அதில் உறுதியாக நின்று மறுத்தாள்.
ஜீவனும் கேட்பதாக இல்லை. “எப்பிடியோ செயினை வச்சுக் குடுக்கப் போறாய். அதுக்குப் பதிலா இதை எடு. அப்ப வட்டி கட்டுற பிரச்சினையும் உனக்கு இருக்காது. பிறகு காசு இருக்கிற காலத்தில எனக்குத் திருப்பித் தா.” அவள் எந்தளவில் ரோசக்காரி என்று அவனுக்குத் தெரியும் என்பதில் அவளுக்கு இசைவாகவே பேசினான் ஜீவன்.
இப்போது என்ன முடிவெடுப்பது என்று தெரியாது குழம்பி நின்றாள் யாழிசை. அவன் சொல்வது சரி போலவே இருந்தது.
அதைவிட செயினும் அவர்களது என்கையில் இந்தப் பணத்தை எடுத்தால் என்ன என்றும் பட்டதில், “கட்டாயம் நான் திருப்பித் தருவன். அதுவும் எப்ப உங்கட கலியாணத்துக்கு எண்டு நீங்க இலங்கைக்கு வாறீங்களோ அப்ப. அப்ப வாங்கோணும் சரியா?” என்று ஏற்றுக்கொண்டாள்.
*****
யாழிசை அனுராதபுரம் ரஜரட்டை பல்கலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தன. உண்மையில் வாழ்க்கை வண்ணமயமாகியிருந்தது என்றுதான் சொல்வாள்.
ஆரம்பம் ஊர் நினைவுகள், நடந்தவை, புது இடம், புதியதான பல்கலை வாழ்க்கை என்று கலவையான மனநிலையில் இருந்தாலும் இப்போது இந்தப் பல்கலை வாழ்க்கை அவளுக்கு மிக மிகப் பிடித்திருந்தது.
ஜீவனின் காசில் ஸ்கூட்டியை திருத்தி எடுத்து நளினியின் கையில் ஒப்படைத்துவிட்டு, அவ்வளவு காலமாகப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் ஏற்றி இறக்கியதில் உழைத்த பணத்தில் சேமித்து வைத்திருந்ததில் தனக்குத் தேவையான உடைகள், தேவையான பொருள்கள் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டாள்.
நேசனும் அவன் பங்குக்குக் கடைக்கு அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்தவைகளாக வாங்கிக் கொடுத்திருந்தான்.
மாதவியும் ஜீவனும் செலவுக்குப் பணம் தர முன் வந்தபோது ஒரேயடியாக நின்று மறுத்துவிட்டாள். அதில் மாதவிக்கு மிகுந்த மனவருத்தம். செல்லமாய் அவளிடம் கோபித்தும் கொண்டார்.
சிரித்துச் சமாளித்து அவரைச் சமாதானம் செய்திருந்தாள் யாழிசை. அவர் காட்டும் பாசத்துக்குக் கட்டுண்டுதான் நின்றாள் யாழிசை. ஆனால், அந்தப் பாசம் பாசமாக மட்டுமே இருக்கட்டும். அவள் அப்பாவைப் போல அந்தப் பாசத்தின் பெயரில் இனி அவளுக்கும் எதுவும் வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள் யாழிசை.
அவள் இங்கு வருகிற வரைக்கும் மாதவி அவர் வீட்டுக்கு வரவில்லை. அதில் அவளால் மாதவியிடம் அவர் தந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போயிற்று.
விடுமுறைக்கு வருகிறபோது கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால், இந்த மூன்று மாதத்தில் நடுவில் ஒரு முறைதான் ஊருக்குப் போய் வந்தாள்.
அப்போதும் மாதவி தேவகி வீட்டில்தான். இவளும் அங்கு இல்லாமல் அவர் தனியாக அந்த வீட்டில் சமாளித்துக்கொள்ள மாட்டார் என்று அங்கேயே இருந்துகொண்டாராம். அதையும் தாண்டிப் பிள்ளைகளும் பக்கத்தில் இல்லாமால், இவளும் இல்லாமல் மாதவிக்கும் அங்கு இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று அவர் பேச்சிலேயே புரிந்துகொண்டாள்.
பார்ப்போம், ஒரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும், ஜீவனின் பணமும் திருப்பிக் கொடுக்க இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டாள்.
எல்லாவற்றையும் விட அவளைக் கண்டாலே பாசத்தில் கனியும் மாதவியின் விழிகளைப் பார்த்து, ‘நீங்கள் தந்த நகைகள் எல்லாம் எனக்கு வேண்டாம்.’ என்று கொடுப்பது அவளுக்கு இலகுவான காரியமே இல்லை. அவரை நோகடிக்காமல் இதை எப்படிச் செய்வது என்கிற யோசனை அவளுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது.
அவ்வப்போது எல்லோருடனும் பேசிக்கொள்வாள். மாதவியோடும் அப்படியே. அப்படி அவரோடு பேசுகிற பொழுதுகளில் பழக்கமானவன்தான் துளசியின் மகன் மிதிலன்.
