“உங்களப் பாத்திட்டு ஒண்டும் சொல்லேல்லையாம்மா?” சுரபிக்குத் தலை பின்னிக்கொண்டிருந்த கோகிலா விசாரித்தார்.
மாறப்பார்த்த முகத்தை வேகமாகச் சரி செய்தபடி, “நான் உள்ளுக்குப் போகேல்ல அம்மா. அவர்… தூயவன் ம… அவரே வந்து மாமியக் கூட்டிக்கொண்டு போயிட்டார்.” என்று சொன்னாள் யாழிசை.
முறையின்படி அவன் அவளுக்கு மச்சான். அதையெல்லாம் அவள் வாயைத் திறந்து சொன்னால் வீடு புகுந்து கழுத்தை நெரித்தாலும் நெரித்துவிடுவான் என்கிற பயத்தில் அவன் பெயரைச் சொல்கையிலேயே அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.
“என்னடா இது அதிசயம்? அந்தளவுக்கு நல்லவனா அந்தத் தூயவன்? மாதவி அக்காவை ரோட்டில கண்டா கூட முகத்தைத் திருப்பிக்கொண்டு போவான்.” என்று வியந்தார் நளினி.
“செத்தவீடு எண்டுறதால ஒண்டும் சொல்லேல்ல போல.”
“அது சரிதான் மாமி. அதுக்காகக் கையப் பிடிச்சு அவனே கூட்டிக்கொண்டு போறதெல்லாம்… கொஞ்சம் கூட மாதிரித் தெரியேல்லையா உங்களுக்கு?.” என்று அவர்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொள்ள இவள் நடுவில் போகவில்லை.
ஆனால், அவளுக்குள்ளும் அதே யோசனைதான். இறப்பு வீட்டில் எதுவும் கதைக்கக் கூடாது என்று மாதவியை உள்ளே விட்டது வேறு. இத்தனை காலமாகச் சின்ன இணக்கம் கூடக் காட்டாமல் முற்றிலுமாக விலகியே நின்றுவிட்டு, இன்று வாசலுக்கே வந்து, அதுவும் ‘வாங்க சித்தி’ என்று உறவைச் சொல்லி அழைத்துப் போவதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சம்தான்.
அவளை உள்ளுக்குள் விட்டுவிடவே கூடாது என்பதில் அப்படி நடந்தானோ என்று நினைத்த மாத்திரத்தில் அவளுக்கு உணவு விக்கிக்கொண்டது.
சாதிதான் காரணம் என்றும் நினைக்க முடியவில்லை. அவர்களின் இனத்துக்காரர் சிலர் அங்குப் போவதை அவளே கண்டாளே.
பிறகு ஏன் அவளுக்கு மட்டும் இந்தத் தடை? அந்தளவில் அவள் என்ன இழிந்துபோனவளா? அப்படி என்னதான் தரமற்ற வேலை பார்த்தாளாம்? அவள் மன அமைதி மீண்டும் கெட்டுப்போயிற்று.
அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் சுரபியைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள்.
உயர்தரம் முடித்துவிட்டு முகாமைத்துவம் கற்பதற்காகப் பல்கலைக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் யாழிசை.
இன்னுமே சீராகத நாட்டின் நிலையாலும் வந்து போன கொரோனாவின் தாக்கத்தாலும் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து வரும் அவளைப் போன்ற மாணவ மாணவியரால் சரியான வருடத்தில் பல்கலைக்குள் நுழைய முடிவதில்லை.
ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருந்தே போக வேண்டிய நிலை.
அதில் இருபது வயது முடிகிற நிலையிலும் வீட்டிலேயே இருக்கிறாள். இந்த வருடம் பல்கலை கிடைத்துவிடும் என்று ஒரு நம்பிக்கை.
அதுவரையில் சும்மா இருக்கப் பிடிக்காமல் கணனி வகுப்புக்குப் போகிறவள் அயலட்டையில் இருக்கிற பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் ஏற்றி இறக்குகிறாள். ஒரு பிள்ளையை ஒரு நாளைக்கு ஏற்றி இறக்கினால் 500 ரூபாய் கிடைக்கும்.
சுவர்ணாவிடம் ஸ்கூட்டியும் உண்டு. அவள் வேலைக்குப் போவதும் இல்லை. ஆனாலும் அவளின் இரு பிள்ளைகளையும் இவள்தான் தினமும் கொண்டுபோய் விட்டு அழைத்து வருவாள். பெட்ரோலுக்குக் கூடப் பணம் தரமாட்டாள்.
