கடன் அன்பை முறிக்கும் 11 – 2

 

“சொத்து சுகமெல்லாம் வேண்டாம் எண்டுபோட்டு, மானம் மரியாதையப் பற்றி யோசிக்காம வீட்டை விட்டுப் போன பொம்பிளைக்குப் பாவம் பாத்து நாங்க பாதியத் தந்தா, அதப் பக்குவமா வச்சிருக்கோணும். அத விட்டுப்போட்டு தானம் குடுப்பீங்களா? பாடுபட்டு உழைச்சிருந்தாத்தானே அதின்ர அருமை தெரிய.” அவர் பேச பேச அவமானத்தில் மண்ணுக்குள் புதைந்துவிட மாட்டோமா என்றிருந்தது மாதவிக்கு.

 

“சும்மாவே இருக்கக் கிடச்ச சொத்துத்தானே. அதுதான் தூக்கிக் குடுத்திட்டீங்க போல. ஆர்ன்ர நிலத்தில ஆர் கால் வைக்கிறது? நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு கொதிக்குது? இந்தா என்ர மகளும்தானே வாழ வேண்டிய வயதில வாழாம ஒரு பிள்ளையோட தனியா நிக்கிறா. அவா எல்லாம் உங்கட கண்ணில தெரியவே இல்லையா? இல்ல, அவான்ர இந்தக் குழந்தைதான் கண்ணில தெரியேல்லையா?” என்றதும் அங்கிருந்த துளசிக்கு அழுகை வந்திருந்தது.

 

மகனோடு எழுந்து உள்ளே ஓடியிருந்தாள். தேவகி என்றுமே கணவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அவர் என்ன பேசினாலும் செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நினைப்பவர்.

 

இந்தப் பேச்சு வார்த்தை அன்று மட்டுமில்லை. அதன் பிறகும் தொடர்ந்து நடந்தது. அதுவும் தினமும் நடந்தது. கிட்டத்தட்ட மாதவிக்கு மூளைச் சலவை செய்தார் கருணாகரன். சுயமாகச் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளினார். அங்கிருந்து தப்பியோட முடியாதபடிக்கு மாட்டிக்கொண்டதுபோல் உணர்ந்தார் மாதவி.

 

அவர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு ஜீவனோடு அவரால் இதைபற்றிப் பேச முடியவில்லை. சுவர்ணாவுக்கு ஆரம்பத்திலேயே அதில் உடன்பாடு இல்லாததால் அவளுமே அவளின் பெரிய தகப்பன் சொல்வது சரி என்றுதான் சொன்னாள்.

 

அந்தப் பேச்சு வருகிற ஒவ்வொரு பொழுதிலும் அவருக்கு உரிமையே இல்லாத சொத்தை யாரோ ஒருத்திக்குக் கூச்சமே இல்லாமல் தூக்கிக் கொடுத்துவிட்டார் என்று அவரை உள்ளூர வெட்கிப்போக வைத்தார் கருணாகரன்.

 

“மார்க்கண்டேயர் எண்டுற பெயருக்கே ஒரு மரியாதை இருக்கு. நான் வெளில இருந்து வந்தவன். நீங்க அவரின்ர சொந்த ரத்தம். காதல் கத்தரிக்காய் எண்டு பெரிய அவமானத்தைத் தேடித் தந்தது காணாது எண்டு உயிரோட இல்லாத மனுசனைக் கேவலப்படுத்துறீங்க மாதவி.” என்றதும் மாதவியால் பொறுக்க முடியவில்லை.

 

“என்னைச் சுத்தி இருந்த எல்லாரும் உதறின நேரம் என்னை ஆதரிச்சது அந்தக் குடும்பம் அத்தான். பெத்த பிள்ளைக்கு மேல இசை எனக்குச் செய்திருக்கிறா. அவான்ர குடும்பமே எங்களுக்குச் செய்ததோட ஒப்பிடேக்க நான் குடுத்தது எல்லாம் ஒண்டுமே இல்ல அத்தான்.” என்று கண்ணீருடன் சொன்னார் மாதவி.

 

“அதுக்கு நான் பாடுபட்டுப் பெருக்கினதத் தூக்கி நீங்க குடுப்பீங்களா? என்ன உரிமைல தூக்கிக் குடுத்தீங்க. மார்க்கண்டேயருக்கு மகளாப் பிறந்ததத் தவிர என்ன உரிமை இருக்கு உங்களுக்கு அந்தச் சொத்தில?” என்றதும் கூசிப்போனார் மாதவி.

 

அவர் மனமே அவர் சொல்வதில் என்ன தவறு என்று கேட்டது.

 

“செருப்பு இல்லாம நடக்கேலாது எண்டுறதுக்காகச் செருப்பைத் தூக்கித் தலைல வைக்கேலாது மாதவி. அது எண்டைக்கும் காலுக்குக் கீழதான், வீட்டுக்கு வெளிலதான். விளங்கினதா?” என்றவரின் வார்த்தைகளில் மாதவிக்கு ஒரு முறை இதயமே நின்று போயிற்று.

 

அதுவும் யாழிசையை அவர் செருப்புக்கு ஒப்பிட்டதையும், அவள் வீட்டுக்கு வெளியில்தான் என்று சொன்னதையும் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 

பூப் போன்ற பிள்ளை அவள். அவளுக்குச் சொத்தைக் கொடுத்து அவளை அவர் இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்ணீர் வடித்தார்.

