கடன் அன்பை முறிக்கும் 5 – 2

யாழிசையிடம் தூயவன் அப்படி நடந்த பிறகு அங்குப் போவதென்றால் சுவர்ணாவைத்தான் கூப்பிடுவார் மாதவி. அன்று அப்படி அவளோடு அங்குச் சென்று இறங்கியபோது எதிர்ப்பட்டான் தூயவன்.

 

இத்தனை நாள்களும் அவனைப் பார்க்கிற பொழுதுகளில் கருணாகரனும் அங்கேயே இருந்ததால் அவருக்கு அவனிடம் தனியாகப் பேச முடியவில்லை.

 

இன்றைக்குத் தனியாக அகப்படவும், “இசை அருமையான பிள்ளை அப்பு. அவாட்ட

கோவப்படாதீங்கோ. ஒருத்தரப் பிடிக்காட்டி ஒதுங்கிப் போறது வேற. ஆனா அவமானப்படுத்திக் காயப்படுத்தக் கூடாதப்பு. ” என்று அக்கா மகனின் தாடையைப் பற்றிக் கனிவாய்ச் சொன்னார் அவர்.

 

‘ஓ! அழுது நாடகமாடியிருக்கிறாள்.’ முதலுமே அவள் மீது அவனுக்கு மரியாதை இல்லை. இப்போது இன்னுமே வெறுத்தான்.

 

அதை அவரிடம் காட்டாமல், “என்னைப் பற்றி அப்பிடி என்ன சொன்னவள்?” என்றான் பார்வையில் கூர்மையுடன்.

 

“அவவா ஒண்டும் சொல்லேல்ல அப்பு. அப்பிடிச் சொல்லுற பழக்கமும் அவாக்கு இல்ல.” என்றவர் நடந்ததைச் சொல்லி, “அதாலதான் நேசனும் இஞ்ச வரேல்லையாம். அதுவும் நான் சேர்ந்திருக்கிற இந்த நேரம் வீண் பிரச்சினைகள் வேண்டாம் எண்டு நினைச்சிருக்கினம்.” என்று அவர் எடுத்துச் சொல்ல, “சரி சித்தி, நான் வாறன் நேரமாகுது.” என்றுவிட்டுப் புறப்பட்டவனுக்கு யாழிசை மீது அப்படி ஒரு சினம்.

 

எத்தனை சாதுர்யமாகக் காய் நகர்த்தியிருக்கிறாள். என்றாவது ஒரு நாள் மாட்டட்டும், நன்றாகக் கவனித்து விடுகிறேன் என்று கருவிக்கொண்டான்.

 

ஆரம்ப காலங்களில் அவளைக் குறித்து அவனிடத்தில் எந்த எண்ணமும் இருந்ததில்லை. மாதவியை எப்போது வெளியில் கண்டாலும் அவளோடுதான் காண்பான்.

 

மாதவியிடம் இருந்தே ஒதுங்கி இருக்கையில் அவளைப் பற்றி அவன் ஏன் யோசிக்கப் போகிறான்?

 

ஆனால், ஜீவனுக்கு அவளைக் கட்டிக்கொடுக்கும் ஆசை இரு குடும்பத்துக்கும் இருப்பது ஊருக்குள்ளும் தெரியும். அப்படியே அது அவன் காதுக்கும் வந்திருந்தது. அதைப் பற்றியும் அவன் எதுவும் யோசித்ததில்லை.

 

கொஞ்ச நாள்களின் பின் ஜீவன் அங்கே வேறு ஒருத்தியை விரும்புகிறானாம் என்கிற செய்தியும் இங்கே காற்றாகப் பரவியிருந்தது. அதன் பிறகு மார்க்கண்டேயர் மாதவிக்கு என்று கொடுத்த சொத்தில் ஜீவனுக்குச் சேர வேண்டிய பகுதியின் பாதியை மாதவி இவள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டாராம் என்று அறிந்ததில் இருந்துதான் இவள் மீது ஒரு வெறுப்புப் படர ஆரம்பித்திருந்தது.

