அத்தியாயம் 12
அடுத்த நாள் அவள் அலுவலகம் சென்றபோது மாதவன் வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுக்கவுமில்லை. மனம் முதல் நாள் நினைவிலேயே சுகமாய் ஆழ்ந்து கிடந்தது.
அதுவும் அவள் கைப்பேசியை வாங்கி, அவனே அவனுக்கான தடையை அகற்றிவிட்டு, அவளைப் பார்த்து முறைத்ததை நினைக்கையில் இப்போதும் அவள் முகத்தில் முறுவல் அரும்பிற்று.
இத்தனை காலமாக அவள் பார்த்த உதயன் இவன்தானா என்று நினைக்குமளவில் ஒற்றை நாளில் மிகுந்த நெருக்கம் காட்டியிருந்தான்.
எவ்வளவுதான் நேற்றைய நினைவுகளை உதறி, வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் விடாமல் அவன் பார்த்தது, பேசியது, கோபப்பட்டது, அவளிடம் மயங்கியது என்று இன்றும் அவளை ஒரு கனவுலகத்தில் மிதக்க வைத்துக்கொண்டிருந்தான் உதயன்.
ஆனால், பகல் உணவு இடைவேளையின்போது, மாதவன் வைத்தியசாலையில் இருக்கிறானாம், அடிபட்டுக் காயமாம் என்று மற்றவர்கள் பேசிக்கொண்டது காதில் விழவும் திடுக்கிட்டுப் போனாள்.
உடனேயே தனியாக வந்து உதயனுக்கு அழைத்தாள்.
“மாதவனை என்ன செய்தனீங்க?” என்று வினவியவளின் குரலில் மெல்லிய கோபம்.
“என்ன செய்தா என்ன? இல்ல, அவன் உன்ர உடம்ப நோகடிச்சிருக்கிறான் எண்டு தெரிஞ்ச பிறகும் பேசாம இருக்கச் சொல்லுறியா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
இவனிடம் சொன்னது தவறோ என்று இருந்தது அவளுக்கு. “அவருக்கு மனுசி, பிள்ளைகள் இருக்கினம் உதயன். அதைவிட நான்தான் வேலைய விடப்போறனே. பிறகும் ஏன்?”
இப்போது அவனுக்குக் கோபம் வந்தது. “என்ன கதைக்கிறாய் அபி? இப்ப நாங்க பேசாம விட்டா அவன் வேற பிள்ளைகளிட்டயும் இப்பிடி நடக்கப் பாப்பான். அது பரவாயில்லையா உனக்கு?”
“என்ன செய்தனீங்க?” அவன் கேள்வியில் இருந்த நியாயத்தில் அவள்தான் தளைந்து வரவேண்டி இருந்தது.
“சொன்னதைச் செய்தனான். சயந்தனோட நேரா போய், அவன்ர வீட்டிலயே வச்சு ரெண்டு போட்டு உண்மைய வரவச்சனான்.”
“அவே போலீசுக்கு போனா?” அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது.
“போனா அப்ப பாப்பம்.”
“உதயன்…”
“நேற்றில இருந்துதான் முறையா ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சு இருக்கிறம். இதில இண்டைக்கு எவனோ ஒருத்தனைப் பற்றிக் கதைப்பியா நீ?” என்று பேச்சை மாற்றினான் அவன்.
அவளால் அது முடியவில்லை. “இத நீங்க செய்திருக்க வேண்டாம்தானே. அண்ணாக்குத் தெரிஞ்சா ஏன் சொல்லேல்ல எண்டு என்னட்டக் கோபப்படுவார் உதயன்.” திருமணத்தைப் பற்றிப் பேசவேண்டிய இந்த நேரத்தில் இதெல்லாம் ஏன் என்று இருந்தது அவளுக்கு.
“அந்தளவுக்கு என்னை நீ பொறுப்பில்லாதவன் எண்டு நினைச்சியா அபி? என்னையும் சயந்தனையும் தாண்டி இந்த விசயம் ஷர்மிக்குக் கூடப் போகாது. அதைவிட அவன் கதைச்சதை எல்லாம் ரெக்கோர்ட் பண்ணி வச்சிருக்கிறன். அவே போலீசுக்குப் போனாலும் பயப்பிடத் தேவை இல்ல.”
