அத்தியாயம் 3
‘Absolutely, there is a connection between food and love. I always say, when there’s love in my heart or I’m feeling particularly good, the food comes out that much better. And so I think Valentine’s Day is a special day.’
Todd English
போட்டிக்கான படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்தது. நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பான்ரி நோக்கி ஓட்டமெடுத்தார்கள். அடுத்த சில நிமிடங்களில், அவரவருக்கான சமையல் மேடையில், தேவையான பொருட்கள் வந்தமரத் தொடங்கின. பொறுமையாக மூச்சு விட முடியவில்லை, மீண்டும் ஓட்டம் எடுத்தார்கள். தேவையான சமையல் உபகரணங்களை சேகரித்துக்கொண்டு, முதல் ஆளாக வந்த ஒலிவியா, நிமிடம் தாமதிக்கவில்லை; தாய் சொல்லிக்கொடுத்த டெஸர்ட் டிஷ் ஒன்றைத் தயாரிக்க ஆயத்தமானாள்.
“நீ செய்வதை விடவும் நம் மகள் செய்வது ருசியாக இருக்கிறதே!” என்று, அவள் தாயைச் சீண்டுவார், தகப்பன்.
வீட்டில் பலமுறை தயாரித்த பழக்கம் அவளுள் நிதானத்தையும் அமைதியையும் கொண்டு வந்திருந்தது.
முதல் வேலையாக ஓவனை வெப்பக் குளியல் எடுக்க விட்டாள். ஒரு ஸ்டெயின் அண்ட் ஸ்டீல் பாத்திரத்தைப் பளபளத்த ஸ்டவ்வில் வைத்து, தேவையான அளவு பட்டர் இட்டாள். அது, முன்னால் நிற்பவனைப் பார்த்து உருகும் அவள் மனம்போல் சத்தமின்றி உருகிக் கரைய ஆரம்பித்தது.
‘ஹே ஒலிவ்யா!’ மனத்தின் சிணுக்கமான அழைப்பில் உதடுகளில் முறுவல் வந்தமர்ந்தது. அந்த இதத்தோடே சீனி, தண்ணீர், துளி உப்பு இட்டு நன்றாகக் கலந்து இறக்கினாள்.
“ஆ! ஸ்ஸ்ஸ்ஸ்!” சூடு, விரல்களைச் சீண்டியிருந்தது.
“கவனம் ஒலிவியா!” முன்னால் நின்ற சக போட்டியாளன் லிங்டன் அக்கறையோடு சொன்னான்.
“லைட்டா தான்.” என்றபடி, பட்டர் கலவையில் அளவாக பிளைன் ஃபிளவர் இட்டு விஸ்க் பண்ணிக்கொண்டே, “நீ என்ன டிஷ் தயாரிக்கிறாய்?” பக்கத்துச் சமையல் பகுதியில் நின்ற லிசா கேட்டதற்குப் பதில் சொன்னாள்.
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருந்த லிசாவிடம், இளையவர்கள் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் கடன் வாங்க வேண்டும். முப்பது வருடங்களுக்கு மேலாக வீட்டில் சமைக்கிறார். பேரப்பிள்ளை கண்ட பெண்மணி. இருந்துமே, அவர் குரலில் இருந்த பதற்றம் ஒலிவியாவைச் சற்றே ஆட வைத்தது. அவர் பார்வையோடு இவள் விழிகளும் முன்னால் அண்ணாந்தது.
பென்னாம் பெரிய மணிக்கூடு, தன் டிக் டிக் சத்தத்தால் போட்டியாளர்களில் அதிர்வு ஏற்படுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.
அங்கு நின்ற பன்னிரண்டு பெண்களும் எட்டு ஆண்களும் பாரபட்சமின்றி நேரத்தைப் பார்ப்பதும் வேலை செய்வதுமாக நின்றார்கள்.
கேமராக்கள் எந்த விதத்திலும் தொல்லை செய்யவில்லை. இருந்தாலும் தலைக்கு மேலே பக்கவாட்டில் என்று, போட்டியாளர்களின் சிறு சிறு அசைவையும் படம் பிடித்தன. உதவியாளர்கள் சிலர் பாத்திரங்கள், சமையல் உபகரணங்கள் எடுத்துக்கொடுத்து உதவினார்கள். இதுவெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது எடிட்டிங்கில் போய்விடுமாம்.
