அப்படியிருக்க இன்று என்ன நடந்தது?
அவனைப் பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலிருக்கும். தயாபரி அம்மாவுக்கு ஒருமுறை மிக முடியாமல் போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவன் அவரைப் பார்க்க ஓடி வந்திருந்தான்.
அப்போதும் கூட நேருக்கு நேர் பார்க்கவில்லை. எதேற்சையாக அவன் எதிர்ப்பட்டுவிட்டதில் விழுந்தடித்துக்கொண்டு ஒதுங்கி நின்றுகொண்டாள். ஆனால் இன்று, நீ என்னதான் என்னைவிட்டுத் தள்ளி நின்றாலும் உன் நினைவுகளிலிருந்து நான் அழியவே மாட்டேன் என்று காட்டிவிட்டானே!
அவளும் ஷர்மியும் உயிர்த் தோழிகள். ஒரே ஊர், ஒன்றாகப் படித்தவர்கள். ஷர்மி வீட்டில் மிகுந்த ஏழ்மை. தகப்பன் இல்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயும் தமையன் சயந்தனும் மாத்திரமே.
படிப்பு முடிந்த பிறகு ஷர்மினி தாதியாகப் பணிபுரிய, இவள் வீட்டில் இருந்தாள்.
அப்போதுதான் இவள் தமையன் சீராளன், திருமணம் செய்துகொள்வதற்காக சுவிஸில் இருந்து வந்தான். இவளும் தேவகியுமாக இவர்களின் வசதிக்கு ஏற்ற இடத்தில் பெண்ணைப் பார்த்துவைத்துக்கொண்டு காத்திருக்க, வந்த சீராளனின் கண்ணில் பட்ட ஷர்மி, இதயத்திலும் பதிந்துபோனாள்.
இவர்கள் பார்த்துவைத்த பெண்ணை மறுத்துவிட்டு, பிடிவாதமாக நின்று அவன் ஷர்மியை மணந்துகொண்டதில் இவளுக்கும் அன்னைக்கும் பிடிக்கவில்லை. அதுவும் இவள் சிறுவயதிலிருந்து உயிராய்ப் பழகிய அந்த நட்பை மறந்து, முற்றிலுமாக முகம் திருப்பி நின்று, அவள் மனத்தை நோகடித்து அழ வைத்திருக்கிறாள்.
அந்தளவில் அந்த நாள்களில் இவள் மனம் சுருங்கியதாகத்தான் இருந்தது. இல்லாமல் ஏழை வீட்டுப் பெண் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவும், அவள் என்னை விடவும் கீழே என்று மனத்தில் பதிந்துபோன நினைப்பினாலும் ஒரு குறை கூடச் சொல்ல முடியாத, அருமையான பெண்ணை அண்ணியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் முகம் திருப்பியிருப்பாளா?
வயதால் வளர்ந்திருந்தாலும் மனத்தாலும் சிந்தனைகளாலும் எண்ணங்களாலும் வளர்ந்திராத இவள், அன்று அப்படி ஒரு குறுகிய நிலையில்தான் இருந்தாள்.
ஷர்மியின் பக்கத்து வீட்டுக்காரன்தான் உதயன். அவள் தமையன் சயந்தனின் நண்பனாக இருந்தாலுமே ஷர்மியின் சகலதும் அவன்தான்.
அவனை இவளுக்கும் சிறுவயதிலிருந்தே தெரியும். ஆனாலும் கவனித்தெல்லாம் பார்த்ததில்லை. அதற்குக் காரணமும் அவன் வீட்டு ஏழ்மை நிலைதான்.
அதுவே, ஷர்மி தாய்மையுற்று இருந்த காலத்தில் அவன் ஷர்மியைப் பார்த்துக்கொண்ட விதம்தான் இவளைக் கவர ஆரம்பித்தது. அதன் பிறகுதான் தன்னையறியாது அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
ஆனால், முன்னரும் இவளிடமிருந்து ஒதுங்கிப் போகிறவன், ஷர்மியை இவள் தமையனின் மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கியத்திலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக்கொண்டான்.
அதுவும் ஷர்மி சுவிஸ் புறப்பட்ட அன்று, அவளைப் பயணம் அனுப்பிவிட்டுத் திரும்பியபோது, சயந்தன் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் இவளிடமும் அன்னையிடமும் நல்லமாதிரிப் பேசி விடைபெற, உதயன் இவளைப் பார்த்தானே ஒரு பார்வை. இவள் உள்ளம் ஆடியே போயிற்று. அவன் பார்வையில் அப்படி ஒரு வெறுப்பு.
இப்போது நினைக்கையிலும் நெஞ்சை என்னவோ செய்தது.
அற்பப் புழுவைப் போல், நீயெல்லாம் ஒரு பெண்ணா என்பதுபோல், நீ இவ்வளவுதானா என்று சொல்வதுபோல் மிக மோசமாக, கீழாக அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவன் பார்த்த பார்வை மொத்தமாக அவள் உள்ளத்தைச் சிதைத்துப் போட்டிருந்தது.
எத்தனையோ நாள்கள் அந்தப் பார்வையை மறக்க முடியாமல் இரவுகளில் விழித்துக்கிடந்து உழன்றிருக்கிறாள்.
இன்று வரையிலும் கூட அந்தப் பார்வையின் துரத்துதலிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை.
