அத்தியாயம் 14
அதுவரையில் ஒரு அறையில்தான் உதயன் கொழும்பில் தங்கி இருந்தான். சீராளனுக்கு இனியும் அப்படித் தங்க வைப்பதில் பெரிய விருப்பமில்லை. என்னவோ சகல வசதிகளுடனும் வாழ்ந்த தங்கையைக் கொண்டுவந்து, ஏதோ ஒரு புறாக் கூண்டுக்குள் அடைப்பது போலொரு உணர்வு. பிறகு எதற்கு அவன் அண்ணா என்று இருக்கிறான்?
“வீடேதும் பாக்கேல்லையா உதயன்?” சும்மா கேட்பதுபோல் விசாரித்தான்.
“இப்போதைக்கு எங்க ரெண்டு பேருக்கும் இந்த அறை காணும் சீராளன். இப்ப வீடு எடுத்து, எனக்குப் பயணம் சரி வந்ததும் அத ஒதுக்கிக் குடுத்து எண்டு என்னத்துக்கு ரெண்டு வேலை?” இந்த ஒற்றை அறை அவர்கள் இருவருக்கும் தரப்போகிற நெருக்கத்தை விசாலமான ஒரு வீடு தரும் என்கிற நம்பிக்கை இல்லாததால் சொன்னான் உதயன்.
“இல்ல, உங்களுக்கு நேரமில்லாட்டி சொல்லுங்க, முந்தி நான் ஷர்மிய விட்டுட்டுப் போகேக்க உதவி செய்த அந்த அக்கா இப்பவும் கொழும்பிலதான் இருக்கிறா. கேட்டா உடனேயே வீடு பாத்துத் தருவா. நான் சொல்லவா?” செலவை எண்ணி அவன் இந்தச் சின்ன அறையிலேயே இருப்போம் என்று நினைக்கிறானோ என்று எண்ணிய சீராளன் மெல்ல வினவினான்.
உதயனுக்கு முகம் மாறப் பாத்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “இப்போதைக்கு எங்களுக்கு இதே போதும் சீராளன். வீடு தேவை எண்டு வந்தா கேக்கிறன்.” என்று முடித்துக்கொண்டான்.
ஆண்கள் இருவரும் வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகக் கதைத்துக்கொள்வது போலிருந்தாலும் சத்தமில்லாமல் மோதிக்கொள்வதைக் கண்டு பெண்கள் இருவரும் ஒருவிதக் கலக்கத்துடனேயே நின்றிருந்தனர்.
தவறான புரிதல்களால் பெரும் பிளவு ஒன்று வந்துவிடுமோ என்று மிகவுமே பயந்தனர்.
“நீ சமாளிப்பியா?” உதயனிடம் பேசிப் பலன் இல்லை என்று கண்ட சீராளன், அபிராமியிடம் வினவினான்.
“சமாளிக்கிறதுக்கு என்ன அண்ணா. ஒரு அறை எண்டாலும் தனி பாத்ரூம் இருக்கு. சமைக்க இடம் இருக்கு. போதும் எங்களுக்கு. எனக்கு உண்மையாவே இந்த ரூம் பிடிச்சிருக்கு.” என்று மலர்வாகவே சொன்னாள் அபிராமி.
அப்போதும் அவன் முகம் பெரிதாகத் தெளியவில்லை. அன்றே அவர்கள் பயணம் புறப்பட வேண்டி வேறு இருந்தது. தங்கை சமாளித்துக்கொள்வாளா, உதயனோடு வாழ்ந்துவிடுவாளா, உதயன் வறட்டுப் பிடிவாதம் பிடித்து அவளை அழ வைத்துவிடுவானோ என்றெல்லாம் எண்ணித் தனக்குள் கலங்கினான்.
அபிராமியுடன் தனியாகப் பேசக் கிடைத்தபோது, “ஏதும் உனக்குப் பிடிக்காதது நடந்தாலோ, உதயன் வித்தியாசமாக நடந்தாலோ மறைக்காமச் சொல்லோணும் அபி. இது நானாத் தேடின வாழ்க்கை, வெளில சொல்லக் கூடாது எண்டெல்லாம் நினைக்கிறேல்ல.” என்று சொன்னான்.
“நீங்க பயப்பிடுற அளவுக்கெல்லாம் ஒண்டும் நடக்காது அண்ணா. அவர் உண்மையாவே நல்லவர்.” என்று கணவனுக்காகப் பரிந்து வந்தாள் அபிராமி.
விமான நிலையத்தில் வைத்து, “இது இலங்கைக் காசு அபி. இத அங்க கொண்டுபோய் நான் என்ன செய்யப் போறன்? நீயே வச்சிரு.” என்று பெரும் தொகை ஒன்றினைத் தங்கையின் கையில் பொத்தினான் சீராளன்.
