உன்னில் என்னை தொலைத்தேனடி 15 – 1

அத்தியாயம் 15

 

 

ஒருவழியாக அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தேடினாள் ஷர்மினி.

 

‘எப்பதான் என்னோட கதைப்பா?’ என்று ஏக்கத்துடன் அவளையே விழிகளால் தொடர்ந்துகொண்டிருந்தவன், ‘களைப்போட இப்ப சமைக்கவேணுமா?’ என்று நாக்கு நுனிவரை எழுந்த கேள்வியை அடக்கிக்கொண்டான்.

 

அவளுக்குப் பிடித்தமாதிரி எதையாவது செய்தால் சாப்பிடுவாளே என்று தோன்றவும் தானும் சேர்ந்துகொண்டான்.

 

“என்ன சமைக்கப்போறாய்?” அவள் முகம் கொடுக்காதபோதும் அவன் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

 

“ஒரு சோறும் ரசமும் மட்டும்தான்.”

 

அவள் பொருட்களைத்தேட, வேகமாக வெங்காயத்தை எடுத்துத் தோலை உரித்து வெட்டிக்கொடுத்தான். உள்ளியின் தோலை அவள் உரிக்க, அதனை உரலில் இடித்துக்கொடுத்தான்.

 

“வேற என்ன வேணும்?”

 

“புளி ஊறப்போடவேணும். தக்காளிப்பழம்?” அவள் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்தான்.

 

ரசத்தூளுக்கான பொருட்களை அளவு பார்த்து அவள் எடுக்க அவற்றை அடித்துக்கொடுத்தான். அடுப்பில் ரசத்துக்கான வேலையைப் பார்த்தாள் ஷர்மினி.

 

அதற்குள், ‘பசுமதி’ அரிசியை அவர்கள் இருவருக்கும் அளவாக எடுத்து, கழுவி ரைஸ்குக்கரில் போட்டு, உப்புமிட்டு வேக விட்டான் அவன்.

 

இருபது நிமிடங்களில் சுடச்சுட ரசமும் சோறும் தயாராயிருந்தது. மனைவியின் கைமணத்தில் ரசத்தின் வாசனை மூக்கை நிறைக்க, உமிழ்நீர் சுரந்தது அவனுக்கு.

 

இவ்வளவும் நடக்கும்போதும், ஏதாவது கதைப்பாள், கேட்பாள் என்று அவளையே கவனித்திருக்க, “சாப்பிடுறீங்களா?” என்று மட்டும்தான் கேட்டாள்.

 

ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வினாலும், எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவள் கையால் கிடைக்கும் உணவைத் தவறவிட மனமில்லை.

 

“உனக்கும் சேர்த்துப் போட்டுக்கொண்டு வா.” என்றான்.

 

அவனுக்குத் தட்டு நிறைய உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, எண்ணி நான்கு சோறுதான் வரும்போலிருந்த அளவில் சோற்றோடு ரசமும் வைத்து, ஊரிலிருந்து கொண்டுவந்த ஊறுகாய் மட்டுமே சேர்த்து அவள் சாப்பிட, “இது என்னத்தக் காணும்? இன்னும் கொஞ்சம் போடு!” என்று சோற்றைப்போட முயன்றான் அவன்.

 

“இல்ல காணும்!” என்று கையைக் குறுக்கே கொணர்ந்து தடுத்துவிட்டாள் ஷர்மினி.

 

அவ்வளவுதான் அவனோடு அவள் பேசியவை. சாப்பிட்டுவிட்டுச் சென்று படுத்துக்கொண்டாள்.

 

இது அவளில்லை! இந்த அமைதி அவள் இயல்பில்லை!

 

மாற்றியே ஆகவேண்டும்! அவளின் அந்த அமைதி, அவனுக்குள் கிலியைத்தான் பரப்பிக் கொண்டிருந்தது.

