அத்தியாயம் 2
ஒருவழியாக நான்கு நாள்கள் கடந்தபின்தான் டிக்கட் வெட்டினார்கள். சொன்னால் ஆனந்தன் வந்து நிற்பான் என்று தெரியும். அதில், அன்று மாலை, சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டோவில் வீட்டுக்கு வந்து இறங்கினாள் யசோ.
யார் என்று வீட்டிலிருந்து எட்டிப்பார்த்த நிசாந்தினி, இவள் என்றதும் வந்து சிந்தூரியை வாங்கிக்கொண்டே, “இதையே நீ அண்டைக்கும் செய்திருக்கலாம்.” என்றாள்.
திரும்பி ஓட்டோவுக்குள் இருந்த பாக்கை எடுக்கப்போன யசோதினி, அப்படியே நின்றுவிட்டாள். நெஞ்சுக்குள் யாரோ எதையோ கூராகப் பாய்ச்சிய ஒரு வலி. விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்துவிட்டு பாக்கை எடுத்துக் கீழே வைத்தாள். பணத்தையும் கொடுத்து ஓட்டோவை அனுப்பிவிட்டுத் திரும்ப, “அம்மா!” என்று ஆவலாய் ஓடி வந்தாள் தூரிகா.
“தூரிக்குட்டி!” அப்படியே வாரி அள்ளிக் கொஞ்சியவளுக்குத் தொண்டைக்குள் எதுவோ அடைக்கும் உணர்வு. சமாளித்து, ஒரு கையில் அவளும் மறு கையில் பாக்குமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
ஓட்டோச் சத்தம் கேட்டு வந்த கமலாம்பிகையின் காதிலும் மூத்தவள் பேசியது விழுந்தது. அவருமே ஒருகணம் அப்படியே நின்றுவிட்டார். நான்கு நாள்களாக மகளோடு வைத்தியசாலையில் இருந்துவிட்டு வந்தவளிடம் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. நெஞ்சைப் பிசையும் உணர்வோடு சின்ன மகளைப் பார்த்தார். அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. இப்போதெல்லாம் அவள் இப்படித்தானே! தன் துக்கத்தை அவரும் விழுங்கிக்கொண்டார்.
ஓடிப்போய் அவள் கையில் இருந்த பாக்கை வாங்கிக்கொண்டு, “டொக்டர் என்னவாம்? பிள்ளைக்கு முழுக்கச் சுகமாமோ? மருந்து ஏதும் தந்துவிட்டவையா?” என்று கேட்டபடி கூட நடந்தார்.
எதையும் காட்டிக்கொள்ளாமல் அவருக்குப் பதில் சொல்லியபடி வந்தவள், வீடு இருந்த அலங்கோலமான நிலையை ஒற்றைப் பார்வையிலேயே அளந்தாள்.
“அக்கான்ர சின்னவாக்குச் சளி பிடிச்சிட்டுது. கைய விட்டு இறங்கவே மாட்டன் எண்டுபோட்டா. மூண்டுபேரையும் பாத்துச் சமையலைச் செய்றதே பெரிய வேலையாப் போச்சம்மா.” அவள் பார்வையைக் கவனித்துவிட்டுச் சொன்னார் கமலாம்பிகை.
“விடுங்கம்மா, தனி ஒருத்தியா நீங்களும் எவ்வளவு வேலைய எண்டு செய்வீங்க?” என்றவள் மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தாள்.
“ஒரு தேத்தண்ணி தரவா?”
“போடுங்க, குளிச்சிட்டு வாறன்.”
அவளின் வீடு, அரைவாசி வரை சுவரினால் எழுப்பப்பட்டு, அதற்குமேல் தகரத்தால் அடித்த ஒரு அறை, குசினி, விறாந்தை என்று இருந்தது. வீட்டின் முன்னால் பிள்ளைகள் விளையாடுவதற்காகப் பத்தி இறக்கி இருந்தாள். அவளின் ஸ்கூட்டி, பிள்ளைகளின் சைக்கிள்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி நிறுத்துவதும் அங்கேதான்.
குளித்துவிட்டு வந்து, அங்கேயே இருந்த பிளாஸ்ட்டிக் நாற்காலியில் அமர்ந்து, கமலாம்பிகை தந்துவிட்டுப் போன தேநீரைப் பருகினாள். மனத்தில் என்னென்னவோ எண்ணச் சுழல்கள். அத்தனையையும் அடிமனத்தில் போட்டு அழுத்திவிட்டு, ஒரு கோப்பைத் தேநீர் தந்த உசாரோடு எழுந்து வீட்டை ஒதுக்கினாள். தோய்க்க வேண்டிய துணிகளை பிளாஸ்ட்டிக் கூடைக்குள் தூக்கிப் போட்டாள். பரவிக்கிடந்த பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் எடுத்து வைத்தாள். பாத்திரங்களைக் கழுவி வைத்துக் குசினியைத் துடைத்து எடுத்தாள். தும்புத்தடியை எடுத்து விறுவிறு என்று முழு வீட்டையும் கூட்டித் துடைத்த பிறகே வீடு வீடானது போலிருந்தது.
