அத்தியாயம் 14
நடுச்சாமத்தில் யாருமற்ற வீதியில் அளவான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்தக் கார். பின்னிருக்கையில் கதவோரமாக அமர்ந்திருந்த யாமினி, கும்மிருட்டினுள் நகரும் வீதியையே பார்த்திருந்தாள். பார்வை அங்கிருந்தாலும் சற்று முன்னர் நடந்த நிகழ்விலேயே சிந்தை சிக்குப்பட்டு நின்றிருந்தது.
பேசாமல் அஜந்தாவையும் திவாகரையும் வீட்டுக்கே அவள் கூப்பிட்டிருக்கலாம். அதைச் செய்யத் தவறிய குற்றத்திற்கு இப்போது இதயம் மொத்தமும் வலி வலி வலி மட்டுமே. கண்ணீர் கரையுடைக்கவா என்று நின்றது.
அவனை எல்லோரும் ஏய்க்கிறார்களே, தெரிந்தும் கவனமில்லாமல் இருக்கிறானே என்கிற தவிப்பில் அவள் கோபப்பட்டால் அவளை அவன் நண்பர்களோடு ஒப்பிட்டுவிட்டானே.
இத்தனை வருடங்களாகக் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் அவன் காசில் வாழ்ந்த அவர்களும் அவளும் ஒன்றா என்ன? மளுக்கென்று வழிந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துவிட்டாள்.
இன்று அவள் நிற்கும் நிலையில் நாளை அவன் நின்றுவிடக் கூடாது, அவர்களின் எதிர்காலம் சிக்கல் நிறைந்ததாக மாறிவிடக் கூடாது என்று அவனிடமே அவனுக்காகப் போராடிய அவள் சுயநலக்காரியா? அவள் அவன் மூலம் பயன் பெற நினைக்கிறாளா?
அப்படி என்றால் எதற்கு இந்தச் சண்டை? நீ வாழும் முறைதான் சரி என்று சொல்லி, அவளும் சேர்ந்து அவன் பணத்தில் இன்னும் சந்தோசமாக இருந்திருப்பாளே.
அவளின் ஒவ்வொரு பிறந்தநாளிற்கும் நகை ஏதாவது வாங்கித் தருவது அவன் வழக்கம். பணத்தைப் பற்றி யோசிக்காமல் இருவருமாகச் செலவு செய்த காலத்தில் கூட பெரிய நகையாக எடுக்க மாட்டாள்.
அப்படியானவளைப் போய் என்ன சொல்லிவிட்டான்?
மனம் ஆறவே மாட்டேன் என்றது. பேசுவதை எல்லாம் பேசிவிட்டு, கொண்டுவந்து விடுகிறேன் வா என்றால் எப்படிப் போவாள்? அவள் இதயம் என்ன இரும்பால் ஆனதா?
அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் உறுதியாகத்தானே இருந்தாள். அப்படிக் கொடுக்கையில் கோபப்படுவான், வாங்க மறுப்பான், எனக்கும் உனக்குமிடையில் பணத்தைக் கொண்டுவருவாயா என்று ஆத்திரப்படுவான், ஆனாலும் பொருத்தமாக எதையாவது சொல்லிக் கட்டாயமாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அவள் பலவற்றை யோசித்து வைத்துக்கொண்டிருக்க, கேட்டானே ஒரு கேள்வி.
உதடுகள் நடுங்கக் கண்கள் கண்ணீரைச் சிந்தின. பெரும் பாடுபட்டுத் தன்னை அடக்கினாள். ஏன் அப்படிக் கேட்டான்? ஏன் இப்படி அவள் உள்ளத்தை உடைத்தான்? அவளை அவனுக்குத் தெரியாதா? இதை இனி எப்படி மறப்பாள்? அதை மறக்காமல் பழையபடி அவன் முகம் பார்த்து அவளால் பேச முடியுமா, சிரிக்கத்தான் முடியுமா?
அப்போது, “எல்லாம் முடிஞ்சுதாடி? வீட்டுக்குப் போயிட்டீங்களா? சொறியடி , கடைசிவரை நிண்டு ஒதுக்கித் தராம வந்திட்டம். திவாகரும் குறை நினைக்க வேண்டாமாம் எண்டு சொல்லச் சொன்னவர். நாளைக்கு விடிய நேரத்துக்கே வெளிக்கிடினம். இல்லாட்டி நாங்களும் நிண்டு கிளீன் பண்ணித் தந்திட்டே வந்திருப்பம்.” என்று அஜந்தா குறுந்தகவல் அனுப்பியிருந்தாள்.
