உன்னில் என்னை தொலைத்தேனடி – 14

அத்தியாயம் 14

 

 

அவள் காரை நோக்கி நடப்பது நொடிகள் கழிந்தே புத்தியில் உரைத்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான்.

 

அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியைச் சற்றே இறக்கிவிட்டு, வீசும் காற்றை அவள் முகத்தில் மோதவிட்டான்.

 

“இது… ஏன் இப்பிடி? ஃபிளைட் பயணம் ஒத்துவரேல்லையோ?” கவலையோடு விசாரித்தான்.

 

இல்லை என்று தலையை மட்டுமே அசைத்தவளுக்கு அந்தத் தலை தனியாகக் கழன்று விழுந்துவிடுமோ என்று பயமாய்ப் போயிற்று. சீட்டிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். “நான் இங்கேயே இருக்கிறன், நீங்க சாப்பிட்டு வாங்கோ.” மெல்ல முணுமுணுத்தாள்.

 

அவளின் விலகல் அவனை வருத்தியது. முகம் பார்க்கக் கூட மறுக்கிறாளே! ஒரு பெருமூச்சுடன் இறங்கிச்சென்று, ஆர்டர் கொடுத்த உணவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.

 

“நெடுக இப்பிடியா?” அவள் ஒதுங்கி நிற்க முயன்றாலும் அவன் விடத் தயாராயில்லை.

 

அவளைப் பார்க்காதவரையில் எப்படியோ, பார்த்தபிறகு அவனது கோபங்கள், குறைகள் அத்தனையும் மெல்ல மெல்லத் தவிடுபொடியாகிக்கொண்டிருந்தன.

 

“அது முந்தித்தான். குடல் வெளில வந்திடும் மாதிரி வரும். இப்ப, இதெல்லாம் ஒண்டுமே இல்ல. அந்த மணம் எனக்கு ஒத்துவரேல்ல, அதுதான்.” என்று வெகு சாதாரணமாய்ச் சொல்ல அவன் அரண்டுபோனான்.

 

‘இது ஒண்டுமில்லையா? இதுவே ஒன்றுமில்லை என்றால் முந்தி..’ நினைக்கவே முடியாமல் திகைத்தான்.

 

இப்படித் தினமும் கஷ்டப்பட்டவளையா தண்டித்தோம்? எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்காமல் விட்டுவிட்டோமே. அவள் நடந்துகொண்டது பிழையாகவே இருந்தாலும் வேறு முறையில் அணுகியிருக்க வேண்டுமோ? குற்ற உணர்வோடு அவன் பார்க்க, அவளோ களைத்துப்போய்க் கதவில் நிராதரவாகச் சாய்ந்திருந்தாள்.

 

கையணைப்பில் வைத்திருந்து, ஆறுதலாய் அவளை வருடிக் கொடுத்திருக்க வேண்டிய தருணத்தில், பார்வையாளனாக மட்டுமே நிற்பதை எண்ணி நெஞ்சுக்குள் வலி எழுந்தது. ‘என்னட்ட வா’ என்று இழுத்து, மார்போடு அணைத்துக்கொள்ள வாயும் கையும் வராமல் தவிப்போடு அவளையே பார்த்திருந்தான்.

 

திடீரென்று அவளது கைப்பேசி சத்தமிட்டது. அதைக் கணவன் தூக்கி எறிந்த காட்சி கண்ணில் வந்துபோக, மூடியிருந்த இமைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் கோடு வரைந்தபடி ஓடின.

 

‘சே! என்ன வேலை பார்த்தோம்!’ என்று அவனுக்குத்தான் ஆகிப்போனது.

 

பின்புறம் எட்டிக் கீழே கிடந்த ஃபோனை எடுத்துப் பார்த்தான். சயந்தன் அழைத்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே பலமுறை அழைத்திருந்தான்.

 

“சயந்தன்.” என்றபடி ஃபோனை அவளிடம் கொடுக்க, அவள் வாங்கவில்லை.

 

உதட்டைக் கடித்தான் சீராளன். மீண்டும் அவன் அழைக்க, மைக்கை அழுத்திவிட்டு, “கதை.” என்று நீட்டினான்.

