அத்தியாயம் 9
‘Food, in the end, in our own tradition, is something holy. It’s not about nutrients and calories. It’s about sharing. It’s about honesty. It’s about identity.’
– Louise Fresco
அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடந்து, இறுதி ஐந்து போட்டியாளர்கள் என்ற நிலைக்கு வந்திருந்தது. அதில், ‘ப்ரொமிஸிங்க் யங் கண்டஸ்டெண்ட்’ என்ற அடைமொழியோடு முதலாவதாகத் தெரிவாகி, மிகுதி நால்வருக்கும் மிகவும் கடினமான போட்டியாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாள், ஒலிவியா.
சமூக வலைத்தளங்கள் அவளை வெற்றியாளராகக் கொண்டாடவே ஆரம்பித்திருந்தன. அவளது ஒவ்வொரு சமையல் செய்முறையும் பெரும்பாலான யூ டியூப் சமையல் சேனல்களில் இடம் பிடித்தன. கிழமையில் நான்கு நாட்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் காட்டப்படுகிற, அவளது சிறு சிறு அசைவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், செஃப் வேர்த் சேர்ந்து வரும் ஃபிரேம்கள் எல்லாம் சிவப்பு இதயக் குமிழிகளோடு பரப்பப்பட்டன.
ஒலிவியாவும் வேர்த்தும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். இல்லை, நிகழ்ச்சிக்குச் சற்றே நிறம் சேர்க்க ஒருவர் ஒருவரோடு பகிடியாகக் கதைத்துப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். இது எல்லாம் கடந்து, துறுதுறுப்பான சுபாவம் கொண்ட ஒலிவியா போன்றவளோடு சீண்டுவது சுவாரசியம் தருவதாக இருக்கலாம். இப்படி, ஏதோ ஒன்றாக இருந்தாலும் பார்வையாளர்களை, நிகழ்ச்சியின் ரசிகர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் இருவரையும் ஒரே இதயக்கூட்டினுள் அடைத்துப் பார்ப்பதில் பெருமகிழ்வு, ஒரு பரவசம் என்றே வைத்துக் கொள்ளலாம்.
போட்டியாளர்களோ, இது எதுவும் தெரியாது வெற்றி ஒன்றே குறியாகச் செயல்பட்டார்கள். என்னதான் போட்டி முழுவதும் உங்கள் திறமையை வெளிப்படுத்தி நிலைத்து நின்றாலும் இறுதி வெற்றியாளர், கடைசிச் சுற்றில் செய்யப்போகும் சமையலை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்கள்.
‘ஐவரில் யார் வெற்றி பெற்றாலும் சந்தோசமே’ ஐவருமே இப்படிச் சொன்னாலும் போட்டியில் நிலைத்து நிற்க, வெற்றியாளராகக் கடுமையாக உழைத்தார்கள்.
இப்படி, நாட்கள் உருண்டு செல்கையில், இத்தனைக்கிடையிலும் வேர்த் ஆரம்பத்தைப் போன்று தன்னோடு கதைப்பதில்லையோ என்ற எண்ணம், ஒலிவியா மனத்தில் சுணக்கத்தை உருவாக்கி விட்டிருந்தது. அதேநேரம், அவனது ரெஸ்டாரண்டில் பகுதி நேரமாகச் சரி சிறிது காலமேனும் வேலை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணமும் மனத்தில் உறுதியாகி இருந்தது.
இப்படியிருக்கையில், ஐவருக்குமான அடுத்த படப்பிடிப்பு வெளிநாடு ஒன்றில் நடக்கவுள்ளது என்றும் புறப்பட வேண்டிய திகதியையும் அறிவித்தார்கள்.
அது பெரும் மகிழ்வு என்றால், செல்லப்போவது இலண்டன், அதுவும் செஃப் ஆரோன் டேலின் நட்சத்திர உணவு விடுதியில் படப்பிடிப்பு என்றால், போட்டியாளர்கள் மனநிலையை வார்த்தைகளால் வடித்திட முடியுமா என்ன?
திட்டமிட்டபடி, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு, நடுவர்கள், போட்டியாளர்கள் என்று, இலண்டன் புறப்பட்டார்கள்.