மூன்று வயதுதான் ஆகிறது. ஆனால், அவ்வளவு துடியாட்டம். மாதவி எத்தனையோ முறை அவளைக் காட்டி அத்தை என்று சொல்லிக்கொடுத்தும் அவர் அழைப்பது போலவே இசை என்றுதான் சொல்வான்.
யாழிசைக்கும் அந்த உறவுச் சொல்லை விடவும் அவன் சொல்லு ‘இச்சை’ தான் மிக மிகப் பிடிக்கும்.
ஆனால், அவனுக்கும் அதே இணைந்த புருவங்கள். முதல் முறை பார்த்தபோது இவளுக்குத் திக்கென்றுதான் இருந்தது.
ஆனால், அந்தக் குட்டிக் கண்ணனின் குறுகுறு கண்களும், நீண்டு வளர்ந்த இமைகளும், அதற்கு மேலே இணைந்து கிடக்கும் புருவங்களும் அத்தனை அழகாய் இருக்கும். பார்க்க பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் கவர்ந்திழுக்கும்.
அவளுக்குப் பயமூட்டுவது வளர்ந்தவனின் இணைந்த புருவங்கள் மட்டும்தான்.
அன்றொருநாள் மாதவியோடு வீடியோ கோலில் பேசிக்கொண்டிருந்தாள். ஓடி வந்து அவர் மடிக்குள் புகுந்துகொண்டு, முறுக்கினை கறுக்கு முறுக்கு என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான் மிதிலன்.
எண்ணை அப்பிய வாயும், அந்த வாய் வேக வேகமாய் முறுக்கை அரைத்த விதமும் சிரிப்பை மூட்ட, “மிதுக்குட்டி உங்கட இசைக்குத் தராம சாப்பிடுறீங்க என்ன?” என்று விளையாட்டுக்குக் கேட்டாள் இசை.
அவனும், “இசைக்கு வேணுமா?” என்று மழலையில் தன் கையில் இருந்ததைக் காட்டி, தலையையும் ஆட்டிக் கேட்டான்.
“வேணுமே. இசைக்குப் பசிக்குதே.” என்று வயிற்றை வருடிக் காட்டிப் பாவம்போல் சொன்னாள்.
அடுத்த கணமே, “வாங்க சாப்பிடுவம்.” என்று சொன்னவன் மாதவியின் கையில் இருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு குடு குடு என்று ஓடிப்போனான்.
“அச்சோ மிதுக்குட்டி, எங்க போறீங்க? உங்கட சின்ன அம்மம்மாட்ட போங்கோ.” சத்தமில்லாத அவளின் அலறலை அவன் கேட்பதாக இல்லை.
இதுவரையில் அந்த வீட்டில் யாருடனும் ஒரு வார்த்தை பேசியிராதவள் பயந்துபோனாள். துளசி மட்டும்தான் பார்த்தால் முறுவலித்து நலன் விசாரித்துவிட்டுப் போவாள்.
அவளிடம்தான் போகிறான் போலும் என்று அவள் நினைத்திருக்க, “மாமா, இசைக்கு முறுக்கு.” என்று அவன் கொண்டுபோய்க் கைப்பேசியை நீட்டியது சாட்சாத் தூயவனிடம்.
இவளுக்கு மூச்சே நின்றுபோயிற்று. அதுவும் அவன் இவளையே பார்க்க இவளுக்குச் சகலதும் உறைந்துவிட்ட நிலை. கைப்பேசியூடாகக் கூட அந்தப் புருவங்கள் அவள் அடிவயிற்றைக் கலக்கின.
இதில், சாப்பிட்டுக்கொண்டிருந்த முறுக்கை அவள் புறமாக நீட்டி, “ம்?” என்று வேறு அவன் கேட்டுவிடவும் பட்டென்று கைப்பேசியை அனைத்துவிட்டவளுக்குக் கொஞ்ச நேரம் எடுத்தது தன்னைச் சாதாரணமாக்கிக்கொள்வதற்கு.
அதன் பிறகு ஒரு வாரத்துக்கு அவள் மாதவியோடு வீடியோ கோலில் கதைக்கவேயில்லை. பிறகும் மிகுந்த கவனமாக இருப்பாள். மீண்டும் நாள்கள் விரைய ஆரம்பித்தன. முதல் செமஸ்டர் பரீட்சைகளுக்குத் தயாராக வேண்டியிருந்ததால் அதன் பிறகு அவள் வவுனியாவுக்குப் போகவில்லை.
அன்று, வகுப்புகள் முடிந்து தங்கியிருக்கும் ஹோஸ்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தவள் சற்றுத் தூரத்தில் தெரிந்தவர்களைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள்.
தூயவனின் வேன் ஒரு பக்கமாக நிற்க, கருணாகரன், தூயவன், குரு, இன்னும் இரண்டு ஆண்கள் என்று எல்லோரும் இவள் வரும் திசையையே பார்த்தபடி நின்றிருந்தனர்.

