26
அடையார் அண்ணா நகர் மேற்கில் அமைந்துள்ள மனோகரின் வைத்தியசாலையில், பிரத்தியேக அறையொன்றில் கண்மூடிப் படுத்திருந்தார் ரஞ்சிதம்.
விமான நிலையத்தில் தனாவை இனம் கண்டதும் மயங்கிச் சரிந்தவர், அங்கு முதலுதவிகள் செய்தும் நினைவு திரும்பாமல் இருக்கவே, உடனே தங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துவிட்டார் மனோகர்.
இங்கு வந்தும் ஏறக்குறைய நான்கு மணி நேரமாக எல்லோரையும் மிகவும் பயப்படுத்திக் கதிகலங்க வைத்து விட்டார் ரஞ்சிதம்.
அவர், வயதுக்கு மீறிய தளர்ச்சியுடன் மயக்கம் தெளியாமல் வாடிக் கிடப்பதைப் பார்த்த தனா, நெஞ்சம் நடுங்க வேதனையில் துடித்துப் போனான்.
தன்னைப் பெற்றவரைக் கூடத் தன்னால் இனம் காண முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவன், தானே இன்று அவருக்குக் கெடுதல் செய்து விட்டேனோ என்று நினைத்துக் கலங்கியவன், அழுகையை நிறுந்தாமல், கூடி அமர்ந்திருக்கும் நிதியையும் தம்பி தங்கைகளையும் கண்டு இன்னமும் பதை பதைத்து விட்டான்.
ஏற்கனவே அவ்வளவாக ஆரோக்கியமுடையவராக இருக்கவில்லை ரஞ்சிதம். அத்தோடு சேர்ந்து இப்பெரும் அதிர்ச்சியும் தாக்கவே, தாங்க முடியாமல் அப்படியே மயங்கி விட்டார்.
வயதுக்கு மீறிய வயோதிபத்துடன் காணப்பட்ட அவன் தந்தையோ, எதுவுமே புரியாமல், யாருடனும் ஒருவார்த்தை பேசாது அதிர்ச்சியில் இருந்து மீழாது, அப்படியே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றார் .
இப்படிக் கூட நடக்குமா? நடந்தால் எப்படி இருக்கும் என்று இழப்புக்களை அனுபவித்தவர்கள் நினைத்துப் பார்ப்பது இயல்பு! ஆனால், அது நிஜமாகினால் எப்படி இருக்கும்? இவர்கள் விடயத்தில் அது நிஜமாகிவிட்டதே!
இக்கணம் இப்பூகோலத்திலேயே மிகவும் கொடுத்து வைத்த, இறை ஆசியை மொத்தமாகப் பெற்றவர்கள் தாங்கள் என்ற எண்ணம் நிதியின் குடும்ப ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஓடிக் கொண்டிருந்தது.
இன்னமும் மயக்கம் தெளியவில்லையே என்று கவலைப்படுத்தித் தவிக்க விட்ட ரஞ்சிதம் நினைவுக்குத் திரும்பியதும் கதறிய கதறலைப் பார்த்துப் பயந்து போனவர்கள், அவருக்குத் தூங்க வைப்பதற்கான ஊசி போட்டு, அதன் தாக்கத்தில் இப்போது அவர் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
விமான நிலையைத்தில் இருந்து எல்லோரும் நேராக வைத்தியசாலைக்கு வந்திருந்தபடியால், தனாவும் நிதியும் வசியும் இங்கு நிற்க, மிகுதிப் பேர் இப்போது தான் வீட்டுக்கு மிகவும் வற்புறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாயின் முகத்தில் நிலைத்திருந்த தன் விழிகளை அகற்ற விருப்பமின்றியே அவரையே பார்த்திருந்தான் தனா.