ஒலிவியா, இலண்டன் செல்வது இதுதான் முதல் முறை. “ஊர் சுற்றிப் பார்க்கலாம் தானே?” நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடம் கேட்டபடி இருந்தாள்.
“எதற்குப் போகிறோமோ அந்த வேலையை முதல் பார்ப்போம், பிறகு மிச்சம்!” அவள் ஆக்கினை தாங்காது சொல்லி இருந்தார், அவர்.
என்னதான் முகக் கவசமணிந்து, அங்கிங்கு நின்று மினக்கெடாமல் விமானமேறி இருந்தாலும் முதன் முதலாக ‘செலிபிரட்டி’ என்று உணர வைத்த நாளாக அது இருந்தது. இனம் கண்டு, மகிழ்வோடு சுயமிகள் எடுத்தார்கள். கேள்விகள் கேட்டார்கள். நடுவர்களும் கூடவே வந்ததில், பதிலிறுப்பது அவர்கள் வேலையாகிற்று.
தாய்லாந்தில் டிரான்சிட் போட்டிருந்தார்கள். சில மணி நேரமே என்றாலும் மிக நீண்ட பயணத்தில் அது கட்டாயமாகவும் தேவையாகவும் இருந்தது. அதில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில், வேர்த்தைத் தனியாகப் பிடித்து நிறுத்தி இருந்தாள், ஒலிவியா.
“எக்ஸ்க்யூஸ் மீ செஃப்” அவள், வெகு மரியாதையாக அழைத்த விதம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் காட்டிக்கொள்ளாதே என்னவென்பதாகப் பார்த்தான், அவன்.
அந்தப் பார்வையைக் கூர்மையுடன் எதிர்கொண்டாள், ஒலிவியா. அன்று, துர்க்கா பற்றிக் கேட்டானே, அதன்பின் தான் கதை குறைந்ததோ என்ற எண்ணம், அண்மைய நாட்களாகவே அவளுள் தோன்றியிருந்தது.
“ஏன் என்னோட கதைக்கிறீங்கள் இல்ல? உங்கட ரெஸ்டோரண்டில் வேலை தர வேண்டி வந்துவிடும் என்று பயப்படுறீங்களோ?” பகிடியாகவே ஆரம்பித்தாள்.
‘வேலை என்ன வேலை! என்னுடைய ரெஸ்ட்டோரண்டுகளுக்கே சொந்தக்காரியாகவே வந்துவிடேன்!’ சற்றும் தாமதியாது சொன்னது, அவன் மனமே தான்.
‘மனம்’ என்று விளிக்கப்படுவது, அதன் உணர்வுகள் எதிர்பார்ப்புகள் எக்காலத்திலும் புரிந்துகொள்ள முடியாததோ! ஏற்கனவே, காதல் என்ற விசித்திரத்தை ருசித்து வலிக்க வலிக்கச் சூடு கண்டாலும் துணிந்து மீண்டும் அதே கனியைப் பறிக்கத் துணிகிறதே! மெல்ல அவளை நெருங்கி, தன் மனத்தைச் சொல்லிட பெரும் ஆசை கொண்டான், செஃப் தோமஸ் வேர்த்.
‘அடோய்!’ பிடரியில் யாரோ தட்டிச் செல்லும் உணர்வில் திகைத்தவன் பார்வை, சற்றே தள்ளி நின்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது படிந்தது. ஆரோன் டேலும் அவருமாகக் கதைத்துக்கொண்டு நின்றார்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிகவும் தற்செயலாகத்தான் இவர்களைப் பார்த்தார். இயல்பாகவே பார்வையை விலக்கியும் இருந்தார். இருந்தாலும், ‘அடேய் தள்ளிப் போ!’ என்று சொல்வதாகப்பட்டது, இவனுக்கு.
‘இங்கே பார் பெண்ணே! இப்போது என் மரியாதை என் கையில். இன்னொரு தடவை, அவன் வாயால் நம்மைப் பற்றிச் சொல்ல நான் இடம் வைக்கக் கூடாது!’ தீர்மானம் எடுத்தவன், சின்னச் சிரிப்போடு நகர்ந்து விட்டான்.
