அத்தியாயம் 5
மார்க்கண்டேயரின் எட்டுச் செலவும் முடிந்திருந்தது. மாதவி வீடு திரும்பியிருந்தார். வந்ததும் வராததுமாக யாழிசையின் வீட்டுக்குச் சென்று மன்னிப்பை வேண்டினார்.
“நான் இருந்த நிலமையில இசையை யோசிக்கவே இல்லை அக்கா. குறையா நினைக்காதீங்கோ.”
கோகிலாவுக்கும் அதற்காகவெல்லாம் மாதவி மீது எந்த வருத்தமும் இல்லை என்பதில், “அந்த நேரம் இதையெல்லாம் கவனிக்கேலுமா மாதவி. குறை நினைக்க ஒண்டும் இல்ல. பிள்ளையும் அங்க வரப் பயந்துகொண்டுதானே இருந்தவா. செத்தவீடு, வாசல் வரைக்கும் வந்தாச்சு, நீங்களும் அழுதுகொண்டு நிக்கிறீங்க, சரி மாமிய உள்ளுக்குக் கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு அப்பிடியே அப்புவையும் பாத்திட்டு வருவம் எண்டு நினச்சவாவாம். ஆனா அந்தத் தம்பி தூயவன் வாசலில வச்சே திறத்தியிருக்கிறார். எனக்குக் கேட்ட நிமிசம் சரியான கவலையா போச்சு. அந்தளவுக்கு நாங்க என்ன…” என்றவர் மேலே பேசாமல் நிறுத்திவிட்டார்.
கோகிலா அப்படித்தான். கோபப்படத் தெரியாத பெண்மணி. நம்மைப் பிடிக்காத இடத்தில் நாம் இருக்க வேண்டாம், ஒதுங்கிப் போவோம் என்று நினைப்பவர்.
கூடவே அவன் மாதவியின் அக்கா மகன். அவனைப் பற்றி அவர் சொல்வது மாதவியை வருத்தலாம் என்று நிறுத்திவிட்டு, “இதையும் எங்களிட்ட அவவா சொல்லேல்ல. நேசன் செத்தவீட்டுக்கு வெளிக்கிடவும்தான் தனக்குச் செய்த மாதிரியே அண்ணாவையும் அவமானப் படுத்திப்போடுவினமோ எண்டு சொன்னவா. அதுதான் நீங்க எல்லாரும் ஒண்டா சேர்ந்திருக்கிற நேரம் நாங்க வந்து புதுசா ஒரு பிரச்சினையை, அதுவும் ஒரு செத்தவீட்டில வச்சு உருவாக்க வேண்டாம் எண்டு நினச்சு தம்பி வரேல்ல.” என்று அவர் விளக்கமாகச் சொல்லவும் மாதவிக்கு இன்னுமே சங்கடமாயிற்று.
கணனி வகுப்புக்குப் போயிருந்த யாழிசை திரும்பி வந்தபோது மாதவியை எதிர்பார்க்கவில்லை.
“அத்த, வந்தாச்சா? ஆரோட வந்தனீங்க? நான் நீங்க நாளைக்குத்தான் வருவீங்க எண்டு நினைச்சன்.” ஸ்கூட்டியை கொண்டுபோய்த் தென்னையின் கீழே நிறுத்திவிட்டு இறங்கி வந்தபடி சொன்னாள் அவள்.
“ஒரு கிழமைக்கு மேல வீட்டுக்கு வரவே இல்லை எல்லாம்மா. அதான் வந்திட்டன். வந்து பாத்தா வீடும் வளவும் சின்ன கஞ்சல் கூட இல்லாம அவ்வளவு துப்பரவா இருக்கு. பிள்ளைதான் செய்ததாம் எண்டு அம்மா சொன்னவா. நன்றியாச்சி.” வாஞ்சையோடு அவள் கரம் பற்றித் தன்னருகில் இருத்திக்கொண்டு சொன்னார் மாதவி.
“அச்சோ அத்த. இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவீங்க. அத விடுங்க. அங்க எல்லாரும் உங்களோட ஓகேயா?”
