அத்தியாயம் 4
‘ There is no sincerer love than the love of food.’
George Bernard Shaw
அது ஒரு நான்கு மாடிக்கட்டிடம். பெரிய நீச்சல் குளத்தோடு உள்ள பசுமையான மலர்த்தோட்டத்தினுள் வெள்ளையும் நீலமுமாக உயர்ந்து நின்றது.
ஒவ்வொரு மாடியிலும் தனித்தனி குளியலறையோடு இணைந்த ஆறு படுக்கை அறைகள். குட்டியாக பால்கனியும். கீழ்த்தளத்தில், விசாலமான லிவிங் ஏரியா,பஃபே முறையிலான சாப்பாட்டுப் பகுதி, சுவரோடு ஒட்டியதாகப் பென்னாம் பெரிய புத்தக அலுமாரியில் விதம் விதமான சமையல் புத்தகங்கள் என்றிருந்தன.
அதோடு இணைந்ததாக உள்ள உயரமும் விசாலமுமான கட்டிடத்தின் நடுப்பகுதியில் எட்டுச் சமையல் மேடைப் பகுதிகள், ஒருபுறம் எல்லா விதமான சமையல் பொருட்களோடும் பான்ரி, மறுபுறம் நவீன சமையல் உபகரணங்கள், இயந்திரங்கள் என்று இருந்தது.
எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளதோ, அதே அளவுக்கு, தேவைகளைப் பார்த்து பார்த்து நிவர்த்தி செய்யும், நிகழ்ச்சிக் குழு!
இதுதான், இந்தப் போட்டியில் நிலைத்திருக்கும் வரை போட்டியாளர்கள் வாழ்விடம், சூழல்!
முதல் மாடியில் இருந்த தனக்கான அறைக்குள் உள்ளிட்ட வேகத்தில், அன்றைய நாளின் களைப்பைத் துரத்தியடிக்க, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், ஒலிவியா. எப்போதுமே கைப்பேசியோடுதான் நுழைவாள். அப்போதான் அவள் உடல், கழிவுகளை இலாவகமாக வெளியேற்றுமாம். ஹி ஹி. இப்போது, கையோடு கொண்டு வந்திருந்த சமையல் செய்முறைப் புத்தகம் சேர்ந்து நுழைந்தது.
‘இந்தப் போட்டியில் நிலைத்திருக்க வேண்டுமோ டைம், இன்க்ரிடியண்ட்ஸ், யுனிக் ரெசிப்பீஸ், பலன்ஸ்ட் ஃபிளேவர்ஸ் என்று, உங்கள் சிந்தனை சமையலும் அது சார்ந்ததாகவுமே இருக்கவேண்டும். பார்த்துப் பாராது கடுமையாக உழையுங்கள். பலன் நிச்சயம்!’ இப்படித்தான் விடை கொடுத்திருந்தார், செஃப் ஆரோன் டேல்.
“ஒருவருக்கே முதலிடம். கேடயமும் பணப்பரிசு இரண்டரை லட்சம் டொலர்களும். அந்த ஒருவர் நானே என்ற எண்ணம் எல்லோருள்ளும் இருக்க வேண்டும். அதுவே, உங்களை மிகவும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும்.” என்று, விடை கொடுத்திருந்தார், கிறிஸ்டினா ரிவர்.
ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும், அவர்களின் ஊக்க வார்த்தைகள் பெரு மருந்தாக இருந்தது. சக போட்டியாளர்கள் பற்றி உன்னிப்பாகக் கவனிக்கவும் அவர்களுக்கு ஈடாக, தம்மைத் தயார்ப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் இருந்தது.
ஏ 4 அளவு பெரிய கட்டுப் புத்தகம். சிவப்புப் பெரிய மட்டையைத் தட்டி முதல் ஒற்றையைப் பார்த்தாள், ஒலிவியா.
முதல் ரெசிபி, அவள் அம்மா லிசி கையால் எழுதப்பட்டிருந்தது, அவள் பிறக்கும் முன்பே! அரைவாசிக்கும் மேல் அவருடையது தான். செய்முறைகள் மட்டுமின்றி, நிறையவே சமையல் குறிப்புகள், கேக் பேஸ்ட்ரி கிரியேட்டிவிட்டி வரைபடங்கள் என்றெல்லாம் இருந்த அந்தப் புத்தகம், இவளுக்கு ஒரு பொக்கிசம்! பின்னால், சில நூறு செய்முறைகள் இவளுடையதும் தான்.
