எண்ணமெல்லாம் நீ 1 – 1

அத்தியாயம் 1

 

 

அன்று காலை வழமையை விடவும் நேரத்துக்கே எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு வந்த அபிராமி, அலுவலகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தமையன் சீராளனினதும் தோழி ஷர்மினியினதும் மகன் ஆருரனின் நான்காவது பிறந்தநாள். அவனுக்காகக் கோயிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே வேலைக்கும் போவதாகத் திட்டம்.

 

ஒரு மஞ்சள் நிறச் சுடிதாரில் புது மலரென வந்த மகளைக் கண்ட தேவகி அம்மாவின் மனத்தில் சந்தோசத்துக்குப் பதிலாகப் பாரம்தான் ஏறிற்று. இருபத்தியேழு வயது முடியப்போகிறது. இன்னும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்கிறாளே இல்லை.

 

அவரும் அதட்டி உருட்டி, கெஞ்சி என்று எல்லா வழிகளிலும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஏதும் காதலா என்றால் அதுவும் இல்லையாம்.

 

ஷர்மினியிடமாவது மனம் விட்டுப் பேசுவாள் என்று பார்த்தால் அதுவும் நடந்தபாடில்லை. அவள் எவ்வளவோ தூண்டித் துருவிக் கேட்டபோதும் திருமண ஆசை இன்னும் வரவில்லை என்றுதான் சொன்னாள்.

 

இப்போதெல்லாம் இப்படியே திருமணமே ஆகாமல் இருந்துவிடுவாளோ என்கிற பயம், தேவகி அம்மாவைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

 

ஏதாவது ஒரு இலக்கை நோக்கி ஓடும் பெண், அதற்குத் தடையாகத் திருமணம் இருக்கும், அதனால் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னாலாவது ஒரு அர்த்தம் உண்டு. இது, வீட்டில் இருக்க அலுப்படிக்கிறது என்று வேலைக்குப் போகிறவளால் கணவன், பிள்ளை, குடும்பம் என்று ஏன் வாழ விருப்பமில்லை?

 

ஒரு காலத்தில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குப் போவதையே அவள் விரும்பியதில்லை. அவள் போய் இன்னொருவரிடம் வேலை செய்வதா என்று கேட்டிருக்கிறாள். அப்படியானவள் கடந்த மூன்று வருடங்களாகத் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்க்கிறாள்.

 

அவளுக்கான காலை உணவைக் கொண்டுவந்து மேசையில் வைத்தார் தேவகி. சுவிஸில் இருக்கும் தமையனுக்கு அழைத்து, ஆரூரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தைப் பகிர்ந்தபடியே உணவை முடித்தாள் அபிராமி.

 

அவள் தந்தை மாணிக்கவாசகமும் பேரனுக்கு வாழ்த்தினார். எப்போதுமே அவர் சற்று அமைதிதான். இரண்டுமுறை மாரடைப்பு வந்ததில் இருந்து ஓய்விலேயே காலத்தைக் கழிக்கிறார். எதுவும் செய்ய முடிவதில்லை. கொஞ்சம் நடந்தாலே மூச்சிறைப்பு, சுவாசத்துக்குத் தவிப்பது என்று அவர் வாழ்க்கை மூன்று நேரமும் கை நிறைய மாத்திரைகளை உணவாக எடுப்பதிலேயே கழிந்துகொண்டிருந்தது.

 

தேவகியும் வாங்கிப் பேசினார். மூக்கும் முழியுமாக இருக்கும் பேரனைப் பார்த்தவருக்கு ஏக்கமும் ஆசையும் சரி விகிதத்தில் பொங்கின. “இந்த சம்மருக்காவது வாப்பு. சின்னவனைத் தூக்கிக் கொஞ்ச ஆசையா இருக்கு.” என்றார் குரல் கமற.

 

“அதுதான் வருவம் எண்டு சொன்னனான்தானே அம்மா. பிறகும் என்ன?” அங்கிருந்து சொன்னான் சீராளன்.

