எண்ணமெல்லாம் நீ 7 – 1

அத்தியாயம் 7

 

 

இதழினி உறங்கி இருந்தாள். அபியின் பார்வை குழந்தையில் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் உதயனிடம் சிக்குப்பட்டு நின்றன.

 

கண்ணில் அப்பட்டமான விசமத்துடன் அவன் அவளை நெருங்கியதும், அவள் பயந்து பின்னால் சரிந்ததும், மிக இலாவகமாக அவள் முதுகைத் தாங்கி நிமிர்த்திவிட்டு அவன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் என்று, அந்தக் காட்சி மட்டுமே அவள் மனக்கண்ணில் திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது.

 

அதை நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தில் ஒரு தித்திப்பு!

 

பிடிக்காமல் இப்படி நெருங்குவானா? அதுவும் அவன் எல்லாம் ஒரு பெண்ணிடம் பழகும் விதத்தில் அவ்வளவு கவனமாக இருக்கிறவன்.

 

இதற்குள் அவனுடைய ஒன்றுவிட்ட தமக்கை, பிள்ளைகளோடு வந்தார். “நீங்க போங்கோ, நீங்க இன்னும் சாப்பிடேல்லையாம் எண்டு ஷர்மி சொன்னவா. இஞ்ச நானும் பிள்ளைகளோட சரியப்போறன். அதால சின்னவாவ நானே பாப்பன்.” என்று இரகசியக் குரலில் சொன்னார்.

 

அவள் இருக்கும் மனநிலைக்கு உணவு இறங்கும் போல் இல்லை. ஆனால், அவனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. அதில், “கவனம் அக்கா, உருண்டு விழுந்திடுவா.” என்று தானும் அதே இரகசியக் குரலில் சொல்லிவிட்டு, தலையணைகளை இதழினிக்கு அணைவாக வைத்துவிட்டு, ஷர்மியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

 

பெருமளவில் வீடு ஒதுங்கியிருந்தது. மிச்சம் சொச்சமாக இருந்தவர்களும் புறப்பட்டிருந்தார்கள். தேவகி அம்மா களைப்பில் பேரனோடு அறையில் சரிந்திருந்தார்.

 

இவளைக் கண்டுவிட்டு, “சாப்பிட வாடி!” என்று கூப்பிட்டு, கையோடு உணவையும் போட்டுக் கொடுத்தாள் ஷர்மினி.

 

அவர்களின் பள்ளிக்காலத் தோழி அமிர்தாவும் முல்லைத்தீவிலிருந்து வந்திருப்பதை அப்போதுதான் கண்ட அபிராமி, “என்னடி, எல்லாம் முடிஞ்ச பிறகு வந்திருக்கிறாய்?” என்றபடி அவள் முதுகில் ஒன்றைப் போட்டாள்.

 

“நீயும் உன்ர பங்குக்கு ஆரம்பிக்காத. என்ர மாமியும் ஆஸ்பத்திரில. அவாவையும் கவனிக்கோணுமே.” என்று சலித்தாள் அவள்.

 

அவள் வீட்டில் கொஞ்சம் சரியில்லை என்று தெரியுமாதலால், “சரி விடு, நீ சாப்பிட்டியா?” என்று கேட்டு, அவள்

உண்டுவிட்டாள் என்று அறிந்தபிறகு, இவள் உணவோடு வந்து வெளிவாசல் படியில் அமர்ந்துகொண்டாள்.

 

அங்கே முற்றத்தில் இத்தனை நாள்களாகப் போடப்பட்டிருந்த டென்ட்டினை சயந்தன், சீராளன், உதயன் மூவருமாகச் சேர்ந்து அகற்றிக்கொண்டு இருந்தார்கள். சயந்தன் அவன் நண்பன் ஒருவனிடம் இருந்துதான் அதை எடுத்திருந்தான். அவன் டிராக்டரை கொண்டுவந்து நிறுத்திவிட்டுப் போயிருந்தான். கழற்றிய டென்ட்டின் பாகங்களை எல்லாம் சரியாகக் கட்டி, எடுத்துக்கொண்டுபோய் டிராக்டரில் மூவரும் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

 

மற்ற இருவரும் அறியாமல் உணவை விடவும் கண்களால் உதயனைத்தான் மென்றாள் அபிராமி. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலொரு ஆவல். மனத்துக்கு இன்னுமின்னும் நெருக்கமாய் வந்துகொண்டிருந்தான் உதயன்.

