வெளிச்சக்கீற்று 1 – 2

கொட்டில் வீடாயினும் சொந்தக் காணியில் அவளுக்கென்று ஒரு கூடு இருக்கிறது. உழைக்கிறாள். யாரின் கையையும் எதிர்பார்த்து இல்லை. ஆயினும் கூட, அவளைச் சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவள் கட்டுப்பட்டவள். அவர்களின் கண்கள், அவளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக்கொண்டே இருக்கும்; ஒரு விதமாக மிரட்டும்; பயப்படுத்தியே வைத்திருக்கும்.

 

கண்ணைப் பறிக்கும் உடைகள் அணியத் தயக்கம், மனம் விட்டுச் சிரிக்கத் தயக்கம், சத்தமாக நகைத்துவிட்டால் போதும், அடிக்கடி வீதியில் திரிந்தால் அதற்கொரு பெயர். இப்படி, கண்ணுக்குத் தெரியாத தளைகள் ஓராயிரம்.

 

நிசாந்தினி ஒன்றும் பொல்லாதவள் அல்லள். அவளுக்கும் இவளுக்கும் ஐந்து வயது வித்தியாசம். அவளின் பதினெட்டாவது வயதில் தந்தை காலமாகிவிட, படிப்பை நிறுத்திவிட்டுக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவள். கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்குச் சென்று இவளையும் அன்னையையும் பார்த்துக்கொண்டது அவள்தான்.

 

இன்னுமே சொல்லப்போனால், அவள் இருக்கும்போதே இவள் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில் கிசோரைக் காதலித்து மணந்துகொண்டு வந்தபோதுகூட, முதலில் கோபப்பட்டு அடித்தாலும் பின்னர் கிசோர் வீட்டில் பேசி, எல்லாவற்றையும் சுமூகமாக்கி விட்டதே அவள்தான்.

 

தன்னால் இயன்றதாக ஒரு சோடித் தோடு, கழுத்துக்குச் செயின், ஒரு சோடிக் காப்பு என்று இவளுக்கும், கிசோருக்கு செயின், மோதிரம் என்று குறையில்லாமல் செய்தும் இருந்தாள். அவர்கள் தற்போது வசிக்கும் இந்தக் காணி இருவருக்குமானதுதான் என்றாலும் அதுவரையில் முறையாகப் பிரிக்கப்படாமல் இருந்தது. அதை உடனேயே பிரித்து, சரிபாதியை இவள் பெயருக்கு மாற்றிச் சீதனமாகக் கொடுத்து, கிசோர் வீட்டில் இவளுக்குக் கொஞ்ச மரியாதையை என்றாலும் வாங்கிக் கொடுத்ததும் அவள்தான்.

 

வாழ்க்கை அப்படியே போயிருக்கலாம். யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் இருந்திருக்கும். காலன் அவள் கணவனைக் காவு வாங்கிக்கொண்டதில் எல்லாமே தலைகீழாக மாறிப்போயிற்று.

 

கிசோர் வசதியான வீட்டுப் பிள்ளை. அவனுக்கு இரண்டு தங்கைகள். தகப்பன், தமையன் என்று ஆண்களே இல்லாத ஏழை வீட்டுப் பெண் இவள். அதில், அவர்கள் வீட்டில் முழு எதிர்ப்பு. திருமணத்திற்குப் பிறகு முற்றிலுமாக ஒதுக்கியே விட்டிருந்தனர். கிசோரின் அம்மம்மாதான் பிடிவாதமாக நின்று, வீட்டுடன் இருந்த தன் சீதனக் காணியைப் பேரனுக்கு எழுதிக் கொடுத்திருந்தார். அந்த வீட்டில்தான் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவனுக்கும் வேலை. அவளும் பார்மசியில் வேலை. இருவர் சம்பளமும் நிறைவாக வாழ்வதற்குப் போதுமானதாக இருந்தது.

 

தூரிகா பிறந்து மூன்று வருடங்களின் பின்னர் சிந்தூரிக்கு அவள் தாய்மை உற்றபோதும் மகிழ்வுக்குக் குறைவில்லை. ஆனால், அவளுக்கு எட்டு மாதமாக இருந்தபோது, கிசோருக்குக் காய்ச்சல் என்றுதான் கொண்டு போனார்கள். அதன் பிறகு என்ன நடந்தது, ஏன் இப்படி நடந்தது என்று அவளுக்குத் தெளிவே இல்லை. அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது; உடல் மெலிந்தான். சில நாள்களுக்கு நன்றாக இருப்பான். பிறகு அதற்கும் சேர்த்துப் படுத்துவிடுவான். இருமல், சத்தி(வாந்தி) என்று படாத பாடுபட்டான். எங்கெங்கோ காட்டியும் எந்தப் பலனும் இல்லை. ஒருமுறை வைத்தியசாலையில் தங்கி, இனி சுகமாகிவிடும் என்று மருந்து மாத்திரைகளோடு வீடு வந்தவன், அடுத்த நாள் காலை எழுந்துகொள்ளவே இல்லை.

