கடன் அன்பை முறிக்கும் 4 – 2

காதலிக்க முதலே காதலில் தோற்று நிற்கிறாள். எல்லோர் முன்னும் அழவும் முடியவில்லை. எல்லோரும் அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலிருக்க, அது பிடிக்கவும் இல்லை.

 

வேகவேகமாய் மிடறு விழுங்கித் தன்னைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து, “சந்தோசமான விசயம்தானே மாமி? அதுக்கு ஏன் சோகமா இருக்கிறீங்க?” என்றாள் முகம் முழுக்க சிரிப்பை அப்பிக்கொண்டு.

 

“அம்மாச்சி!”

 

“மாமா ஆசைப்பட்டது சரிதான். ஆனா, அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா மட்டும் எண்டுதானே சொன்னவர். பேந்தென்ன?” அதற்கே அவளுக்கு உதடுகள் நடுங்க ஆரம்பித்தன.

 

என்ன இருந்தாலும் பத்தொன்பதே வயதான சின்ன பெண். அளவுக்கு அதிகமாக நடிக்க முடியவில்லை. “அடுத்த முறை மச்சான் எடுத்தா என்னக் கூப்பிடுங்க. படிக்க எண்டு போயிற்று காதலோ எண்டு கேக்கிறன்?” என்று பகடி போன்று சொல்லிவிட்டு, “உடுப்பை மாத்திக்கொண்டு வாறன்.” என்று உள்ளே ஓடிப்போனாள்.

 

நெஞ்சை இரண்டாகப் பிளந்துகொண்டு அழுகை வந்தது. சத்தமாய் அழ முடியாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அழுது தீர்த்தாள்.

 

இரு குடும்பங்களுக்குமிடையில் இருந்த நெருக்கமும், பெரியவர்களின் விருப்பமும் அதுதான் என்பதும், அவனாகவே தன் மனத்தைப் பகிர்ந்ததுமாகச் சேர்ந்து, இது நடக்காமல் போகுமா என்று கூட அவளை யோசிக்க வைத்ததில்லை.

 

பகல் போய் இரவு வருவது எத்தனை உறுதியானதோ அத்தனை உறுதியாகத் தாம் சேரப்போவதையும் நம்பியிருந்தாள். ஆனால் நடந்தது? அணிந்திருந்த வெள்ளைச் சீருடையைக் கழற்றி எறிந்தது போன்று, கண்டா கனவுகளையும் அவன் தந்திருக்கும் காயத்தையும் தூக்கி எறிய முடியவில்லை.

 

ஆனால், யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டாள். அது முடிந்தது அவளால். அடுத்தமுறை அவன் அழைத்தால் சொல்லுங்கள் என்றவள் அடுத்து வந்த நாள்களில் அவன் அழைக்கிற போதெல்லாம் ஓடி ஒளிந்துகொண்டிருந்தாள்.

 

தவறு செய்தவன் அவன்தான். ஆனால், அவளுக்குத்தான் அவன் முகம் பார்க்க முடியவில்லை. பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று பயம்.

 

அவனும் அவளோடு பேச முடியாமல் குற்றவுணர்வில் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தான்.

 

அன்னையிடம் மட்டும், “இசை என்னம்மா சொன்னவள்?” என்று விசாரித்தான்.

 

“அவா ராசாத்தி அப்பு. என்ன சொல்லுவா? படிக்கப் போன இடத்தில மச்சானுக்குக் காதலோ எண்டு சிரிச்சுக்கொண்டு கேட்டவா. அவா அதப் பெருசா எடுக்கேல்ல. கோகிலா அக்கா வாயத் திறந்து ஒண்டும் சொல்லேல்லதான். எண்டாலும் அவாக்கு இது பெரிய ஏமாற்றம் எண்டு எனக்கே தெரிஞ்சது. நான் சொன்னதும் அழுதவா. ‘ஜீவன் இப்பிடி நடப்பான் எண்டு நாங்க நினைக்கவே இல்லை அக்கா’ எண்டு நளினி முகத்துக்கு நேராவே சொன்னவா.” என்றவருக்கும் மகன் மீது மிகுந்த அதிருப்திதான்.