 

அவனால் இயல்பாக நடமாட முடியாத அளவில் இருந்தது அவள் பார்வை. திரும்பி முறைக்கவும் வழியில்லை. ‘இவளை வச்சுக்கொண்டு…’ என்று தனக்குள் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

 

எல்லாவற்றையும் கழற்றி ஏற்றி முடிந்ததும், சயந்தனும் சீராளனும் டிராக்டரில் புறப்பட்டதும் முதல் வேலையாக அவளிடம் வந்து, “எங்க வச்சு என்ன செய்றாய் நீ?” என்று அதட்டினான் உதயன். அவனுக்கு இவள் பார்ப்பதைச் சீராளன் கவனித்து, தேவையற்ற பிரச்சனைகள் வந்துவிடுமோ என்கிற பதற்றம்.

 

ஒரு கணம் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எந்த உரிமைல ஒருமைல கதைக்கிறீங்க?” என்று வினவினாள்.

 

அவனும் அதை உணரவில்லை. ஒருமை தானாக வந்திருந்தது. ஆனாலும் வேகமாகச் சமாளித்து, “உமக்கு என்ன, என்னை விட வயசு கூடவா?” என்றான் வேண்டுமென்று.

 

“ஓ! அப்ப வயசு குறைஞ்ச ஆக்களை எல்லாம் ஒருமைலதான் கதைப்பீங்க போல.” என்றவள் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்து அமிர்தாவை அழைத்தாள்.

 

“அடியேய் அம்மு, இஞ்ச வா. இவர் என்னவோ கேக்கிறார். என்ன எண்டு கேளு.”

 

“என்னண்ணா?” படிக்கிற காலத்தில் இருந்தே இங்கே வந்து போவதால் உதயனை அவளுக்கும் தெரியும். அதில் இயல்பாகக் கேட்டுக்கொண்டு வந்தாள் அவள்.

 

“ஒண்டும் இல்லையம்மா. ஏதும் குடிக்கத் தரவா எண்டுதான் கேட்டனான். சாப்பிடேக்க குடிச்சா ஒழுங்காச் சாப்பிடேலாதாம் எண்டு வம்பு வளக்கிறா உங்கட ஃப்ரெண்ட். அவாக்குச் சேட்டை கூடிப்போச்சு.” என்றுவிட்டு அவள் நலம் விசாரித்து, நல்ல முறையில் பேசி, அவளை அனுப்பி வைத்துவிட்டு அபியின் புறம் திரும்பியவன் அவளை முறைத்தான்.

 

“என்ன, பசிக்குதா? தீத்தி(ஊட்டி) விடவா?” என்றவள் தன் வாயில் வைக்கப் போன பிடி உணவை அவன் புறமாக நீட்டினாள்.

 

அவனோ இன்னும் அவளை முறைத்தான். அதைவிட அவளின் துணிவான செய்கைகள் மலைப்பைத் தந்தன. “நடந்துகொண்டு இருக்கிறது மாமின்ர அந்தியேட்டி. அந்த நினைப்புக் கொஞ்சமும் இல்லாம என்ன எல்லாம் செய்றீர்?” என்று அதட்டினான்.

 

“சும்மா சின்ன பிள்ளை மாதிரிக் கதைக்காதீங்கோ. அவா எனக்கும் மாமிதான். கடைசி நேரம் அவாக்கு ஆக ஏலாமப் போச்சு எண்டு உங்களுக்கும் தெரியும். உண்மையாச் சொல்லப்போனா இன்னும் இருந்து உத்தரிக்காம மாமி போனதும் நல்லதுதான். இனி மாமி இல்லை எண்டுறது எனக்கும் கவலைதான். ஆனா, அவாக்கு உண்மையான விடுதலை இது. இல்லையெண்டு சொல்லுங்க பாப்பம்.” சவால் போன்று அவள் கேட்டதில் உண்மை இருந்ததில் தொடர்ந்து வாதிட முடியாமல் போனது அவனுக்கு.

 

“அதுக்குக் காண்ணாலயே தின்னுவீரா?”