“சந்தோசமா இருங்கோ உதயன். என்ன எண்டாலும் அபின்ர அண்ணாவா என்னை நினைக்காமக் கதைங்கோ.” என்று அவனையும் அணைத்து விடைபெற்றான்.
சரி என்பதுபோல் சம்பிரதாயத்துக்குத் தலையசைத்த உதயன், தனக்குள் இறுகிப்போய் நின்றான்.
புறப்பட முதல், “அவர் ஒரு அண்ணாவா நடக்கிறார் உதயன். நீ கோவப்படாத.” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் ஷர்மினி.
விமானம் புறப்பட்ட பிறகும் சீராளனின் முகத்தில் மிகுந்த யோசனைதான்.
அதைக் கவனித்துவிட்டு, “நீங்க பயப்பிடுற அளவுக்கெல்லாம் உதயன் இல்லை சீராளன். கொஞ்சம் சுயமரியாதை பாப்பான். அது எல்லாருக்கும் உள்ளதுதானே. அதைவிட அவனும் அபியும் நல்லா வாழுற அளவுக்கு அவனுக்கு நல்ல சம்பளமும்தான். அவன் சொன்ன மாதிரி இனி அபி அவன்ர மனுசி. அவன் பாத்துக்கொள்ளுவான்.” என்று எடுத்துச் சொன்னாள் ஷர்மினி.
அவனும் தலையாட்டிக் கேட்டுக்கொள்ள, “அதோட அபியும் என்னை மாதிரி மனுசன் என்ன செய்தாலும் அடங்கி, சமாளிச்சுப் போற ரகம் இல்ல.” என்றதும் திரும்பி அவளை முறைக்கப் போனவன், அவள் கண்களில் இருந்த சிரிப்பைக் கவனித்துவிட்டு, “அந்தளவுக்கு நல்லவளா நீ?” என்றான் வேண்டுமென்றே.
“இல்லையா பின்ன, முருங்கை மரத்தில ஏறி நிண்ட உங்களைத் தரையிறக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.” அபி மாதவன் பிரச்சனையில் கோபம் கொண்டு, முகம் திருப்பி நின்றவனைச் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகியிருந்தது அவளுக்கு. அதை நினைவில் வைத்துச் சொன்னாள்.
“உன்ர மனுசன் கொஞ்சம் முன் கோபி எண்டு உனக்குத் தெரியும்தானே.”
“அதே மாதிரி அவருக்கு நான் எண்டால் உயிர் எண்டும் தெரியும்.” என்று அவள் சொன்னபோது, அன்று அவள் ஊஞ்சல் ஆடியபோது பார்த்த நினைவு சீராளனுக்கு வந்தது.
அதன் பிறகு அவள் வேண்டுமே வேண்டும் என்று அவன் பட்ட பாடுகளும் அவனுக்காக அவள் பட்ட சிரமங்களும் நிறைய நிறைய. அத்தனையையும் தாண்டி அவர்கள் இன்று நிறைவாக வாழப் பெரும் காரணமாக அமைந்திருப்பது ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு. அந்த அன்பின் பரிசாக அவர்களின் மகன் அவள் மடியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அந்த எண்ணம் தந்த நெகிழ்வில் அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் சீராளன்.
இதே போன்றதொரு வாழ்க்கை தங்கைக்கும் அமைந்தால் அவனுக்குப் போதும்.
*****
இங்கே உதயனின் மனத்தில் காரணமில்லாச் சஞ்சலங்களும் பாரமும் நிறைந்து கிடந்தன. ஆசைப்பட்டவள் கை சேர்ந்துவிட்டாள் என்று மகிழ முடியவில்லை. தேவகியின் பேச்சு, இந்த அறை போதுமா என்று மேலோட்டமாகக் கேட்ட சீராளன் மறைமுகமாகச் சொல்ல வந்தது, அபியின் கையில் அவன் பொத்திய பணம் என்று நிம்மதியில்லாமல் உழன்றுகொண்டிருந்தான்.
இரவு உணவைக் கடையில் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். அதை முடித்துக்கொண்டு அமைதியாகவே இருவரும் கட்டிலில் சரிந்துகொண்டனர்.
அபி திரும்பிக் கணவனைப் பார்த்தாள். ஒரு கை நெற்றியின் மீது கிடக்க, கண்களை மூடிப் படுத்திருந்தவன் உறங்கவில்லை என்று அவளுக்கே தெரியும். அவன் தனக்குள் உழல்வதும் தெரியும். தெரிந்துகொண்டே அப்படியே விடமுடியவில்லை.
“உதயன்!” என்று மெல்ல அழைத்தாள்.
அவன் அசைவில்லாமல் கிடக்கவும் அவனை நெருங்கி, அவன் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினாள்.