 

“இப்பிடித்தான் அப்பு, தம்பி பிறந்ததில இருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறாய். ஆனா, வரவே இல்ல. உன்ர தங்கச்சியும் ஒரு கலியாணத்தைக் கட்டுறாள் இல்ல. இப்பிடி ஏன் ரெண்டு பேரும் என்னைப் போட்டு வதைக்கிறீங்க?” என்றார் இயலாமையோடு.

 

ஒரு காலத்தில் பணம், வசதி, என் மகன் வெளிநாட்டில் என்று பெருமையோடு இருந்தவர்தான் அவரும். ஆனால், வயோதிகமும் கணவர் நோய்வாய்ப்பட்டு விழுந்ததும், மகன் தொலைதூரத்தில் இருப்பதும், மகள் திருமணமாகாமல் நிற்பதும் என்று அவர் நிம்மதி, சந்தோசம் எல்லாம் தொலைந்து போயிற்று.

 

அவனுக்கும் அன்னையின் மனம் தெரியும். அவரும் பாவம்தான். ஆனால், முதலில் மகனுக்கு ஒரு வயது முடியட்டும் என்று எண்ணினான். பிறகு சுவிஸில் வீடு வாங்கியதில் கொஞ்சம் இறுகிப்போனான். இப்படி ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு தடை.

 

ஆனால், இந்த வருடத்தின் முதன்மையான திட்டமாகவே இலங்கைப் பயணத்தை முடிவு செய்திருந்தான். அதை எத்தனையோ முறை அவருக்கு எடுத்துச் சொல்லிவிட்டான். இத்தனை வருடங்களாக எதிர்பார்த்து ஏமாந்துபோன தேவகி, அதை நம்புவதாக இல்லை. மகனோடு அவரின் முன்னால் சென்று நின்ற பிறகே நம்புவார் என்று நினைத்தான்.

 

ஆனால், அபிராமியின் திருமணம்? அவனுக்கும் அவள் புரியாத புதிர்தான். ஒரு முறை குரலை உயர்த்தினால் போதும். அவன் சொன்னதைக் கேட்டு நடப்பாள். ஆனால், மனத்துக்குப் பிடித்தவளுக்காகப் பிடிவாதமாக நின்று, மொத்த வீட்டையும் எதிர்த்து அவளை மணமுடித்து, நிறைவான ஒரு வாழ்க்கையை வாழும் அவனால் அவளைக் கட்டாயப்படுத்தி திருமண வாழ்க்கைக்குள் தள்ள முடியவில்லை.

 

அப்படி என்ன பெரிய வயதாகிவிட்டது, கொஞ்ச நாள்களுக்கு இந்த வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்றுதான் இவ்வளவு காலமும் எண்ணியிருந்தான். ஆனால், இந்த வருடம் பிறந்ததில் இருந்தே அவளாகத் திருமணத்துக்குச் சரி என்று சொல்லப்போவதில்லை, நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கும் வர ஆரம்பித்திருந்தது.

 

அதில் தேவகிக்கு ஒன்றும் சொல்லாமல் தங்கையைப் பார்த்தான்.

 

இந்த நேரத்தில் இப்படி ஒரு பேச்சை எதிர்பாராத அபி, தமையனையும் தாயையும் மாறி மாறிப் பார்த்தாள். சீராளனின் பார்வையும் அவளில் படிய, வேகமாகப் பார்வையைத் தழைத்தாள்.

 

“அம்மா, இந்த சம்மருக்கு நான் வருவன். அப்ப அபிக்கும் கலியாணம் முடிவாகும். இது ரெண்டும் இந்த வருசம் கட்டாயம் நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க.” அவளிடம் ஒன்றும் சொல்லாதபோதிலும் அவளுக்கும் சேர்த்தே சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சீராளன்.