அதன் பிறகு எத்தனையோ நாள்கள் ஷர்மியின் அன்னையின் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, ஏதும் விசேசமான நாள்களுக்கு என்று அவர்களின் வீட்டுக்குப் போனாலும் உதயனின் கண்ணில் படுவதுபோல் நிற்க மாட்டாள். அவனின் நடமாட்டம் அங்கே இருந்தாலும் அவன் புறம் பார்வையைத் திருப்பியதே இல்லை.
திரும்பவும் அவனின் அப்படியான பார்வையைத் தன்னால் எதிர்கொள்ள இயலும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை. அந்தளவில் ஒரு பயமும் நடுக்கமும்.
அதே நேரம், அவனுடைய அந்தப் பார்வையைத் தாண்டி, அந்தப் பார்வை அவளை அவளுக்கே இழிவாக உணர்த்திய அந்த உணர்வைத் தாண்டி, ஒரு திருமண வாழ்வுக்குள் அவளால் நுழைய முடியவேயில்லை.
அதற்காக அவனை நேசித்தாள், இது காதல் என்றெல்லாம் அவளால் சொல்லவே முடியாது.
அப்படி இருந்திருக்க அவனைப் பார்க்க, அவனோடு பேச, தன் மீதான அவன் பார்வையைக் களைய, அவனோடு சுமூகமான ஒரு உறவை உருவாக்க முயன்று இருப்பாளே.
இதையெல்லாம் அவளால் வீட்டிலோ ஷர்மியிடமோ சொல்ல முடியாது. அது உதயன் காதுக்குச் சென்றுவிடுமோ என்கிற பயம். இன்னுமின்னும் அவன் பார்வையில் தான் தரமிறங்கிவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம்.
அது ஏன், இப்படித் தன் மன உணர்வுகளை மறைப்பதால் அப்படி என்ன நல்லது விளைந்துவிடப் போகிறது என்று கேட்டால், தெரியாது.
அவள் மனம் ஏன் இப்படியான விசித்திர உணர்வுக்குள் சிக்குப்பட்டு நிற்கிறது என்றும் புரியவில்லை.
அன்னை சொல்வதுபோல் ஒரு திருமணத்தை முடித்துக்கொண்டு, இந்த மனத்தின் அலைப்புறுதலுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவோம் என்றுதான் அவளும் நினைக்கிறாள். முடிய வேண்டுமே.
ஒரு நெடிய மூச்சுடன் கோயில் சென்று, ஆரூரன் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து, கும்பிட்டுவிட்டுத் திரும்பியபோது மனம் ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தது.
*****
அலுவலகம் சென்றவளைத் தன் அலுவலக அறையிலிருந்து கண்ணாடித் தடுப்பின் வழியே பார்த்த மாதவன், உடனேயே அழைத்தான்.
முகம் கடுத்தாலும் வேறு வழியற்று, “குட் மோர்னிங் சேர்!” என்றபடி அவன் முன்னே சென்று நின்றாள்.
“என்ன அபி, மஞ்சக்காட்டு மைனா மாதிரி இண்டைக்கு அம்சமா வந்திருக்கறீங்க?” அவள் மீது பார்வை சென்று வர வினவினான் அவன்.
அவளுக்கு முகம் கடுத்துச் சிவந்தது. அணிந்திருக்கும் செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் போலிருந்தது. பழைய அபியாக இருந்திருக்க நிச்சயம் செய்திருப்பாள். இன்றைய அபிக்கு இந்த அலுவலகத்தில் இந்த எருமை என்றால் இன்னொரு அலுவலகத்தில் வேறொரு எருமை என்கிற அலட்சியம். இவன் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பயந்தால் வீட்டுக்குள்ளேயேதான் முடங்க வேண்டும் என்று எண்ணித்தான் கடந்து போகிறாள்.
நான் சரியாக இருக்கும் வரைக்கும் என் எல்லையைத் தாண்டி எவனாலும் வர முடியாது என்கிற திடம், எப்போதும்போல் இன்றும் கைகொடுக்க, “நேற்று நீங்க சொன்ன அக்கவுண்ட்ஸ் எல்லாம் கிளியர் பண்ணி மெயில் அனுப்பிட்டன். செக் பண்ணினனீங்களா?” என்றாள் அவன் கண்களையே பார்த்து.
மாதவன் ஒருகணம் அசந்துதான் போனான். சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “அதெல்லாம் செக் பண்ணியாச்சு. ஒரு கரக்க்ஷனும் இல்லை. எங்கட அபி எண்டா சும்மாவா? ஆளைப்போலவே வேலையும் வடிவும் நீற்றும் எண்டு எனக்குத் தெரியுமே.” என்றவன் அடுத்த வேலையைக் கொடுத்து, அவளை அனுப்பினான்.
அவனும் எத்தனையோ வழிகளில் முயன்றுதான் பார்க்கிறான். அவள் அசைவதாக இல்லை. நெருக்கவும் பயந்தான். அவள் தேவைக்காகவோ அவசியத்துக்காகவோ வேலைக்கு வருகிறவள் இல்லை என்று தெரியும். ஒரு அளவைத் தாண்டினால் ‘போடா, நீயும் உன் வேலையும்’ என்று சொல்லிவிட்டுப் போகக் கூடியவள். அதனாலேயே விட்டுப் பிடித்துக்கொண்டிருந்தான்.
ஒரு வழியாக வேலையில் மூழ்கி, காலையில் உண்டான மனத்தின் குழப்பங்களிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் வெளியில் வந்த வேளையில் அவளுக்கு அழைத்த தேவகி, ஷர்மினியின் அன்னை தயாபரி இறந்துவிட்டாராம் என்று சொன்னதும் அதிர்ந்துபோனாள்.

