அழகிய சவால் நீ – 10

அத்தியாயம் 10

 

‘Your words are my food, your breath my wine. You are everything to me.’

Sarah Bernhardt

 

அவுஸ்திரேலியாவிலிருந்து இலண்டன் ஒரு முழுநாள்ப் பயணம். இடையில், தாய்லாந்தில் சில மணி நேரம் நின்று விட்டு, சோர்வு என்பதே அண்டாது கலகலப்பாகவே மீண்டும் விமானமேறி இருந்தார்கள், ஹோம் குக்கிங் குழுவினர்.

 

ஒவ்வொருவரும் தத்தம் இருக்கைகளைப் பார்த்து அமர்ந்து கொண்டார்கள். போட்டியாளர்களில் ஒருவன், டேல் மற்றும் வேர்த் அருகருகில் அமர்ந்து கொண்டார்கள்.

 

அமர்ந்துகொண்ட வேகத்தில், “ஒலிவியா எங்க?” எழுந்து, முன்னாலும் பின்னாலும் ஆராய்ந்தான், வேர்த். இவர்கள் இருந்த வரிசையின் கடைசியில் வேறு பயணிகள் இருவர் மத்தியில் அமர்ந்திருந்தாள், அவள். வயதான ஆண்கள் நடுவில் அமர்ந்திருந்தவளைப் பார்க்கப் பெரும் பாவமாக இருந்தது.

 

இரவுநேரப் பயணம் தான், இருந்தாலுமே கிட்டத்தட்ட 13 மணித்தியாலங்கள் தனியாக. நினைக்கவே விசராக இருந்தது, ஒலிவியாவுக்கு. ஐவரில் இருவர்தான் பெண்கள், மற்றவள் கிறிஸ்டினாவோடு அமர்ந்திருந்தாள். இவள் மட்டும்… பச்!

 

மனச்சுணக்கத்தோடு இருந்தவள், வேர்த் எழுந்து பார்க்கவும், வாயைச் சுழித்தாள். இதுவரையும் சீண்டலாகக் கதைப்பாள், பார்ப்பாள் தான். ஆனால் இது? மீண்டும் காம் ஃபயர்…

 

Well, I found a man stronger than anyone I know

He shares my dreams, I hope that someday we’ll share a home

I found a love, to carry more than just my secrets

To carry love, to carry children of our own

 

தேனாக அவள் குரல் வருட, உரிமையான அந்த இதழ்ச்சுழிப்பில் தாறு மாறாகத் தடுக்கி விழுந்தது, அவன் உள்ளம்.

 

சிறுசிறு செயல்கள் நம் நேசத்துக்கு எதிரொலியாகக் கிடைப்பது, உணர்வது எத்தகைய மகிழ்வுணர்வு!

 

“ஒலிவியா எங்க?”

 

எழுந்தவன் அசையாது நிற்கவும் விசாரித்தார், ஆரோன். அவருக்குப் பதிலிறுக்காது, “சாம், உனக்குப் பிரச்சினை இல்லையென்றால் ஒலிவியாவின் இருக்கைக்கு மாறுவாயா?” வினவியிருந்தான், வேர்த்.

 

நடுவர்களோடு அமர்ந்துகொண்டதில் மிகுந்த மகிழ்வோடு இருந்த சாம் ஒருகணம் முழித்தான். அவனுக்கு அதில் முழுச் சம்மதம் இல்லை. இருந்தாலும் மதிப்புக்குரிய நடுவரின் கோரிக்கையைத் தட்டிக் கழிப்பது எப்படி? எழுந்து சென்றான்.

 

“ஆயிரம் கோடி நன்றி!” சாம்மிடம் சொல்லிவிட்டு வந்தவளை, யன்னலோரமாக அமர்வதற்கு விட்ட ஆரோன், பக்கத்தில் தான் அமர்ந்து கொண்டார்.

 

ஒருசாதியாகப் பார்த்தான், வேர்த். முதலும் அவன் தான் கரையில் இருந்தான். இருந்தாலும் இந்த மனிதனை என்னதான் செய்வது?

 

நான்கு பிள்ளைகளின் தகப்பன். பெரும் செல்வந்தர். படித்து, அதற்கேற்ப பெரிய பதவிகளில் உள்ளவர்கள் நிறைந்த குடும்பம். அதில், பொறியியலாளராக நல்ல வேலையிலிருந்த இவர், திடுமென்று சமையலைக் கையிலெடுத்ததும் மனைவி உட்பட மொத்தக் குடும்பமும் எதிர்த்தார்கள். மனிதன், அந்த நேரம் இன்னமும் பொல்லாத கோபக்காரன். இரு மகன்களோடு மனைவியையே பிரிந்து அவுஸ்திரேலியா வந்துவிட்டார். சமையல் தான் தன் எதிர்காலம் என்று ஒரே பிடியில் நின்று உழைத்து, காலூன்றி, தன்னை நிரூபித்தும் இருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இலண்டன் திரும்பிச் சென்றவர் குடும்பத்தோடு இணைந்து மேலும் இரண்டு மகள்களைப் பெற்று, இன்றும் மனைவிக்கு அருமையான கணவன் மட்டுமா? காதலனாகவும் வாழ்பவர்.

