அத்தியாயம் 6
“Food is memories.” – José Andrés
மறுநாள் பரபரப்பான விடியல்…
நடுநிசியில் உறங்கச் சென்றவர்களா இவர்கள் என்றவகையில், போட்டியாளர்கள் உற்சாகமும் பரபரப்புமாக வேளைக்கே புறப்பட்டுவிட்டார்கள். தன்னையுமறியாது, வேர்த் மீதான ‘கிரஷ்’ என்ற எல்லையை இலாவகமாகத் தாண்டிவிட்டு, வண்ண வண்ணக் கனவுகள் தொல்லை செய்ய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒலிவியா கூட எழுந்து தயாராகி விட்டாள்!
முதல் நாள் உறங்கும் வரை, அவள் பாடல் பற்றியே எல்லோரும் பேசினார்கள். என் திருமண நாளை நினைவில் கொண்டு வந்து விட்டாய் என்று சிலர் சிலாகித்தார்கள். என் காதலன்/காதலி அருகில் இல்லையே என்ற ஏக்கக் குரல்களும் வந்து போயிற்று.
“உங்கள் இருவர் குரலும் சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல், நீ இப்படிப் பாடுவாய் என்று எதிர்பார்க்கவே இல்லை ஒலிவியா!” என்று பாராட்டி, இவள் முகத்தைச் செம்மையுறச் செய்திருந்தார், செஃப் ஆரோன் டேல்.
“சமையல் போலவே, உன்னால் மிகவும் சிறப்பாகப் பாடவும் முடியும். தொடர்ந்து பாடு!” என்றிருந்தார், கிறிஸ்டினா.
வேர்த் ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை. ஆழமாக ஒரு பார்வை பார்த்து இவள் பார்வையைத் தவிப்போடு விலகச் செய்திருந்தான். அதுமட்டுமா? வந்தால் வா போனால் போ என்றளவில் நிமிர்வோடு நடந்து கொள்பவளை அவன் புறமே பார்க்க விடாதும் செய்திருந்தான்.
போட்டி நிகழ்வு ஆரம்பித்த நாள், ‘செஃப் தோமஸ் வேர்த்’ ஹோம் குக்கிங் நடுவர் என்று வரவேற்கப்பட்ட கணம் தொடங்கி, இரகசியமாகவும் நேராகவும் பார்வையாலும் வார்த்தையாடல்களாலும் பகிடி பகிடியாகச் சீண்டியவள், இன்றோ, பார்த்து பார்த்து அவனை, அவன் பார்வையைத் தவிர்த்தாள். அதுவே போட்டியில் கவனம் குவிக்கவும் சிறந்த வழியென்றது, அவள் மனம்.
இரு அணிகளுக்கும் எதிர் எதிராக நல்ல பரந்த கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை, சமையல் மேடைகள், தேவையான உபகரணங்கள், பொருட்கள் என்று எல்லா வசதிகளோடும் இருந்தன. பிறகு என்ன?
அப்படியெல்லாம் நினைத்துவிட்டு இலகுவாக இருக்க முடியவில்லை. முதல் முதல், இவ்வளவு ஆட்களுக்குச் சமைப்பது என்பது புதிய விடயம். இதில், பிரஷர் டெஸ்ட், எலிமினேஷன் என்பவற்றுக்கு முகம் கொடுக்காதிருக்க, வெற்றி பெற்றேயாக வேண்டும். அது மிகுந்த அழுத்தம் கொடுக்கவே செய்தது. இருந்தாலும் ஏற்கனவே வேலைகளைத் தம்முள் பகிர்ந்து, இதுதான் செய்ய வேண்டுமென்று வரையறுத்திருந்தது ஒவ்வொருவருக்குமே உரம் அளித்தது.
‘டைம் ஸ்டார்ட் நவ்’ என்ற, கிறிஸ்டினா குரலில், படப்பிடிப்பு ஆரம்பமாக, உற்சாகமாகவே ஓடினர். ஸ்டார்ட்டர் இருவர், மெயின் மெனு மூவர், டெஸர்ட் இருவர் என்று, ஒவ்வொரு அணியும் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்து, சமையலை ஆரம்பித்திருந்தார்கள்.
தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் மூன்று பகுதிகளுக்கும் சென்று வந்தாலும் குறித்த நேரத்தில் ‘ஸ்டார்ட்டர்’ பரிமாற வேண்டும் என்பதால், பிரதானமாக அவர்களோடு நின்று உதவினார்கள்.
சிவப்பு அணி, சிறந்த சமையல்காரர்களைக் கொண்டிருந்தாலும் தலைமை ஆட்டம் காண்கிறதோ! நடுவர்கள், தம்முள் கதைத்துக் கொண்டார்கள்.