 

கதைக்கவேண்டிய நேரத்தில் கதைக்கத் தவறிய தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டிருந்தான். சின்ன விசயமாக முடித்திருக்க வேண்டிய ஒன்றை அவனும் சேர்ந்து பெரிதாக்கி, பெரிய மனவிரிசலில் கொண்டுவந்து விட்டுவிட்டானே!

 

நன்றாக உறங்கிப் போனவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சீராளன்.

 

அங்கே, அதே அறையிலேயே அவனோடு திருமணத்தில் நின்றவளின் ஃபோட்டோவைப் பார்த்தான். அதில் இருப்பவள் தங்கை என்று கூடிச் சொல்லமுடியாத அளவில் மாறிப் போயிருந்தது அவள் தோற்றம். இதுதானா அவன் கொடுத்த திருமணப் பரிசு. ஊரில் யாரையாவது கட்டியிருக்க சந்தோசமாக வாழ்ந்திருப்பாளோ? நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

 

அடுத்த கணமே அவளருகில் அவனையன்றி இன்னொருவனை நினைப்பில் கூட நிறுத்த முடியாமல், அவன்தான் ஊரில் இருக்கும் ஒருவனாகவும் மனக்கண் முன்னே வந்து நின்றான்.

 

அவள் எழுந்த பிறகும் ஏதாவது கதைப்பாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ ஒன்றும் சொல்லவே இல்லை. தன் பாட்டுக்கு முகம் கழுவிக்கொண்டு வந்து சோபாவில் சென்று முடங்கிக்கொண்டாள்.

 

பயணக்களையா, அல்லது, உடல்நிலை சரியில்லையா கைகளைக் கன்னத்துக்குக் கீழே கொடுத்து, கால்களை முடக்கிக்கொண்டு கண்களை மூடியிருந்தாள்.

 

உறங்கவில்லை என்பதை, மூடியிருந்த விழிகளுக்குள் ஓடித்திருந்த கருமணிகள் உணர்த்தின. அவன் முகம் பார்க்கப் பிடிக்கவில்லையோ?

 

சொல்லத்தான் வந்தாள்! மனம் முழுக்க ஓராயிரம் சோகக் கதைகளை, மனவருத்தங்களை, கண்ணீரை, கவலையை, இப்படி எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் வந்தாள்.

 

அவன் காலடியில் அத்தனையையும் இறக்கிவிட்டு, ஒருமூச்சு அழுதுவிட்டு, மன்னிப்பைக் கேட்டு சுமூகமாகிவிட வேண்டும் என்கிற பேராசையோடுதான் வந்தாள். கட்டிய கணவனிடம் என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறதாம்? அவனில்லாமல் அவளால் வாழவே முடியாது என்கிறபோது சரணடைந்துவிடுவதில் என்ன தவறு என்றுதான் வந்தாள்!

 

ஆனால், நண்பனோடு இனி நீ கதைக்கக்கூடாது என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தை, அத்தனை பாரங்களையும் பல மடங்காக்கி அவள் மூச்சுக்குழாயை அடைத்தபோது, நானாக இறக்கி வைப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டாள்.

 

என்னிடம் ஒரு கேள்வி கேட்கக் கூடவா உன்னால் முடியவில்லை? என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டாம்! ஏன் இப்படிச் செய்தாய் என்று கூடவா கேட்க முடியவில்லை? தூரத்தில் இருந்தபோதாவது பரவாயில்லை, உன்னருகில் வந்த பிறகுமா இந்தக் கோபம்? விலகல்?

 

என்னை அருகில் வைத்துக்கொண்டு யாரோபோல தள்ளி நிற்க உன்னால் முடிகிறதுதானே?

 

மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் முகத்தில் எதுவுமே தெரியவில்லை. நிர்சலனமாய்ச் சாய்ந்திருந்தாள். அவனும் அவளும் அப்படியே இருக்கலாம். பொழுது இருக்குமா? இரவை எட்டியது.