 

‘என்னுடைய மனத்தை மட்டும் விளங்கிக் கொள்கிறார் இல்லையே!’ முணுமுணுப்போடுதான் அமர்ந்துகொண்டான், வேர்த்.

 

இதனிடையில், விமானம் பறந்ததோ இல்லையோ ‘ஃபேன் மொமன்ட்’ காற்றடிக்க ஆரம்பித்திருந்தது. எல்லோர் கவனமும் அதில்.

 

அடுத்த அரை மணித்தியாலத்தில் விமானம் சீராகப் பறக்க ஆரம்பித்திருந்தது.

 

“உங்கள் எல்லோரினதும் இன்ரோ எபிசோட்ஸ் பார்க்க வேண்டும் என்று இருந்தேன் ஒலிவியா. இன்னமும் நேரம் கிடைக்கவில்லை.” தன் அருகண்மையில் அமர்ந்திருந்தவளிடம் பேச்சை ஆரம்பித்திருந்தார், ஆரோன் டேல்.

 

“அன்று, நானும் கிறிஸ்டினாவும் இதைத்தான் கதைத்துக்கொண்டோம். ஷோ முடிய விட்டே எல்லாம் பார்க்க வேண்டும்.” என்றான், வேர்த்.

 

“சரி, உன்னைப் பற்றி, உன் குடும்பம் பற்றிச் சொல்லேன், கேட்க ஆவலாக உள்ளேன்.” ஆரோன் சொல்ல, “எனக்கும்” தொண்டைச் செருமலும் விழிகள் சுருங்கிய முறுவலுமாகச் சற்றே முன்னால் எட்டி அவளைப் பார்த்தான், வேர்த்.

 

சற்று முன்னர், அந்த விசிட்டிங் கார்ட்டை கிழித்தானே! அந்நினைவில் ஒலிவியா முகம் மினுங்கியது. வந்த நாளிலிருந்து அவனை சைட் அடிப்பதை தொழில் போன்று செய்தவள், இப்போது, அதற்கு, தான் சற்றுமே எதிர்பாரா வகையிலான எதிர்வினை உண்டு என்று நிச்சயமாக உணர்ந்ததும் மனதுள் ஒருவகையான படபடப்பாக இருந்தது. வலு மும்மரமாக கைப்பையைத் துலாவிச் சமாளிக்கச் சற்று நேரம் எடுத்தாள்.

 

நக்கலாக வேர்த்தைப் பார்த்தார், ஆரோன் டேல்.

 

“நீ எதற்காக அறிய விரும்புகிறாயோ தெரியாது, ஆனால், நான் போட்டி முடிய லண்டனுக்கு ஆளைக் கடத்தப் போகிறேன், விபரம் தெரிய வேண்டாமா சொல்லு?” கண்ணடித்தார்.

 

“அதென்ன ஆள் ஆளுக்கு ஒலிவியா ஒலிவியா என்பது? அவள் நிரந்தரமாக என்னுடன் தான் வேலை செய்வாள். என்ன ஒலிவியா?” நேரடியாகவே கேட்டு விட்டான், வேர்த்.

 

என்ன பதில் சொல்வது? அதுதான் அவள் விருப்பம் என்றாலும்… வேண்டுமென்றே மிதப்பாகப் பார்த்தாள். அவன் பதிலை எதிர்பார்க்கிறான் என்று தெரிந்தே, உதட்டில் முளைத்த முறுவலோடு தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

 

தந்தையின் தந்தை, இவள் தாத்தா சிறுவயதில் துருக்கியிலிருந்து வந்தவர். ஆமடேலில் வசித்து வந்தார்கள். இவள் தந்தை இடைநிலைக் கல்விக்காக சிட்னியில் தங்கியிருந்த வேளையில், இவள் அன்னை அறிமுகமாகி நல்ல நண்பியாக இருந்தாராம். அந்த நேரம் இவள் தகப்பன் வீட்டில் அவரும் ஒரு அங்கத்தினர் என்ற அளவுக்கு நல்ல நட்பாம். அந்த நட்பே காதல், கல்யாணம் என்று சென்று இன்று வரை அழகிய இல்லறமாக, தங்கள் வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ்கிறதாம். சொன்னவள், முகத்தில் அத்தனை பெருமிதம்.

