என்றும் உன் நிழலாக 25 – 2

இப்படித் தன்னுள்ளே தன்னை அடக்கி அடங்கி இருந்தவள், இன்று, இப்படிக் குதூகலம் கொப்பளிக்க, குறும்புப்பேச்சுடன் இருப்பதைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் இலேசாகி, ‘என்றைக்கும் இந்தப் புன்னகை மாறாமல் அவளைக் காக்க வேணும்.’ என்ற எண்ணத்தை அவனுள் தோற்றுவித்தது .

அந்த எண்ணத்துடனேயே அவளை விட்டு விலக்க முடியாத தன் விழிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தவன், ஒரு பக்கமாகத் தனியே நிற்கும் ரஞ்சனுடன் போய் நின்று, அவனுடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

காயா விரும்புவதாக நிதி சொன்ன அன்றே, வீட்டுக்குப் போகப் போவதாகச் சொல்லிப் புறப்பட எத்தனித்த ரஞ்சனை தடுப்பதற்குள் அவர்களுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

அதன் பிறகு காயா இருக்கும் பக்கம் கூட திரும்பியும் பார்ப்பதில்லை அவன். அது காயாவிற்கு எந்தளவுக்கு வேதனை தருமென்பதை அவன் அறியாவிட்டாலும், அவளின் நேசம் தெரிந்த மற்றவர்கள் அதை அறிந்தே இருந்தனர்.

ஒரு மாதத்தில் நெதர்லாந்து திரும்பும் வகையில் வந்திருந்தவர்கள், “கொஞ்சம் பொறுமையாக இருப்பம், அவனை விட்டுத் தான் பிடிக்க வேணும்.’’ என்று சொன்ன இந்திரன், “வீட்டுக்குப் போய் எல்லாம் கதைப்பம்.’’ என்று சொன்னதால் எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர்.

ரஞ்சனோ, நிதி மீது அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருப்பது எவ்வளவு உண்மையோ. அந்தளவுக்கு இப்போது கோபத்தையும் சேர்த்து வைத்துள்ளான். அவள் மீது தனக்கு இந்தளவுக்குக் கோபம் வரும் என்று அவன் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.

‘இவளை இப்பக் கேட்டனா, எனக்குப் பெண் பாக்கச் சொல்லி! நான் இவளுக்கு அண்ணா என்றவள், இப்ப அண்ணி தேடுறாளா?’ என மனதில் அவளை திட்டித் தீர்த்தவன், அவள் முகத்திற்கு நேராக ஒரு போதும் கடிந்து கொள்ளவோ சினக்கவோ முடியவே முடியாது என்பதை நன்கறிந்திருந்ததால், அவர்களை விட்டு ஒதுக்கமாகவே இருந்து வருகிறான்.

 

விமானம் வந்திறங்கி பயணிகள் வருகை தொடங்கியிருந்தது.

கண்ணாடிக் கதவுகள் வழியாக பயணிகள் வரும் வழியில் விழிகள் பதித்து நின்றிருந்தனர் ஒவ்வொருவரும்.

முதலில் தன் தம்பியைக் கண்டு கொண்ட நிதி, “அந்தா ரூபன்!’’ என்று கூவியபடி முண்டியடித்து மற்றவர்களை விலத்திக்கொண்டு வாயிலை நெருங்கியவள், தொடந்து மற்றவர்களும் வெளியில் வர ஓடிச்சென்று தன் தம்பி தங்கைகளைக் கட்டிக்கொண்டு, அது பொது இடம் என்பதையும் மறந்து விசும்பி அழ, எத்தனையோ வருடங்களுக்கு முன் தாம் கண்ணால் கண்ட தம் செல்ல அக்காவைக் கண்ட சிறியவர்களும், அவளைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினர் .

இதனைப் பார்த்துக் கண்கள் கலங்கியவாறே பின்னால் வந்த அவர்களின் பெற்றவர்களும், தாம் சின்னஞ் சிறுமியாய் அனுப்பிய தங்கள் மகள் இன்று வளர்ந்த பெரிய பெண்ணாக, கொள்ளை அழகுடன் நிற்பதை நம்ப முடியாது பார்த்தவர்கள், ஆதுரத்துடன் அவளை கட்டிக் கொண்டனர்.

இத்தனை நாட்களும் அவள் தம்மோடு இல்லாத பொழுது அவளைப் பற்றிப் பெரிதாக அவர்களுக்கு எண்ணத் தோன்றவில்லை.

ஆரம்ப காலத்திலும் அவள் நினைவுகள் இவர்களைத் தாக்கினாலும் அப்போதுதான் தனாவும் மறைந்திருந்ததால், அவன் இழப்பே இவர்களுக்குப் பேரிழப்பாக, தாங்க முடியாத வேதனை தருவதாக இருந்தது.