அப்போதுதான் அவள் பதற்றம் கொஞ்சம் அடங்கியது.
“உங்களுக்கு ஒண்டும் இல்லையே?”
“உடம்பெல்லாம் காயம்தான். நீ வந்து கவனிச்சா நல்லா இருக்கும். நேற்று மாதிரி.”
“உதயன்!” என்று அதட்டியவளின் முகம் சூடாயிற்று.
அவன் மனநிலையும் அப்படியே மாறிப்போனது. “இண்டைக்கும் உன்னக் கூட்டிக்கொண்டு போக வரவா?” என்றான் ஆர்வமாக.
“என்னத்துக்கு? அதான் நேற்றே எல்லாம் கதைச்சாச்சே.”
“இல்ல, இன்னும் உனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ஐடியா இருக்கா எண்டு தெரியோணும் தானே.” என்று சிரிக்கும் குரலில் அவன் சொன்னபோது, “நீங்க அறிஞ்சுகொண்டது தெரிஞ்சுகொண்டது எல்லாம் போதும், மரியாதையா அண்ணாவோட கதைங்க!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவளின் முகம் முறுவலில் மலர்ந்திருந்தது.
அவனுக்கும் நாள்களைக் கடத்த விருப்பமில்லை. நேற்றே சயந்தனோடு பேசிவிட்டான். அவனுக்கு மிகுந்த சந்தோசம். கொஞ்ச நேரம் அவளைச் சீண்டி விளையாடிய அந்த இதம் கலையாமல் அப்படியே அமர்ந்திருந்தவன் கைப்பேசியை எடுத்து, நேராகச் சீராளனுக்கு அழைத்து, தன் விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டான்.
சீராளன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் உதயனிடமிருந்து.
“அபி இஞ்ச பாத்த பெடியனுக்கு ஓம் எண்டு சொல்லிட்டாவே உதயன்.” நாசூக்காக மறுத்தான்.
“அது என்னில இருந்த கோவத்துலதான் ஓம் எண்டு சொன்னவா சீராளன். உண்மையா அதுக்கு சொறி. என்னிலதான் பிழை. அபியக் கோவிக்காதீங்கோ.” என்று அவன் தன் தங்கைக்காகப் பேசிய விதம் சீராளன் மனத்தைத் தொட்டது.
அதே நேரம் அன்னைக்கு இவர்கள் மீது ஏதும் சந்தேகமோ, அதுதான் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அவ்வளவு அழுத்தம் கொடுத்தாரோ என்று தோன்றிவிட, “இது… இந்த விசயம் எப்ப இருந்து உதயன்?” என்று கேட்கும்போதே அவன் குரல் ஒரு மாதிரி ஒலித்தது.
அது உதயனையும் ஒரு விதமாகத் தாக்க, “நீங்களும் உங்கட அம்மா மாதிரி அவசரப்பட்டு எதையும் பிழையா நினைக்காதீங்க சீராளன்.” என்று உடனேயே சொன்னான் உதயன்.
“விளங்கேல்ல.” சீராளனுக்கு அவன் அன்னையைக் குறையாகச் சொன்னது பிடிக்கவில்லை.
ஒரு கணம் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, “ஷர்மி இஞ்ச இருந்த காலத்தில இருந்தே உங்கட அம்மாக்கு என்னைப் பிடிக்காது சீராளன். பிடிக்காது எண்டுறதை விட நீங்களும் ஷர்மியும் விரும்பின மாதிரி எனக்கும் அபிக்கும் இடையில ஏதாவது நடந்திடுமோ எண்டு பேச்சாலேயே தள்ளித்தான் வைப்பா. இன்னும் சொல்லப்போனா ஒரு விதமா அவமானப்படுத்திற மாதிரித்தான் கதைப்பா. ஆனாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர அம்மாவா, அவான்ர பயத்தில இருக்கிற நியாயம் விளங்கி, நான் அபின்ர பக்கமே போறேல்ல.” என்றவன் பொய் சொல்லவில்லை என்று சீராளனுக்கே தெரியும். அதில் அமைதியாக அவன் சொல்வதைச் செவிமடுத்தான்.
