அத்தியாயம் 13
மாதவியின் வீட்டுக்கு வந்திருந்தாள் யாழிசை. அழக் கூடாது, இனி எல்லாம் முடிந்து போயிற்று, அத்தனையிலும் இருந்தும் வெளியே வா என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்றாலும் முடியாமல் உள்ளே உள்ளம் அழுதுகொண்டே இருந்தது.
அவளின் சொந்த வீட்டைக் காட்டிலும் அதிகமான நினைவுகள் கொட்டிக் கிடப்பது இந்த வீட்டில்தான். ஓடி விளையாடி மகிழ்ந்த இந்த வீட்டுக்குத் தான் ஒரு நாள் அந்நியமாவோம் என்று அவள் கனவிலும் எண்ணியதில்லை.
நெஞ்சில் நேசத்தை விதைத்துவிட்டு விதைத்த வேகத்திலேயே ஜீவன் அழித்தபோது வலித்ததை விடவும் இப்போது அதிகமாக வலித்தது.
விலகுவது என்று முடிவான பிறகு மொத்தமாக விலகிவிடலாம் என்று நேசன் சொன்னதின் பெயரில் அந்த வீட்டில் இருக்கும் தன் பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போக வந்திருந்தாள் யாழிசை.
அதற்கு முதலில் ஒரு முறை அந்த வீட்டை முழுமையாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டாள். சமையற்கட்டு, அறைகள், விறாந்தை, வீட்டின் பின் பக்கம், முற்றம், அங்கே வளர்ந்து நிற்கும் பூமரங்கள் என்று எல்லாமே ஏதேதோ நினைவுகளையும் காட்சிகளையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின.
அங்கே ஒரு சுவரில் மாட்டப்பட்டிருந்த அரசரட்ணதைக் கண்டதும் அவள் விழிகளில் கண்ணீர் பெருகியது.
மெல்லச் சென்று அவர் முன்னால் நின்றாள்.
‘வாய் நிறைய மருமகள் எண்டு கூப்பிடுவீங்க மாமா. இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை. சொந்தம், பந்தம், பாசம் எண்டுறது எல்லாம் பொய் போல. இல்லாம மனுசர்களால எப்பிடி இப்பிடி மாற முடியுது?’ மனத்தோடு அவரிடம் உரையாடியவளின் இதழ்கள் நடுங்கின.
திரையிட்டுவிட்ட விழிகளினூடு கலங்களாகத் தெரிந்தார் அவர்.
‘நீங்க உருவாக்கின ஆசை என்னை எல்லா பக்கமிருந்தும் அடி வாங்க வைக்குது மாமா. சொத்துக்கும் நகை நட்டுக்கும் ஆசைப்பட்டுட்டேனாம். அப்பிடியா மாமா நான்? கேவலப்பட்டு, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு எண்டு இந்த 21 வயசுக்குள்ள நிறையப் பாத்தாச்சு.’
அடி வயிற்றிலிருந்து கேவல் ஒன்று நெஞ்சைப் பிளந்துகொண்டு வருவது போலிருக்க, அதன் பிறகு அங்கே அவள் தாமதிக்கவில்லை. தன் உடைமைகளை எல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு போனாள்.
இரண்டு வீட்டுக்கும் இடையில் இருந்த வேலியில் உருவாக்கப்பட்டிருந்த பாதைக்கு விளக்குகள் கூடப் போட்டிருந்தார்கள். அந்தப் பாதை அழகாக இருக்க வேண்டும் என்று இரண்டு பக்கமும் பூ மரங்கள் வைத்திருந்தாள் யாழிசை.
இவள் எல்லாம் எடுத்தாயிற்று என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்து திறப்பைக் கொடுக்கவும் முதல் வேலையாக அந்த வேலியை அடைத்தான் நேசன்.
யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால், வாழ்ந்த மொத்த வாழ்க்கை மீதும் கரியைப் பூசுவதுபோல் பேசிய மனிதர்களையோ, அப்படி நடந்தவர்களையோ மன்னிக்க மனமில்லை அவனுக்கு.
இன்றோடு அத்தனையையும் முடித்துவிட நினைத்தான். நளினிக்கும் அதில் மாற்றுக் கருத்தில்லை. பணமும் தம் எதிர்கால வாழ்க்கையும் அவளுக்கு முக்கியம்தான். அதை விடவும் மானமும் மரியாதையும் மிக மிக முக்கியம் என்று நினைத்தாள்.
அதேபோல் அவர்கள் வீட்டில் இருந்த மாதவியின் ஒரு சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு சென்று, சுவர்ணாவிடம் கொடுத்துவிட்டு வந்தான்.