 

“ஷர்மி! ஒரு பிரச்சினையும் இல்லையே? ஏன் ஃபோன் கட்டாயிட்டுது. எங்க உன்ர மனுசன்?” இந்தப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டதுமே கேள்விகளை வேகமாக அடுக்கினான் சயந்தன்.

 

இனிக் கதைக்காமல் இருக்க முடியாதே! “ஒரு பிரச்சினையும் இல்லை அண்ணா.” பெரும் சிரமப்பட்டு உதடுகளை அசைத்துச் சொன்னாள்.

 

“ஒண்டும் இல்லத்தானே? உதயன் சொன்னான் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க ஃபோன் கட்டாயிட்டதாம் எண்டு.” முழுதாகச் சமாதானமும் ஆகாமல், மேலே எப்படிக் கேட்பது என்றும் தெரியாமல், பதறிக்கொண்டு மேலோட்டமாய்க் கேட்பதுபோல் கேட்கிறான் என்று உணர்ந்தவளுக்கு அவன் பாசத்தில் மீண்டும் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

 

“அது சத்தி(வாந்தி) வந்தது அண்ணா. அதுதான்… வேற ஒண்டுமில்லை.”

 

“ஓ… அதுதானா! நான் பயந்தே போனன். இப்ப பரவாயில்லையா?”

 

“ஓம் அண்ணா. இவர் மேக் டொனால்ட்ஸ்க்கு கூட்டிக்கொண்டு போனவர், சாப்பிடுவம் எண்டு. அது ஒத்துக்கொள்ளேல்ல எனக்கு. அதுதான் காருக்க ஓடி வந்திட்டன்.” தெம்பை வரவழைத்துக்கொண்டு கோர்வையாகச் சொன்னாள் அவள்.

 

அருகில் கேட்டிருந்தவன் உள்ளுக்குள் குறுக்கிக்கொண்டிருந்தான்.

 

“ஏய் லூசு. அந்த மணம் ஒத்துவராது எண்டு உனக்கு ஏற்கனவே தெரியும் எல்லா. பிறகும் ஏன் போனாய்? சும்மா எங்களிட்ட மட்டும் தொட்டத்துக்கும் ‘இது என்ர புருசன்ர பெயர் சொல்ல வந்த பிள்ளை, நான் கவனமாப் பெத்துக் குடுக்கோணும்’ எண்டு ஆயிரம் கத சொல்லுவ, நீ கவனமா இருக்க மாட்டியா?” என்று சிடுசிடுத்தான் உதயன்.

 

பின்னே, சயந்தனுக்குக் கூட அவளின் கணவனோடான முரண்பாடு தெரியாதே. இதில் ஃபோனும் திடீர் என்று துண்டிக்கப்பட்டுவிட, என்னவோ ஏதோ என்று அவனல்லவா நடுங்கிப்போனான். ஏதும் என்றாலும் ஓடிப்போகிற தூரத்திலா இருக்கிறார்கள். அவளானால் உப்புச் சப்பற்ற காரணத்தை அடுக்குகிறாள்.

 

“சரி விடடா. சீராளன் கேக்க அவளுக்கு வேண்டாம் எண்டு சொல்ல மனமில்லாம இருந்திருக்கும்.” என்று சயந்தன் சொல்வதும் கேட்டது.

 

உதயன் கோபப்பட்டதும் அவள் மேலிருக்கும் அக்கறையில்தான். தமையன் அவளுக்காகப் பேசியதும் பாசத்தில்தான். அருகிலிருப்பவனுக்கு மட்டும்தான் இதெல்லாம் இல்லாமல் போயிற்று!

 

“சீராளனிட்ட சொல்லிக் கொஞ்சம் இதமான சூட்டில சுடுதண்ணி வாங்கிக் குடி. வீட்டை போய் நல்லா நித்திரை கொண்டு எழும்ப, எல்லாம் சரியா வந்திடும். எங்க சீராளன்? அவரிட்ட குடு. அப்போதையும் கதைக்கேல்ல. அது மரியாதையில்ல.” என்றான் சயந்தன்.

 

அதுவரை அவள் புறமாகப் பிடித்திருந்த ஃபோனை சீராளன் தன் புறம் கொண்டுவர, வேகமாகக் கைப்பேசியைத் தன வசமாக்கிக்கொண்டாள் ஷர்மினி.