அவள் வீடு வேறு பத்து நிமிடத் தூரம் என்பதால் ஒவ்வொரு நாளும் மூன்று பிள்ளைகள் வீதம் இரண்டு முறைதான் இவளால் ஸ்கூட்டியில் ஏற்றி இறக்க முடியும். அதன் பிறகு பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிடும்.
மூவராய் ஏற்றிப் போவதில் போலீஸ் பிடித்தால் அதுவேறு அடுத்த பிரச்சனை. ஆனாலும், எப்படியோ சமாளித்துத் தினமும் 1500 ரூபாய் உழைத்துவிடுவாள்.
அதைத் தன்னுடைய கணனி வகுப்புக் கட்டணத்துக்கும் தன் செலவுகளுக்கும் வைத்துக்கொள்வாள். அவ்வப்போது கோகிலாவுக்கும் செலவுக்குக் கொடுப்பாள். கூடவே அவள் பயன்படுத்துவது நளினியின் ஸ்கூட்டியை. அதன் பெட்ரோல் செலவும் அவளோடே.
அவர்கள் வீட்டுக்குப் பணம் ஈட்டுகிறவன் தவநேசன் மட்டும்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறான். சிறிதாய் விவசாயமும் பார்த்தாலும் பெரிய வசதி வாய்ப்புகள் இல்லை.
இன்னொரு பிள்ளை வந்தால் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்று ஒற்றைப் பிள்ளையோடு இருக்கிறார்கள் என்று அன்னை மூலம் அறிந்ததிலிருந்து தன் செலவுகளை முடிந்தவரையில் அவளே பார்த்துக்கொள்வாள்.
*****
யாழிசையின் அம்மா கோகிலாவின் ஒன்றுவிட்ட தமையன்தான் அரசரட்ணம். அந்த உறவின் பெயரில்தான் யாழிசையின் அப்பப்பா வீட்டில் ஆரம்பத்தில் அவர்கள் வந்து இருந்ததும்.
அரசரட்ணம் பத்து வருடங்களுக்கு முதல் மாரடைப்பால் இறந்திருந்தார். அடுத்த இரண்டு வருடத்தில் யாழிசையின் அப்பா மகேந்திரனும் இறைபதம் அடைந்திருந்தார்.
பக்கத்து பக்கத்து வீடு என்பதும், அரசரட்ணமும் மகேந்திரனும் உறவு என்பதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருந்ததும், இரு வீட்டு ஆண்களும் இறந்ததும் சேர, இரு குடும்பங்களும் இன்னுமே நெருக்கமாகிப் போயினர்.
கோகிலாவாவது மூத்த மகன் தவநேசன் தலையெடுத்துவிட்டதில் கொஞ்சம் சமாளித்துக்கொண்டார்.
இங்கே மாதவி தன் பக்க உறவுகளும் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் கணவரும் இல்லாது முற்றிலுமாக உடைந்திருந்தார்.
அதுவரையில் எத்தனையோ முறை மார்க்கண்டேயருடன் பேச முயன்ற மாதவி, கணவர் இறந்த பிறகு தானும் ஒதுங்கிக்கொண்டார்.
உள்ளே ஒரு வலி இல்லாமல் இல்லை. ஆனாலும் கணவர் இருக்கிற வரை சேர்க்காத உறவுகள், கணவர் இல்லை என்றானபிறகு சேர்க்காமலேயே இருக்கட்டும் என்று ஒரு வைராக்கியம்.
சுவர்ணா வளர்ந்து பல்கலைப் படிப்பை முடித்த கையோடு அவளுக்குத் திருமணத்துக்குப் பார்க்க ஆரம்பித்தார்.
முக்கியமாகக் கணவரின் பக்கமே பார்த்தார். அவரின் மகளே திருமண வயதை எட்டியும் தம் கோபத்தைப் பிடித்து வைத்திருக்கும் தன் பக்க உறவுகளிடம் போகப் பிடிக்கவில்லை.
ஆனால், 23 வயதில் இருந்த சுவர்ணாவுக்கு அதில் உடன்பாடில்லை. என்னதான் இன்று அவர்கள் நல்ல நிலையில் இருந்தாலும் தந்தையின் சாதி குறைவு என்கிற கரும்புள்ளி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது.