இதைச் சுவர்ணா எதிர்பார்க்கவில்லை. கோபப்படுவார்கள் என்று நினைத்தாளே தவிர்த்து மொத்தமாக வெட்டிக்கொள்ள முயல்வார்கள் என்று நினைக்கவில்லை.
இனி அவர்களோடான உறவு மொத்தமாக அறுந்துவிட்டதா என்று நினைக்கையில் மனத்தைப் பிசையாமல் இல்லை. பிறந்ததிலிருந்து பார்த்து பார்த்து வளர்ந்த உறவாயிற்றே. ஆனாலும் சொத்தை மாற்றி எழுதியதில் சந்தோசமே!
இத்தனை நாள்களாக ஜீவனுக்குத் தெரிந்தால் அவன் தடுத்துவிடுவானோ என்கிற பயத்தில் சொல்லாமலேயே வைத்திருந்தவள் மாற்றி எழுதிய பிறகுதான் சொன்னாள்.
மாதவிக்கு அதை மகனிடம் சொல்லத் தைரியம் இருக்கவில்லை. கூடவே, அதை அவளிடமிருந்து வாங்கி, அவள் மீதான அவர்களின் பழிச்சொல்லை அகற்றிவிடவே அவரும் ஆசைப்பட்டதில் அத்தனையும் நடந்து முடிந்த பிறகே ஜீவனின் காதுக்குச் செய்தி வந்திருந்தது.
கேட்ட ஜீவன் கொதித்தே போனான். சுவர்ணா தனக்குத் தமக்கை என்பதையும் மறந்து, மிகவும் கடினமான வார்த்தைகளால் பேசி, அவளை அழ வைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு யாழிசைக்கு அழைக்கக் கை வரவேயில்லை.
சின்ன வயதில் அவன் அப்பாவினால் எழுந்த அவர்கள் இருவருக்குமான திருமணப் பேச்சு, அவன் விதுசாவை விரும்பியதால் விடுபட்டுப் போயிற்று என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவன் யாழிசைக்கு எவ்வளவு பெரிய தவறைச் செய்தான் என்று யாழிசைக்கும் அவனுக்கும்தான் தெரியும்.
அது போதாது என்று இதுவுமா? வேகமாக அவளுக்கு அழைத்தான்.
அவள் அழைப்பை ஏற்கவே இல்லை. திரும்ப திரும்ப அழைத்தான். பலன் என்னவோ சுழியம்தான்.
“இசை, கடவுள் சத்தியமா நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. நீயும் ஒரு வார்த்த என்னட்டச் சொல்லேல்லையே. ஆனா, நீயும் இத எதிர்பாத்திருக்க மாட்டாய் என்ன? எனக்கு என்ன சொல்ல எண்டே தெரியேல்ல இசை. அம்மா அந்த வீட்டுக்குப் போனதில இருந்தே சரியில்ல. எப்ப எங்கட வீட்டுக்குப் போகப்போறீங்க எண்டு எப்ப கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டா. சரி, இவ்வளவு காலமா தன்ர வீட்டைப் பிரிஞ்சு இருந்த மனுசி, கொஞ்ச நாளைக்கு அங்க இருக்கட்டும் எண்டு நினைச்சு விட்டதுதான் பிழையா போச்சு. இல்லாம உனக்குப் போய் இப்பிடிச் செய்வாவா? ப்ளீஸ் ஒருக்கா எனக்கு எடு. எனக்கு உன்னோட கதைக்கோணும்.” என்று பேசி அனுப்பிவிட்டான்.
அதற்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போகவும் ஆத்திரத்துடன் அன்னைக்கு அழைத்தான்.
அவர் எடுத்ததுதான் தாமதம், “இந்தளவுக்கு நன்றி மறந்த ஒருத்தியா நீங்க இருந்திருக்க வேண்டாம் அம்மா. இவே எல்லாம் ஆரு? உங்கட ரெத்த சொந்தமா இருந்தாலும் இண்டைக்கு வந்த சொந்தம். நீங்க பெத்த பிள்ளைகள் எங்களைக் கூடத் திரும்பியும் பாக்காம இருந்த ஆக்கள். இவேக்காக அவளை நோகடிச்சிருக்கிறீங்க என்ன? எப்பிடி அம்மா அவளுக்கு இப்பிடி ஒரு வேலை பாக்க உங்களுக்கு மனம் வந்தது?” என்றவனின் கோபத்துக்குப் பதில் பேசக்கூட முடியாதவராக அமர்ந்திருந்தார் மாதவி.
அவர் உள்ளம் அழுதுகொண்டிருந்தது.
