நீ வந்து தங்கிய நெஞ்சில் 14.2

அதனால் மது அருந்திய நிரோஜனையோ, அவன் மது அருந்தும் காட்சியையோ இதுவரையில் அவள் பார்த்ததில்லை.

ஆனால் இன்று? அவனை அப்படிப் பார்க்க பார்க்க நெஞ்சு மாத்திரமல்லாமல் மொத்த உடலுமே மிளகாயை அரைத்துப் பூசியதுபோல் எரிந்தது.

நிரோஜனும் இப்படி அவள் வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அதிர்ந்துபோனான். தன்னிச்சையாய் அவன் முன்னே இருந்த போத்தலை எடுத்து மறைத்து வைக்க முயன்றான். ஆனால் வீம்பு விடவில்லை. ஆத்திரமும் அகங்காரமும் அவனை ஆட்டிப்படைத்தன.

எவ்வளவு கெஞ்சினான். கொஞ்சம் கூடப் பொருட்டில் கொள்ளாமல் போனாள்தானே.

உண்மையில் அவளிடம் மறைக்கும் எண்ணமும், எதையும் அவளுக்குச் சொல்லக்கூடாது என்கிற நினைப்பும் இருந்திருந்தால் கைப்பேசியை அவளிடம் விட்டுவைப்பானா, இல்லை, அவளிடம் தன் இணையவழி வங்கிக்கணக்கின் கடவுச்சொல் வரை சொல்லிவைத்திருப்பானா?

ஆனாலும் மறைத்தது தவறுதான். அதுவும் அவளாகக் கேட்டும் பொய் சொன்னது பிழைதான். அதற்கென்று தவறான எந்த எண்ணத்தோடும் மறைக்கவில்லையே, பொய் சொல்லவில்லையே.

அதையெல்லாம் சொல்லியிருந்தால் இன்று நடந்த சண்டை என்றோ நடந்திருக்கும். அதன் பிறகு விடாமல் பணத்தைக் கேள், கேட்டு வாங்கு என்று விடாமல் தொணதொணத்திருப்பாள். விடாமல் சிணுங்கிக்கொண்டேயிருந்து சினமூட்டும் மழைபோல் அவர்களுக்குள் ஒரு சீரற்ற நிலை நிலவிக்கொண்டேயிருந்திருக்கும்.

அவனுக்கு இந்தச் சண்டை சச்சரவு, அந்தத் தொணதொணப்பு, முகத்தை நீட்டுவது எதுவும் பிடிப்பதில்லை.

அதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் சொல்லாமல் விட்டான். அவளானால் அவனை இளிச்சவாயன், அறிவில்லாதவன், மண்டையில் சரக்கில்லாதவன், ஏமாளி என்று எத்தனை சொன்னாள். என்னவோ அவன் ஒரு அடி முட்டாள் போன்று.

அந்தக் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டான். பிழைதான். ஆனால் அவனைக் கோபப்படுத்தி, கட்டுப்பாட்டை இழக்க வைத்து, அப்படிப் பேச வைத்தது அவள்.

அதன் பிறகும் என்னவோ அவன் மகா மோசமானவன் போன்று கேப் வரவழைத்துப் போகிறாள் என்றால் அவனுக்கு எப்படி இருக்கும்? மேலே வந்து நண்பர்களைச் சமாளிக்க என்ன பாடுபட்டான்? எவ்வளவு தலையிறக்கம். அது கொடுத்த ஆத்திரத்தில்தான் பியரை எடுத்து வாயில் கவிழ்த்திருந்தான்.

நான் குடிக்கக் கூடாது என்றுதானே பிடிவாதமாக நின்று உணவை வாயில் அடைத்துவிட்டாய். இப்போது குடிக்கிறேன், உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஒரு கோபம். அது பார்த்தால் அவளே வந்து நிற்கிறாள்.

நன்றாக நிற்கட்டும். கண் குளிரப் பார்க்கட்டும். முகமும் தாடையும் இறுக, பாதி முடிந்த நிலையில் இருந்த பியர் போத்தலை எடுத்து அவள் முன்னேயே வாயில் கவிழ்த்தான்.

அவ்வளவுதான். யாமினிக்கு வெறியே வந்திருந்தது. போன போக்கில் அவன் கையில் இருந்த போத்தலைப் பறித்து எறிந்தாள். “எனக்கு முன்னாலேயே குடிப்பீங்களா? நீங்க நாசமா போறது காணாது எண்டு என்னைக் கேவலப்படுத்துவீங்களா? என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க என்னைப் பற்றி? நீங்க என்ன செய்தாலும் பாத்துக்கொண்டு சும்மா இருப்பன் எண்டா?” என்று கேட்டு கேட்டு அவன் தோளிலும் முதுகிலும் அடித்தாள்.