மாக் கலவையை மீண்டும் ஸ்டவ்வில் வைத்து, ஒட்டாத பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அது, சட்டியில் ஒட்டாது திரண்டு வர, சந்தோசமாக இறக்கி ஒரு ஓரமாகக் குளிர வைத்து விட்டு பிஸ்தா பருப்பை எடுத்தாள், ஒலிவியா.
பிரித்த வேகத்தில் சிலவற்றை வாய்க்குள் அனுப்பிவிட்டே, கொஞ்சத்தைக் குறுணியாக நொருக்கி ஒரு பக்கமாக வைத்துவிட்டு, ‘பிஸ்டாஷ் பியூரே’ செய்யத்தொடங்கினாள்.
ஒரு சோஸ் பானுக்குள் பிஸ்தா பருப்பு, முட்டை, பிளைன் பிளவர், சீனி, கொஞ்சமாகப் பால் அனைத்தையும் சேர்த்துக் கலந்து விட்டு, ஸ்டவ்வில் வைத்து, கலவை தடித்து வரும் வரை கிளற வேண்டும். அடுத்த ஆறாவது நிமிடம் அதை இறக்கி விட்டாள்.
அப்படியே, அந்தக் கலவையை ஸ்டிக் பிளெண்டரில் (stick blender) குளிர்ந்த பட்டர் சேர்த்து நன்றாக அடித்து எடுக்க வேண்டும். அதே கையோடு, ஓடிப்போய்க் குளிரூட்டியில் வைத்து விட்டு வந்தாள்.
“உப்ஸ்” கொஞ்சம் என்றால் சறுக்கித் தடாலென்று விழுந்து விட்டிருப்பாள். நினைக்க முன் சர்ரென்று சறுக்கி விழுந்தாள், ஜெஸ்ஸி. யாரோ தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்கள்.
“ஆர் யு ஓகே?” ஓடிவந்து சுத்தம் செய்தான், ஒருவன்.
“நொட் ஓகே” முறைப்பும் முனகலுமாக எழுந்து ஓடினாள், ஜெஸ்ஸி. நேரம் அந்தளவுக்குக் கலைக்கிறதே!
“யா யா ஐம் ஓகே!” மாக்கலவையை ஆராய்ந்தாள், ஒலிவியா. ஆறி இருந்தது. முட்டைகளை ஒன்று ஒன்றாகச் சேர்த்து விஸ்க் பாவித்து அடித்தெடுத்தாள். கலவை மென்மையாகி வர, பைப்பிங் பேக்கில் இட்டு, பத்து சென்றி மீற்றர் நீளம் உள்ள நீள் சதுர பேஸ்ட்ரிகளாக பேக்கிங் பேப்பரில் இட்டாள். பேக் செய்துவிட்டால் சரி.
“அப்பாடா!” மறக்காது முட்டைக் குளியலிட்டு அவளது சமையல் மேடையின் கீழே இருந்த ஓவனில் வைத்துக்கொண்டிருக்கையில், “ஹல்லோ ஒலிவ்யா…” என்ற குரல் விசுக்கென்று நிமிர வைத்திட்டு.
அவளது சமையல் மேடைக்கு முன்னால் வந்து நின்றிருந்தான், வேர்த். நடுவர்கள் போட்டியாளர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் தான். இருந்தாலும் இவனுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது? உண்மையாகவே தடுமாறிவிட்டாள், அவள்.
இந்த நிகழ்ச்சியில் அவள் போட்டியாளர், அவன் நடுவர்களில் ஒருவன். முன்பின் அறிமுகம் இல்லையே! அமைதியாக, சிறு சிரிப்போடு, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, ‘எஸ் செஃப்… வேண்டாம் வேண்டாம் எஸ் வேர்த், தாங்க் யூ வேர்த்’ என்று, இயல்பாக இருக்க முடியுமா?