அப்போதுதான் நடந்த சண்டையில் ஒதுக்கிக்கொடுக்காமல் அவளும் புறப்பட்டு வந்துவிட்டது புத்திக்கு உறைத்தது. எப்போதுமே அங்கே இவர்கள் பார்ட்டி வைத்தால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, இவளும் நிரோஜனும்தான் கடைசியாகப் புறப்படுவார்கள்.
அப்படியிருக்க இன்று? அவன் நண்பர்கள் வேறு மதுவை அருந்திவிட்டு, உதவி செய்கிறோம் என்று உபத்திரவம் செய்யும் அற்புதமானவர்கள். தனியாகச் சமாளிப்பானா?
பார்ட்டியை ஒழுங்கு செய்துவிட்டு, இப்படி முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்காதே என்று அவனும் சொன்னானே. சண்டை என்றதும் இடையில் விட்டுவிட்டுப் போய்விட்டாள் என்று நாளைக்கு அதற்கும் ஒரு பேச்சு வந்தாலும் வரும்.
ஒரு நொடி யோசித்துவிட்டு, “அண்ணா, குறை நினைக்காம என்னை ஏத்தின இடத்திலேயே கொண்டுபோய் விடுறீங்களா” என்று தயவாய் வினவினாள்.
தன் வேலையில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் அவளை ஏற்றப் போகையில் இருவரும் எதற்கோ பிடுங்குப்பட்டுக்கொண்டு நின்றதையும், இவள் அழுதுகொண்டு வந்து ஏறியதையும், அவன் கோபமாகப் பேசியதையும் அவர் கவனிக்காமல் இல்லை. அதில் காரை திருப்பிக்கொண்டு போய் அவர்களின் அலுவலக வளாகத்திலேயே விட்டார்.
பணம் கொடுத்துவிட்டு இறங்கியவளிடம், “இந்த நேரம் போறது பயமில்லையாம்மா? நானும் வரவா?” என்றார் மனம் கேளாமல்.
அவர் அவள் பாதுகாப்பைக் குறித்து யோசிப்பது புரிந்து முறுவலித்தவள், “நன்றி அண்ணா. ஆனா இது நான் வேக் பண்ணுற ஒபீஸ்தான். மேல என்ர ஃபிரெண்ட்ஸ் நிக்கினம். பயமில்ல.” என்று சொல்லிவிட்டு வந்தாள். அவரின் அக்கறையான சிறு செயலில் ஒரு இதம் இதயத்தில் படர்ந்துபோயிற்று.
அந்த மாடிப்படி தொடங்கும் இடத்தைக் கண்டதும் நெஞ்சு அடைத்துக்கொண்டது. அந்த இடத்தில் வைத்து எத்தனை ஆசையாக நெருங்கினான். அவன் உச்சி முடியை அவள் பற்றியபோது அடங்கி நின்றானே. அதே அவன்தான் வார்த்தைகளைக் கத்தியாக வீசி, அவள் நெஞ்சைக் காயப்படுத்தியதும்.
அரும்பிவிட்ட கண்ணீரைக் கண்ணைச் சிமிட்டி அடக்கினாள். வந்தது சரிதானா, உள்ளே போகத்தான் வேண்டுமா என்று ஒரு போராட்டம். இத்தனை தூரம் வந்துவிட்டு இப்படி யோசிப்பதில் அர்த்தமில்லை என்று புத்திக்குப் புரிந்தாலும் யோசனை தானாக ஓடிற்று.
ஒரு கணம் வாசலில் நின்று, கைப்பேசியின் கமராவில் அழுத தடம் ஏதும் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டிவிடக் கூடாது என்கிற கவனத்தோடு
உள்ளே சென்றவள், கண்ணில் பட்ட காட்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.
அவனோடு எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளாமல், எல்லோருடனும் சேர்ந்து வேலையை முடித்துவிட்டு, இப்போது போலவே கேப் வரவழைத்துப் புறப்பட்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் வந்தால், அங்கே அவள் நாயகன் பியர் போத்தலும் கையுமாக அமர்ந்திருந்தான்.
யாமினி அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு மிகுந்த அதிர்ச்சி. பார்ட்டிகளில் பியர் அருந்துவான் என்று அவளுக்குத் தெரியும். அதனாலேயே ஒவ்வொரு பார்ட்டியிலும் அவனை அதற்கு விடாமல் பார்த்துக்கொள்வாள். அவனும் சும்மா அருந்துவதாக அவளை மிரட்டுவானே தவிர்த்து அவள் முன்னே இதுவரை அருந்தியதில்லை.