அப்படியே அன்று அபி சொன்ன விமான நிலையத்தில் வைத்து அவன் பார்த்த பார்வையை, அதில் காயப்பட்டு இந்த ஐந்து வருடங்களும் திருமண வாழ்வில் புக முடியாமல் அவள் சிக்கித் தவித்ததை, தன்னை அறியாது தான் இயல்பாய்ப் பேசியதில் அவள் அதிலிருந்து வெளி வந்ததை எல்லாம் சொன்ன உதயன், “இப்ப மாமின்ர செத்த வீட்டில வச்சுத்தான் எங்களுக்க இயல்பான பழக்கம் வந்தது சீராளன். அதுக்கும் அவசரப்பட்டு எதையாவது பிழையா நினைச்சிடாதீங்க. அதுக்குப் பிறகு பாக்காம இருந்த இந்த மூண்டு மாதமும்தான் எங்கட மனம் என்ன எண்டு எங்களுக்கே விளங்கினது. அதைப் பற்றி நேற்றுத்தான் அபியோட கதைச்சனான். இண்டைக்கு உங்களுக்குச் சொல்லிட்டன்.” என்றவன் எந்த இடத்திலும் இதை அபியாக முன்னெடுத்ததை வாய் விடவே இல்லை.
“உண்மையா எனக்கு என்ன சொல்ல எண்டு தெரியேல்ல உதயன். நான் முதல் அபியோட கதைக்கோணும். அம்மாவோட கதைக்கோணும். அவாக்கு அபி அங்க இலங்கைல கட்டி வாழுறதில விருப்பமே இல்ல.” என்ற சீராளன், தன் முடிவு என்று எதையும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தான்.
உதயனுக்கு அதில் மெல்லிய ஏமாற்றம்தான். தேவகி அம்மா பிரச்சனை செய்வார் என்று அவனுக்கே தெரியும். ஆனால், சீராளன் மறைமுகமாகத் தன்னும் ஆதரவு தருவான் என்று எதிர்பார்த்தான்.
ஆனாலும் அவன் சோர்ந்துவிடவில்லை. அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என்று எண்ணிக்கொண்டான்.
விடயமறிந்த ஷர்மிக்கு அத்தனை சந்தோசம். தேவகி அம்மாவை எண்ணித்தான் பயந்தாள். தான் வீட்டினரோடு பேசி முடிக்கிற வரைக்கும் யாரிடமும் வாயைத் திறக்கக் கூடாது என்று சீராளன் சொல்லிவிட்டதால் அபியோடு கதைக்கும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
உதயனிடம் மட்டும் தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டாள். கூடவே, சீராளனுக்கு அபியின் சந்தோசம்தான் முக்கியம் என்றும், எதற்கும் தேவகி அம்மாவிடம் பேசிவிட்டு முடிவு சொல்வான் என்றும் அவள் சொன்னதில் உதயன் கொஞ்சம் சமாதானமாகினான்.
அன்று மாலையே அன்னையோடு இதைப் பற்றிப் பேசினான் சீராளன். அவருக்கு மீண்டும் ஒருமுறை தலையில் இடி விழுந்த நிலை. கூடவே ஒருவிதக் கோபமும் தலைக்கு ஏற, “தம்பி, இஞ்ச பார்! உன்ர விசயம் வேற. இது வேற. அந்தப் பெடியனுக்கு வயதான அம்மா அப்பா, அக்கா, அக்கான்ர பிள்ளைகள் எண்டு சாகிற வரைக்கும் பொறுப்பு இருக்கு. அவன் ஒருத்தன்தான் அந்த வீட்டுல முறையா உழைக்கிறவனும். அங்க போய் உன்ர தங்கச்சியக் குடுக்கேலாது.” என்று ஒரேயடியாக மறுத்தார் அவர்.