கூடவே, நல்ல மதிப்பும் மரியாதையுடனும் செல்வமும் செல்வாக்குமாய் வாழும் தாத்தா வீட்டினரில் அவளுக்கு ஈர்ப்பும் அதிகம். அவர்களின் சாதியிலேயே மணமுடித்து, தன்னை மறுபடியும் அவர்களின் சாதிப்பெண்ணாக மாற்றிக்கொண்டு, அவர்களுடன் சேர்ந்துவிடவே ஆசைப்பட்டாள்.
அதை அறிந்து அதிர்ந்தாலும் மகளின் ஆசையை மாதவி மறுக்கவில்லை. அவள் ஆசைப்பட்டது போலவே அவர்களின் சாதியில் பார்த்து மணமுடித்துக்கொடுத்தார்.
ஒரு நாள் தூயவனோடு கோயிலுக்கு வந்திருந்த மார்க்கண்டேயரின் முன்னால், புதிதாய்த் திருமணமான பொலிவுடன் கணவனின் கையைப் பற்றியபடி சென்று நின்றாள் சுவர்ணா.
அப்படி, எதிர்பாராமல் பேத்தியைக் கண்டதும் கொஞ்சம் திக்குமுக்காடிப்போனார் மார்க்கண்டேயர்.
அதுவும் அவள் அவரின் செல்ல மகள் மாதவியைப் போலவே இருந்துவிடவும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் உடைந்துபோனார்.
அவள் வேறு, “அம்மாவும் அப்பாவும் செய்த பிழைக்கு என்னோட ஏன் தாத்தா கோவமா இருக்கிறீங்க? நடந்ததில என்ர பங்கு என்ன இருக்கு?” என்று நியாயம் கேட்டபோது அவரிடம் பதில் இல்லாது போயிற்று.
அவள் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்து, “நல்லா இரம்மா” என்றுவிட்டுப் போயிருந்தார்.
அன்றிலிருந்து மார்க்கண்டேயரின் உள்ளத்தில் ஒரு உறுத்தல். இத்தனை காலத்துக்குப் பிறகு அவரால் மகளைச் சேர்க்க முடியாது. அந்தக் காலத்து மனிதரின் நெஞ்சில் அழுத்தமாய் விழுந்துபோன கோபமும், அதனால் உண்டான விரிசலும் போவதாகவே இல்லை.
ஆனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய நினைத்தார்.
அதன்படி தன் சொத்துக்களில் நியாயமாக மாதவிக்குச் சேர வேண்டியதைச் சரியாகப் பிரித்து எழுதி, கருணாகரன் மூலம் மாதவியிடம் சேர்ப்பித்தார்.
“எனக்கு அப்பாதான் வேணும். சொத்துப்பத்து வேண்டாம். என்ர மனுசன் என்ன வாழ வழியில்லாம நிக்க விடேல்ல. எங்களுக்குத் தேவையானதச் செய்து வச்சிட்டுத்தான் போயிருக்கிறார்.” என்று அவரைத் தேடி ஓடியவரை மார்க்கண்டேயர் அப்போதும் பார்க்கவில்லை.
அப்படியானால் அவர் தரும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று அவர்களின் கேட் வாசலிலேயே அந்தப் பத்திரங்களைப் போட்டுவிட்டு வந்திருந்தார் மாதவி.
ஆனால், மீண்டும் அவற்றைக் கொண்டுவந்த கருணாகரன், “அவருக்கு நல்ல மகளா நீங்க நடக்காட்டியும் ஒரு அப்பாவா அவர் சரியா நடக்க நினைக்கிறார் மாதவி. முக்கியமா உங்கட பிள்ளைகளுக்குச் சேர வேண்டியதைச் சேர்க்க நினைக்கிறார். அதத் தடுக்கிற உரிமை உங்களுக்கு இல்லையாம். அதால தயவு செய்து இத வாங்குங்கோ.” என்று அழுத்திச் சொல்லிவிட்டுப் போனார்.
சுவர்ணா வேறு, “இது சொத்துப்பத்து இல்லை அம்மா. எங்களுக்கான அங்கீகாரம். அதத் திருப்பிக் குடுத்து உங்களுக்கு மாதிரி எங்களுக்கும் சொந்தபந்தம் இல்லாமச் செய்து போடாதீங்க. நாளைக்கு நான் மட்டுமில்ல, என்ர பிள்ளைகளும் மதிப்பு மரியாதையோட சபை சந்திக்குப்போய் வரோணும்.” என்று சூடாகவே சொல்லிவிட, முன்னை விடவும் நன்றாகவே ஒடுங்கிப்போனார் மாதவி

