சம் முன்கோபி. அதைக்கூடப் பொறுமையாக எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்வான். அவளுக்குத் தெரிந்தவரையில் அவ்வளவுதான். இத்தனை ஆக்ரோஷம் மிகுந்த கோபம் அவனுக்கு வரும் என்பது அவள் அறியாதது.
அதைவிட அவன் சொன்ன விடயம்?
மாமியார் சொன்னபோது கூடத் தாங்கிக்கொள்ள முடிந்தவளால் இதைத் தாங்கவே முடியவில்லை. கணவன் அவளைச் சந்தேகப்படுகிறானா? அந்த ஒற்றைக் கேள்வி, அத்தனை நாட்களாய் அவனை நெஞ்சிலும் அவன் மகவை வயிற்றிலும் சுமந்து வாழ்ந்த வாழ்க்கையை நசுக்கிப் பொசுக்கிப் போட்டது!
என்னதான் அவன் மீது மனத்தாங்கல் இருந்தாலும், அவன் காலடிக்கு வந்துவிட்டோம், இனி எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகிவிடும் என்கிற ஆறுதல் அவளுக்குள் உண்டாகியிருந்தது.
மாமி, தோழியிடம் போலவே முதல் காலடியை நாமே எடுத்து வைப்போம் என்று எண்ணியிருந்தாள். அதைத்தானே உதயனும் சொல்லிக்கொண்டிருந்தான்.
நடந்ததைச் சொன்னால் கணவன் விளங்கிக்கொள்வான்; அவன் சொன்னதை மீறி அம்மா வீட்டுக்குச் சென்றது பிழைதான் என்றாலும் மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்று இருந்தவள் இதை எதிர்பார்க்கவில்லை.
‘என்னைப் பாத்தபிறகும் கோபத்தைப் பிடிச்சு வச்சிருக்க அவரால ஏலாது.’ என்கிற அவளின் பெரும் நம்பிக்கையை ஒரேடியாக நசுக்கிவிட்டிருந்தான் சீராளன்.
அவனது ஆக்ரோஷத்தின் முன்னே சிந்தனைகள் கூட உறைந்துவிட, அசையவும் மறந்து அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்.
வேக வீதியை ஊடறுத்துக் கிழித்துக்கொண்டு கார் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தாலும் கண் முன்னே எதிர்காலம் கும்மிருட்டாகத் தோன்றிற்று.
அவளின் அசைவற்ற நிலை அவனை அசைத்துப் பார்த்தது.
முன்கோபம் என்கிற கூட்டுக்குள் அடைபட்டுக்கொண்டு, அவளோடு கதைத்துவிடு என்று உந்திய மனதின்படி நடக்க இயலாமல், தாய் மூலம் அறிந்தவை நினைவடுக்குகளில் நின்று அவனைக் குமுற வைத்துக்கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாது தடுமாறிக்கொண்டு இருந்தவனின் இயலாமையே, அவள் மீது கோபமாக வெடித்துவிட்டது என்று தெரியாமலில்லை.
என்றாலும், ஆத்திரத்தில் அறிவை இழந்து அவளை நோகடித்துவிட்டானே!
அவனால் காரைச் செலுத்த முடியவில்லை. சிலையாகிவிட்டவளின் அதிர்ந்த தோற்றம், அவனைச் சில்லு சில்லாகச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அவளிடம் பேசிவிட மனம் விளைந்துகொண்டிருந்தது. காரை மேக் டொனால்ஸ்ஸில் கொண்டுபோய் நிறுத்தினான்.
எதையும் உணராமல் திகைப்பிலேயே கட்டுண்டிருந்தவள், “வா!” என்கிற அழைப்பில்தான், கலைந்து திரும்பினாள். அதற்குள் காரைவிட்டு இறங்கியிருந்தான் அவன்.
‘இந்த மணம் ஒத்து வராதே…’ தன் நிலையைச் சொல்லக்கூட முடியாமல் இறங்கினாள்.
அழைத்துச் சென்று, ஓரிடத்தில் அமர்த்திவிட்டு ஆர்டர் கொடுக்கச் சென்றான் அவன். அவளுக்கு வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.
சமாளித்துச் சமாளித்துப் பார்த்தவள் முடியாமல், ‘ரெஸ்ட் ரூம்’ செல்வதற்குக் காட்டப்பட்டிருந்த குறியீட்டைக் கவனித்துவிட்டு அதற்குள் விரைந்தாள்.
‘எங்க போறாள்?’ அவள் மீது ஒரு பார்வையை வைத்திருந்தவன் பின்னோடு விரைந்தான்.
‘வோஷ் பேசன்’ னுக்குள் அவள் ஓங்காளித்து ஓங்காளித்து வாந்தி எடுக்க, பெண்களுக்கான ரெஸ்ட் ரூம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போனான். அவளைப் பற்றிக்கொண்டு, “என்ன ஷர்மி? என்ன செய்யுது?” என்று பதறினான்.
பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. குடலையே வெளியே தள்ளிவிடுவது போல் அவள் எடுத்த வாந்தியில் இவன் நடுங்கியே போனான்.
வயிற்றுக்குள் இருந்த எல்லாவற்றையும் எடுத்து முடித்ததும் வாயைக் கொப்பளித்துக்கொண்டு, அந்தச் சுவரிலேயே ஒரு கையை ஊன்றிக் கண்களை மூடிக்கொண்டாள்.
தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது.
“என்ன செய்யுது? டொக்டர கூப்பிடவா?” பயத்தோடு கேட்டவன், தன் உடலைத் தானே சுமக்க முடியாமல் சோர்ந்து நின்றவளைத் தன்னோடு சாய்த்துக்கொள்ள முனைந்தான்.
துவண்டுகிடந்த கரத்தால் அவனைத் தடுத்துவிட்டு மெல்ல அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
அந்த மறுப்பில் ஒருகணம் அசைவற்று நின்றுவிட்டான் சீராளன். சுருக்கென்று வலித்தது.