அந்த வேதனையில் தம்மைத் தொலைத்தவர்கள், அவளேனும் எங்கோ ஒரு இடத்தில் பாதுகாப்பாக, வசதி வாய்ப்புகளுடன் இருக்கிறாள் என்ற நிம்மதியில் இருந்தனர். பிறகும், அவளே குடும்பத்துக்குப் பண உதவிகள் செய்யத் தொடங்க, அதுவும் அவர்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கவே, அவர்கள் பார்வையில் அவள் பெரியவளாக, குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துபவளாகவே கருதப்பட்டாள்.

ஆனால் இன்று, அவளை நேரில் காணவும் தான், தம் மற்றைய குழந்தைகள் போலவே அவளும் ஒரு சிறுபெண் என்பதே அவர்களுக்கு உறைத்தது.

அதுமட்டுமின்றி அவளைத் தனியே தம்மை விட்டுப் பிரித்து அனுப்பி, அவளுக்குப் பிழை செய்து விட்டது போல மனதில் குன்றிப் போய் விட்டார்கள் தந்தையும் தாயும்.

அந்த அளவிற்கு சகோதரங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு, பார்போரைக் கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு அழுது தீர்த்தனர். இதையனைத்தையும் தள்ளி நின்று மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததனர். யாருமே அவர்கள் அருகில் வரவில்லை.

சிலநிமிடங்களின் பின்பு முன்னே வந்த இந்திரன், தன் தங்கையையும் மைத்துனனையும் கட்டிக் கொண்டவர் நலம் விசாரிக்க, நிதியின் அருகில் வந்த வசி அவளைக் கடிந்துகொண்டு அழுகையை அடக்கிவிட்டு, தூரமாக நின்றவாறு, விழியெடுக்காது பார்த்து நிற்கும் தனாவைச் சுட்டிக் காட்டினான்.

“அய்யோ நான் இவையளைக் கண்டதில அவையளை மறந்திட்டன்.’’ என்றவாறே, தன்னருகில் நின்ற தாயினதும் தந்தையினதும் கழுத்தில் கைபோட்டு அப்படியே அவர்களை வளைத்துப் பிடித்து, அவர்கள் கண்களைத் தன் கரங்கள் கொண்டு பொத்தினாள் நிதி.

“என்னம்மா செய்யிற? விடம்மா. இதென்ன விளையாட்டு?’’ என்று அவர்கள் சொன்னதற்கு, “இல்லம்மா, ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுங்க; உங்களுக்கு இன்றைக்குப் பெரிய அதிசயம்…ம்ம்ம்…அதிசயம் இல்ல…அது என்ன என்று சொல்லுறது? எல்லாத்தையும் விடப் பெரிசு! இந்த நிமிசம் இனி நீங்க வாழ்நாளில மறக்கவே முடியாததாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றைக் காட்டுறன், பேசாமக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க… ப்ளீஸ்…ப்ளீஸ்!’’ என்றவள்,

தன் செய்கை புரியாமல் சுற்றிலும் தங்கள் பார்வையைச் சுழலவிட்டு, எதுவும் புரியாமல் தன்னையே கேள்வியாகப் பார்க்கும் இளையவர்களைப் பார்த்து, ‘ம்ம்…இவையளாலேயும் அண்ணாவை அடையாளம் காண முடியுமோ தெரியாது?’ என நினைத்துக் கொண்டே,

“நீங்களும் என்னோட வாங்க.’’ அவர்களையும் அழைத்துக் கொண்டு மெல்ல தனாவின் அருகில் சென்றவள், முகத்தில் கலவையான உணர்வுகளுடன் தவிப்பாக நின்ற தமையனைப் பார்த்து ஆறுதலாகப் புன்னகைத்தபடி,

“அம்மா…ப்ளீஸ்மா கொஞ்சமும் பதறாதீங்க சரியா! நீங்க கும்பிடுற சாமி உங்களைக் கைவிடவே இல்லை. சாமி எல்லாம் இருக்கா? என்று எத்தனையோ தரம் நினைச்ச என்னையே…பார், நான் இருக்கிறன் என்று எனக்கு காட்டியது இந்த விசயம் தான்மா.’’ குரல் நடுங்கச் சொன்னவள், நடுங்கும் தன் கரங்களை மெல்ல அவர்கள் கண்களில் இருந்து அகற்றினாள்.

நிதி கண்ணைப் பொத்திப் பிடித்திருந்ததால், அவள் கையை விலக்கிய பின்னும் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

கண்களைச் சிமிட்டிக்கொண்டு தம் முன்னால் நிற்கும் தெளிவில்லாத உருவத்தைப் பார்த்தவர்கள், சில கணங்களில் அந்த உருவம் தெளிவாகத் தெரியவும்,

“ஐயோயோயோ…’’ என்று அலறிய ரஞ்சிதத்தின் குரலால் அருகில் சென்றவர்கள் அப்படியே திகைத்து நின்று அவர்களைப் பார்க்க, குரலை எழுப்பியவரோ, “நீ…நீ…தனா தானே…த…னா..என்ர ராசா…’’ என்றபடி மயங்கிச் சரிந்தார்.

 

 

error: Alert: Content selection is disabled!!