பசித்தது. அவள் இல்லாததால் கமலாம்பிகை இங்கே சமைக்கவில்லை. சாப்பிடுவதற்குத் தமக்கை வீட்டுக்குச் செல்ல மனமில்லை. விறாந்தையில் பாயை விரித்துச் சுருண்டுகொண்டாள். உடல் வலியும் மனத்தின் ரணமும் காணாமல் போகிறவரைக்கும் உறங்கி எழுந்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. அதற்கு உறக்கம் வரவேண்டுமே.
“அம்மா, அம்மம்மா சாப்பிட வரட்டாம்.” தூரிகா ஓடி வந்தாள். அவளின் பின்னே சின்னவள்.
“இங்க வாங்கோ, ரெண்டுபேரும்!” இருவரையும் அழைத்துத் தன்னருகிலேயே அமர்த்திக்கொண்டாள். மனத்தின் காயத்துக்குப் பிஞ்சுகளின் அருகண்மை மருந்து தடவுவது போலொரு சுகம். மூத்தவள் தலையை வருடிக்கொடுத்தாள். சின்னவள் அவள் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க அவர்களுக்காகவே வாழவேண்டும் போலொரு வைராக்கியம் எழுந்தது. யார் என்ன சொன்னால் என்ன, எனக்கு என் பிள்ளைகள் இருக்கிறார்களே!
இரண்டு குழந்தைகளையும் வாரியணைத்து முத்தமிட்டாள். அவள் இல்லாத இந்த நான்கு நாள்களும் நடந்த கதைகளை மூத்தவள் சொல்ல, அதற்குப் பதில் போன்று சின்னவள் வைத்தியசாலையில் நடந்தவற்றைச் சொன்னாள். சிறு சிரிப்பரும்ப அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவ்வளவு நேரமாகியும் யசோ வரவில்லை என்றதும் அவர்கள் மூவருக்குமான உணவை எடுத்துக்கொண்டு கமலாம்பிகையே இங்கு வந்து சேர்ந்தார். இருந்த பசிக்குப் பாயில் இருந்தபடியே பிள்ளைகளுக்கும் கொடுத்துத் தானும் உண்டு முடித்தாள்.
ஆனந்தன் அங்கே இருப்பதால் கமலாம்பிகையின் இரவுத் தங்கல் இங்கேதான். அவரும் அங்கேயே ஒரு கரையாகச் சரிந்துகொண்டார்.
அவர் அறியாமல் அவரைக் கவனித்தாள் யசோ. அவர்களின் தந்தை இறந்ததில் இருந்தே அவரின் இயல்பான சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, இன்று காணாமலே போயிற்று. அவரின் உலகம் இந்த இரண்டு வீடுகளாகச் சுருங்கிப் போயிற்று. அவருக்கு என்று தனித்த விருப்பங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டா என்றுகூடத் தெரியாது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்துகொள்வார். சற்றுப் பருமனான தோற்றமுடையவர் என்றாலும் ஒரு இடத்தில் ஓய்ந்து இரார். அந்த வீடு மாறி இந்த வீடு என்று இரு வீட்டுப் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு, வேலைகளையும் செய்துகொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். அவரும் பாவம். அன்னையை எண்ணி அவள் மனம் இரங்கிற்று.
“ஏதும் பிரச்சினையாம்மா?” பிள்ளைகள் இருவரும் உறங்கிய பிறகு மெல்ல வினவினாள்.
அந்தக் கேள்விக்கு உடனேயே பதில் சொல்லவில்லை கமலாம்பிகை. நடந்ததைச் சொல்லத்தான் வேண்டுமா என்று யோசித்தார். சொன்னால் தமக்கையின் கோபத்தின் பின்னே இருக்கும் நியாயம் புரியுமோ என்றெண்ணி, “உங்களையும் ஆனந்தனையும் ஆஸ்பத்திரில வச்சு ஆரோ பாத்திட்டுப் போய் அவரின்ர வீட்டில சொல்லி இருக்குப்போல. அவே வந்து இங்க அக்காட்டச் சாடை மாடையாக் கதைச்சவே. சும்மா எங்கட மகனுக்குக் கெட்ட பெயரை வாங்கித் தரவேண்டாம். தனியா இருக்கிற பொம்பிளைக்கு எப்பிடி நடக்கவேணும் எண்டு தெரியாதோ அது இது எண்டு…” என்றவருக்கு அவர்களின் பேச்சை முழுவதுமாகச் சொல்ல மனமில்லை.
அவள் நல்லவளாகவே இருந்தாலும் தனியாக வாழும் வாழ்க்கை துணை தேடச் சொல்லுமாம். வயதும் அப்படியாம். அதுவும், அவளுக்கு முன்னாலேயே ஆனந்தனும் நிசாந்தினியும் சந்தோசமாக வாழும் வாழ்க்கையைப் பார்க்கையில் பிழையான ஆசைகள் வந்துவிடுமாம். கடைசியில் நிசாந்தினியின் வாழ்க்கை பிரச்சனையாவது மட்டுமன்றி, அவர்கள் மகனின் வாழ்வும் சீர்கெட்டுவிடுமாம் என்றதையெல்லாம் எப்படிச் சொல்வது?
சில நொடிகள் மௌனத்தில் கழிய, “இதுக்கு என்னம்மா முடிவு?” என்று வினவினாள் யசோதினி.