 

உணவை முடித்துக்கொண்டு கட்டிலின் ஒரு பக்கத்தில் அவள் படுத்துக்கொள்ள, இன்னோர் ஓரத்தில் படுக்க முடியவில்லை அவனால்.

 

ஒரு வாரம்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த ஒரு வாரம் தானே ஓராயிரம் நினைவுகளைத் தந்தது. ஓராயிரம் சந்தோசங்களைத் தந்தது. அந்த நினைவுகளுக்கு மத்தியில் இந்த நிஜம் கசந்து வழிந்தது. யாரோபோல் அவனால் ஒதுங்கி இருக்க முடியவில்லை. அவளின் அமைதி பொறுக்க முடியவில்லை. இரும்புப் பெட்டகம் போல் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு இருப்பவளைக் காணச் சகிக்கவில்லை.

 

உன் மனதைச் சொல்லு; அதிலிருக்கும் அத்தனை குறை நிறைகளையும் சொல்லு; உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டிவிட மனம் உந்த, அதற்குமேல் முடியாமல் எழுந்துவந்து அவள் படுத்திருந்த பக்கம் அமர்ந்தான்.

 

அதை எதிர்பாராதவள் திகைத்து அவனைப் பார்க்க, அவளின் வயிற்றை நடுங்கும் கரங்களால் மெல்லத் தடவினான்.

 

‘இத்தனை நேரமாய் என்னைத் தேடவில்லையேப்பா நீ?’ அவள் மனதைப்போலவே பிள்ளையும் உணர்ந்தது போலும், மெல்லிய அசைவு அதனிடம்.

 

ஆனந்த அதிர்ச்சி தாக்க மனைவியைப் பார்த்தான்.

 

அகன்ற விழிகளால் அதுவரை அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் கண்களை படக்கென்று இறுக்கி மூடிக்கொள்ள, காது மடல்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.

 

அவன் விழிகளிலும் கசிவு. அவளை நிமிர்த்தி வயிற்றில் உதடுகளைப் பதித்தவன் குழந்தையோடு குழந்தையாக அந்த வயிற்றிலேயே தஞ்சமானான்.

 

“என்ன பிழை செய்தனான் எண்டு இன்னும் எனக்கு வடிவாத் தெரியேல்ல. ஆனாலும் குற்ற உணர்ச்சி என்னைக் குத்துது. நீ எப்பிடி இருக்கிறாய் எண்டு யோசிக்காம, முட்டாள் தனமா நடந்திட்டனே எண்டு கொல்லுது. எது நடந்து இருந்தாலும் நான் உன்னோட கதைச்சிருக்க வேணும். சந்தோசமாச் சிட்டுக்குருவி மாதிரிப் பாடித் திரிஞ்சவளைப் பிடிச்சு, சிறகை வெட்டி அடச்சு வச்சமாதிரியே இருக்கு உன்னப் பாக்க. தெரிஞ்சோ தெரியாமலோ நான் செய்த எல்லா பிழைக்கும் என்ன மன்னிச்சிடு. தயவு செய்து இப்படி இருக்காத ஷர்மி. எனக்கு என்ர பழைய ஷர்மி வேணும். என்னைக் கண்டதும் கருமம் கருமம் எண்டு கண்ண மூடின அதே துள்ளலான ஷர்மி வேணும்.” என்று அவளின் கரத்தை அவன் பற்றப் போக, சட்டென்று விலகி அமர்ந்தாள் அவள்.

 

நெஞ்சைப் பிளந்துகொண்டு அழுகை வெடித்தது அவளுக்கு!

 

அவன் நடுங்கிப்போனான். “ஐயோ அழாத. பிள்ளையை வச்சுக்கொண்டு தயவுசெய்து அழாத ஷர்மி! பயமா இருக்கு எனக்கு.” அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அஞ்சினான்.

 

அதைக் காதிலேயே விழுத்தாமல் அவனிடமிருந்து விலகி நின்று, அவள் கேட்ட முதல் கேள்வி, “என்ர வயித்தில இருக்கிற பிள்ளைல உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?” என்பதுதான்.

