எண்ணமெல்லாம் நீ 6 – 2

அவனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். என்ன பதில் சொல்வது என்பதை விட ஏதோ ஒரு தடை இறுக்கிப் பிடித்தது.

 

அப்படி நேரடியாகக் கேட்ட பின்பும் அவன் காட்டும் அந்த மௌனம் அவள் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்ததில், “ப்ளீஸ், பிடிக்காட்டிப் பரவாயில்ல. பிடிக்கேல்ல எண்டு சொல்லிடுங்க. ஆனா இப்பிடி… எப்ப சொல்லுவீங்க, என்ன சொல்லுவீங்க எண்டு தெரியாம கொடுமையா இருக்கு.” என்றவள் வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

 

அன்று முழுக்க அவனாகப் பேச மாட்டானா, பதில் சொல்ல மாட்டானா என்று தவித்த அவள்தான் இப்போது அவனோடான பேச்சை இடையில் முறித்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறாள். தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், அழக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருக்க, அவள் முன்னே ஒரு கிளாஸ் நீண்டது.

 

நிமிர்ந்து பார்த்தாள். உதயன்தான் பழச்சாறுடன் நின்றிருந்தான். அவள் அவனையும் அவன் கையில் இருந்த கிளாஸையும் மாறிமாறிப் பார்த்தாள்.

 

“உமக்குத்தான். குடியும். இண்டு முழுக்க நீர் ஒழுங்கா சாப்பிடவே இல்ல.” என்றதும் விழிகளை விரித்தாள்.

 

அன்று முழுக்க அவன் எப்படியெல்லாம் ஓடி ஓடி வேலைகளைப் பார்த்தான் என்று அவளுக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவளைக் கவனித்திருக்கிறான் என்றால்…

 

“கனக்க(நிறைய) யோசிக்காம வாங்கும் அபி. இது அவசரத்தில எடுக்கிற முடிவு இல்ல. நிறைய யோசிக்க இருக்கு.”

 

அப்படி என்ன நிறைய யோசிக்கிறான் என்கிற கேள்வி எழுந்தாலும் வாங்கிப் பருகினாள்.

 

அவர்களின் பேச்சுச் சத்தத்தில் இதழினி சிணுங்கினாள்.

 

அருந்திக்கொண்டிருந்த கிளாஸை கீழே வைத்துவிட்டு, “அச்சச்சோ! எங்கட செல்லத்தை எழுப்பிப்போட்டமோ? நீங்க படுங்க குஞ்சு!” என்றபடி அவள் தட்டிக் கொடுத்தது வேலை செய்யவில்லை. சின்னவள் சிணுங்கல் பெரிதானது. அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டே, “அங்க பால் இருக்கு. காய்ச்சி ஆற வச்சனான். அதை ஒருக்கா எடுத்துத் தாங்க.” என்றாள் உதயனிடம்.

 

கையெட்டும் தூரத்தில்தான் பால் போத்தல் இருந்தது. அதை அவளே எடுக்கமாட்டாளாமா? வேண்டுமென்றே வேலை ஏவுகிறாளா என்று அவன் அவளைப் பார்த்தான்.

 

“என்ன பார்வை? இதழ் அழுறது தெரியேல்லையா? என்ன மாமன் நீங்க?” என்று முறைத்தாள் அபி.

 

சிரிப்பு வரும்போல் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் எடுத்துக்கொடுத்தான். அதன் பிறகும் அவனுக்கு வெளியே செல்லக் கால்கள் வருவேனா என்றன. அந்தக் குழந்தையை அவள் இயல்பாகக் கொஞ்சும் அழகும், அதன்போது அவளிடம் தென்படும் வாஞ்சையும், மார்போடு அணைத்தபடி அவள் பசியாற்றும் விதமும் அவனை அங்கேயே பிடித்து வைத்தன.

 

பசியில் இருந்த சின்னவள் மடக்கு மடக்கு என்று பாலை அருந்தி முடிக்கும் வரையிலும் அவன் அசையவில்லை.

 

அப்படி, தன்னையே பார்த்தபடி அவன் அங்கேயே நின்றதில் அவளுக்கு மனம் படபடத்தது. முகம் வேறு இலேசாகச் சூடாகும் போலிருக்க, “வெளில போங்க உதயன்.” என்றாள் அவனைப் பாராமல்.

 

உதட்டோரம் அரும்பிய மெல்லிய சிரிப்புடன் அவன் அவளையே பார்த்தான். அவள் உதயன் என்று அழைத்தது இனித்துக்கொண்டு இறங்கிற்று. அவன் பார்வையில் தானாய் ஒரு நெருக்கம்.

 

இதற்குள் சின்னவள் பால் அருந்தி முடித்திருந்தாள். கட்டிலில் சப்பாணி(சம்மணம்) கட்டி அமர்ந்திருந்ததில் அபிக்குக் கால்கள் விறைத்துப் போயின. அவசரமாகக் கழிவறைக்கு வேறு போகவேண்டி இருந்ததில், “இதழை ஒருக்கா தோளில போட்டுத் தட்டிக் குடுக்கிறீங்களா?” என்று வினவினாள்.