லிசி மிகச்சிறந்த ஒரு குக்! எல்லா வகையான உணவுகளும் அவர் கையில் அமிர்தமாக ருசிக்கும். அவருடைய கணவர் வழியில் நடத்தி வந்த பேஸ்ட்ரி ஷொப் இவர் கைக்கு வந்திருந்தது. ‘லிசி கேக் அண்ட் பேக்’ என்று பெயர் மாற்றம் பெற்று, இப்போது பெரிதாக வளர்ந்துள்ளது. ஆமடேலில் இருந்தாலும் ஒன்லைன் ஓடர்கள் எக்கச்சக்கமாக வரும். அதுவும் லிசியின் கிரியேட்டிவிட்டி …
“நான் எல்லாம் கிட்டவே நிற்க முடியாது!” பெருமையாக முணுமுணுத்தாள், ஒலிவியா. தாயைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. முக்கியமாக இன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள மனம் துறுதுறுத்தது.
பாடசாலைப் படிப்பு முடிந்த கையோடு பதினெட்டு வயதும் முடியவில்லை, மெல்பேர்ன் வாசம் தான். விடுமுறைகளுக்கு என்று நண்பர்களோடு வேறெங்கும் போகவில்லை என்றால் வீடு செல்வாள். ஆனாலும், சிறுவயதுத் தோழி துர்க்கா அவளோடுதான் தங்கியிருந்தாள்.
அதுமட்டுமின்றி, நினைத்த போது தாய், தகப்பன் வந்து போவார்கள். தினமும் சில நிமிடங்கள் என்றாலும் ஃபேஸ் டைம் மூலம் பார்த்துக் கதைத்தும் கொள்வார்களே! அப்படியிருந்தவளுக்கு, முதல் முதலாக, தன் சுற்றம் விட்டுத் துரமாகிய உணர்வு! அதுவும் தனிமையை வெகுவாகவே சுவாசித்தாள்.
பச்! எல்லோருக்குமே இது பொதுவானது. ‘தெரிஞ்சு தானே வந்தனீ?’ தன்னையே அதட்டிவிட்டு, செய்முறைகளில் விழிகளை ஓட்டினாள்.
ஒவ்வொரு பக்கமாகப் பிரட்டி, அடுத்தடுத்துச் செய்து பார்க்க வேண்டியவற்றைக் குறித்துவிட்டு, குளித்து வெளியே வந்தவளை அநியாயத்துக்குச் சீண்டியது, மெத்தென்ற படுக்கை!
“முடியவே முடியாது போ! உன்னில் சொகுசாகச் சாய்ந்தால் யார் சமையல் செய்து பார்ப்பது?” வார்த்தைகள் உதிர்ந்து முடியவில்லை, மெல்ல அமர்ந்துவிட்டாள்.
இங்குள்ள சமையல் பகுதி ஒன்றுக்கு, மூன்று பேர் என்றபடி பிரித்து அவர்களுக்கான நேரங்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கிழமையும் எலிமினேஷன் முடிந்த பிறகு புதுப்பித்த நேர அட்டவணை கொடுப்பார்கள். அந்த நேரங்களில் தான் செய்முறைகளைச் செய்து பார்க்க முடியும். நேரத்தைப் பார்த்தபடி, ‘ஒரு பத்து நிமிசம் ஓகே!’ ஏதோ அந்தப் படுக்கைக்குப் பாவம் பார்த்துச் சாயும் கணக்கில் சரிந்துவிட்டாள்.
கண்கள் மெல்ல மெல்லச் சொருகின. முழுக் கரண்டியையும் ஆக்கிரமித்து அமர்ந்துகொண்ட எக்லாயரை, அப்படியே பார்த்தபடி வாயருகில் கொண்டு சென்று, ஆவென்று, நிதானமாக உள்ளே அனுப்பி, கண்களை மூடி இரசித்து மென்று சாப்பிட்டவன் நினைவு அழையாமலேயே வந்தது. இதழ்களில் முறுவலோடு விழிகளை மூடினாள், ஒலிவியா.