 

காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏன் மாதவியாகக் கூட அதைக் கொடுத்திருக்கட்டும். இவள் எப்படி வாங்குவாள்? அது அவர்களின் பரம்பரைச் சொத்து. அதுவும் அவன் தாத்தாவும் அப்பாவும் கட்டிக் காத்தது. அது அவளுக்குச் சேர்வதா?

 

இதில், அந்தச் சொத்துகள் எல்லாம் அவள் பெயருக்கு வந்ததும், அதுவரையில் அவளுக்கு என்று இருந்த அவர்களின் வீட்டை அவள் அவள் தமையனின் பெயருக்கு மாற்றிக்கொடுத்துவிட்டாள்.

 

ஆக, அவள் தமையனுக்கும் சொத்து அவளுக்கும் சொத்து. அப்படியானால் அதை இத்தனை காலமாய்க் கட்டிக்காத்து வந்த இவர்கள் ஏமாளிகளா?

 

அதன் பிறகுதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவள் தமையன் நல்ல வேலையில் இருந்தாலும் பெரிய வசதி இல்லை. ஆனால், அவள் கழுத்தில் காதில் எல்லாம் புதிதாக நகைகள் மின்ன ஆரம்பித்தன.

 

அதெல்லாம் எங்கிருந்து வந்தன?

 

அப்படியானவள் அவன் வீட்டுக்குள் கால் வைப்பதா? கடைசி வந்தாலும் அதற்கு அவன் அனுமதிக்க மாட்டான். அவளின் நாடகமெல்லாம் அவன் வீட்டுக்கு வெளியில்தான்.

 

 

*****

 

அன்று முழுக்க மாதவிக்கு உடல்நிலை சரியில்லை. கொஞ்சம் படுத்து எழும்பியிருந்தார். தேவகி அழைத்து வரச் சொன்னபோதும் சோர்வாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே நின்றுவிட்டார்.

 

யாழிசை அங்கே முற்றத்தில் வளர்ந்துவிட்ட புற்களைச் செருக்கிக்கொண்டிருந்தாள். அவள் இருக்கிற தைரியத்தில் வீட்டுக்குள்ளேயே மெல்ல மெல்ல நடை பழகிக்கொண்டிருந்தவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. வியர்த்து நடுங்கிக்கொண்டு வந்தது.

 

வேகமாய் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, “இசை, ஓடி வாம்மா. எனக்கு ஒரு கால் உணர்வில்லாம கிடக்கு. தேகம் நடுங்குதன.” என்று குரல் கொடுக்கவும் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள் யாழிசை.

 

அவரால் பேச முடியவில்லை. வியர்த்து வழிந்தது. காலுக்கு எண்ணெய் போட்டு வேக வேகமாக உருவிவிட்டாள். அவள் கை பட்டதற்கே வலிக்கிறது என்று அழுதார் அவர்.

 

அதற்குமேல் அவரை வைத்திருக்கப் பயமாக இருந்ததில் சுவர்ணாவை வைத்தியசாலைக்கு வரச்சொல்லிச் சொல்லிவிட்டுத் தன் வீட்டினரின் உதவியோடு வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினாள்.

 

அங்கே அவருக்குக் காலில் இரத்தம் கட்டியாகி இருக்கிறது என்றும், கொடுத்த மாத்திரைகளை அவர் ஒழுங்காகப் போடவில்லை என்றும், இப்படியே விட்டிருந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும் என்று சொல்லவும் பயந்தேபோனாள் யாழிசை.

 

அவளோடு நளினிதான் துணைக்கு வந்திருந்தாள். அவளுக்கும் இதற்கெல்லாம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 

இதற்குள் சுவர்ணாவும் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தாள். காலில் எங்கு அடைப்பு, அதை மருந்தினால் சுகப்படுத்த முடியுமா, இல்லை சத்திர சிகிச்சை செய்து அந்த அடைப்பைப் போக்க வேண்டுமா என்று பார்க்கும் வசதி எல்லாம் வவுனியாவில் இல்லை என்று சொல்லி, அவசரமாக அவரை அம்புலன்சில் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுபோகப் போவதாகச் சொன்னார்கள்.