 

ஒற்றைக் கணத்தில் உச்சிக்கு ஏறியது அவன் கோபம். கண்கள் எல்லாம் சிவந்து போயிற்று. பார்வையாலேயே அவளைப் பொசுக்கினான்.

 

“அறைஞ்சன் எண்டா! என்னடி கதை கதைக்கிறாய்?” உச்சபட்ச சினத்தில் சீறியவன் சட்டென்று எழுந்துவிட்டான். ஆத்திரத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் பிள்ளையைப் பற்றி என்ன கேள்வி கேட்டுவிட்டாள்?

 

உறுமிக்கொண்டு நின்றவனைக்கண்டு உள்ளே குளிர் பிறந்தாலும், “பிறகு என்னத்துக்கு உதயனோட கதைக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க?” என்று கேட்காமல் விடவில்லை அவள்.

 

“உனக்கென்ன விசரா பிடிச்சிருக்கு? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறாய்?” அப்போதும் கோபம் ஆறவில்லை அவனுக்கு.

 

“என்னத்துக்கு அவனோட கதைக்கவேண்டாம் எண்டு சொன்னீங்க? அதுக்குப் பதிலைச் சொல்லுங்கோ முதல்!” அவளுக்குப் பதில் தெரிந்தே ஆகவேண்டியிருந்தது.

 

“பக்கத்தில நானிருக்கிறன், வந்ததுல இருந்து என்னட்ட ஒண்டும் சொல்லாம அவனிட்ட சொல்லுறாய் எண்டுற கோபத்தில நான் ஏதோ லூசு மாதிரிக் கதைச்சா… அதுக்கு நீ இப்பிடித்தான் கதைப்பியா?” என்று சீறினான் அவன்.

 

இந்தச் சின்ன விசயத்துக்கா அவ்வளவு கோபப்பட்டான்? நம்பமுடியாமல் அவனையே பார்த்தாள் அவள்.

 

வேகமாக வந்து அவளருகில் மீண்டும் அமர்ந்துகொண்டு சொன்னான் அவன்.

 

“இங்க பார் ஷர்மி. சொல்லாம கொள்ளாம நீ உங்கட வீட்டை போனது எனக்குச் சரியான கோபம். அதுக்குப்பிறகும், என்ன நடந்தது எண்டு ஒரு வார்த்த எடுத்துச் சொல்லேல்ல நீ. நகையை அடவு வைக்கிறது எல்லாம் என்ன பழக்கம், சொல்லு? கோபத்தில ஒரு வார்த்த சொன்னதுக்கு ரோசப்பட்டுப்போய் நகையை வித்திருக்கிறாய். இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்கிறேல்ல. நீயா எடுத்து விளக்கம் சொல்லவேணும் எண்டு எதிர்பாத்தனான். ஆனா, கடைசிவரைக்கும் நீ எடுக்கவே இல்ல. அதுக்குக் காரணம் உன்ர வீட்டாக்கள் எண்டு நினைச்சன். முக்கியமா உதயன். அவனும் நீயும் நல்ல ஒட்டு எண்டு தெரியும். முதல் முதல் உன்னோட கதைக்க வரேக்க அவன் தடுத்ததே எனக்குக் கோபம். அதெல்லாம் இப்ப இல்லதான். எண்டாலும், அவனைவிட நீ என்னட்டத்தான் எல்லாத்தையும் சொல்லோணும், உனக்கு நான்தான் எல்லாமா இருக்கோணும் எண்டுதான் நினைப்பன். இது சந்தேகம் இல்ல. அப்பிடிச் சந்தேகம் இருந்தா கொழும்பில அவன்ர பொறுப்பில உன்ன விடுவனா சொல்லு?” என்று அவன் வினா எழுப்பியபோது, இது உரிமைப்போராட்டம் என்று தெளிந்தாள் அவன் மனைவி.

error: Alert: Content selection is disabled!!