 

“அவர் சுடுதண்ணி வாங்கப் போய்ட்டார் அண்ணா. நான் காருக்க இருக்கிறன்.” என்றவளை, வேகமாகத் திரும்பிப் பார்த்தான் சீராளன்.

 

இத்தனை நேரம் அவள் சொன்ன பொய் குன்ற வைத்தது என்றால் இப்போது சொன்ன பொய் சுட்டது. ஆர்ப்பாட்டமில்லாமல், கத்திச் சண்டையிடாமல் தன் கோபத்தைக் காட்டும் மனைவியின் மனநிலை சற்றே அச்சமூட்டியது அவனுக்கு.

 

“சரி, நான் பிறகு எடுத்து அவரோட கதைக்கிறன்.”

 

“இல்லை அண்ணா. எடுக்காத. நான் நேரமிருக்கேக்க எடுத்துக் கதைக்கிறன். அதுவரைக்கும் நீங்க ஆரும் எனக்கு எடுக்க வேண்டாம்.” அவசரமாக இடைமறித்துச் சொன்னாள் அவள்.

 

“ஏன்? என்ன பிரச்சினை? மறைக்காம சொல்லு ஷர்மி.” பயந்துபோய் மீண்டும் அவன் ஆரம்பிக்க, “என்ன நீ எப்ப பாத்தாலும் என்ன பிரச்சினை, என்ன பிரச்சினை எண்டு கேக்கிறாய்? அப்பிடி என்ன வரக்கிடக்கு? களைச்சுப்போய் வந்தவள் கொஞ்சம் ஆறி இருக்கிறேல்லையா?” என்று, சட்டென்று மூண்ட கோபத்தில் படபடத்தாள்.

 

“சரிசரி! நான் இனி எடுக்கேல்ல. நீயே எடு என்ன? நீ சந்தோசமா இருந்தா காணும் எங்களுக்கு.” சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டு வைத்தான் அவன்.

 

பிரிந்தவர் கூடினால் என்னாகும் என்று புதிதாய்க் கல்யாணமான தமையன் எண்ணுகிறான் என்று எண்ணியவளுக்கு எல்லாமே மரத்துப்போனது போலாயிற்று!

 

காரை இயக்கும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தான் சீராளன். அவள் அவனை உணரவே இல்லை. கார் அந்த இடத்திலேயே நகராமல் நிற்பதைக் கூடக் கிரகிக்க முடியாமல், உடலும் உள்ளமும் துவண்டுபோக அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். உயிரைக் குடையும் இந்த வேதனையை எப்படிக் கடந்து வருவதென்று தெரியவில்லை. வெட்க ரோசம் இல்லாமல் தலை சாய்க்க அவன் தோள் வேண்டுமென்றுதான் மனம் இன்னமும் ஏங்கியது.

 

சீராளனுக்கு இந்தச் சிக்கலை எப்படிச் சீர் செய்வது என்றே தெரியவில்லை.

 

கல்யாணம் கட்டி ஒருவாரம் சந்தோசமாய் உடலும் உயிருமாய் வாழ்ந்துவிட்டு வந்துவிட்டான். பிறகு? அவனுக்கு எதுவுமே தெரியாது.

 

தாயாகிவிட்டாள் என்று தெரிந்ததும் அப்பா ஆகிவிட்டோம் என்று சந்தோசப்பட்டான். மனைவியின் கஷ்டத்தை அவனிடம் அவள் உட்பட யாரும் சொல்லவும் இல்லை; அவனும் அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை.

 

பலகீனப்பட்டிருக்கிறாள் என்று வைத்தியர் சொன்னதும் வைத்தியம் பார்த்தபிறகு எப்படி இருக்கிறாள் என்று கேட்டபோது, ‘அவளுக்கு என்ன, ஆளாளுக்கு நல்லாப் பாக்கிறோம்; குடுத்து வச்சவள்’ என்று அன்னை சொன்னபோது, கர்வமாய் மட்டுமே உணர்ந்தான்.

 

‘அவளுக்கென்ன நல்லா இருக்கிறாள்’ என்கிற வார்த்தை, அவளைக் கட்டியவனுக்கான கௌரவம் தானே. அந்தளவு தான் அவனளவில்.