 

“தாத்தா ஆட்கள் நடத்தி வந்த பேக்கரியை சற்றே விரிவுபடுத்தி அம்மா நடத்துகிறார்.” என்றுவிட்டு, “என் அம்மா வீட்டினர் பாரம்பரிய கத்தோலிக்கர்.” என்றவள் முகம், அதுவரை இருந்த மகிழ்வுக்குப் பதில் இறுகிப் போய் இருந்தது.

 

“அப்பாவைக் காதலித்து மணந்ததும் அம்மாவோடு எந்தவிதத்திலும் தொடர்பே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்கள். சிட்னி தான் அவர்கள் சொந்த இடம். அதையே விட்டு விட்டு, நியூசிலாந்தில் குடியேறி விட்டார்கள்.” கசப்போடு சொன்னாள்.

 

“என் அப்பா ஒரு ஜெம்! இதுவரை அவரைப் போன்றதொரு மனிதனை நான் சந்திக்கவில்லை. இனியும்…” என்றவள், தன்னையறியாது வேர்த் முகம் நோக்கினாள்.

 

நடுவர்கள் இருவருமே அவளைத்தான் பார்த்திருந்தார்கள். ஆரோன், ஒரு கையைக் கட்டி மறுகையால் வாயைப் பொத்தியபடியிருந்தார். வேர்த், அவள் கவலையோடு பேசுவதைச் சற்றுமே இரசிக்கவில்லை. இடையிடவும் முனையவில்லை.

 

முன்னால் பார்வையைத் திருப்பி விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள், ஒலிவியா.

 

“எந்தப் பெண்ணுமே அப்படியொரு மனிதன் தம் வாழ்வில் வேண்டும் என்று ஆசைப்படுவாள் செஃப். அம்மாவின் பெற்றோர், சகோதரங்களுக்கு அவர் அருமை தெரியவில்லை, அவர் மதம் தான் தெரிந்தது. பச்! உங்களுக்கு ஒன்று தெரியுமா? இப்போது எங்கள் குடும்பத்தில் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. அடுத்தவனுக்குத் தீங்கு செய்யாது இயற்கையை மதித்து வாழ வேண்டுமென்று என் அம்மாவும் அப்பாவும் சொல்லித் தந்திருக்கிறார்கள். அவர்கள் அன்போடு புகட்டியதை நிச்சயம் பின்பற்றுவோம். ஒவ்வொரு மதமும் இதைத்தானே சொல்கிறது? மதத்தை ஆடையாக இறுக்கப் போர்த்தத் தெரிந்தவர்களால் அது சொல்லும் நல்வழியில் நடக்க முடிகிறதா சொல்லுங்கள்? அப்படி நடந்தால், இன்று, உலகத்தில் இத்தனை தீமை, அநியாயமான கொடூர உயிரிழப்புகள் நடக்குமா?” படபடவென்று மொழிந்தவள், மிகவுமே புதியவளாக, முதிர்ந்தவளாகத் தெரிந்தாள், இருவருக்கும்.

 

சற்று நேரம் இருண்டு கிடந்த வான்வீதியையே பார்த்திருந்தவள் மனத்தில் தாய் வந்தார். இன்னுமே தன் குடும்பத்தின் தவிர்ப்பை எண்ணி வருந்தும் இளகிய உள்ளத்திற்குச் சொந்தக்காரி அவர். பட்டென்று கண்கள் கலங்கிட நடுவர்களுக்குக் காட்ட விரும்பாது துடைத்துக்கொண்டாள்.

 

“ஒலிவியா இங்க பார்!”

 

அவள் தோளில் அன்போடு தட்டி அழைத்தார், ஆரோன் டேல். வேர்த் அப்படியே அமர்ந்திருந்தான். ஒலிவியா மனத்தில் சோகத்தின் நிழல் இருக்குமென்று அவன் நினைத்ததே இல்லை. போட்டி முடிந்ததும் முதல் வேலையாக அவள் தாயின் குடும்பத்தைச் சந்தித்துக் கதைக்க வேண்டும், அவள் மனத்தின் குறையை முற்றிலுமாக நீக்கிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.

 

விரைவில் தன்னைச் சுதாகரித்துக்கொண்டாள், ஒலிவியா. அவ்வளவு இலேசில் தன் உணர்வுகளை, குறிப்பாக மற்றவர் பார்வையில் இரக்கம் வரும் வகையிலானவற்றை வெளிப்டையாகக் கதைக்க விரும்பாள். தாய் தந்தை தேற்றினாலே பிடித்தம் கொள்வதில்லை. அப்படியிருக்க…

 

அவளுக்கேயுரிய முறுவலோடு திரும்பியவள் இமைகள் இன்னமும் ஈரத்தில் பளபளத்தன.

