மூவருமாக அங்கிருந்த சமையல் புத்தகங்களை ஆராய்ந்து தமக்குத் தேவையானதுகளை எடுத்துக்கொண்டார்கள். சிறிது நேரம் தோட்டத்தில் சுற்றிவிட்டு, தம் நேரம் வர, சமையல் செய்து பார்த்துவிட்டு அன்றைய நாளை முடித்து, இரவு வணக்கத்தோடு விடைபெற்று வந்து, அடுத்த அரை மணித்தியாலத்தில் அப்படியே கட்டிலில் குப்புற விழுந்த ஒலிவியா…மீண்டும் முழுக்கரண்டியில் சொகுசாகப் பயணித்த ‘எக்லாயரை’, அதை உள்வாங்கிய வாய்க்குச் சொந்தக்காரனை நினைத்தபடியே உறங்கிப் போனாள்.
அடுத்தடுத்த நாட்கள் தொடர் ஷூட்டிங். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மூச்சு விடக் கிடைத்தது. இப்படித்தான் படம் எடுப்பார்களா என்றளவுக்கு ஆயத்தங்கள், டேக்ஸ் என்று இருந்தாலும் சேலஞ்சுகள் இன்னதுதான் என்று முன்னரே அறிவிக்கப்படவில்லை. அவற்றைத் தயாரிக்கவெனக் கொடுக்கப்படும் நேரம் என்பதில் இம்மியும் தயை தாட்சண்யம் காட்டவில்லை. அதுவே, போட்டியாளர்களுள் பதற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.
‘ஸ்டெப் அவுட்’ சொன்ன பிறகு, பெரும்பாலும் இன்னொரு டேக் சொன்னார்கள்தான். ஆனாலும் சமைத்துப் பரிமாறியிருந்த உணவில் மாற்றம் செய்ய, சேர்க்க, குறைக்க கடைசிவரை அனுமதியில்லை. தட்டைத் துடைப்பது, கனேஷ் செய்வது போன்ற பாவனைகளுக்கே இடமிருந்தது.
ஓரளவுக்கு எல்லோருக்கும் நடைமுறை பிடிபட்டிருந்தது. அடுத்த ஞாயிறு தொடக்கம், ‘மாஸ்டர் கிளாஸ்’ ஆரம்பமாகும் என்றார்கள். நடுவர்கள் மட்டுமன்றி, நாட்டின் முன்னணி சமையற்கலை நிபுணர்கள் வந்து நுணுக்கங்கள், செய்முறைகள் என்று கற்றுத் தருவார்களாம்.
இப்படி, ஆறு நாட்கள் கடும் உழைப்பு! அதன் பின்னர் கிடைத்த முதல் ஞாயிற்றுக்கிழமையை வலு கலகலப்பாக எதிர்கொண்டார்கள். வாரம் முழுவதும் இரவில் சிறு சிறு சலசலப்புகள் தவிர்த்து, அமைதியாகக் கிடந்த நீச்சல் குளம், கலகலத்தது.
எங்களுக்கானதை நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்று சொல்லி, அனுமதி பெற்றும் இருந்தார்கள். அதன்படி, காலை மதிய இரவுணவுகள் யார் யார் தயாரிப்பது என்றும் பிரித்திருந்தார்கள்.
அறிமுகங்களில் அடுத்த கட்டமாக நட்பு மலரவும் தொடங்கி இருந்தது. போட்டியாளர்கள் என்றது கடந்து, ஒருவர் ஒருவருக்கு, சமையல் தொடர்பான நுணுக்கங்களை, அறிவைப் பரிமாறிக் கொண்டவர்கள் ஆரோக்கியமாகவே போட்டிக்குத் தயாரானார்கள்.
அன்றுதான் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்குப் பின்னாலிருந்த வீட்டில் நடுவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்றே தெரிந்தது. கை காட்டி நலம் விசாரித்துக்கொண்டார்கள்.
இப்படியே பத்து நாட்கள்… பத்து ஒளிபரப்புக்கான பகுதிகள் எடுத்திருந்த நிலையில் நான்கு பேர் எலிமினேட் ஆகியிருந்தார்கள்.
வைட் ஏப்ரன் அணிந்து செய்யும் பல்வகையான சவால்கள்; அதில், முதலிடம் வரும் நான்கு பேர் அந்த வார இம்மியூன் சேலஞ்சுக்காக சமையல் செய்து, ஒருவருக்கு அவ்வார வெளியேற்றத்திலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏனையோர், வார இறுதியில் பிரஷர் டெஸ்ட் ரவுண்ட் எதிர்கொண்டார்கள். அதிலிருந்து இறுதி நான்கு தெரிவாகி, வெளியேற்றத்துக்கான சவாலை எதிர்கொண்டார்கள்.
இப்படி, கிழமைக்கு ஒருவரோ சில சமயம் இருவரோ கூட வெளியேறினார்கள்.
அப்பப்போ ‘வேர்த்’தை சைட் அடித்தாலும் ஒலிவியாவின் மனம் போட்டியில் ஆழ்ந்துவிட்டது. தம் திறனை உச்சபட்சமாக நிரூபிக்க வேண்டும் என்ற போட்டியாளர்களின் கடும் உழைப்பு மற்றவர்களையும் தொற்றிக்கொள்ள, இத்தனை சீசன்களை விடவும் அருமையான சீசன் என்று நடுவர்கள் அடிக்கடி சொல்லும்படியாக அதன் தரம் இருந்தது.