ஓவர் கொன்ஃபிடன்ஸ் சிலவேளைகளில் கைவிட்டு விடலாம் என்றும் தான். அந்தளவுக்கு, தெளிவான திட்டமிடல், வழிநடத்தலும் உதவியும் நீல அணித் தலைமையிடம் இருந்து கிடைத்தது. அதுவே, அவ்வணிப் போட்டியாளர்களிடையே நிதானத்தையும் வேகத்தையும் கொண்டு வந்திருந்தது.
நடுவர்கள், இடையிடை இரு அணிப் பக்கமும் எட்டிப் பார்த்தார்கள். சிறு சிறு டிப்ஸ், பட்டும் படாமல் அறிவுறுத்தல்கள் என்று வழங்கி, தம் கவனிப்பு அவர்களில் இருக்கவே சுற்றினார்கள்.
போட்டியாளர்களின் ஒவ்வொரு சிறு சிறு அசைவையும் கமராக்கள் தம்முள் அடக்குவதில் மும்முரமாக இருந்தன.
ஒலிவியா, இன்னொரு போட்டியாளனோடு சேர்ந்து டெசர்ட் செய்வதை தம் பொறுப்பாக்கி இருந்தாள்.
இருவருமாக, அங்கிங்கு பாராமல் வலு நிதானமாகவே திட்டமிட்டு ஆயத்தங்களை ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் வேகமும் நிதானமும் செய் நேர்த்தியும் நடுவர்கள் மூவரையும் கவர்ந்திழுத்தது.
வேர்த், நடுவர் என்பதைக் கடந்து அவளை அடிக்கடி பார்வையால் தொட்டாலும் அவளருகில் மட்டும் செல்லவில்லை. முதல் நாள் தன் குரலோடு இணைந்த குரலுக்குரியவள் அவளா? பாடத் தெரியும், விருப்பம். அதுவும் என் விருப்பமான பாடல் வேறு… so சேர்ந்து பாடினேன். அவ்வளவும்தான் என்ற வகையில் அவள் நிற்பதாகப்பட்டது, அவனுக்கு.
அவன் உள்ளமோ, வேறு உணர்கிறதே! எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு சற்றே எட்ட நிற்பதுதான் என்ற முடிவில் மற்றைய போட்டியாளர்களை அணுகினான்.
“பக்லாவா!” அவள் காதோரமாக வந்து கேட்டார், கிறிஸ்டினா. தலையாட்டியபடி, அவர் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குப் பதிலளித்த ஒலிவியா, கை வேலையில் கவனமாக இருந்தாள்.
கொடுத்திருக்கிற நேரத்துக்குள், ‘பேஸ்ட்ரி சீட்’ தயாரித்து, பக்லாவா தொகையாகச் செய்வது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்று, ஆரோன் டேலும் கிறிஸ்டினாவும் கதைத்துக்கொண்டதைச் செவிமடுத்தாலும் சிறு புன்னகையோடு காரியத்தில் கண்ணாக இருந்தார்கள், இருவரும்.
சுலபம் இல்லை தான். ஆனால், அதுதானே சவால்!
“ஒலிவியா தந்த தைரியத்தில்தான் ஒப்புக் கொண்டேன்.” என்றான், டேவிட்.
செஃப் ஆரோன் டேல் புருவம் உச்சிக்குச் சென்று வந்தது. அந்த நேரம், பல வருடங்கள் பின்னோக்கிச் சென்ற அவர் நினைவில் ஒருத்தி வந்துவிட்டுப் போனாள். கூடவே, அவள் தயாரிக்கும் சுவைமிக்க பக்லாவாவும். கடினமும் கம்பீரமுமாக இருக்கிற அவர் முகம் கனிந்தது. அவள் கையால் ஒரு பக்லாவா சுவைக்கக் கிடைத்தால்! எண்ணியவருக்கு விழிகளோரம் சுருங்கிற்று. அவருக்கே உரிய வகையில் இரு கரங்களையும் கூட்டிக் கோர்த்து வாய் மீது வைத்துக் கொண்டார்.
“உனக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லை. வருங்காலத்தில் எந்தக் கட்டத்திலும் உன்னைச் சந்திக்கக் கூடாதென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” கண்ணீரோடு அவள் சொல்லிச் சென்றது வேறு நினைவில் வந்து போயிற்று.
சமையல் வேலை மிக மிக அழுத்தம் தருவது; அதுவும், பெரும் செல்வந்த வீட்டுப் பிள்ளையான இவர், வீட்டினருக்குச் சற்றும் விருப்பம் இல்லாமல் இத்தொழிலுக்குள் உள்ளிட்டிருந்தார். அதுவே, அன்று, இலண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்திருந்தது. தட்டுத் தடுமாறி கால் பதித்து வளரத் தொடங்கிய கால கட்டத்தில், அவருக்கு, இதத்தை அளவு கணக்கின்றி அள்ளித் தந்த உறவு, அவள்! அதுவே, அவள் விருப்பை மதித்து இன்று வரை அவளை எந்தவிதத்திலும் அணுகவில்லை, ஆரோன்.