 

“என்ன நீ?” அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்ட ஆரோனுக்கு மனதுள் எதுவோ செய்தது. அக்கணம்தான், இதுவரை எத்தனையோ போட்டிகள், போட்டியாளர்களை எதிர்கொண்டிருந்தாலும் இந்தச் சிறு பெண் எந்தளவு தன்னைப் பாதித்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டார்.

 

“நம் அருமை புரியாது ஒருவர் ஒதுக்கினால் அது பற்றிக் கவலைப்பட்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே தேவையில்லை, ஒலிவியா. கண்ணீர் சிந்தி அவர்களை மதிப்புக்குரியவர்களாகக் காட்டவும் தேவையில்லை.” தேறுதலாகச் சொன்னார், டேல்.

 

‘நான் ஒன்றும் கவலைப்படவில்லை, கண்ணீரும் சிந்தவில்லை. லீவ் இட் ப்ளீஸ்!’ அவள் சுபாவப்படி பட்டென்று சொல்ல வரவில்லை. மீண்டும் கண்ணீர் தளும்பி வழிந்தது.

 

இரவுணவு கொடுத்துக்கொண்டு வந்தவர்களால் அந்தப் பேச்சில் இருந்து வெளியில் வந்தார்கள்.

 

அதன் பின்னர் பொதுவாகக் கதைத்தவர்கள் பேச்சில் சமையல் முன்னணியில் இடம் பெற்றிருந்தது. சின்ன சின்ன விசயங்கள் தான், அவற்றைப் பளிச்சென்று விளங்கவும் நினைவில் வைத்திருக்கவும் கூடிய வகையில் சுவாரசியமாகச் சொன்னார், ஆரோன் டேல்.

 

நிறைய சமையல் நுணுக்கங்களை வலு இலாவகமாக அவர் சொல்ல சொல்லக் கேட்டிருந்தவள், “நான் இலண்டனுக்கே வந்துவிடலாம் என்று நினைக்கிறன். உங்களுக்குக் கீழே வேலை தருவீங்களா செஃப்?” ஆரோனிடம் கேட்க, “வை நொட்? நீ எப்போ வேண்டும் என்றாலும் வரலாம்.” சந்தோசமாக அவர் சொல்ல, கடமுடக்கும் முகத்தோடு இருவரையும் முறைத்தான், வேர்த்.

 

பட்டென்று ‘பிளைண்ட்’ போட்டுக்கொண்டு சாய்ந்து, தன் அதிருப்தியை அவன் காட்ட, தோள் குலுக்கலோடு இவளைப் பார்த்தவர், தொடர்ந்து கதைத்தபடியிருந்தார். அதேநேரம், ஒலிவியா அவனைச் சீண்டுகிறாள் என்றும் அவர்களுள்ளே என்ன ஓடுகிறது என்றும் நன்றாகவே புரிந்து கொண்டார், ஆரோன்.

 

“போட்டி இறுதிக்கட்டத்துக்கு வருகிறது. உன் கவனம் முழுமையாக அதில் இருக்க வேண்டும். மிகுதி எல்லாவற்றுக்கும் நேரம் போதும் போதும் என்ற அளவுக்கு இருக்கு ஒலிவியா!” என்று அவர் சொன்னது, தூங்கும் பாவனையில் விழி மூடியபடி இருந்த வேர்த்துக்கும் தான்.

 

“என்னுடைய மக்ஸிமம் கொடுப்பேன் செஃப்!” உறுதியாகச் சொன்ன ஒலிவியாவுக்கு, “இன்ஸ்ட்டா பார்க்க ஃபோன் தருவீங்களா?” நா நுனிக்கு வந்துவிட்டு வந்துவிட்டு வழுவி உள்ளே போயின, வார்த்தைகள்.

 

இப்படியே கதைத்துக்கொண்டிருந்த வாக்கில் உறங்கி விட்டாள். அதுவும் ஆரோன் தோளில் தலைசாய்த்து.

 

“அடிக்கடி என்னுடைய கடைசி மகளை இவள் நினைவுபடுத்துகிறாள் வேர்த்! நீயே வந்து சந்திச்சுப்பார், இவள் போலத்தான் அவளும்.” என்றபடி, அவள் உறக்கம் கலையாவண்ணம் ஆடாது அசையாது அமர்ந்திருந்தார், ஆரோன் டேல்.

 

 

error: Alert: Content selection is disabled!!