 

முதன் முதலில் அந்தப் புகைப்படத்தை அனுப்பிவிட்டு அவன் சொன்னபோது அதிர்ந்துதான் போனார். அவன் மீது மிகுந்த கோபம். வேண்டவே வேண்டாம் என்று நின்றார்.

 

மகேந்திரன் குடும்பம் தங்களுக்கு எப்படியெல்லாம் உதவியாக இருந்தார்கள் என்று, யாழிசையின் பண்பான குணம் பற்றி, அழகு பற்றி அவர் என்ன எடுத்துச் சொல்லியும் அவன் அசையவில்லை.

 

கடைசியில் மன்னிப்பைக் கேட்டபடி அவளைத்தான் பிடித்திருக்கிறது, இல்லாவிட்டால் எனக்குத் திருமணமே வேண்டாம் என்று சொல்லவும் அதிர்ச்சியோடு அவர் பேச்சு நின்றுபோயிற்று.

 

அதன்பிறகு அவர்தான் அந்த ஏமாற்றத்தை ஜீரணித்துக்கொள்ளப் போராடினார்.

 

கோகிலா அழுதாராம் என்று தெரிந்ததிலிருந்து ஜீவனுக்கு மிகுந்த குற்றவுணர்வாகிப் போனது.

 

அவள் மனத்தில் ஆசையை விதைத்தது அவன்தான். அதை அவனும் காதல் என்று எண்ணியிருந்தான். ஆனால், இலண்டன் வந்த பிறகு, ஒரு முறை காய்ச்சல் வந்து பனடோல் வாங்கப் போன இடத்தில் விதுசா தமிழ் பெண் என்று அறிந்ததிலிருந்து ஆரம்பித்த பழக்கம்.

 

ஒரு கட்டத்தில் தினமும் பார்த்துப் பேசுகிற அளவுக்கு வளர்ந்து, ஒரு நாள் கூட அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற அளவுக்குப் போய், அவள் இவனோடு வந்து தங்கிப்போகும் அளவுக்கு அவர்கள் உறவு வெகு நெருக்கமாய் மாறிப்போயிருந்தது.

 

அப்போதுதான் யாழிசையைப் பிரிந்து இலண்டன் புறப்பட்டபோது பிரிவு அவனை வாட்டவில்லை என்கிற உண்மையும், இங்கு வந்த பிறகு ஒரு குறுகுறுப்பு இருந்தாலும் அதைத் தாண்டிய தீவிரம் தனக்குள் இருக்கவில்லை என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருந்தான்.

 

அவளைப் பாராமல் இருப்பது, அவளோடு பேசாமல் இருப்பது எல்லாம் அவனை எதுவுமே செய்யவில்லை. ஆனால், விதுசாவிடம் அப்படி இல்லை. பார்த்தேயாக வேண்டும். பேசியே ஆக வேண்டும். இல்லையா கோபம் வந்தது.

 

ஒரு முறை உடல் முடியாமல் அவள் ஒரு வாரமாக வீட்டில் இருந்தபோது அவன் பட்ட பாட்டில்தான் அவள் தனக்கு எத்தனை இன்றியமையாதவள் என்பதை அவனே புரிந்துகொண்டான்.

 

யாழிசைக்கு இதை எப்படி எடுத்துச் சொல்வது, உன்னிடம் எனக்கு உண்டானது மெல்லிய சலனம் என்று எப்படி விளங்கப்படுத்துவான்?

 

முதலில் கோகிலாவிடம் பேசி மன்னிப்பைக் கேட்டான். அப்பாவிப் பெண்மணி அவர். என்ன சொல்வார்?

 

“அதுக்கு என்னப்பு? இதக் கொஞ்சமும் எதிர்பாக்காததால நம்பேலாம இருந்தது. ஆனா இப்ப நான் ஓகே. பிடிக்காம கட்டி வாழேலாதுதானே.” என்று அவர் இதமாய்ப் பேசியபோது, அவன் குற்றவுணர்ச்சி அதிகரித்துத்தான் போனது.