ஆரோன் டேல் தன்னையே பார்த்து நிற்க, தவறாக எதையாவது செய்கிறோமோ என்று ஒருகணம் குழப்பம் கொண்டாள், ஒலிவியா. அவள் பார்வை டேவிட்டிடம் சென்று அதே வேகத்தில் கிறிஸ்டினா…அப்பால் தயக்கத்தோடு… சற்றே எட்ட நின்ற வேர்த் வரை சென்றுவிட்டு மீண்டும் ஆரோனிடம் வந்திட்டு.
சற்றே இப்போட்டியைவிட்டு வெளியே சென்று வந்த ஆரோன் சுதாகரித்திருந்தார்.
“நிறைய எதிர்பார்க்கிறேன்!” ஒலிவியா, டேவிட்டிடம் சொன்னபடி அவர் நகர, அதுவரை மனம் போடும் அதட்டலையும் மீறி ஒலிவியாவின் சிறு சிறு அசைவுகளையும் கவனித்து நின்ற வேர்த் விருப்பமேயின்றி பார்வையை நகர்த்தினான்.
அவன் பாட்டில் இருந்தானே! என்ன செய்திருக்கிறாள்? செவிகளோரம், முதல் நாள் மாலை தன் குரலோடு இசைந்து
Baby, I’m dancing in the dark, with you between my arms
Barefoot on the grass, while listening to our favorite song
I have faith in what I see, now I know I have met
An angel in person, and she looks perfect
எனப் பாடியவள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே!
‘நன்றாக இருக்கிறது உன் செயல்’ தன்னைத் தானே கடிந்து கொண்டான், வேர்த். பிரபல்ய போட்டியின் நடுவர் வேறு. அந்தக் கடமைக்கு, எடுத்த பொறுப்புக்குக் களங்கம் வர விடலாமா?
‘ஒலிவியா என்ற காந்தமருகில் செல்லாதிருப்பதே உனக்கு உசிதம்!’ மீண்டும் மீண்டும் மனத்துக்குக் கட்டளையிட்டவன் விழிகள், அவள் நோக்கிப் பாய, உதடுகள் முறுவலில் நெளிந்தன.
முன்னால் நடந்து சென்ற டேல், எதுவோ கேட்டபடி திரும்பியவர், “என்ன மேன்?” அவன் தோளில் ஒரு தட்டோடு கேட்க, தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டான், செஃப் வேர்த்.
வழமையாக, வேர்த்தின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து இரசிக்கும் ஒலிவியாவோ எதையுமே கண்டுகொள்ளவில்லை. அவள் மனத்திரையில், கறுப்பு நிறத்திலான சிறு பிளேட்டில் மேலே பிஸ்தா துருவலோடு ‘என்னைச் சுவையேன்’ என்றபடியிருந்த பக்லாவா! பக்லாவா மட்டுமே!
நான்காகப் பிரித்து மாவைக் குழைப்பது என்று தீர்மானித்து இருந்தார்கள். அதன்படி இருவரும் மா, சுடுதண்ணி, வினிகர், லெமன் ஜூஸ், ஒலிவ் ஒயில் என, உரிய அளவுகளில் சேர்த்து மாவை நன்றாகக் குழைத்துக்கொண்டிருந்தார்கள்.
“15 நிமிடங்கள் ரெஸ்ட் பண்ண விட வேண்டும்.” டேவிட்டுக்கு நினைவுறுத்தினாள், ஒலிவியா.
அடுத்து, டேவிட் மாக்கலவையைக் குழைக்க, ஒலிவியா பிஸ்த்தா பருப்பு, வனிலா பீன்ஸ் விதைகள், ருசிக்கேற்ப உப்புச் சேர்த்து ஃபூட் ப்ரோசர்சில் நருவல் புருவலாக அரைத்தெடுக்க ஆரம்பித்திருந்தாள். அதே கையோடு, வெண்ணையை உருகவும் விட்டிருந்தாள்.
அடுத்து, நொருக்கி எடுத்த பிஸ்தா பருப்புக் கலவையை நான்காகப் பிரித்து வைத்துவிட்டு, உருக்கிய வெண்ணெயை வடித்தெடுத்து நான்காகப் பிரித்து வைக்கவும் முதலில் குழைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக்கி, பாஸ்தா ரோலில் இட்டு மெலிய பேப்பராக எடுக்க ஆரம்பித்திருந்தான், டேவிட். தூவிய மாக்குளியலோடு அலையலையாக பேஸ்ட்ரி பேப்பர் குவியத் தொடங்கியது.
நான்கு பிரிவாக பேக் செய்யப் போகிறார்கள். அதற்கேற்ப எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்தார்கள்.
சீனி, தேன், ஆரஞ்சுத் தோல் மற்றும் சாறு, தனியாக எடுத்து வைத்திருந்த வனிலா பீன்ஸ் விதைகள் மற்றும் அளவான தண்ணீர் என்று பெரிய பாத்திரத்தில் இட்டுக் கொதிக்க வைத்தான், டேவிட்.