சீசன் நான்கில் போட்டியாளனாக வந்ததில் இருந்து இவன் பற்றி எத்தனை எத்தனை குறும்பான கதைகள், நண்பிகளோடு அரட்டைகள், பகிடி சேட்டைகள்! எல்லாம் கடந்து, அவளுக்கே அவளுக்கான கற்பனைகள் இல்லாவிட்டால் எப்படியாம்? அதுவெல்லாம் கிர்ரென்று நினைவில் வந்து போகவா வேண்டும்? அவன் முகத்தை நேராகப் பார்க்கவே தடுமாறிப் போனாள், ஒலிவியா.
ஐயோ ‘எக்லயர்’ செய்முறையை மறக்கச் செய்து விடுவானோ! எல்லாவற்றுக்கும் முதல், அவள் தடுமாற்றம் அவனுக்குத் தெரிந்துவிடக்கூடாது. அவமானம் ஒலிவியா பெரும் அவமானம்!
வினாடிகளில் என்னபாடுபடுத்திவிட்டான். இதுக்கெல்லாம் இந்த ஒலிவியா தடுமாறவே மாட்டாள்.
இதைத்தான் விழுந்தாலும் ஒட்டவில்லை என்பார்களோ… போகட்டும்.
நேராக அவனைப் பார்த்துச் சிக்கனமாக முறுவலித்தாள். உதடுகளுக்குப் போட்டியாக விழிகள் சதிவேலையில் இறங்கியிருந்தன.
ஐயோ! அவன் பார்வை கூர்மையாக அவளில் படிந்ததோ!
கணத்தில், அவள் சமையல் மேடைக்குப் பார்வையைத் தழைத்தவன், “என்ன டிஷ்?” வினவினான்.
பதில் சொல்ல வந்தால்தானே?
அவள் நொறுக்கி வைத்திருந்த பிஸ்தா பருப்புகள் அவன் வாய்க்குள் போயிருந்தன. அங்க அங்க ஒட்டிக்கொண்டு எஞ்சியிருந்த ‘பிஸ்தா பியூரே’ ஒரு தேக்கரண்டியில் அமர்ந்து அவன் வாய்க்குள் பொறுமையாக நுழைந்தது. கண்களை மூடிச் சுவைத்தான், வேர்த்.
அவனையே பார்க்காதே ஒலிவியா!
‘ஸ்ட்ராபெரி சோர் ஜெல்’ தயாரிக்க வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து, தன்னைத்தானே நிலைப்படுத்த முயன்றாள், அவள்.
அவள் மனம், புத்தியின் எச்சரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை.
“வே…செஃப்…” மெல்ல அழைத்து, அவன் பார்வையைத் தன் முகத்துக்குக் கொண்டு வந்தாள்.
“உங்களோடு ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” கேட்டே விட்டாள். பின்ன? இன்றைக்கே துர்க்காவுக்கு அனுப்ப வேண்டும். முக்கியமாக எனக்கு ப்ரேக் அப் என்று போட்டானே, அவனுக்கு.
ஐயோ! ஷோ முடியும் வரை எதைப் பற்றியும் மூச்சு விடக்கூடாதே! என் கவலை எனக்கு.
கேட்டவன் விழிகளில் ஆச்சரியம் மின்னிச் சட்டென்று நகைப்பைத் தத்தெடுத்திருந்தன. அவன் உதடுகள் கூட நகைப்பில் நெளிந்தன.
பதில் சொல்லாது பார்த்தான்.
அப்போதுதான் சுற்றத்தின் அமைதி உறைத்தது. நல்ல சத்தமாகத்தான் கேட்டுவிட்டாளோ? கமரா மேன் கூட சற்றுப் பெரிதாகவே சிரித்தார். “முதல் வந்த வேலையைப் பார்த்துவிட்டு…” எலிக்காது அந்த உதவி இயக்குனருக்கு.
“என்ன விசயம்?” கையிரண்டும் குவித்து விரல்களால் தாளமிட்டுக்கொண்டே விறுவிறுவென்று வந்தார், செஃப் ஆரோன் டேல்.