 

சின்னவள் பிறக்கப் பதினைந்து நாள்களே இருந்த நிலையில் அவள் உலகமே அழிந்து போயிற்று.

 

அதன்பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப் போயிற்று. அவன் வீட்டினர் அதன் பிறகும் இவளைச் சேர்க்கத் தயாராக இல்லை. அவனுடைய இரண்டு தங்கைககளின் பொறுப்பே அவர்கள் கையில் இருக்கையில் இவளையும் இவள் பெற்று வைத்திருக்கும் பெண் பிள்ளைகளையும் பொறுப்பெடுக்க விரும்பவிலை. அவன் இறப்புக்கும் இவள்தான் காரணம் என்று திட்டிவிட்டுப் போனார்கள்.

 

அதன்பிறகுதான் இவ்வுலகத்தின் இன்னொரு முகத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் யசோதினி.

 

காவலற்று, கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்த யசோதினி காவாலிகளின் கண்களைக் குத்தினாள். இரவின் கருமையைத் தமக்கான ஆடையாகப் போர்த்திக்கொண்டு அவள் வீட்டுக்குக் கல் எறிந்தார்கள், கெட்ட வார்த்தைகளைக் கத்திக்கொண்டே போனார்கள், கேட்டை உடைத்தார்கள். சில நாள்களில் கேட்டைத் தொட்டுத் திறக்க முடியாத அளவில் சலத்தின் நாற்றம்!

 

கைம்பெண் எனும் நிலை, ஒரு பெண்ணை இத்தனை மோசமாக அணுக வைக்குமா என்று திகைத்துப்போனாள். இரவுகள் திகிலூட்டின. பகல்கள் பயமுறுத்தின.

 

அம்மாவைத் தன்னுடன் வந்திருக்கச் சொல்லிச் சொல்லவும் வழியில்லை. அந்த நேரம், நிசாந்தினியின் மூத்தவன் சின்ன குழந்தை. கூடவே, அவள் வேலைக்குப் போகிறவள். ஆனந்தன் ஹயர் என்று வீட்டில் இருக்கும் நேரங்கள் மிகவும் அரிது. கமலாம்பிகையால் பகலில் அங்கும் இரவில் இவள் வீட்டில் என்றும் எத்தனை நாள்களுக்கு இருக்க முடியும்? அவரும் வயதானவராயிற்றே!

 

கடைசியில், தன் வீட்டுக்கே அழைத்து வந்திருந்தாள் நிசாந்தினி.

 

அங்கும் ஆறியிருக்க முடியாமல் ஆரம்பித்தது அடுத்த பிரச்சனை.

 

கணவனின் துயரில் மூழ்கிக் கிடந்தவளுக்குப் போதியளவு தாய்ப்பால் சுரக்கவில்லை. பால்மா உணவுகள் ஒத்துவராமல் சிந்தூரி அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். அடிக்கடி வைத்தியசாலைக்கு ஆனந்தனோடு வாகனத்தில் இவள் சென்று வரவேண்டி வந்தது.

 

கடைசியில், ‘அக்காக்காரி வேல வேல எண்டு இருக்க, தங்கச்சிக்காரி அத்தானாரோட ஒரே ஊர் சுத்தல்.’ என்கிற பேச்சு வரவும் திகைத்துப்போனாள். அந்நியர்களோடு சென்றுவந்தால் கெட்ட பெயர் வரும் என்றுதான் அத்தானோடு போய்வந்தாள். அதற்குமா? நான்கு வயதான மகளையும் கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு என்ன செய்வாள்?

 

இதில், அவள் இவர்களோடு ஒரே வீட்டில் இருப்பதும் அவர்கள் கண்ணைக் குத்திற்று. கடைசியில், இவற்றை எல்லாம் கேட்க முடியாமல், அவளுக்குச் சொந்தமான காணித் துண்டில், தாலிக்கொடியை விற்று ஒரு கொட்டில் வீட்டினை அமைத்துக்கொண்டு தனியாகவே சென்று அமர்ந்துகொண்டாள். அதன்பிறகு, அவன் முன்னே வருவதையும், அவனிடம் உதவிகளைப் பெறுவதையும் முடிந்தவரை தவிர்த்துவிடுவாள்.

 

சொந்த அத்தான், ஒரே காணிக்குள் இருப்பவர்கள், குழந்தைகள் வேறு அவனுடைய வாகனம் நிற்பதைக் கண்டுவிட்டால் நிசாந்தினி வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். அதைவிட, கூடப்பிறக்காத தங்கையாகப் பாவித்து, கனிவுடன் அவன் நடக்கும் பொழுதுகளில் அவளுக்கே சங்கடமாகிவிடும்.