 

காரணம் புரியாதபோதும் அவனும் மறுக்கவில்லை. குனிந்து வாங்கினான். குழந்தை அவள் மார்புச் சட்டையைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று சிணுங்கினாள். மெல்ல அவள் கரத்தை எடுத்துவிட்டபடி கட்டிலிலிருந்து எழுந்தவள் தடுமாற, குழந்தையோடு சேர்த்து அவளையும் பற்றி நிறுத்தினான் அவன்.

 

முதல் தொடுகை. உடலும் உள்ளமும் கூசிச் சிலிர்க்க, “கால் விறைச்சிட்டுது.” என்று அவனைப் பாராமல் சொன்னபடி குனிந்து அவள் காலை உதறினாள்.

 

“ப்ச்! ஒழுங்கா உடுப்புப் போடமாட்டீரா?” திடீரென்று வந்து விழுந்த அவன் அதட்டலில் அதிர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், வேகமாகக் குனிந்து தன்னைப் பார்த்தாள்.

 

இதழினி பிடித்து இழுத்ததால் போலும் அவள் அணிந்திருந்த பிளவுசின் முதல் பட்டன் கழன்றுகிடந்தது.

 

அவளுக்கும் ஒருமாதிரி ஆகிவிட வேகமாக பட்டனைப் போட்டுக்கொண்டாள். கூடவே, வேண்டுமென்று யாராவது காட்டிக்கொண்டு நிற்பார்களா என்று கோபமும் வர, “சட்டை ஒழுங்குதான். நிக்கிறது நீங்க எண்டுதான் நான் கவனமா இருக்கேல்ல.” என்று பட்டென்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறினாள்.

 

அவன் திகைத்துப் போனான். இவள் என்ன சொல்லிவிட்டுப் போகிறாள்? கைகள் தானாகக் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாலும் அப்படியே நின்றிருந்தான்.

 

சற்று நேரத்தில் திரும்பவும் அவள் அறைக்குள் வந்தாள். அப்போதும் அவன் அதே இடத்திலேயே நின்றிருந்தான். பார்வை வேறு அவளில் இருக்க, “என்ன பார்வை? என்றபடி கண்ணில் சிரிப்புடன் அவனை நெருங்கி வந்து, குழந்தையை வாங்கினாள்.

 

அவனால் அசையவே முடியவில்லை. அபி அவனை என்னவோ செய்துகொண்டிருந்தாள். அபிக்கும் உள்ளே உதறியதுதான். அவன் அமைதியே மெல்லிய தைரியத்தைத் தர, இதழினியோடு கட்டிலில் அமர்ந்துகொண்டு, நிமிர்ந்து பார்த்துப் புருவங்களை மட்டும் உயர்த்தி என்ன என்றாள்.

 

அவன் தலை தானாக ஒன்றுமில்லை என்று ஆடியது. அவளுக்கு இருக்கிற தைரியம் மெய்யாகவே அவனுக்கு இல்லை.

 

“இப்பிடி இஞ்சையே(இங்கயே) நிக்கப் போறீங்களா?”

 

அவளின் சீண்டல் கேள்வியில்தான் அவனுக்கு மீண்டும் சுரணை வந்தது. சின்னவள் வேறு வயிறு நிறைந்ததில் அவனைப் பார்த்துச் சிரித்தாள். சின்ன வயது ஷர்மி நினைவில் வர, தன்னை மறந்து, “செல்லம், மாமாவைப் பாத்துச் சிரிக்கிறீங்களோ?” என்று கேட்டு, எப்போதும் செய்வது போல், குனிந்து அவள் காலில் தன் மீசை, தாடியால் உரசினான்.

 

சின்னவளும் அவன் தாடியின் சொரசொரப்பில் கிக்கிக்கீ என்று சிரித்தாள். அபியின் பார்வை அந்தத் தாடிக்கு ஓடிற்று. அதைக் கவனித்துவிட்டவனின் கண்களில் அப்பட்டமான விசமம்.

 

ஒரு முறை அறை வாசலைத் திரும்பிப் பார்த்துவிட்டு, கண்ணால் சிரித்தபடி அவள் முகத்தருகே நெருங்கினான். நம்ப முடியாத திகைப்பும் சிரிப்புமாக அவள் பின்னால் சரிய, அவள் முதுகில் கை வைத்து நிமிர்த்தியவன், “நாங்க நெருங்கினா தாங்க மாட்டீங்க. அத நினைவில் வச்சுக்கொண்டு விளையாடோணும்.” என்றுவிட்டுப் போனான்.

 

அவன் போன திசையையே பார்த்திருந்தாள் அபிராமி. என்ன செய்தான் அவளை? ஒன்றும் தெரியவில்லை. ஆனால், மனம் அவன் செய்கையில் மயங்கி நின்றது.

 

அத்தனை நாள்களாக என்ன சொல்வானோ, அவள் ஆசைக்கு நெய்யூட்டும் விதமாய்க் கொஞ்சமும் நகர்ந்து கொடுக்கிறான் இல்லையே என்று தவித்தவளின் தவிப்பெல்லாம் அடங்கிப் போனது. தன் ஒற்றைச் செய்கையில் சம்மதிப்பான் என்கிற நம்பிக்கையை மலையளவு தந்திருந்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!