அத்தியாயம் 4
அடுத்து வந்த இரண்டு நாள்களும் அபிராமி உதயனின் கண்களில் படவில்லை. முதலில் அதை உணராதபோதும் மெல்ல மெல்ல எங்கே இவள், ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் அவனுக்குள் முளைக்க ஆரம்பித்தன. விழிகள் அவனை அறியாமல் அவளைத் தேடின.
அவள் மீது காதல் என்பதை விடவும் ஒரு குறுகுறுப்பு. இன்னுமே உறுதியாகத் தெரியாதபோதிலும் அவள் தன்னை இத்தனை வருடங்களாக மனத்தில் சுமந்திருக்கிறாள், அதனால்தான் திருமணத்துக்குப் பிடிகொடுக்காமல் தள்ளிப் போட்டிருக்கிறாள் என்கிற விடயங்கள், வார்த்தைகளில் விவரிக்க முடியாத புளகாங்கிதத்தைத் தந்துகொண்டிருந்தன.
கூடவே, அவள் பார்த்தது, சிரித்தது, அவனைச் சீண்டியது என்று அவள் பற்றிய ஒவ்வொரு காட்சிகளும் மனக்கண்ணில் மின்னிக்கொண்டே இருந்தன.
வேண்டாம், சும்மா கற்பனைகளை வளர்க்காதே, ஒரு காலத்தில் அவளோடு தெரிந்தவள் என்கிற வரையறைக்குள் கூடப் பழக விரும்பாமல் விலகி இருந்திருக்கிறாய், அவள் உன் வீட்டுக்குப் பொருந்தி வருவாளா என்பதே சந்தேகம் என்று அறிவு எடுத்துரைத்த போதிலும் அவனால் அவன் எண்ணப்போக்குகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
முதலில் அவள் தன் மனத்தைத்தான் சொன்னாளா என்கிற கேள்வி வேறு.
அவனுக்குத் திருமண வயது வந்துவிட்டதும், நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று இருப்பதிலும் மறுக்கக் காரணங்களும் இல்லை. வீட்டில் பெண் பார்ப்பது பற்றிய பேச்சு வந்துவிட்டதால் வீட்டினரும் அவன் திருமணத்துக்குத் தயார்தான்.
தேவகி அம்மாவைப் பற்றி எல்லாம் அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சீராளன் மறுக்கமாட்டான் என்று ஒரு நம்பிக்கை. அப்படியே மறுத்தாலும் அவன் அதை ஏற்கப் போவதில்லை. அவனே காதலித்து முடித்துவிட்டு மறுப்பானா? முதலில் இவனை மறுப்பதற்கு என்ன நியாயமான காரணம் சொல்லுவானாம்?
அவன் கேள்வி எல்லாம் அபிராமி மீதுதான். அவன் அறிந்த அபிராமி சற்றே பணத்திமிர் பிடித்தவள், தன் உயரத்துக்கு ஏற்ற மனிதர்களோடு மட்டுமே பழகுகிறவள், செல்வநிலை வைத்துத் தராதரம் பார்க்கிறவள்.
இந்த ஒரு வாரமாக அந்தக் குணங்கள் அவளிடம் தென்படவில்லைதான் என்றாலும் எந்த அபிராமி உண்மையானவள்? அவளின் உண்மையான எண்ணப்பாடு என்ன? அல்லது அவனோடு விளையாடிப் பார்க்கிறாளா? இப்படி ஓராயிரம் கேள்விகள் அவனுக்குள் சுழன்றடித்தன.
‘கடவுளே! சும்மா இருந்தவனைக் குழம்பிப்போட்டுப் போய்ட்டாளே!’ என்று பெரு மூச்சுடன் தலையைக் கோதியபடி அவன் நிமிர, கண்ணெதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள் அவள்.
ஒரு மெரூன் கலர் குர்தி அணிந்து, அன்றைய நாளுக்கான மெல்லிய களைப்பை முகத்தில் சுமந்து வந்தவள், வேலை முடிந்து நேராக இங்குதான் வருகிறாள் என்று புரிந்தது.
பார்வையை அவளிடமிருந்து அகற்ற அவன் முயலவில்லை. அன்று மறைமுகமாக அவள் உணர்த்தியது அவன் உணர்ந்ததைத்தானா என்பதுபோல் அவளையே பார்த்திருந்தான்.