 

“இப்ப என்ன செய்றது எண்டு முடிவைச் சொல்லுங்கோ மாதவி. ஆரோ ஒரு கூட்டத்திட்ட சொத்தைக் குடுத்துப்போட்டு என்னால வேடிக்க பாக்கேலாது. அந்த நிலங்களைப் பாக்கிற நேரமெல்லாம் ரெத்தம் கொதிக்குது. அதத் திருப்பி வாங்கியே ஆகோணும்!” என்று அவர் உறுதியாகச் சொன்னபோது, “வாங்குங்க அத்தான். இசை எழுதித் தருவா.” என்றார் மாதவி கண்ணீருடன்.

 

அவரால் முடியவே இல்லை. இது பெரும் பாவம் என்று தெரியும். ஆனாலும் இசைக்கு அது வேண்டாம் என்கிற நிலைக்கு அவரே வந்திருந்தார்.

 

அப்படி அவரைக் கருணாகரன் கொண்டு வந்திருந்தார்.

 

“நல்லது.” என்றவர் அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் யாழிசையை அழைத்துவரப் புறப்பட்டபோது, “நேசனுக்குச் சொல்லுங்கோ அத்தான். நான் குடுக்கேக்கையே வேண்டாம் எண்டு சொன்ன பிள்ளை இசை. அவா சந்தோசமா வந்து எழுதித் தருவா.” என்றவரின் பேச்சைக் கருணாகரன் நம்பவில்லை.

 

காரியம் முடிகிற வரைக்கும் வெளியில் மூச்சுக்கூட விடக் கூடாதுஎன்று உறுமியிருந்தார்.

 

அவர் எல்லாம் சின்ன பாம்பாக இருந்தாலும் பெரிய கட்டையால் அடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதர். அவரிடமிருந்து தப்புகிற யோசனை ஒருவருக்கு வர முதலே மடக்கிப் பிடிக்க நினைப்பார். எப்படி மாதவியைத் திட்டம் போட்டுத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாரோ அப்படி!

 

தானே வற்புறுத்திக் கொடுத்ததைத் தானே இப்போது திருப்பிக் கேட்கிறோம் என்பதில் மிகவும் வெட்கமாய், கேவலமாய் உணர்ந்த மாதவியால் அதை யாழிசைக்கோ அவள் குடும்பத்துக்கோ சொல்லத் தைரியம் வரவில்லை.

 

நெஞ்சு முழுக்க வலியைச் சுமந்தபடி படுத்துக் கிடந்தவருக்குத்தான் அழைத்துக் கத்திவிட்டு வைத்திருந்தான் நேசன்.

 

“இசை… அம்மாச்சி… என்ர செல்லம்…” என்று அரற்றியபடி அவளுக்கு அழைத்தார்.

 

அங்கே கண்களைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கியபடி அமர்ந்திருந்தவள் அவர் அழைப்பு வரவும் ஒரு ரிங்கிலேயே சத்தத்தை நிறுத்தி வைத்தாள். எல்லோர் கவனமும் அவளிடம் குவிவது நிமிர்ந்து பாராமலேயே தெரிந்தது. ஆனாலும் அவள் நிமிரவில்லை.

 

‘Aththai’ என்று விழுந்துகொண்டிருந்ததைப் பார்க்க பார்க்க உள்ளம் இரு மடங்காகத் துடித்தது. இப்படி ஒரு நாளும் அவர் அழைப்பை அவள் ஏற்காமல் இருந்ததேயில்லை. எங்கிருந்தாலும் ஓடி வந்து எடுப்பாள். ஆனால் இன்று?

 

தனக்கு நடந்துகொண்டிருப்பது அப்பட்டமான அவமானம் என்று தெரிந்தாலும் அவர் பெயர் ஒன்றே அவளைக் கண்ணீர் சொரிய வைத்தது.

 

மீண்டுமொருமுறை அழைத்தார். அவள் எடுக்கவில்லை.

 

அடுத்த முறை தூயவனுக்கு அழைத்தான். “சொல்லுங்க சித்தி.” என்றவனின் பார்வை கண்ணாடி வழியே யாழிசையில் இருந்தது.

 

“இஞ்சதான். எங்களோடதான்.”

 

“…”

 

“ஓ! ஃபோன் சார்ஜ் போயிற்றுது போலச் சித்தி.”

 

“…”

 

“நான் இப்ப வேன் ஓடிக்கொண்டு இருக்கிறன். இன்னும் ஒரு மணித்தியாலத்தில அங்க வந்திடுவம். நேராவே கதைங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

 

அவர் என்ன கேட்டிருப்பார் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது. கூடவே, சற்று முன் அவளுக்கு வந்த அழைப்பு யாரிடமிருந்து என்றும் விளங்கிற்று.

 

“என்னம்மா, தந்ததத் திருப்பிக் கேட்டதும் கோவம் வருதோ?” என்றார் கருணாகரன் அவள் புறம் திரும்பி.

 

அவ்வளவு நேரமாக அழுதுகொண்டிருந்தோம் என்பதையும் மறந்து, வேகமாய் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவர் விழிகளில் தெரிந்த கோபத்தில் நடுங்கியது. பதில் சொல்ல நினைத்தாலும் முடியவில்லை. கண்ணாடி வழியே அவன் பார்வை வேறு உறுத்த, தன்னை மீறி அவனை நோக்கியவள் அந்தப் புருவங்களைக் கண்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.

 

இந்தப் பயணம் விரைவாக முடிந்து, அவர்கள் கேட்கும் கையெழுத்தை எல்லாம் போட்டுக் கொடுத்துவிட்டு எங்காவது ஓடிவிட்டால் போதும் என்கிற நிலைக்கு வந்திருந்தாள் யாழிசை.

 

error: Alert: Content selection is disabled!!