‘என்ர பிழையென்று எதுவுமில்லையென்றாலும், இவர்களையெல்லாம் நான் எத்தனை தூரம் வருத்தி இருக்கிறன்! என் இழப்பு இவர்களை எந்தளவுக்குத் துன்பப்படுத்தியுள்ளது.’’ என நினைத்துப் பார்த்தவன்,
‘உண்மையாகவே நான் இறந்து இருந்திருந்தால்!’ என்ற எண்ணம் தோன்றியதும், ‘இந்த வலியும் வேதனையும் காலம் செல்லச் செல்ல, மறைந்து குறைந்தது போல இருந்தாலும், உண்மையில் அது நிஜமாக பச்சை இரணமாக இதயத்தின் ஆழத்திலிருந்து, திடீர் திடீரென்று அந்த வலிக்குட்பட்டவர்களை வேதனையில் வாட வைக்கும்.’ வேதனைப் பெருமூச்சுடன் நினைத்தவாறே, தன்னருகில் தொய்ந்து போய் அமர்ந்திருக்கும் தன் தங்கையைப் பார்த்தவனுக்கு, கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.
‘இவர்கள் என் சொந்தங்கள்…நான் இத்தனை நாளாகத் தேடிய என் இரத்தபந்தங்கள்.’ என்ற உணர்வு அவனுள் அப்போது முழுமையாகத் தோன்றியது.
‘பழைய நினைவுகள் திரும்பினால் என்ன திரும்பாவிட்டால் தான் என்ன!’ என நினைத்தவன், இந்தப் பாசத்துக்கு முன்னால் தான் தோற்று, அவர்கள் அன்பில் வீழ்ந்து விட்டதை உணர்ந்தவாறே நிதியின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான் .
இரு வருடங்களின் பின்னர் …
ஒர் அழகிய இளம்காலைப் பொழுதில், எலியட் கடற்கரையில் அமைந்திருக்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகிய மணவறையில், உள்ளத்தில் நிறைந்த உவகை முகத்தில் பிரதிபலிக்க, தனக்கே உரிய கம்பீரத்துடன் மணமகனாக அமர்ந்திருந்தான் வசி !
ஐயர் உரிய மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, சுற்றிலும் மிகவும் சொற்பமான அவர்களின் நெருகிய பந்தங்கள் முகம் கொள்ளா மகிழ்வுடன், ஒருமனமாய் இணைந்த தம் பிள்ளைகள் திருமண பந்தத்தில் கால் பதிக்கவுள்ள இத்தருணத்தில், அவ்விருவரையும் உள்ளத்தில் வாழ்த்திய வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.
தன் மகன் உயிருடன் இருக்கிறான் என்று அறிந்து அதிர்ச்சியில் சுகயீனமுற்றிருந்த ரஞ்சிதம் குணமடைந்த பின் நிதியும் மற்றவர்களும் நெதர்லாந்து திரும்பி விட்டனர்.
கண்ணனாகவும் தனாவாகவும் தன்னை உள்வாங்கிக் கொண்ட நிதியின் தமையன், தன்னைப் பெற்றவர்களுக்காகவும் தன் நிம்மதிக்கென எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களும், தனக்கு என்று ஒரு அழகிய வாழ்வைத் தந்தவர்களிற்குமாகத் தன்னைப் பகிர்ந்து கொண்டு வாழப் பழகிக்கொண்டான்.
அதுமட்டுமின்றி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலங்கை சென்று, பெற்றவர் சகோதரங்களுடன் தங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அத்தோடு, அவன் குடும்ப வாழ்வில் உள்ள சந்தோசத்தை அதிகரிக்கும் வகையில், அடாவடி ராணியான ஜனனியையே படாதபாடுபடுத்தும் வகையில் குட்டித் தேவதையாய் வந்துதித்த மிதிலா, இந்தப் பத்து மாதங்களில் தன் கொஞ்சும் மழலையால், பெற்றோரையும் சூழ இருப்போரையும் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருகிறாள்.
நிதியும் மற்றவர்களும், ஒவ்வொரு விதத்தில் மனத்தாலும் உடலாலும் மிகவும் களைத்தே நாடு திரும்பியிருந்தனர்.