பத்து நிமிடமும் சென்றிராது, ‘டொக் டொக்’ என்று மெல்லத் தட்டப்பட்ட கதவும், “ஒலிவ்வியா!” என்ற அழைப்பும் சோம்பலோடு எழுந்திருக்க வைத்தது.
“கமிங்!” மியா முன்னறை தான். மூன்று குழந்தைகளை வளர்ப்பதோ என்னவோ களைப்பு இன்றிச் சுழன்று திரிவாள். இதோ, தயாராகி வந்துவிட்டாள்.
“என்ன நீ தூங்கிக்கொண்டு இருந்தாயா? வா, டின்னர் முடிச்சிட்டு ஒரு மணித்தியாலம் சமையல் செய்துவிட்டு வந்து தூங்கலாம். விடிய நேரத்துக்கே போக வேண்டும் தானே!” உரிமையோடு கை பிடித்து நடத்திச் சென்றாள், மியா.
“சோ டயர்ட் மியா!” அவள் தோளில் தொங்கியபடி சென்றவளைப் பார்த்து எதிர்ப்பட்ட போட்டியாளர்கள் சிரித்தார்கள்.
அடுத்த பத்தாவது நிமிடம் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஏற்கனவே கதைத்திருந்தபடி சேர்ந்தே இரவுணவை ஆரம்பித்தாலும் சிலர், வேகமாகச் சாப்பிட்டுவிட்டுச் சமையல் செய்ய ஓடினார்கள்.
ஒலிவியா பொறுமையாக உண்டாள்.
“ஃபோன் இல்லாத வாழ்க்கை கூட நன்றாகத்தான் இருக்கிறது என்ன?” என்ற மியா, “என்றாலும் பிள்ளைகளோடு வன் மினிட் கதைப்பதற்குக் கிடைத்தால் என்று இருக்கு!” ஏக்கமாகச் சொன்னாள்.
முதல் முறையாக அவர்களை விட்டுப் பிரிந்து இருக்கிறாளாம். கலங்கிவிட்ட கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“என்ன நீ? டிவியில் உன்னைப் பார்த்து, தே ஃபீல் சோ ப்ரௌட் மியா.” ஆதரவாக தோளில் தட்டியபடி சொன்னாள், ஒலிவியா.
“ஐ க்நொவ்…” சின்னதாகச் சிரித்தாள், அவள்.
“என் கணவன் என்னைவிடவும் நன்றாகவே பிள்ளைகளைப் பராமரிப்பான். நான் இன்றைக்கு, இங்கே என் ட்ரீம்காக வந்து இருக்கிறேன் என்றால், அது அவனால் தான்.” விழிகள் மினுங்கப் பெருமையாகச் சிரித்தாள், மியா.
“என் அம்மா அப்பாவும் பக்கத்தில் தான் இருக்கிறார்கள். ஜோசப் வேலைக்குப் போகும் நேரம் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள்.” கண்களைத் துடைத்தபடி தொடர்ந்தாள்.
“பிறகென்ன? போட்டியில் கடைசிவரை போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறது மட்டும் தான் உன் வேலை சரியோ!” தோளோடு அணைத்துவிட்டு எழுந்தாள், ஒலிவியா.
மியா, அருமையாகச் சமையல் செய்பவள் என்றதை, இன்று அவள் தயாரித்திருந்த ‘ஹெபாச்சி(Hibachi) பார்பிக்கியூ பட்டர் ஃபிளை சிக்கன்’ சொல்லி இருந்தது. கிறிஸ்டினா கூட, “இவ்வளவு நாளும் எங்கே இருந்தாய்!” என்று, வியந்து பாராட்டியிருந்தார்.
“அட் ஹோம் வித் மை கிட்ஸ்!” கண்ணீரோடு சொல்லியிருந்தாள், மியா. சிறந்தவொரு செஃப் ஆக வேண்டும் என்பது தன் கனவு என்றும் சொல்லி இருந்தாள்.
இன்றைய நாள் பற்றி, ஒவ்வொருவரினதும் சமையல், அவர்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், திருத்தங்கள் என்று அலசி ஆராய்ந்து கதைத்தபடியே எழுந்து, கரம் கழுவி வந்தார்கள், இருவரும். அவர்களோடு சாம் வந்து சேர்ந்து கொண்டான்.