“பொறுப்பு, கடமை எண்டுறது எல்லாருக்கும் இருக்கிறது தானேம்மா. உதயன் நல்ல பெடியன். நல்ல உத்தியோகத்தில இருக்கிறார். வேணுமெண்டா முதலே நான் சொன்ன மாதிரி அவரை வெளிநாட்டுக்கு எடுத்து விடுறன். அப்ப உங்கட விருப்பமும் நடந்த மாதிரி இருக்கும்தானே.” என்று தங்கைக்காகத் தாயிடம் நல்ல விதமாகவே பேசினான் சீராளன்.
“இப்பிடி ஊர்ல இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் தூக்கி விடுறதுதான் உன்ர வேலையா தம்பி. இதுக்காகவே பசையான வீட்டுப் பிள்ளைகளைத் தேடி பிடிப்பாங்கள் போல. எங்கடையளுக்கும் அறிவு இல்லைதானே. எவனாவது கொஞ்சம் பல்லைக் காட்டினா போதும், உடன பின்னால போறது.” என்று இறப்பு வீட்டில் மகள் பார்வையால் அவனைத் தொடர்ந்ததையும் அவன் இவளைக் கண்ணால் சீண்டிய காட்சியையும் மனத்தில் வைத்துக் கொதித்தார் தேவகி.
இங்கே ஷர்மியின் முகம் கறுத்து, மாறிப்போனது என்றால் அங்கே அபியின் முகம் கோபத்தில் சிவந்தது.
வேகமாக அன்னையிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கி, “அண்ணா, அவரா என்னைப் பாக்கவும் இல்ல, என்னோட வந்து கதைக்கவும் இல்ல. இன்னும் சொல்லப்போனா சும்மா இருந்தவரத் தேவை இல்லாமக் கதைச்சுச் சீண்டினது அம்மாதான். அதே மாதிரி எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு எண்டு முதல் முதல் சொன்னதும் நான்தான். அவர் இந்த மூண்டு மாதமா ஓம் எண்டு சொல்லவே இல்ல. நேற்றுத்தான் ஓம் எண்டே சொன்னவர்.” என்றதும் அங்கே பக்கத்தில் நின்ற தேவகி மட்டுமல்ல சீராளனுமே கொஞ்சம் திகைத்துத்தான் போனான்.
இத்தனை நடந்தும் தான் குறையாக நினைக்கும்படிக்குத் தன் தங்கையைப் பற்றி உதயன் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்பது அவன் கருத்தில் பதிந்தது.
“எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. கட்டினா அவரைத்தான் கட்டுவன். இல்லையா இந்த அஞ்சு வருசம் மாதிரி மிச்ச வாழ்க்கையையும் வாழ்ந்திட்டுப் போறன் அண்ணா. அதால எனக்கு ஒரு குறையும் இல்லை.” என்று தைரியமாகவே சொல்லிவிட்டு, கைப்பேசியை மீண்டும் அன்னையிடம் பொத்திவிட்டுப் போனாள் அவள்.
இயல்பான விசாரணை நடந்திருந்தால் கூட அவளால் இத்தனை தைரியமாகப் பேசியிருக்க முடியாது. அன்னையின் பேச்சுத் தந்த கோபம், நிமிர்ந்து தன் மனத்தை உரைக்க வைத்திருந்தது. இனி என்னாகுமோ என்கிற படபடப்பு இருந்தாலுமே சொல்லவேண்டியதை அவர்களிடம் சொல்லிவிட்டதால் ஆசுவாசமாகவும் உணர்ந்தாள்.
இங்கே தேவகி அம்மா, அம்மன் வந்து இறங்கியதுபோல் ஆடித் தீர்த்தார்.
“பாத்தியா எப்பிடி வெருட்டிப்போட்டுப் போறாள் எண்டு. எல்லாம் உன்னால தம்பி. அண்டைக்கு நீ எப்பிடி உன்ர காரியம் சாதிச்சியோ அப்பிடியே உன்ர தங்கச்சியும் செய்றாள்.” என்று, அவர் அவர்களின் திருமணத்தையும் இழுத்து வைத்துக் கொட்டித் தீர்க்க, சட்டென்று எழுந்துபோன மனைவியையும் சமாளிக்க முடியாமல், அவரையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிப்போனான் சீராளன்.