அப்போதும், ‘இப்போ என்ன படிப்பிடிப்பா நடக்குது? முதல், அவன் யார் உனக்குக் கட்டுப்பாடு இட?’ இள இரத்தத்தில் துடிக்கும் இதயம் அதட்டியது.
“வேர்த்” எட்டிச் சேர்ந்து நடந்தாள், ஒலிவியா.
“நான் கேட்டதற்கு உங்கள் பதில் இந்தச் சிரிப்பா?” என்றவள் முகத்தில் சிரிப்பு இல்லை.
“அன்றைக்கு, பார்பிகியூ சேலஞ்சஸ் நடந்த அன்று, என் ஃபிரெண்ட் துர்க்கா பற்றி ஏன் கேட்டீங்க? ஏதாவது சேட்டை கீட்டை விட்டுட்டாளா? என்னுடைய இன்ஸ்ட்டா அவள் பொறுப்பில் தான் இருக்கு.” என்கையில், முகத்தில் உண்மையான கவலை!
“அப்படி ஏதாவது என்றால் உண்மையாகவே சொறி செஃப்! அவள் என்னைப் போல் தான், பகிடிக்குக் கதைச்சிருப்பாள்!” கவலையோடு மன்னிப்பு வேண்டினால், நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகத்துக்காக எல்லாம் பார்க்க முடியுமா என்ன?
“என்ன நீ ஏதேதோ எல்லாம் சொல்கிறாய்?” அவள் தலையில் மெல்லத் தட்டினான், வேர்த்.
அதே வேகத்தில், “லெட்ஸ் டோக் ஓவர் எ கப் ஒஃப் கொஃபி?” இரசனையோடு சிரிக்கும் விழிகளும் அவன் முகத்துக்கே கம்பீரமாக இருக்கும் ஒற்றைப் புருவ உயர்த்தலுமாகக் கேட்டிருந்தான். அவன் பரம ரசிகை வேண்டாம் என்பாளா? இருவரும் சேர்ந்து நடந்தார்கள்.
அப்போது, அந்த இடத்தால் வந்து கொண்டிருந்த இளையோர் குழுவொன்று இவர்களை இன்னாரென்று இனம் கண்டுவிட்டார்கள்.
ஆண்களும் பெண்களுமாக ஏழு எட்டுப் பேர்கள் இருப்பார்கள், வேகமாக நெருங்கி வந்தவர்கள், “செஃப் வெர்த்… ஒலிவியா?” எக்கச்சக்க ஆச்சரியத்தோடு ஒருசேரக் கேள்வி எழுப்பினார்கள்.
இவர்கள் முகக்கவசங்களை அகற்றவில்லை, முறுவலித்தார்கள். அதை விழிகளில் படித்தவர்கள், “ஓஓஓஓஓ… செல்ஃபீ!” அவர்கள் நெருங்க முதல், மற்றைய நால்வரோடும் அவ்விடத்தில் நின்றார், ஆரோன்.
ஹோம் குக்கிங், மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாச்சே! மொத்த நிகழ்ச்சிக்குழுவையும் கண்டதும் பன்மடங்கு ஆனந்தம். ஒவ்வொருவரையும் புகழ்ந்தார்கள். அப்படியே சில நிமிடங்கள் கதைத்து, எல்லோரும் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டு விடைபெறுகையில், ஒருவன் மட்டும் நகராது நின்றான். அவன் பார்வை வெகு இரசனையோடு ஒலிவியாவில்!
“ஒலிவியா, உனக்குச் சம்மதம் என்றால் சொந்தமாக ஒரு உணவு விடுதியைத் திறந்து தரவே நான் தயார். நானும் அவுஸ்திரேலியா தான்.” என்றவன், “உன்னோடு தனியாக ஒரு செல்ஃபீ?” என்று அருகில் வந்தவனைத் தள்ளியா விட முடியும்?
அவன் பார்வையைக் கொஞ்சம் கூட இரசிக்கவில்லை, வேர்த். பற்களை நறும்பியபடி முறைத்தான். ஒலிவியா பார்வை தன்னையும் அறியாது முன்னால் நின்றிருந்த ஆரோனை நாடியது.
“என்ஜோய் த ஃபேன் மூமென்ட்!” என்றார், அவர்.