 

“இப்போதைக்கு அவ்வளவுதானே என்னால செய்யேலும்.” என்றாள் அவள் முணுமுணுப்பாக.

 

பிறகு என்ன செய்வாளாம்? வாயால் உண்பாளா என்று நினைத்தவனுக்குச் சிரிப்பு அடக்க முடியாமல் மலர்ந்துவிட, “பேசாமப் போடி!” என்றுவிட்டுப் போனான் அவன்.

 

அவளுக்கு வானத்தில் பறக்கும் உணர்வு. ஓடிப்போய் உணவுத் தட்டைக் கழுவி வைத்துவிட்டு, இன்னும் அங்கே சமையல் கட்டில் வேலையாக நின்ற ஷர்மினியை இறுக்கி அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

ஷர்மினி பதறிப்போனாள். “விசராடி உனக்கு!” ஈரக்கையால் கன்னத்தைத் துடைத்தபடி அதட்டினாள்.

 

“ஓ! அண்ணா தந்தா மட்டும்தான் வாங்குவீங்களோ!” என்றவள் பேச்சில் சிரிப்பும் கோபமுமாய்த் தலையிலடித்துக்கொண்டாள் ஷர்மினி.

 

“இப்ப கொஞ்ச நாளா இவள் சரியில்ல அம்மு. இவரிட்டச் சொல்லி அவசரமா ஒரு கலியாணத்தை முடிச்சாத்தான் சரி.” அவளிடம் பேசி ஆகாது என்று தெரிந்து அமிர்தாவிடம் சொன்னாள் ஷர்மினி.

 

“முதல் அந்த வேலையப் பார். நானும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சிங்கிளாவே சுத்துறது?” என்று அதற்கும் பதில் கொடுத்துவிட்டு வெளியே ஓடியவள், யார் மீதோ வேகமாய் மோதிக்கொண்டாள்.

 

“அம்மா!” என்று மார்பைப் பற்றிக்கொண்டு நிமிர, “சொறி சொறி அபி! தெரியாம…” என்று தடுமாறினான் மாதவன்.

 

இவன் எங்கே இங்கே என்று அதிர்ந்தாலும் தயாபரி அம்மா இறந்த அன்றும் இவனைப் பார்த்தது நினைவில் வந்து போயிற்று.

 

அவள் ஓடி வந்தது உண்மைதான். என்றாலும் இவன் எதிரில் வரவில்லை. அப்படி வந்திருக்க நிச்சயம் அவள் கவனித்திருப்பாள்.

 

எங்கேயோ நின்று அவளைக் கவனித்துவிட்டு வேண்டுமென்றே வந்து மோதியிருக்கிறான். தேகம் தீப்பற்றிக்கொண்டது போன்று எரிந்தது. மார்பிலும் வலி.

 

 

 

எரிச்சலுடன் நிமிர்ந்தவளின் பார்வையில் அவன் விழிகளில் தெரிந்த கள்ளத்தனமும் அவன் தன் மார்பைச் சின்ன சிரிப்போடு தடவி விடுவதும், “எனக்கே இந்த நோ நோகுது. அப்ப உமக்கு?” என்ற வார்த்தைகளும் அவளை வெறி கொள்ள வைத்தன.

 

அத்தனை நாள்களும் அவள் காத்து வந்த பொறுமை பறந்து போனது. “கேடுகெட்ட நாயே! என்ன தைரியமடா உனக்கு? வேணுமெண்டு செய்துபோட்டு சொறி சொல்லுறியா?” என்று, வந்த ஆவேசத்துக்கு அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

 

படார் என்று வீட்டுச் சுவரில் மோதினான் அவன். பின் மண்டை சுவரில் பட்டதில் உயிரே போயிற்று. அந்த வலி கொடுத்த ஆத்திரத்தில், “நீ என்ன பெரிய திரவியமா? தெரியாம நடந்துபோச்சு எண்டு சொல்லியும் துள்ளுறாய். என்னவோ உலகத்திலேயே இல்லாத பொம்பிளை மாதிரி. எல்லா பொம்பிளைகளிட்டயும் இருக்கிறதுதானே உன்னட்டையும் இருக்கு.” என்று அவள் முகத்தருகில் நெருங்கி வந்து சீறினான் அவன்.

error: Alert: Content selection is disabled!!