 

அவளோ தினம் தினம் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறாள். வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவளின் சிரமம் பற்றி அவன் யோசிக்கவே இல்லை.

 

மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சாப்பிடு.” என்று கொடுக்க, அவளோ அவன் கையை அவன் பக்கமாகவே தள்ளிவிட்டாள்.

 

“கிட்ட கொண்டு வராதீங்கோ, திரும்பச் சத்தி(வாந்தி) வரும்.”

 

வேகமாக எடுத்துவிட்டான். அவள் வாந்தி எடுக்கும் காட்சியே அவனுக்குள் திகிலைக் கிளப்பியது.

 

“ஃபிளைட்ல ஏதாவது சாப்பிட்டியா?”

 

இல்லையென்று தலையசைத்தாள்.

 

“ஏன்?” விடாமல் அவன் கேட்கவும், “என்ன ஏன்? இங்க வந்தமாதிரி அங்க சத்தி(வாந்தி) வந்தாலும் எண்டுதான்.” என்று, அவளையும் மீறிச் சிடுசிடுத்தாள்.

 

முடியாமல் இருக்கும் நேரத்தில் என்ன இது ஆளாளுக்கு நொய் நொய் என்று சினம்தான் வந்தது. அவனும் மனைவியின் நிலை உணர்ந்து தணிந்து போனான்.

 

“வெறும் வயித்தோட எல்லோ இருக்கிறாய். இதுவும் வேணாம் எண்டா, வேற என்ன வாங்கித் தர?” உண்மையாகவே அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்று அவனுக்குத் தெரியவே இல்லை.

 

“முடிஞ்சா கொஞ்சம் இளம் சூட்டில சுடுதண்ணி வாங்கித் தாங்கோ. போதும்.”

 

ஆழமாக அடிவாங்கினான் அவன். காலையில் சாப்பிடாததே அவனுக்கு வயிறு பசியில் கத்திக்கொண்டு கிடக்கிறது. இங்கே அவள்?

 

வேகமாய்ச் சென்று அவள் கேட்டதை வாங்கிவந்து கொடுத்தான்.

 

இரண்டுவாய் பருகிவிட்டு, “நீங்க சாப்பிடேல்லையா?” என்று கேட்டாள்.

 

இல்லை என்று தலையசைத்தான். தான் இதை இத்தனை நாட்களாய்க் கேட்காமல் போனோமே என்றிருந்தது. அவள் மட்டுமா அவனுடைய குழந்தையும் அல்லவா. கண்கள் தானாக அவள் வயிற்றுக்குத் தாயிற்று. அந்த வயிற்றை அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது. அத்தனை நேரமும் கோபம் ஆக்கிரமித்திருந்ததில் பொங்காத உணர்வுகள் இப்போது பொங்கின. ஏக்கத்தோடு மனைவியைப் பார்த்தான். அவள் எங்கோ சூனியத்தை வெறித்திருந்தாள்.

 

அவன் அருகில் இருக்கையில் செம்மை பூசியே இருக்கும் கன்னங்கள் ஒட்டிக் கிடந்தன. நாணமும் ஆசையும் போட்டிபோடும் விழிகளில் ஒளிர்வே இல்லை. சிரிப்பை மட்டுமே சிந்தும் இதழ்கள் வறண்டு காய்ந்து கிடந்தது. என்ன வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திருக்கிறான்.

 

“இங்கதான் மணக்கும், வெளில நிண்டு சாப்பிட்டு வாங்கோ.” என்று அவள் சொல்ல, பசி தெரிந்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை அவனுக்கு.

 

ஆனால், இன்று ஒருநாள் சாப்பிடாமல் இருந்தால் அவன் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாட்களும் அவள் சாப்பிட முடியாமல் சிரமப்பட அவன் நன்றாகத்தானே வயிறு முட்ட விழுங்கினான்.

 

இறங்கிச் சென்று சாப்பிட்டான். பசிக்கு என்பதை விட, ‘ஏன் சாப்பிடேல்லை?’ என்று அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் தெம்பற்று விழுங்கினான். அரைவாசிக்குமேல் அதுவும் முடியாமல் எறிந்துவிட்டு வந்தான்.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!