“ஓம் அம்மா. அப்பு கவலைப்படுவார் எண்டுதானாம் அவே இவ்வளவு காலமும் எங்களோட கதைக்காம இருந்தவையாம். அப்புவும் இல்ல. நாங்களும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பம் எண்டு தெரியாது. எங்க எல்லாருக்கும் வேற வயதும் போயிட்டுதே. அதால இந்தக் கோப தாபத்தைப் பிடிச்சு வச்சு என்ன செய்யப் போறம் எண்டு அத்தான் சொன்னவர். உண்மையும்தானே?”
“பிறகென்ன. அப்பு உங்களுக்கு நல்லது செய்துபோட்டுத்தான் போயிருக்கிறார். இனியும் அழாம சந்தோசமா இருக்கோணும் அத்த.” என்றவளிடமும் அவர் தூயவனின் பேச்சை எடுக்கப் போக, “அதெல்லாம் எனக்கு ஒண்டும் இல்லை அத்த. அத விடுங்க.” என்று முடித்துக்கொண்டாள் அவள்.
இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. ஆனால், மாதவியால் இங்கு இருக்க முடியவில்லை. மனம் அங்கேயே சுழன்றது.
கிட்டத்தட்ட 28 வருடங்களாக அந்த வீட்டு வாசலைக்கூட அவர் மிதித்ததில்லை. அதனாலோ என்னவோ அந்தக் காணி, வீடு, அவர் வைத்த மரங்கள், அங்கு அவர் நடமாடிய நாள்கள், அக்கா, அத்தான், அக்கா பிள்ளைகள் என்று சதா சிந்தனை அங்கேயே நின்று சுழன்றது.
தமக்கையோடும் தமக்கையின் பிள்ளைகளோடும் பேச, சொல்ல, கேட்டுத் தெரிந்துகொள்ள அவரிடம் ஓராயிரம் விடயங்கள் இருந்தன. இளையவர்களும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவரோடு பழகினார்கள்.
அதுவும் துளசி ஒரு வாயில்லாப் பூச்சி. சுவர்ணாவை விடவும் ஒரு வயது மட்டுமே குறைவு. பிரான்ஸ் போன கணவன் கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்பே இல்லையாம் என்று கேட்டதிலிருந்து அவள் மீது பிரத்தியேகப் பரிவு தோன்றியிருந்தது இவருக்கு
ஏஜென்சி மூலம்தான் போனானாம். அதனால் விசா இல்லை. கிடைப்பதற்காகப் போராடிக்கொண்டு இருந்திருக்கிறான்.
திடீர் என்று பார்த்தால் அவனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.
அறிந்தவர் தெரிந்தவர் மூலம் விசாரித்துப் பார்த்தபோது, பிரான்சில் விசா கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்துபோனதால் நாடு மாறப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான் என்கிற வரைதான் இவர்களால் அறிய முடிந்திருக்கிறது.
பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று என்பதும், எல்லைப் பாதுகாப்புகள் இருந்தாலும் மற்றைய நாடுகளுக்குச் சாதாரணமாகவே பயணிக்கலாம் என்கிற வசதியும் இருந்ததில் அவனாகவே யாரிடமும் சொல்லாமல் நாடு மாறியிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.
எல்லாம் சரிதான். கட்டிய மனைவியிடமே சொல்லாமல் கொள்ளாமல் போக வேண்டிய கட்டாயம் என்ன?
இன்னும் விசாரித்தபோது அவனுக்கு யாரோ ஒரு பெண்ணுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் என்று சொன்னார்கள். அவள் எந்த நாடு என்று தெரியாதாம். சில நேரம் அவளிடம் ஓடிவிட்டான் போலும் என்று கதை வந்தபோது இடிந்து அமர்ந்துவிட்டாள் துளசி.
அவன் வீட்டினரும் மகன் தம்முடன் தொடர்பில் இல்லை என்று கை விரித்திருந்தார்கள். நம்பாமல் அவன் தம்பியைத் தூக்கிக்கொண்டுபோய் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தனியறையில் வைத்து முறையாகத் தூயவன் விசாரித்தும் எந்தப் பலனும் இல்லை.
உண்மையிலேயே தன் வீட்டினரோடும் அவன் தொடர்பில் இல்லை என்று அறிந்த பிறகே விட்டான். இன்னுமே அவன் குடும்பம் இவன் கண்காணிப்பின் கீழ்தான் இருக்கிறார்களாம்.