அதிலும் நிதியால் தன் அண்ணாவையும் சகோதரங்களையும் விட்டுப் பிரிவதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பயணம் முழுவதுமே பிழியப்பிழிய அழுது, அவளைத் தேற்றும் வழிதெரியாமல் மற்றவர்களைக் கையைப் பிசைந்து கொண்டிருக்க வைத்து விட்டாள்.
தங்கள் பயணச்சீட்டை இருகிழமைகளிற்குப் பின்தள்ளிப் போட்டு, மொத்தமாய் ஆறு கிழமை இந்தியாவில் நின்றுவிட்டு வந்தவர்களில், நிதி இப்படித் தொய்ந்து போய் வந்ததைப் பார்க்க, புவனி உட்பட அனைவருக்குமே மனதைப் பிசைந்தது.
அவளை இந்நிலையிலிருந்து மீட்பதற்குள் வசி தான் படாதபாடுபட்டு விட்டான்.
அது முடிய, ரஞ்சனின் பிடிவாதமும் அதற்குப் பதிலாக நிதியின் பிடிவாதமும் பார்த்து எல்லோருமே சலித்துத்தான் விட்டனர் .
காயாவின் விருப்பம் அறிந்து, புவனியிடன் கதைத்து அவரைக் கூட ஒருமாதிரி சம்மதிக்க வைத்த இந்திரானால், ரஞ்சனைத் தான் கொஞ்சமும் சம்மதிக்க வைக்க முடியாமல் இருந்தது.
அவனோ, “எனக்கு இப்போதைக்குக் கலியாணம் செய்யிற எண்ணமே இல்லை.’’ என்று பிடிவாதமாக மறுத்தவன், தான் இறுதி வருடம் படிக்கும் போது பயிற்சிக்காகச் சென்ற நிறுவனத்திடம் இருந்து நிரந்தர வேலைக்கு அழைப்பு வரவே அதை ஏற்று, தன் வேலையில் மூழ்கிவிட்டான், மேல் படிப்போடு!
காயாவோ, அவன் நிதியை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டே இப்படிச் செய்வதாக நினைத்து, மனதில் வெறுத்துத் தன்பாட்டில் ஒதுங்கிப் போகத் தொடங்கினாள்.
இதைப் பார்த்த புவனிதான் வெகுண்டு விட்டார். தன் அக்காவின் மருமகள் என்று நிதி மீது கொஞ்சமே கொஞ்சமாய்க் கனிவு காட்டத் தொடங்கியிருந்த புவனி, “இவளால் தான் என்ர மகனுக்கு இன்றைக்கு இந்த நிலை; அவன் விசரன் மாதிரித் திரிய, இவள் எல்லாரோடும் சந்தோசமாக இருக்கிறாள். இவளை வளர்த்ததற்கு எனக்கு நல்ல பரிசு தந்திருக்கிறாள்.’’ என்று அவளுக்கு முன்பாகவே அவளைத் தன் வார்த்தைகளால் குத்தியவருக்கோ, தன்மகனை நினைத்தும் அவன் வருங்காலத்தை நினைத்தும் பெரும் கலக்கமாக இருந்தது.
இதைப் பார்த்திருந்த நிதியோ, ‘மாமி சொல்லுறது சரி தான்! உண்மையில அப்பிடித்தானே இப்ப நடக்குது. என்னால் தானே இந்த ரஞ்சன் இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கிறார்.’ என்ற முடிவுக்கே வந்தாள்.
“நீங்க எதை மனதில நினைச்சு இப்பிடியெல்லாம் செய்றீங்களோ எனக்குச் சரியாக விளங்கேல்ல. மாமி சொல்லுற மாதிரி இதுக்கெல்லாம் நான் தான் காரணமோ என்றுதான் எனக்கும் நினைக்கத் தோன்றுது.’’ என்று ரஞ்சனிடம் கசப்புடன் கூறவும் செய்தாள்.