அபிராமிக்கு அன்றிலிருந்தே அவனைப் பார்க்க வேண்டும் போல் ஒரு குறுகுறுப்புத்தான். ஆனாலும் மனத்தை உணர்த்தி இருக்கிறாள், அவன் யோசிக்கட்டும், அவசரப்பட்டு மறுக்க அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றுதான் வராமலேயே இருந்தாள்.
கூடவே, தேவகி அம்மா அவளறியாமல் அவள் இங்கே வருவதைத் தடுத்திருந்தார். அதில்தான் இன்று வேலை முடிந்ததும் நேராக இங்கேயே வந்திருந்தாள்.
அவன் இருப்பானா என்று மனத்தின் தேடலுக்கு விடையாக, விடாத பார்வையை அவள் மீதே நிறுத்திவைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். உள்ளம் துள்ளிற்று. கூடவே மெல்லிய படபடப்பும்.
“ஷர்மி இல்லையா?” அவனைக் கடந்து போகமுடியாமல் நின்று சும்மா வினவினாள்.
பதில் சொல்லாமல் இப்போதும் அவளையே பார்த்தான் அவன்.
“என்ன?” உள்ளே ஒரு கலவரம் பற்றிக்கொள்ள மெல்ல வினவினாள்.
“என்னைப் பாத்தா உமக்கு எப்பிடித் தெரியுது?”
இதற்கு என்ன பதில் சொல்வது? கண்களில் கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.
“அண்டைக்கு நீர் கேட்டதுக்கு என்ன அர்த்தம்?”
அவனுக்குப் பிடிக்கவில்லையோ? அவள் முகத்தில் மெல்லிய இருள் படிந்தது. “உங்களுக்கு என்ன விளங்கினதோ அதுதான் அர்த்தம்.” என்றுவிட்டு விரைந்து வீட்டினுள் நுழையப்போனவளை அவன் விடவில்லை. நடுவில் வந்து நின்று மறித்தான்.
“நீர் நடக்கிறது, கதைக்கிறது எல்லாம் சரி எண்டு நினைக்கிறீரா?”
அவளுக்குச் சுள் என்று கோபம் வந்தது. “இதையேதான் உங்கட நண்பியும் செய்தவள். அப்ப மட்டும் எல்லாம் சரியா இருந்ததோ?” என்று ஏறிவிட்ட சினத்துடன் கேட்டுவிட்டு, அவனைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு உள்ளம் பெரும் சத்தமாக அடித்துக்கொண்டது.
அப்படி என்ன தவறாக நடந்துவிட்டாளாம்? முதலில் அவள் எதையாவது திட்டம் போட்டுச் செய்தாளா என்ன? அன்று வந்த வார்த்தைகள் அவளையும் மீறியவை. பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று ஏதாவது ஒரு பதிலைச் சொல்வதை விட்டுவிட்டு இது என்னவிதமான கேள்வி?
அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லையோ? அதனால்தான் இப்படி எல்லாம் கேட்கிறானோ? விழிகள் கலங்கிவிடும் போலிருக்க, மேலே யோசிக்கக் கூட முடியாமல் ஆரூரனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
மகிழினி, சயந்தன், இதழினி, இவள் தமையன் என்று யாரையும் காணவில்லை. ஷர்மினிதான் இருந்தாள்.
“என்னடி மொத்த வீட்டையும் காணேல்ல?”
“இப்போதைக்கு வெளில சொல்லாத அபி. அண்ணி திரும்ப மூண்டு மாதமாம். அவாக்குக் கொஞ்சம் ஏலாம இருக்கு எண்டு அண்ணா கூட்டிக்கொண்டு போயிற்றார். இவரும் டவுனுக்கு ஏதோ அலுவலாம் எண்டு போயிற்றார்.” என்றபடி அவளுக்குத் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள் ஷர்மினி.
அதுதான் வாசலில் அவன் காவலுக்கு இருக்கிறான் போல. தோழி என்றால் கவனிப்பெல்லாம் அப்படித்தான் இருக்கும். அவளை மட்டும்தான் விதம் விதமாகப் பார்ப்பதும் ஆயிரம் கேள்வி கேட்பதும். மனம் உள்ளே புழுங்கியதில் ஷர்மியோடு மேலே பேசாமல் தேநீரைப் பருகினாள்.
அவள் முகத்தைக் கவனித்துவிட்டு, “என்னடி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று ஷர்மி கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கே தெளிவில்லாமல் எதை என்னவென்று சொல்வது?
“என்ன அபி, ஏதும் பிரச்சினையா?” உறக்கத்துக்கு அவளிடம் தாவிய மகனை வாங்கி, மடியில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி விசாரித்தாள்.
“என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் ஷர்மி நீ?”