இதைக் கேட்டுக் கொஞ்சம் பயந்துதான் போனார் மாதவி. அவன் அவரின் அக்கா மகன்; பெறா மகன். ஆனாலும் இப்படி எல்லாம் நடப்பானா என்று நம்ப முடியவில்லை. அந்தளவுக்குப் பொல்லாதவனா என்று அவர் அவனையே பார்க்கவும் தூயவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.
“சித்தி, அப்பிடிப் பாக்காதீங்க. என்ர தங்கச்சி மகனோட தனியா நிக்கிறாள். பாத்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்லுறீங்களா? அதுவும் இன்னொருத்தியோட போயிட்டானாம் எண்டு கேள்விப்பட்ட பிறகும்?” அப்போதும் கலங்கிச் சிவந்திருந்த முகத்தோடு அமைதியாய் அமர்ந்திருந்த தங்கையிடம் பார்வை சென்று வரச் சொன்னான் அவன்.
“எண்டாலும் அடிதடி எண்டு போகாதீங்கோ ராசா. கேக்கவே பயமா இருக்கு.”
“நல்லா சொல்லு. நான் சொன்னா அப்பாவும் மகனும் எங்க கேக்கினம். எனக்கு ஒண்டும் தெரியாது எண்டு சொல்லி என்ர வாய அடைக்கிறது.” என்று சொன்னார் தேவகி.
“அம்மா!”
“என்ன தம்பி அம்மா? உனக்கு எத்தின வயது? 29 தொடங்கிட்டுது. ஒரு கலியாணத்தையாவது கட்டு, நிதானம் வரும் எண்டா அதுவும் கேக்கிறாய் இல்ல.” என்று ஆரம்பித்தார் அவர்.
“அதுதானேப்பு. ஜீவனே கட்டிட்டான். அடுத்த வருசம் அப்பிடி இஞ்ச வந்து தாலி கட்டப்போறன் எண்டு சொன்னவன். உங்களுக்கு வயது வந்திட்டுதுதானே.” மாதவியும் தன் பங்குக்குச் சொன்னார்.
தங்கை இப்படி இருக்கையில் அவனால் எப்படித் திருமணம் பற்றி யோசிக்க முடியும்? அவளுக்கு ஒரு நல்லது நடக்காமல் அவன் வாழ்வில் எதுவுமில்லை. இதை எத்தனையோ முறை அன்னை தந்தையிடம் தனியாகச் சொல்லிவிட்டான்.
அப்படி இருந்தும் துளசியையும் வைத்துக்கொண்டு இந்தப் பேச்சை எடுத்த அன்னையின் செயலில் கோபம் வரவும் விருட்டென்று அங்கிருந்து வெளியேறினான்.
மார்க்கண்டேயர் பெரும் விவசாய நிலப்பரப்புக்குச் சொந்தக்காரர். கருணாகரன் வந்த பிறகு விவசாயத்தோடு சேர்த்து நிலம் உழுவதற்கு உளவு இயந்திரம், சூடடிக்கும் இயந்திரம், டிரக்ட்டர் என்று வாங்கிப்போட்டார். இரண்டு வேன், மூன்று சின்ன லாரிகள் என்று அவையும் இருந்தன.
அவை அவர்களின் சொந்தத் தேவையோடு சேர்த்து வாடகைக்கும் போய் வந்தன.
அப்படியே வளர்ந்த அவர்களின் வியாபாரம் தென்னந் தோப்பு, தேங்காய் மண்டி, பொச்சு விற்பனை, எண்ணெய் ஆளை, டவுனில் ஒரு பல்பொருள் அங்காடி என்று வளர்ந்து கூடவே சின்ன தொகையிலிருந்து பெரிய தொகை வரை சீட்டுப் பிடிப்பது வரை பரந்து பட்டு நிற்கிறது.
ஒரு காலத்தில் கருணாகரன் எப்படி மார்க்கண்டேயருக்குத் தோள் கொடுத்துப் பின் தான் பொறுப்பெடுத்துக்கொண்டாரோ அதே போன்று இப்போது தூயவன் கருணாகரனுக்குத் தோள் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
அப்பா என்றால் அவ்வளவு மரியாதை. இன்று வரையில் அவர் சொன்னதை அவன் மீறியதில்லை. தட்டச் சொன்னால் முழுமையாக வெட்டிக்கொண்டு வந்து நிற்கும் மகன் அவன்.
*****