 

தெரிந்தவர், நம்பிக்கையானவர் என்று ஒரே ஓட்டோக்காரரோடு அடிக்கடி பயணிக்க முடியாது. எப்போதும் பொருட்கள் வாங்கும் மளிகைக் கடைக்காரரிடம் நட்பாக எதையும் கதைத்துவிட முடியாது. தந்தைக்கு ஒப்பானவர்கள் என்று நினைக்கிறவர்களின் பேச்சும் பார்வையும் மாறும்போது மனம் அருவருத்தே விடும்.

 

கணவன் இல்லை என்று தெரிந்த பிறகான தோலுரிக்கும் பார்வைகள் எத்தனை, எல்லை மீறும் தொடுதல்கள் எத்தனை? இரு அர்த்தப் பேச்சுகள்தான் எத்தனை? பசப்பு வார்த்தைகளோடு அவளை அணுகுகிறவர்களைக் காண்கிற பொழுதுகளில் காறி உமிழ்ந்துவிடலாம் போலிருக்கும்.

 

பார்மசியில் கூட அப்படி எத்தனையோ பேரைக் கடந்துவிட்டாள். ‘என்ன, சொறிக்குணமா?’ என்று நேராகவே கேட்டு விரட்டியடித்துவிடுவாள்தான். ஆனால், உள்ளுக்குள் குமைந்துபோவாள். சில அருவருப்பான பார்வைகளை எல்லாம் என்றைக்குமே மறக்க முடியாது.

 

அதுவும், ஆணிவேராக இருந்த கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளோடு இனி எப்படி வாழப்போகிறேனோ என்று மருகிக்கொண்டிருந்த பலகீனமான ஆரம்ப நாள்களில், இப்படியானவைகளை எதிர்கொள்ள முடியாமல் அவள் பட்ட பாடுகள் நிறைய நிறைய! இப்போதும் வலிக்கும்தான். என்ன, அதை வெளியே காட்டாமல் வாழப் பழகிக்கொண்டாள்.

 

அப்படி, எல்லாவற்றையும் கடந்து வந்தவளால் தமக்கையின் முக மாற்றத்தைத்தான் தாங்க முடியவில்லை. இவள் மீதோ அத்தானின் மீதோ அவளுக்கு எந்தச் சந்தேகங்களும் இல்லை என்று தெரியும். ஆனாலும் கூட, தன் கணவனோடு இவளைச் சேர்த்து வரும் தரமற்ற பேச்சுகளை அவள் விரும்பவில்லை என்று தெரிந்தது.

 

இவளால் அவளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், நடப்பவற்றில் இவள் தவறு என்ன என்பதுதான் கேள்வி. ஏன் என்னிடம் முகத்தைக் காட்டுகிறாய் என்று கேட்க முடியாமல் வாய் மூடி நிற்கிறாள்.

 

நேராக எதையும் சொன்னதில்லைதான். வார்த்தைகள் ஒன்றையும் செயல் இன்னொன்றையும் உணர்த்துவதை உணர முடியாதா என்ன? வலித்தது. மிகமிக வலித்தது. இப்படியான பொழுதுகளில் எல்லாம் துணையில்லா அந்த நிலை பெரிதாய்த் தாக்கிற்று.

 

ஒரு பெருமூச்சுடன் மகளைத் தடவிக்கொடுத்தாள்.

 

அவளுக்கு மட்டுமே கட்டில் கொடுக்கப்பட்டிருந்ததால் இவளுக்கு நாற்காலி வாசம். முதுகு வலித்தது. ஆனாலும் தாங்கிக்கொண்டாள்.

 

அடுத்த மூன்று நாள்களும் மாலையில் வேலை முடிந்து போகையில் நிசாந்தினி மட்டும்தான் வந்து பார்த்தாள். வைரஸ் காய்ச்சல் தொற்றிவிடுமோ என்கிற பயத்தில் தூரிகாவை இங்கே வரவிடவில்லை. இல்லாவிட்டாலும் ஆனந்தன்தான் அழைத்துவர வேண்டும். அதனாலேயே சிணுங்கிய மகளை வீடியோ கோலில் பேசிச் சமாளித்தாள். இதில், அவளுக்கு மாதவிடாயும் வந்துவிட முற்றிலுமாகச் சோர்ந்தே போனாள்.

 

அழுகைதான் வந்தது. கணவன் இருந்திருக்க இந்த நிலை இல்லையே என்று மனம் அரற்றியது. ஒழுங்கான உணவற்று, தேவையான ஓய்வற்று, சிணுங்கிச் சினந்து கையை விட்டு இறங்கவே மாட்டேன் என்று நின்று வருத்தும் மகளோடு தவித்தே போனாள்.

 

என்ன வாழ்க்கை என்று மனம் வெறுத்தது. இப்படி, அவள் கடந்து வந்த துன்பங்கள் ஒன்று இரண்டன்று! இனியும் எத்தனை எத்தனையோ!

 

ஒரு துணை இருந்தால் இந்த நிலை வருமா? இப்போதெல்லாம் அடிக்கடி இந்தக் கேள்வி அவளுக்கு வந்துகொண்டிருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!