அதைக் கேட்டவனோ, “ஐயோ நிதி…அப்பிடி எல்லாம் இல்லைம்மா…’’ என்று, சமாதானம் செய்யும் வகையில் தொடங்க, “கொஞ்சம் பொறுங்க…நான் முதல் சொல்லி முடிக்கிறன்.’’ என்று இடைமறித்த நிதி, அவனைக் கூர்மையாகப் பார்த்தபடியே தொடர்ந்தாள்.
“அதனால எனக்குமே இந்தக் கலியாணம் காட்சி எதுவுமே தேவையில்லை என்று நினைக்கிறன் . அப்பச் சரி நீங்க சந்தோசமா இருக்கிறீங்களா என்று பார்ப்பம்.’’ முடிவாக நறுக்கென்று சொல்லி, ‘உன்னுடன் கதை முடிந்தது.’ என்ற வகையில் விருட்டென்று நகர்ந்து சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து, தான் சொன்னத்தை நிஜப்படுத்தும் வகையில் வசியை ஒதுக்கவும் தொடங்கி விட்டாள். இதைக் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த ரஞ்சனோ, “இந்த நடிப்பெல்லாம் என்னட்டையா?’’ என்று தொடர்ந்தும் முறைத்துக் கொண்டே தன்பாட்டில் திரிந்தான்.
அவனைப் பொறுத்த மட்டில், அவன் வீட்டிலுள்ளவர்கள் நினைப்பது போல அவன் நிதியை நினைத்துக் கொண்டு இருக்கவில்லை, ஆனாலும் அவன் நிதியை மறக்கவும் இல்லை என்பதுதான் உண்மை.
அந்த நினைவை அப்படியே அகற்றி வேறு ஒருத்தியுடன் வாழ்வை அமைத்துக் கொள்ள, ஏன் அது பற்றிச் சிந்திக்க, நிச்சயமாக அவனுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.
‘என்னைச்சுற்றி இருப்பவர்கள் யாருமே என்னைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே!’ என்று மனம் வருந்தியவனோ, இவ்வளவு விரைவில், எதுவுமே நடக்காத பாவனையில், காயா விரும்புகிறாள் என்று நிதியும் மற்றவர்களும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதை நம்பமுடியாமல் திண்டாடினான் .
‘காயாவை எனக்கு இன்று நேற்றா தெரியும்! இப்பத் திடீரென்று அவள் விரும்புறாள் என்றால் நம்பக் கூடியதாகவா இருக்கிது! அதுவும் எத்தனையோ நாளா விரும்புறாளாம். யாருக்குக் காது குத்தப் பார்க்கீனம்! இது எல்லாமே இந்த நிதியிட வேலை. நான் கலியாணம் செய்ய வேணும் என்று இப்படிப் பொய் சொல்லுறாள். இவர்களே காயாவைப் பெண் பார்த்து வச்சிட்டு, காதலிக்கிறாள் என்று சொல்லீனம்.’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டவன், அவர்கள் சொன்னதில் உண்மை உள்ளதா என்று அறிவதில் தன் நேரத்தைச் செலவிட நினைக்கவில்லை .
எப்படியும் வசி நிதி திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சுமியும் ஜீவானந்தமும், தாம் கொஞ்சமும் எதிர்பாரக்காத வகையில் திருமணத்துக்கான நிதியின் மறுப்பையும், அதற்கு அவள் காரணமாகச் சொன்ன ரஞ்சனின் செயலையும் நினைத்து வருந்த, வசியோ உள்ளுக்குள் நிதி மீது எழும் கோபத்தைக் கூட அவள் மேல் காட்ட முடியாது தவிக்க, அவர்களின் திருமணம் இழுபறியில் அந்தரத்தில் தொங்கவும் தான், ‘இவள் உண்மையாகத் தான் சொல்லியிருக்கிறாள்.’ என்பதே அவனுக்குப் புரிந்தது.