“என்னடி இது புதுசா?”
“நான் நல்லவளா கெட்டவளா?”
ஷர்மினிக்கு ஒன்றும் விளங்கமாட்டேன் என்றது. “இது சரி வராது. உனக்கு என்னவோ பிடிச்சிட்டுது. பொறு இவரைக் கூப்பிடுறன்.” என்று அவள் எழும்ப, “நீ அண்ணாவைக் கூப்பிடு. நான் வெளிக்கிடப்போறன்.” என்று, அருந்தி முடித்த தேநீர்க் கோப்பையை அவளே கொண்டுபோய்ச் சமையலறையில் கழுவி வைத்துவிட்டுப் புறப்பட்டாள்.
ஸ்கூட்டி திடீரென்று அவள் மனத்தைப் போலவே மக்கர் செய்தது. அவள் என்ன முயன்றும் அது அசையவே இல்லை. அப்போது பக்கத்து வீட்டில் உதயனின் தலை தெரிய, ஸ்கூட்டியை ஒதுக்கி நிறுத்திவிட்டுத் திரும்பவும் வீட்டுக்குள் வந்து விடயத்தைச் சொல்லி, “உன்ர நண்பர என்னைக் கொண்டுபோய் விடச்சொல்லு. நான் பிறகு ஸ்கூட்டியை எடுப்பிக்கிறன்.” என்றாள்.
ஷர்மி மெலிதாய் அதிர்ந்தாள். தேவகி அம்மாவுக்கு இது பிடிக்காதே. அவள் கணவனும் என்ன சொல்லுவான் என்று தெரியாது. இருளும் வேறு கவ்வ ஆரம்பித்திருந்தது. அதில், “கொஞ்ச நேரம் இரு. எப்பிடியும் இவரும் அண்ணாவும் வந்திடுவினம். பிறகு போகலாம்.” என்று சொல்லிப்பார்த்தாள்.
அவள் கேட்கவில்லை. “ஒரு அவசரத்துக்குக் கூடப் போகேலாத அளவுக்கு உன்ர நண்பர் நல்லவர் இல்லையோ?” என்றாள் வேண்டுமென்றே.
“அபி!” என்று அதட்டினாள் ஷர்மி
“வேற என்னடி? நாள் முழுக்க வேலை செய்துபோட்டு அந்தக் களைப்போட உன்னைப் பாக்க எண்டு வந்தனான். இனித்தான் வீட்டை போய்க் குளிச்சு, களையாற வேணும். ஆனா நீ இன்னும் இஞ்ச இரு எண்டு சொல்லுறாய்.”
ஷர்மி எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. கடைசியில், “மாமி மட்டும் ஏதாவது சொல்லட்டும், பிறகு இருக்கு உனக்கு!” என்று அவளை நன்றாக முறைத்துவிட்டு, உதயனை அழைத்து விடயத்தைச் சொல்லி, அழைத்துச் செல்லும்படி சொன்னாள் ஷர்மினி.
அவளுக்கு என்னவோ அபிராமி இயல்பாக இல்லை என்கிற வரை புரிந்தது. கணவனோடு அவளைப் பற்றிப் பேச வேண்டும் என்று குறித்துக்கொண்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வாரும்.” என்று அழைத்துக்கொண்டு போனவன் பக்கத்துவீட்டுப் பெடியனை அழைத்தான்.
அபிராமிக்கு அப்படியொரு கோபம் வந்தது. வேகமாகக் கைப்பேசியை எடுத்து, “அண்ணா, ஷர்மி வீட்டடிக்கு வாறீங்களா? வீட்டை போகோணும்.” என்று அவர்களுக்குப் பழக்கமான ஓட்டோவுக்குச் சொல்லிவிட்டு, பேசாமல் நின்றுகொண்டாள்.
“இத முதலே செய்திருக்கலாம்.” என்றுவிட்டுப் போனான் உதயன். அவள் உள்ளம் ஏன் என்றில்லாமல் காயப்பட்டுப் போனது.
எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்பதைத் தன்னால் முடிந்தவரையில் அவனுக்கு உணர்த்திவிட்டாள். அவனிடமிருந்து சாதகமாக ஏதாவது தென்பட்டால் மேற்கொண்டு பேசலாமே என்று எண்ணித்தான் கொண்டுபோய் விடச்சொல்லிக் கேட்டாள். அவனானால் தன் எல்லையை விட்டு இம்மி அளவு கூட நெருங்கி வரமாட்டானாம்.