 

“நல்லா இருந்த மனுசி டொக்டர். திடீரெண்டு ஹார்ட் அட்டாக் எண்டு என்னென்னவோ எல்லாம் சொல்லுறீங்க.” என்று அழுதாள் சுவர்ணா.

 

“குடுத்த மருந்தை ஒழுங்கா போட்டாத்தானே தொடந்து நல்லாருக்க? அவாவே சொல்லுறா அப்பப்ப விட்டுட்டாவாம் எண்டு. அதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?” இருந்த பரபரப்பிலும் கடிந்துகொண்டார் வைத்தியர்.

 

சுவர்ணாவுக்கு யாழிசை மீதுதான் அந்தக் கோபம் திரும்பியது. “அந்த மனுசி குளுசை போடுறாவா இல்லையா எண்டு கவனிக்காம எங்கயடி பாத்துக்கொண்டு இருந்தனி? அம்மாக்கு மட்டும் ஏதும் நடக்கட்டும் உனக்கு இருக்கு!” என்று அழுதுகொண்டு சொல்லவும் பயந்துபோனாள் யாழிசை.

 

“என்ன மச்சாள் கதைக்கிறீங்க. அத்த பாதி நாள் அங்க போயிடுவா. அங்க நான் எப்பிடிக் கவனிக்கிறது?”

 

“ஏன் ஃபோன் பண்ணி கேக்க மாட்டியா? அந்த மனுசி வாங்கித் தாற நகை நட்டையெல்லாம் மாட்டிக்கொண்டு திரியத் தெரியும். ஆனா, அவாவைக் கவனிக்க மாட்டாய் என்ன?” என்று சீறினாள்.

 

“என்ன கதைக்கிறாய் சுவர்ணா? எண்டைக்கு அவள் அப்பிடிக் கவனமில்லாம இருந்திருக்கிறாள். அங்க போக வெளிக்கிட்ட பிறகுதான் இவ்வளவும். அங்க நீதான் கவனிச்சிருக்கோணும்.” நளினிக்கு அவளின் அபாண்டமான குற்றச்சாட்டில் கோபம் வந்திருந்தது.

 

“ஷ்! என்ன சத்தம் இஞ்ச?” என்று அதட்டிவிட்டு, “இப்ப அம்புலன்ஸ் யாழ்ப்பாணத்துக்கு வெளிக்கிடப்போகுது. ஆராவது ஒரு ஆள் அவாவோட போகலாம். ஆர் போறீங்க?” என்கிறார் வைத்தியர் கேள்வியாக.

 

முதலாக இருந்திருக்க யாழிசை தானாகவே புறப்பட்டிருப்பாள். ஆனால், மாதவியின் இந்த நிலைக்கு அவள்தான் காரணம் என்று சுவர்ணா சொன்னதும் அவளுக்கு நடுங்க ஆரம்பித்திருந்தது. ஒரு பயம் நெஞ்சைக் கவ்வியதில் அப்படியே நின்றாள்.

 

“என்ன பாக்கிறாய்? ஊர் சுத்த மட்டும் அம்மாவோட போவியா? இவர் வேலைக்குப் போய்ட்டார். பிள்ளைகளை விட்டுட்டு நான் எப்பிடிப் போவன். நீ போ! போய்ட்டு என்ன நிலைமை எண்டு சொல்லு. இவர் வந்ததும் நான் வாறன்.” என்று அதற்கும் அதட்டினாள் சுவர்ணா.

 

அப்போதும் ஆம்புலன்சில் ஏறாமல் நளினியைப் பார்த்தாள் யாழிசை. “நிண்டு யோசிக்க நேரமில்லை இசை. நீ ஏறு. மாதவி அக்கா சுகமாகி வரட்டும், கதைப்பம்.” என்று அவளையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

 

 

error: Alert: Content selection is disabled!!