‘அத்தை’ என்று ஒரு முறை கூடச் சொல்லாமல், யாரோ ஒருத்தியிடம் பேசுவதுபோல் பேசிவிட்டுப் போன யாழிசை, அவர் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தாள்.
பக்கத்தில்தான் தேவகியும் இருந்தார். எப்போதும் அவர் இருந்தால் பார்த்துக் கதைக்கும் ஜீவன், இன்று அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. ஏன், அவருக்கும் கேட்கட்டும் என்றே நினைத்தான்.
“அந்தச் சொத்தில உங்களுக்கு என்ன உரிமை இருக்கு எண்டு உங்கட அத்தான் கேட்டாராமே. அப்பிடிப் பாத்தா அவருக்குத்தான் எந்த உரிமையும் இல்ல. பாதுகாக்க விட்டா சொந்தம் கொண்டாட வருவாராமா? உங்களுக்கும் உங்கட அக்காக்கும்தான் சொத்தில உரிமை இருக்கு. காதலிச்சுக் கட்டினா நீங்க மார்க்கண்டேயரின்ர மகள் இல்லை எண்டு ஆகிடுமா? சொல்லுறவே சொன்னா கேக்கிற உங்களுக்கு எங்க போனது அறிவு? இஞ்ச இருந்தது எல்லாம் போதும். மரியாதையா வெளிக்கிட்டு அங்க எங்கட வீட்டுக்கு வாறீங்க. வரேல்லையோ இனி நான் உங்களோட கதைக்கவே மாட்டன்!” என்று இருந்த ஆத்திரத்துக்குக் கத்திவிட்டுப் பட்டென்று கைப்பேசியைத் துண்டித்திருந்தான்.
தற்போதைய நிலையில் மாதவிக்கும் அங்கிருக்க விருப்பம் இல்லைதான். மனம் அவர் வீட்டைத் தேடியது. ஆனால், அங்கும் போக முடியவில்லை.
யாழிசை வீட்டினரின் முகங்களை எப்படிப் பார்ப்பார்? யாழிசையின் உதவி இல்லாமல் எப்படித் தனியாக இருப்பார்? சுவர்ணா வீட்டுக்குப் போனால் அவள் கவனித்துக்கொள்ளவும் மாட்டாள். முதல், அப்படிப் போய் இன்னொரு பிரச்னையை ஆரம்பிக்கவும் விருப்பம் இல்லை.
என்னவோ மனது விட்டுவிட்ட நிலை. அவர் இயல்பில் மனச்சாட்சி இல்லாதவரோ, நன்றி கெட்டவரோ இல்லை. கருணாகரனின் மனத்தை நோகடிக்கும் பேச்சில் தடுமாறிப்போனார். அதில் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனதன் பலன் இப்போது அனுபவிக்கிறார்.
ஜீவன் மீண்டும் மீண்டும் யாழிசைக்கு அழைத்து அழைத்துக் களைத்துப்போனான்.
“அம்மாவும் அம்மான்ர சொந்தக்காரரும் கொஞ்சமும் நியாயமே இல்லாம எப்பிடி உன்ன நோகடிச்சினமோ அப்பிடித்தான் இப்ப நீ எனக்குச் செய்றாய் இசை. ப்ளீஸ் ஃபோன எடு.” என்று வாயால் பேசிப் பல குறுந்தகவல்கள் அனுப்பியும் அவள் அசையவில்லை.
அடுத்த நாள் வகுப்புகளையும் தவற விட விரும்பாதவள் அதிகாலையிலேயே நேசனோடு புறப்பட்டுச் சென்று அனுராதபுரம் செல்லும் பேருந்தைப் பிடித்திருந்தாள்.
அடுத்து வந்த ஒரு வாரமும் இன்னதென்று பிரித்தறிய முடியாத ஒரு வகை உணர்வோடுதான் நடமாடிக்கொண்டிருந்தான் தூயவன்.
அவளின் கண்ணீர் நிறைந்த விழிகள் இப்போதெல்லாம் அதிகமாக அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்திருந்தன.
இத்தனை இலகுவாகச் சொத்துகளை மாற்றுவதற்கு இணங்கி வருவாள் என்றே அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படியிருக்க காதில் கழுத்தில் அணிந்திருந்ததை எல்லாம் அவன் கண் முன்னாலேயே அவள் கழற்றியபோது நெஞ்சம் பிசைந்துபோனது.
அதுவும் அவள் காற்சலங்கையையும் சேர்த்துக் கழற்றியபோது, ‘உனக்கு என்ன விசராடி?’ என்று அவளைப் பிடித்து உலுக்கிவிடும் அளவுக்குச் சினம் வந்திருந்தது.