 

அவரிடமிருந்து கைப்பேசியை வாங்கிய நளினிதான், “என்ன எண்டாலும் நீர் இப்பிடிச் செய்திருக்கக் கூடாது ஜீவன். நாங்க அவ்வளவு நம்பிக்கையா இருந்தனாங்க.” என்று நேராகவே சொல்லிவிடவும் அவனுக்கு முகம் கறுத்துப்போனது.

 

தவநேசன் அவளை அதற்குமேல் பேச விடவில்லை. “மனம் சேராம என்னெண்டு கட்டி வைக்கிறது நளினி? அவனை என்னவோ செய்யக் கூடாததைச் செய்த மாதிரி நினைக்க வைக்காத.” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “அதெல்லாம் ஒண்டும் இல்ல ஜீவன். நீ சந்தோசமா உன்ர வாழ்க்கையப் பார். பெரியாக்கள் சும்மா தங்கட மனதில ஆசைய வளத்ததுக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன செய்வீங்க?” என்று அவனை அவனிடமே நியாயப்படுத்தினான்.

 

எல்லாமே அவனை இன்னுமின்னும் குன்றத்தான் வைத்தன.

 

அடுத்ததாய் யாழிசை. அவளிடம் பேசத்தான் மிகவுமே தயங்கினான். குற்றவுணர்ச்சி அவனைத் தின்றது. ஆனால் வேறு வழியில்லை. இப்போது அவளுக்கென்று கைப்பேசி ஒன்றை மாதவி வாங்கி கொடுத்துவிட்டதால் அவளுக்கே அழைத்தான்.

 

முதல் அவள் அழைப்பை ஏற்கவில்லை. அதற்கே இவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. ஆனால், திரும்பவும் அவன் அழைக்க முதல் அவளே அழைத்தாள்.

 

“எப்பிடி இருக்கிறீங்க மச்சான்?” ஒன்றுமே நடவாததுபோல் சிரித்த முகமாய் அவள் வினவியபோது அவனுக்குப் பேச முடியவில்லை.

 

“இசை” என்றான் தடுமாறி.

 

“மாமி உங்கட விதுசாவப் பற்றிச் சொன்னவா. எனக்குச் சந்தோசம் மச்சான். எப்ப கலியாணம்? அங்கயா இல்ல இஞ்சயா?” அவனைப் பேசவே விடாமல் கேள்விகளாகக் கேட்டாள் அவள்.

 

“இசை சொறி… அது…”

 

“மச்சான், எனக்கு எதுக்கு சொறி சொல்லுறீங்க? அதெல்லாம் ஒண்டும் இல்ல. கலியாணத்தை மட்டும் இஞ்ச வைங்க. ஒரு நாளைக்கு உங்கட விதுசாவையும் கூப்பிட்டு குரூப் கோலில வாங்க. எல்லாரும் கதைப்பம்.”

 

“உனக்குக் கோவம் இல்லையா?”

 

“எனக்கு என்ன கோவம்? அண்டைக்குப் போக முதல் என்னவோ சொல்லிப்போட்டுப் போனீங்களே. அதுக்கா? போங்க மச்சான், இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்காதீங்க.” என்று சிரித்தாள் அவள்.

 

அதன் பிறகு அவன் பேச முயற்சிக்கவில்லை. அவளின் செயற்கைத்தனமான பேச்சையும் சிரிப்பையும் துள்ளலையும் உள்ளூர அழுத்தும் ஒரு வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“வேற என்ன மச்சான்? சுவர்ணா மச்சாள் வரச் சொன்னவா. நான் போகோணும். வைக்கட்டா.” என்றவளிடம், “சரி, கவனமா போ!” என்று மட்டும்தான் அவனால் சொல்ல முடிந்தது.

 

அழைப்பைத் துண்டித்தவள் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். மூடி இருந்த கைகள் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை மறைத்துக்கொண்டன.

 

error: Alert: Content selection is disabled!!