சொல்லவா வேண்டும்? டைரெக்டர் ஒப்பித்து விட்டான். ஒரு கணம் சுட்டார்… பார்வையால்தான். அவர் கண்டிப்பு உலகுக்கே தெரியும். இருந்தாலும்… சின்ன முறுவலோடு, “உங்களோடும் ப்ளீஸ்!” கேட்டு விட்டாளே!
விழிகள் சுருங்கி நகைப்பில் நனைந்திருக்க, ஆரோன் டேலைப் பார்த்தான், தோமஸ் வேர்த். பிறகு ஒலிவியாவிடம் திரும்பினான்.
“அதுக்கென்ன? முதல் சமையலைப் பாருங்க, பிறகு தாராளமாக எடுக்கலாம். பெஸ்ட் ஆஃப் லக்! பை த வே ‘பிஸ்டாஷ் பியூரே’ இஸ் டெலிசியஸ்!” மீண்டும் பிஸ்தா சிலதை வாய்க்குள் போட்டபடி அருகில் நின்ற லிசாவிடம் நகர்ந்துவிட்டான்.
மீண்டும் ஒரு கூர் பார்வையோ, எச்சரிக்கும் பார்வையோ ஏதோ ஒன்றோடு நகர்ந்தார், ஆரோன். பதிலே சொல்லவில்லை. அதெப்படிச் சொல்லாமல் போகலாம். சுறுசுறுவென்று எரிச்சல் வந்ததாலும் பச்!
“இப்ப அப்படி என்னதான் கேட்டுவிட்டேன்?” முணுமுணுத்தபடி வேலையைப் பார்த்த அவளுள், உயிர்த்தோழி துர்க்கா இந்தப் போட்டிக்குத் தெரிவாகி வரமுடியாமல் போனதில் முதல் முறையாக மகிழ்ச்சி ஊறிட்டு. இல்லையோ, அவளுக்குச் சரியான போட்டியாக இருந்திருப்பாளே, ‘சமைப்பதில் இல்லை, இவனை சைட் அடிப்பதில்.’ மெல்ல மெல்ல இரகசியப் பார்வையால் அவனைத் தொடர்ந்தபடி மிகுதி வேலைகளில் ஈடுபட்டாள், ஒலிவியா.
சிறு துண்டுகளாக்கிய புத்தம் புதிய ஸ்ட்ரோபெரி, சீனி இரண்டையும் சிறு சோஸ் பேனில் கொதிக்க விட்டு நன்றாக மசித்துவிட்டாள். அக்கலவையில், அகர் அகர் சேர்த்து இரு நிமிடங்கள் நன்றாகக் கலந்து இறக்கி, சிறிது சிட்ரிக் அசிட் சேர்த்துக் கலந்து, ஷலோ ட்ரே (shallow tray) ஒன்றில் ஊற்றிப் பரப்பி ஆறவிட்டாள். ஜெலி ரெடி!
விப்ட் கனாஷ் (Whipped Ganache) செய்வதற்குத் தேவையான பொருட்களைச் சிறு பாத்திரத்திலிட்டு மைக்கிரோவ் ஓவனில் முப்பது செக்கன் வைத்துக் கிளறி, கலந்து, குளிரூட்டியில் வைத்துவிட்டு வந்து, ஜெலியில் மூன்றில் ஒரு பங்கை சிறு சிறு சதுரத் துண்டுகளாக்கி எடுத்து வைத்தாள். மிகுதியை ஸ்டிக் பிளெண்டரில்(stick blender) இட்டு மென்மையான ஜெல் தயாரித்து, மெல்லிய மஸ்லின் துணியில் இட்டு வடித்து, பைப்பிங் பாக்கிலிட்டு வேறாக எடுத்து வைத்துவிட்டு நேரத்தைப் பார்த்தபடியே, குளிரூட்டியடிக்கு ஓடி, விப்ட் கனாஷ் மிக்ஸ் (Whipped Ganache mix) எடுத்து வந்தாள்.
“எலெக்ட்ரிக் மிக்சர்… எடுக்க இல்லையா?” அவள் ஓடிச்சென்று எடுக்க முதல் கொண்டுவந்து தந்திருந்தார், ஒரு பெண்மணி.
“தாங்க்யூ… தாங்க்யூ” வாங்கிக்கொண்டு ஓடி வந்தாள்.