அவள் எப்படி உன்னைப் பிடித்திருக்கிறது என்று மறைமுகமாக உணர்த்தினாளோ, அப்படி அவனும் பிடிக்கவில்லை என்பதை இப்படி உணர்த்துகிறானா என்ன? உதட்டைப் பற்றித் தன் உணர்வுகளை அடக்க முயன்றாள்.
உதயனுக்கும் அவளை விளங்காமல் இல்லை. ஆனால், தன் மனம் தெளியாமல் எந்த நம்பிக்கையையும் அவளுக்குக் கொடுக்க விருப்பமில்லை. அதைவிட அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வராமல், யார் வாயிலும் அரைபடுவதில் உடன்பாடும் இல்லை.
பாதுகாப்பாக அவள் ஓட்டோவில் புறப்பட்டுவிட்டாளா என்று அறிய விரும்பி, வீட்டுக்குள் நின்றே ஓட்டோ வந்துவிட்டதா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்படி அவன் பார்ப்பது தெரிந்ததும் வேண்டும் என்றே அவன் பார்வையில் படாத தூரத்தில் வந்து நின்றுகொண்டாள் அபிராமி. சற்று நேரத்தில் அந்தப் பக்கத்து வீட்டுப் பெடியன் வீதிக்கே வந்து எட்டிப் பார்ப்பது தெரிந்தது. வேகமாக அங்கிருந்த பெரிய மரத்தின் பின்னால் மறைந்துகொண்டாள்.
அவன் போய்ச் சொல்லியிருக்க வேண்டும். உதயன் இவளைத் தேடிக்கொண்டு வேகமாக வந்தான்.
அவள் மறைந்து நிற்பதைக் கண்டதும் அவனுக்குக் கோபம் வந்தது.
“என்ன விளையாடுறீரா?”
“உங்களோட விளையாட நீங்க எனக்கு என்ன மாமனா மச்சானா?”
அவள் பேச்சிலும் பார்வையிலும் தெறித்த கோபத்தில் அவளை முறைத்தான் அவன். “சும்மாவே ஆயிரம் கதை சொல்லுற உம்மட அம்மா என்னோட உம்மைப் பாத்தா சும்மா விடுவாவா? உமக்கும் நிம்மதி இல்லாம, எனக்கும் நிம்மதி இல்லாமச் செய்திடுவா. அதுக்குத்தான் ஆசைப்படுறீரா? சீராளனும் ஷர்மியும் வந்திருக்கிற இந்த நேரத்தில தேவையில்லாத பிரச்சினைகள் என்னத்துக்கு எண்டு யோசிக்க மாட்டீரா?” என்று அவன் அதட்டவும் அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.
அவன் பேச்சில் நியாயம் இல்லாமலும் இல்லையே.
அந்தக் கடுப்பில், “ஓகே ஓகே காணும் உங்கட சொற்பொழிவு! எனக்கு ஓட்டோ வந்திட்டுது. இனி நீங்க நிம்மதியா இருங்க.” என்றுவிட்டு ஓட்டோவில் ஏறப்போனவள் நின்று திரும்பி, “முகத்தைக் கொஞ்சம் பாக்கிற மாதிரி வச்சிருங்க. ஆளும் தாடியும்! முள்ளுக்கம்பியப் பந்து மாதிரிச் சுருட்டி முகத்தில வச்ச மாதிரியே கன்றாவியா இருக்கு.” என்று முகத்தைச் சுளித்துவிட்டு ஓட்டோவில் அவள் ஏறிக்கொள்ளவும் அவனுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தன.
இந்தப் பெண் இப்படி எல்லாம் வாயாடுவாளா என்று ஆச்சரியமாகவும் இருந்தது. கூடவே, ஒவ்வொரு முறையும் அவள் தன் விருப்பத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் விதமும் அவனை ஈர்த்தது.
வீட்டுக்குள் போனதும் கண்ணாடி முன்தான் சென்று நின்றான். எப்போதும் அவன் தாடி வைத்துக்கொள்ள விரும்புவது இல்லைதான். தயாபரி அம்மா இறந்த நாளிலிருந்துதான் வழிக்கவில்லை. முப்பத்தியொராவது நாள் நடக்கும் அந்தியேட்டிக்குப் பிறகு எடுக்க எண்ணியிருந்தான்.
இப்போது அவன் கண்ணுக்கும் அவள் சொன்னது போன்றுதான் தெரிந்தது. அதை எடுப்போமா என்று யோசனை ஓடினாலும் இவளின் வாய்க்காகவே இப்போதைக்கு வழிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொண்டான்.