வந்தவன் வலு மரியாதையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டான். அதே வேகத்தில் நகர்ந்து செல்லவில்லை. அருகில் நின்று, ஒலிவியா விழிகளையே பார்த்து அவளைச் சற்றே அசௌகர்யமாக உணர வைத்தான். அவள் விலக எத்தனித்தாள்.
“நான் சீரியசாகவே தான் ஒலிவியா சொல்கிறேன்.” என்று ஒரு அட்டையை நீட்டினான்.
அவள் பார்வையில் கேள்வியைப் படித்தபடி, “வாங்கிக் கொள், என் விசிட்டிங் கார்ட். இந்தப் போட்டி முடிந்ததும் என்னைத் தொடர்பு கொள்!” என்றவன், தோமஸ் வேர்த்தை ஒரு பார்வை பார்த்தான்.
கொடுப்புக்குள் நகைப்போடு அவன் பார்த்த விதத்தில் தன்னைப் பரிகசிக்கிறான் என்று வேர்த்துக்கு விளங்கியது.
யார் என்ன உணர்ந்தாலும் கவலையே இல்லை என்ற வகையில் தொடர்ந்தான், அந்த இரசிகன்.
“முக்கியமான விசயம் ஒலிவியா, நீ எங்கள் பிரியத்துக்குரிய செஃப் வேர்த்தோடு நின்று, தோளில் கை போட்டுக்கொண்டே ஃபோட்டோ எடுத்தாலும் நான் நிச்சயம் பிரேக்கப் எல்லாம் செய்து கொள்ள மாட்டேன். சோ… கட்டாயம் கோல் பண்ணு, ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்!” என்றவனை,
“ஓஓ கிம்! டிவியைக் கட்டிப்பிடித்தபடி ஹோம் குக்கிங் பார்ப்பதன் இரகசியம் இதுதானோ!” என்ற, ஆரவாரக் கலகலப்போடு அவன் முதுகில் நாலு போட்டு இழுத்துச் சென்றார்கள், அவன் நட்புக் குலாம்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேன்! நீ திறக்கவிருக்கும் ரெஸ்ட்டோரண்டில் எங்கள் எல்லோரையும் பங்குதாரராக்கி விடு சரியா?” பரிகாசக் குரலில் சொன்னார், ஆரோன்.
போட்டியாளர்கள் தவிர்ந்த மற்றவர்களுக்கு இன்ஸ்ட்டா படும் பாடுதான் தெரியுமே. இரசனையான ஃபேன் மூவ்மென்ட் என்றுதான் அதை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்கள்.
செஃப் வேர்த் நகரவில்லை. ஒலிவியாவையே பார்த்தபடி நின்றான். அவன் பார்வை என்ன உணர்த்தியதோ, மெல்ல அவனருகில் சென்றவள்,அந்த விசிட்டிங் கார்ட்டை அவனிடம் நீட்டினாள்.
தாமதியாது வாங்கிப் பொத்திக்கொண்டது, அவன் வலக்கரம். அதுவரை அவன் முகத்திலிருந்த இறுக்கம் வடிந்து போயிற்று.
அக்கணம், அவன் விழிகளைப் பார்த்த ஒலிவியாவின் இதயம் இலயம் மாறி எக்குத்தப்பாகத் துடிக்க ஆரம்பித்திருந்தது.
இதழ்கள் உதிர்க்கா வார்த்தைகள்
ஓராயிரம் உன் விழி சிந்தும்
ஒரு கணப் பார்வையில்…
பட்டென்று ஓடிச் சென்று மற்றவர்களோடு இணைந்து கொண்டாள், அவள். நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றமும் சேர்ந்துகொண்டது.
தன்னையறியாது மெல்லத் திரும்பினால், அச்சிறு அட்டையை நிதானமாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டு நின்றான், செஃப் வேர்த்.
முறுவலோடு திரும்பியவள் மனம், உயிர் நண்பியோடு பேசிட ஆவல் கொண்டது. துர்க்கா முகம் மனதுள் வந்த அக்கணம், ‘அடியேய் துர்க்கா, என் இமேஜுக்கு டேமேஜ் செய்திட்டியாடி?’ மனம் அலற, உடனடியாக இன்ஸ்டா பார்க்க வேண்டும் என்று மனதுள் பரபரத்துப் போனாள், ஒலிவியா.