யாமினி போனதும் மற்றப் பெண்களையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். மிகுதியாக நின்றிருந்த அவன் நண்பர்களுக்கு என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாத நிலை.

அவன் அசையே இல்லை. தரையில் பார்வை நிலைத்திருக்க அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு சிலைபோல் அமர்ந்திருந்தான். ஒரு கணத்தில் மேசையில் இருந்த அத்தனை பொருள்களையும் விசிறி அடித்துவிட்டு எழுந்தவன் எழுந்த வேகத்திலேயே அவள் கன்னத்தை நோக்கிக் கையை விசுக்கினான்.

யாமினிக்கு இதயத் துடிப்பே நின்றுபோயிற்று. கண்களை இறுக்கி மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பினாள். ஆனால் அவன் அடிக்கவில்லை. அவன் கை அவள் கன்னத்தில் படும் அந்தக் கணத்தில் தன்னைக் கட்டுப்படுத்தியிருந்தான்.

பளார் என்று ஒரு அறையை எதிர்பார்த்திருந்த யாமினி, தனக்கு ஏதும் நடக்காததை உணர்ந்து, மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள். ஆத்திரத்தில் தாடை, கன்னத் தசையெல்லாம் இறுகித் துடிக்க நின்றிருந்தவன், பல்லைக் கடித்தபடி ஒற்றை விரலை நீட்டி அவளை எச்சரித்தான்.

“என்னை என்ன…” ஆவேசத்தோடு ஆரம்பித்தவன் அங்கே மற்றவர்களும் நிற்பதில் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து, வந்த வேகத்திலேயே தள்ளிவிட்டான்.

தடுமாறிப்போய் நின்றவள் முன்னே வந்து நின்று, “என்னைப் பற்றி என்னடி நினைச்சுக்கொண்டிருக்கிறாய்? என்னைக் குடிக்க வேணாம் எண்டு சொல்லுறதுக்கு நீ ஆர்? கோபப்படாத, நான் சொல்லுறதைக் கொஞ்சம் நிதானமாக் கேளு, போகாத, நான் கொண்டுபோய் விடுறன் எண்டு எவ்வளவு சொன்னனான். ஏதாவது ஒண்டக் கேட்டியாடி? ஆனா, நீ என்ன சொன்னாலும் நான் கேக்கோணும். நீ சொல்லுறதை மட்டும்தான் நான் செய்யோணும். அந்தளவுக்கு நீ என்ன…” என்று நிறுத்தியவனை அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு பார்த்து நின்றாள் யாமினி.

அவளால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. திரும்பவும் வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தாள். ஆனால் இவன், அவளின் நிரோஜன்… என்னாயிற்று, என்ன நடக்கிறது அவர்களுக்குள்? அவளால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.

இனியும் அங்கு நிற்கக் கூடாது என்று மட்டும் புரிந்தது. இல்லையானால் நேராக்கவே முடியாத அளவில் ஏதாவது நடந்துவிடுமோ என்று பயந்தாள். அவள் விறுவிறுவென்று படிகளில் இறங்க, இந்தமுறை அவன் பின்னால் போகவில்லை.

“போடி போ! நிக்காத. இனியும் உனக்குப் பின்னால வருவன் எண்டு கனவிலயும் நினைக்காத. உனக்குத்தான் கேப் வருமே. அதிலேயே போ!” என்று சீறினான் அவன்.

படிகளில் தடுமாறி விழுந்துவிடுவோமோ என்று பயந்தாள் யாமினி. அவ்வளவில் கண்ணீர் கண்களை மறைத்தது. அப்போது போலவே கேப் வரவழைத்து அதில் புறப்பட்டாள்.

அவள் புறப்படுகிற வரையில் மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் நிரோஜன். அவள் வாகனத்துக்கு அழைத்தது, அது வரும் வரையில் அழுதுகொண்டே நின்றது என்று எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

இந்த முறை அந்த ஓட்டுநர் முன்னே கவனமாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பெல்லாம் அவளுக்கு இல்லை. கண்ணீர் அதுபாட்டுக்குக் கொட்டிக்கொண்டேயிருந்தது.

error: Alert: Content selection is disabled!!