அதுவே, போட்டியாளர்கள் மீது மேலதிக அழுத்தமும் கொடுத்திட்டு. சமையலே சுவாசமாக மாறிவிட்டார்கள். சிறு பாராட்டிலும் கண் கலங்கினார்கள்; குறைகளில் இறுகி நின்றார்கள்.
இப்படியிருக்கையில், முதல் முதல் வீட்டிலிருந்து மியாவுடன் கதைத்திருந்தார்கள். இந்த மாதத்துக்கு ஐந்தே ஐந்து நிமிடம் தான். நிகழ்ச்சி மற்றும் படப்பிடிப்புச் சம்பந்தமாக ஒரு வார்த்தை கதைக்கக் கூடாது என்ற கட்டளையோடு கதைக்க விட்டார்கள்.
கண்ணீரோடு பிள்ளைகளிடம் கதைத்த மியா, கடைசிச் செக்கன்களில் தான் கணவனோடு கதைத்தாளாம். எஞ்சியுள்ள பதினாறு பேரும் ஒருவர் மற்றவருக்குச் சளைத்தவர்கள் இல்லை என்றளவில் மிகவும் குறுகிய காலத்தில், சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகி விட்டீர்கள் என்று சொன்னதாகச் சொன்னாள், மியா. சந்தோசத்தைக் கேட்கவா வேண்டும். அதோடு, மற்றவர்களுக்கும் வீட்டினரோடு கதைக்கும் அடங்காத ஆசை!
அன்றே, அடுத்தடுத்து இன்னும் நான்கைந்து பேர்கள் கதைத்திருந்தார்கள்.
மறுநாள், ஒலிவியா வீட்டிலிருந்தும் அழைத்திருந்தார்கள்.
தகப்பன் தான் “ஹலோ!” சொன்னார். தம்பி தங்கை முதல் எபிசோட் டெலிகாஸ்ட் ஆகிற்று என்றார்கள்.
“என்ன ஜட்ஜர்ஸ் மாறி இருக்கிறார்கள்? அங்க உனக்கு எல்லாம் ஓகே தானே?” எடுத்ததும் கேட்டிருந்தார், தகப்பன்.
“கனவு அப்பா… கனவு போல இருந்தது. இல்லாவிட்டால் நானெல்லாம் எப்படி செஃப் ‘ஆரோன் டேல்’ல சந்திப்பது?” குதூகலித்தாள், ஒலிவியா.
“ஓம் ஓம், சின்னப்பிள்ளை போல் வாயைப் பிளந்துகொண்டு குந்தி இருந்ததைக் காட்டினார்களே!” அவள் சகோதரன் நக்கலாகச் சொல்லிச் சீண்டினான்.
“அக்கா நீ செலிபிரிட்டி ஆகிவிட்டாய்!” தங்கை ஆரவாரித்தாள்.
“டேக் கேயர் ஒலிவியா. எப்பவும் நீ உன் பெஸ்ட் குடு!” அன்போடு சொன்னார், தந்தை.
“sure அப்பா. நீங்க எல்லாரும் ப்ரௌட் ஆக ஃபீல் பண்ணுகிற அளவுக்குச் சமைப்பன் பாருங்க.” என்றவள், “அம்மா எங்க?” நேரத்தைப் பார்த்தபடி வினவினாள்.
“நான்கு நிமிடங்கள் முடியப் போகுது அம்மா, துர்க்கா…” அவள் பரபரக்க, “ஒலிவியா…” என்ற தாய் குரலில் துல்லியமாக வேறுபாடு தெரிந்தது.
‘அம்மா, சுகமா இருக்கிறீங்களா? என்ன குரலே சரியில்லை?”
“நான் நல்ல சுகம் மா. உனக்கு அங்க எல்லாம் ஓகேவா? இல்லாட்டி நீ வந்துவிடு!” இப்படிப் பட்டென்று சொல்லிவிட்டிருந்தார், லிசி.
“அம்மா…ஏன் நான்…நான் கடைசிவரை வராட்டி லிசிட மகள் இல்லையாக்கும்.” ஆரோன் டேல் தன்னைப் பாராட்டுவதைச் சொல்ல வேண்டும் என்று முயல்கையில் நேரம் முடியப்போவதாகச் சைகை செய்தார்கள்.
“அம்மா கோல் கட்டாகப் போகுது. துர்க்கா எங்க?”
“கேட்டுக்கொண்டுதான் நிற்கிறேன். தனியாக நன்றாக என்ஜோய் பண்ணுகிறாய் என்னடி? வாய் மட்டும் இல்லாமல் என்ன கண்ணெல்லாம் கதைக்குது? முதல் எபியிலேயே அப்பிடி என்ன கேட்டாய்? உன் கிச்சனில் நின்று நமுட்டுச் சிரிப்போடு விலகிச் சென்ற ‘வேர்த்’த பார்த்தேன்.”
துர்க்காவின் ஆர்ப்பரிப்பில் முகம் முழுதும் மலர, பதில் சொல்ல முதல் கோல் இறந்து விட்டிருந்தது.
“உப்ஸ்!”அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவளுள், முதல் நாள் நிகழ்வுகள் வலம் வந்து, அவளை, இதத்தோடு வைத்திருந்தது.