 

அடுத்த கணமே, “ஏன் அம்மா இப்பிடிக் கலியாணம் கலியாணம் எண்டு அதிலயே நிக்கிறீங்க? கொஞ்சக் காலம் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்க விடமாட்டீங்களா?” என்று சினந்தாள் அபி.

 

“உனக்கு ஆரூரன் மாதிரி ஒரு பிள்ள வேண்டாமா?” அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், திருப்பி இன்னொரு கேள்வியை வைத்தார் தேவகி.

 

“அம்மா!” அவள் உள்ளம் ஒருமுறை குலுங்கிப் போயிற்று. இதுவரையில் அப்படி யோசித்ததில்லை. இப்போதோ உள்ளம் ஒருவனின் முகத்தைக் குட்டியாகச் சுமந்து வரவும் நிலைகுலைந்து நின்றாள்.

 

“உன்ர நண்பிதானே ஷர்மி. அண்ணாவைக் கட்டி எவ்வளவு சந்தோசமா வாழுறா எண்டு பாக்கிறாய்தானே. இப்பிடி ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டாமா? உனக்கு என்ன குறை எண்டு இப்பிடியே இருக்கிறாய்?”

 

அன்னையின் கேள்விக்கணைகளில் திக்குமுக்காடிப் போனாள் அபிராமி. பதிலே சொல்ல முடியவில்லை. அதைவிட நெஞ்சில் வந்து மோதிய அந்த முகம்? அதுதான் பெரும் அதிர்வைக் கிளப்பிற்று.

 

“நேரமாயிற்றுது, வாறன் அம்மா.” என்று அவர் முகம் பாராமல் சொல்லிவிட்டுப் புறப்பட்டவள், எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதுபோல் ஸ்கூட்டியை விரட்டினாள்.

 

வீட்டில் எத்தனையோ வரன்கள் வந்தபோதும் அவளுக்கு யார் மீதும் மனம் ஈடுபடவேயில்லை. ஷர்மினி கூட ‘என்னடி இது, என்ர பிள்ளைக்கு நாலு வயதாகப் போகுது. நீ இன்னும் கட்டவே இல்லை’ என்று அடிக்கடி சொல்வாள்.

 

இப்படி யார் என்ன சொன்ன போதும் அவளுக்குள்தான் மாற்றங்கள் வந்தபாடில்லை. அதற்குக் காரணமும் ஷர்மினிதான்.

 

அவள் சீராளனை மணந்து, சுவிஸ் செல்வதற்கு முதல், இவளைப் பிடிவாதமாக இழுத்து வைத்து, ‘உன்ர மனம் எதிர்பாக்கிற மாதிரியான ஒருத்தர், உனக்கு முன்னால வந்து நிண்டு காதலிக்கிறன் எண்டு சொன்னா, உன்னாலையும் மறுக்க ஏலாமத்தான் போகும். அப்பிடி ஒரு ஆள் உனக்கு முன்னால வந்து நிக்கேக்கதான் உனக்கு அது விளங்கும்.’ என்று சொன்னது, இவள் இதயத்தில் அச்சாகப் பதிந்து போனது.

 

இன்று வரையிலும் அப்படியான ஒரு நேசத்தைத்தான் அவள் ஆழ்மனம் தேடிக்கொண்டிருக்கிறது.

 

அப்படி இருக்க இன்று ஏன் அவன் முகம் அவள் நெஞ்சில் வந்து மின்னியது? ஒரு காலத்தில் மெல்லிய, மிக மிக மெல்லிய சலனம் ஒன்று அவன்பால் வந்தது என்னவோ உண்மைதான். அன்று இருந்த மனநிலைக்கும் அவளின் குண இயல்புகளாலும் அதைப் பற்றி அவள் பெரிதாக யோசித்ததில்லை.

 

ஷர்மி சுவிஸ் போன பிறகு அவனைப் பார்க்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்காததும் சேர்ந்து அதெல்லாம் அவள் நினைவுகளில் இருந்து ஒதுங்கியிருந்தன.

error: Alert: Content selection is disabled!!