சொத்து அவள் பெயருக்கு மாற்றப்பட்ட பிறகு அவள் கழுத்தில் காதில் மின்ன ஆரம்பித்த நகைகள் அவன் கண்ணை உறுத்தியது உண்மைதான். அது, என் வீட்டுச் சொத்தை எடுத்து நீ அனுபவிக்கிறாயா என்கிற கோபம். அதற்கென்று அவற்றை எல்லாம் அவள் கழற்ற வேண்டும் என்று அவன் நினைக்கவேயில்லை.
கன்னத்தில் கண்ணீர் வழிய வழிய ஒவ்வொரு நகையாக அவள் கழற்றிய காட்சி என்றைக்கும் அவன் கண்ணை விட்டு மறையவே மறையாது.
இத்தனை நாள்களாக அவளைக் குறித்து அவனுக்குள் இருந்த விம்பம் மிக மோசமானது. ஆனால் இப்போது, அது அப்படியே தலைகீழாகிப் போயிருந்தது.
ஒற்றை விரலைக் காட்டி ஓடிப்போ என்றதும் ஓடிப்போய் ஆட்டோவினுள் ஏறி அமர்ந்துகொண்ட யாழிசை, கண்ணீரில் மிதந்த விழிகளோடு அவன் முன்னால் வந்து நின்று, ‘சொல்லுங்க, என்னிலதானே பிழை?’ என்று கேட்ட யாழிசை, ‘அவரிட்ட காசு நான் வாங்க மாட்டன். வாங்கினா திருப்பிக் குடுக்கேலாது.’ என்று சொன்ன யாழிசை, அவன் முறுக்கு வேண்டுமா என்றதும் விழுந்தடித்துக்கொண்டு அழைப்பைத் துண்டித்த யாழிசை, அவர்களை எல்லாம் கண்டு பயந்து நடுங்கி, ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்த யாழிசை, கடைசியாக அவன் கண் முன்னாலேயே அத்தனை நகைகளையும் கழற்றிய யாழிசை என்று அவனுக்குள் யாழிசை ஏன் என்று தெரியாமலேயே நிறைந்து நின்றாள்.
எத்தனை முறை தலையை உலுக்கி வெளி வர நினைத்தாலும் அவளின் நினைவுகளிலிருந்து வர முடியவில்லை.
தேவகி கூட, “என்ன தம்பி, இப்ப கொஞ்சம் நாளா உங்கட முகமே சரியில்ல?” என்று கேட்குமளவில் இருந்தது அவன் நிலை.
அன்று ஒரு அளவுக்கு மேல் முடியாமல் போக வாகனத்தைக் கழுவித் துடைக்க எண்ணி எடுத்துக்கொண்டு போனான். எப்போதும்போல் அவனோடு சேர்ந்து இழுபட்டான் குரு.
குரு உள்ளே துடைக்க வெளியே தூயவன் கழுவிக்கொண்டிருந்தான்.
“அதுசரி! மார்க்கண்டேயரின்ர பேரன் எண்டா சொல்லவும் வேணுமா? காசு மெத்திப்போச்சடா உனக்கு!” என்று உள்ளிருந்து சொன்னான் குரு.
“என்னடா முத்திப்போச்சா? சும்மா உளறிக்கொண்டு இருக்கிறாய்?” என்று அதட்டினான் தூயவன்.
“உளறுறனோ? வேனுக்க காச விழுத்திப்போட்டுக் கவனம் இல்லாம இருக்கிறாய் என்ன? ஆயிரம் ரூவாத் தாளடா.”
“என்னடா சொல்லுறாய்? எங்க இருந்தது?” ஆயிரம் ரூபாய்த் தாள் என்றதும் புருவங்கள் சுருங்க, பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்தான் தூயவன்.
“இஞ்ச பின் சீட்டுக்குக் கீழ விழுந்து கிடந்தது.” என்று குரு சொல்லி முடிக்க முதலே அது எப்படி அங்கு வந்திருக்கும் என்று பிடித்திருந்தான் தூயவன்.
நிச்சயம் ‘அவரிட்ட காசு வாங்க விருப்பம் இல்லை’ என்று சொன்னவளின் வேலைதான் இது. அதை வாங்கிப் பார்த்தவனின் உதட்டோரம் மெல்லிய புன்னகை.
‘அவ்வளவு ரோசக்காரியாடி நீ? சின்னதா கூடக் கடன் பட மாட்டியோ?’ என்று நினைத்த மாத்திரத்தில் அவளைக் கடன்காரியாக்கும் ஆசை அவனுக்குள் எழுந்தது.