விசயத்தைக் கொஞ்சம் ஆறப்போடுவோம் என்று எண்ணி, அப்போதைக்கு அவரைச் சமாதானம் செய்துவிட்டு, இரண்டு நாள்கள் கழிந்த பிறகு மீண்டும் எடுத்துக் கதைத்தான்.
“அம்மா, உங்களுக்கு உதயன் அங்க எண்டுறதுதானே பிடிக்கேல்ல. நான் அவரை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுறன். அப்ப ஓகேயா உங்களுக்கு?” என்றான் திரும்பவும்.
“வெளிநாட்டுக்கு வந்தாப்போல அவன்ர பொறுப்பு எல்லாம் இல்லாமப் போயிடுமா? முதல் அதுக்கு அந்தப் பெடியன் ஓம் எண்டு சொல்லுவார் எண்டு நினைக்கிறியாப்பு? கடைசி வந்தாலும் இல்லை.” என்று அடித்துச் சொன்னார் அவர்.
“பொறுப்பு எனக்கும்தான் அம்மா இருக்கு. அத நினைச்சு ஷர்மி வீட்டில கட்டித் தரமாட்டம் எண்டு சொல்லி இருந்தா அத நீங்க ஏற்று இருப்பீங்களா? அத மாதிரித்தான் உதயனுக்கும்.”
இப்படி, யாரோ ஒருவனுக்காகத் தன்னோடு வாதிடும் மகன் மீது சினம்தான் வந்தது அவருக்கு. “என்ன கதைக்கிறாய் தம்பி? நீ எப்ப வெளிநாட்டுக்குப் போனவன் சொல்லு? உன்ர கலியாணம் நடக்க முதலே இஞ்ச உன்ர தங்கச்சிக்கு நகைநட்டு, சொத்துப்பத்து எல்லாம் சேர்த்து வச்சிட்டாய். அந்தப் பெடியன் அப்பிடியா? தற்சமயம் பாங்கில பத்தாயிரம் காசு மிச்சமா இருக்குமா எண்டுறதே சந்தேகம். இதுல அவன் வெளிநாட்டுக்கு வந்து, விசா கிடைச்சு, வேலைக்குப் போய், கடமை முடிச்சு எண்டு எத்தின கிடக்கு?” என்று எரிந்துவிழுந்தார் அவர்.
“உதயனை வேண்டாம் எண்டு சொல்லோணும் எண்டுறதுக்காக எதையாவது சொல்லாதீங்க அம்மா. அபிக்கு உதயனைத்தான் பிடிச்சிருக்கு. வேண்டவே வேண்டாம் எண்டு சொல்லுற அளவுக்கு அவர் மோசமான ஆளும் இல்ல. இது ரெண்டும்தான் எல்லாத்தையும் விட எங்களுக்கு முக்கியம். இஞ்ச சுவிஸுக்கு வந்திட்டார் எண்டா அவரின்ர கடமை எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல.”
“அதுக்கு அந்தப் பெடியன் ஓம் எண்டு சொல்லோணுமே.” அப்போதும் அரை மனதாகவே சொன்னார் அவர்.
“அவரை ஓம் எண்டு சொல்ல வைக்க வேண்டியது என்ர பொறுப்பு. அப்பிடி அவர் வந்தா உங்களுக்கு ஓகேயா? அதச் சொல்லுங்கோ.”
“நான் இல்லை எண்டு சொன்னாப்போல மட்டும் இது நடக்காமையா இருக்கப் போகுது தம்பி. அம்மாவா போய்ட்டன். பெத்த மனசால அவனைக் கட்டுறதுக்குப் பதில் நீ வீட்டிலையே இரு எண்டு சொல்லேலாமா இருக்கு. அதால என்னவோ செய். ஆனா அந்தப் பெடியன் வெளிநாட்டுக்கு வர ஓம் எண்டு சொன்னா மட்டும்தான் நானும் இதுக்கு ஓம் படுவன் தம்பி. இல்லாட்டி இல்ல.” என்று முடிவாகச் சொன்னார் அவர்.
இந்தளவில் அவர் இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணிக்கொண்டு உதயனுக்கு அழைத்தான் சீராளன்.