அவன் நெற்றியில் இருந்த கையை எடுத்துவிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான்.
“என்ன?” இதமாய் வினவினாள்.
“இதுக்குத்தான் அபி நான் அவ்வளவு யோசிச்சனான். ஆனா இப்ப நான் பயந்தது சரிதான் எண்டுற மாதிரி ஆளாளுக்கு எனக்கு ஒண்டுமே தெரியாது, என்னட்ட ஒண்டுமே இல்லை எண்டுற மாதிரி நடக்கிறது குத்துது. இந்தக் கலியாணம் தேவையா எண்டு நினைக்க வச்சிட்டினம்.” என்று அவன் சொன்னதும் சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள், திரும்பிப் பழைய மாதிரிப் படுத்துக்கொண்டாள்.
“அபி!” இப்போது அவளைப் பார்த்து அவன் அழைத்தான்.
அவள் சத்தமில்லாமல் இருக்க, அவன் நெருங்கி வந்தான். அவளைத் தன் புறம் திருப்பி, “என்னைப் பார் அபி.” என்றான்.
அவளும் எதுவும் சொல்லாது அவனைப் பார்த்தாள்.
“உன்னக் காயப்படுத்த அதச் சொல்லேல்ல. இப்ப இந்த நிமிசம் நான் மனம் விட்டுக் கதைக்க எனக்கு இருக்கிற ஒரே ஆள் நீதான். நீ என்ர மனுசி, உனக்கு என்னை விளங்கும் எண்டு நம்பிக் கதைக்கிறன். அத நீ பிழையா எடுக்காத ப்ளீஸ்.” என்றதும் அவள் சமாதானமாகினாள்.
“சரி விடுங்க, நான் ஒண்டும் நினைக்கேல்ல. நீங்களும் எதையும் யோசிக்காம நித்திரையைக் கொள்ளுங்க.” என்றாள் ஆறுதலாக.
“இல்ல அபி, என்னால நிம்மதியா இருக்கேலாம இருக்கு. இப்பிடி எல்லா விசயத்துக்கையும் மூக்கை நுழச்சு எங்கட வாழ்க்கையை நரகமாக்கிப் போடுவினமோ எண்டு நினைக்கவே பயமா இருக்கு.” என்று அவன் சொல்லவும் தன் தாய், தமையனின் செய்கைகளால் மிகவும் காயப்பட்டிருக்கிறான் என்று விளங்கிற்று.
இதமாக அவன் கன்னம் பற்றி, “இப்பிடி நிறைய யோசிக்காதீங்கோ உதயன். அண்ணா பயணம் போறார். அதாலதான் நானும் ஒண்டும் சொல்லாம அவர் தந்த காச வாங்கினனான். ஆனா, ஒரு ரூபா குறையாம அம்மாட்டக் கொண்டுபோய்க் குடுத்திடுவன். அப்ப அண்ணாக்கும் தானா விளங்கும். அதே மாதிரி நீங்க பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்காது. நாங்க சந்தோசமா வாழுவம். பிரச்சினை எப்பிடி, எந்தப் பக்கத்தால, ஏன் வருது எண்டு தெரியாமையே வரும். அதுதானே வாழ்க்கை. நானும் நீங்களும் ஒருத்தரை ஒருத்தர் விளங்கி, விட்டுக்குடுத்து நடந்தா எல்லாத்தையும் சமாளிக்கலாம். நான் இருக்கிறன். நீங்க கவலைப்படாதீங்க. எனக்கு எல்லாரையும் விட நீங்களும் உங்கட மரியாதையும் முக்கியம். அந்தளவுக்கு விட்டுடுட மாட்டன்.” என்று சொன்னாள் அவள்.
அவளை ஒருமுறை விழியாகற்றாமல் பார்த்தவன் அப்படியே அவளை அள்ளி எடுத்திருந்தான்.
தன் மன உணர்வுகளை வார்த்தைகளால் அன்றி முத்தங்களால் அவன் பகிர ஆரம்பிக்க, “உதயன்!” என்று சிணுங்கியவளின் சிணுங்கல்கள் எல்லாம் அவர்களின் அழகான தாம்பத்தியத்துக்கு இசையாகிப் போயின.
பெரும் பிரிவொன்று அவர்களை நெருங்கக் காத்திருந்தது. அதனால் என்ன? இணைந்துகிடக்கும் இதயங்களும், இரண்டரக் கலந்து கிடக்கும் இரு உள்ளங்களும் எல்லாவற்றையும் சேர்ந்தே கடந்துவிடாதா என்ன?
தன் எண்ணங்கள் எங்கும் நிறைந்து கிடக்கிறவளை அன்று மட்டுமல்லாமல் அடுத்து வந்த நாள்களிலும் கொண்டாடித் தீர்த்தான் உதயன்.
முற்றும்.

