அங்கே அறையில் அரண்டுபோய் அமர்ந்திருந்த சுரப்பியைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு வந்திருந்தது.
“என்னம்மா? ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்?” என்றபடி அவளருகில் தானும் அமர்ந்துகொண்டார்.
“இந்த அறைய விட்டு வெளில வர அப்பம்மா விடுறாவே இல்ல அம்மம்மா.” என்று அழுதாள் அவள்.
ஏற்கனவே உடலில் உண்டான மாற்றங்களால் குழப்பம், பயம், கவலை என்று இருக்கிறவளை இந்த அதிகமான கட்டுப்பாடும் சேர்ந்து தாக்குகிறது என்று கண்டு அவளை அப்படியே அணைத்துக்கொண்டார் மாதவி.
கோகிலா கொஞ்சம் அதிகமாகவே இவற்றைப் பார்ப்பார் என்று தெரியும். ஏன் யாழிசைக்கு மாதவிடாய் வந்தால் கூட நாட்டு முட்டையைப் பச்சையாகவே விழுங்க வைத்து, அந்தக் கோதுக்குள் நல்லெண்ணையை ஊற்றி இப்போதும் விழுங்க வைக்காமல் விடமாட்டார்.
இங்கு விழுங்கிவிட்டு வந்து அங்கு ஓங்காரித்துக்கொண்டிருப்பாள் யாழிசை.
சரக்குக் கறி அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் கொடுக்காமல் விடமாட்டார். அவளுக்கே அப்படி என்றால் பேத்திக்கு?
இதற்குள் கோகிலாவும் இசையும் சில பல பைகளோடு வீடு வந்தவர்கள் அங்கே இருந்த இருவரையும் கண்டு அதிர்ந்துபோனார்கள்.
அதுவும் யாழிசைக்கு அவரைக் கண்டதும் கண்கள் நிறைந்துபோயின. அவரும் சட்டென்று உணர்வுப் பிழம்பாகி, “அம்மாச்சி இசை.” என்று கைகள் இரண்டையும் விரிக்கவும் தடுமாறிப்போனாள் யாழிசை.
அதுவும் ஊதிய பலூன் போல் இருந்த அவர் தோற்றம் அவளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“இப்பிடித் தள்ளி நிக்காதீங்கோம்மா. அத்தேட்ட வாங்கோ இசை. என்னால எழும்பி வரேலாம இருக்கு.” என்று கையை நீட்டினார்.
அழுகையை அடக்கியபடி அவரிடம் சென்று தன் கையைக் கொடுத்தாலும் அவரருகில் அவள் அமரப் போகவில்லை. ஆனால், அவர் விடவில்லை. அவளை இழுத்துத் தன்னருகில் அமர்த்திக்கொண்டு அவள் முகம் முழுக்கத் தன் கைகளால் வருடினார்.
“என்ர பிள்ளைக்கு முகம் மாறியே போச்சு. என்னவோ பெரிய பிள்ளையா வளந்த மாதிரி இருக்கிறீங்க. எப்பிடி இருக்கிறீங்க செல்லம்? இந்த அத்தையோட ஒரு நாள் கூடக் கதைக்க மனம் வரேல்ல என்னம்மா?” என்றவரிடம் என்ன பதில் சொல்வாள்.
நடுங்கிய உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு மௌனமாகக் கண்ணீர் உகுத்தாள்.
“அத்த செய்தது பிழைதான். மன்னிக்க மாட்டியாம்மா?”
“விடுங்கோ ப்ளீஸ்.” முற்றிலுமாக உடைந்துவிடுவோமோ என்று பயந்து அவரிடமிருந்து தன் கையை அவள் விடுவிக்க முயல, “அப்பிடி எல்லாம் விடமாட்டன். நீங்க முதல் அத்தை எண்டு சொல்லுங்கோ. சொல்லம்மா. அத்த எண்டு சொல்லம்மா.” என்று அழுதார் அவர்.
“இப்ப எனக்கு ரெத்தம் எல்லாம் தண்ணியா போச்சாம். சின்ன காயம் வந்தாலும் ரெத்தம் போய் உயிர் போற ஆபத்து இருக்காம். தப்பித்தவறி அப்பிடி ஒண்டு நடந்தாத்தான் என்னைத் தேடி வருவீங்களா?” குழந்தை போன்று தன் நோயைச் சொல்லி அவளிடம் சலுகையை அவர் எதிர்பார்க்கவும் முற்றிலும் உடைந்தாள் அவள்.
“அத்த ப்ளீஸ். அப்பிடி எல்லாம் சொல்லாதீங்கோ!” என்றபடி அவர் தோளில் அவள் சாய, மாதவியும் முற்றிலுமாக உடைந்திருந்தார்.
“இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு நினைக்கேல்ல இசை. அங்க எல்லாரும் உங்களைப் பிழையாக் கதைக்கிறது பிடிக்காமத்தான் சொத்தை மாத்தி எழுத ஓம் எண்டு சொன்னனான். ஆனாலும் அத நான் உங்களுக்குத் சொல்லியிருக்கோணும்.” என்று அவர் மன்னிப்பு கேட்டார்.
பார்த்திருந்த எல்லோருக்கும் விழிகள் கலங்கித்தான் போயின. சுவர்ணாவுக்கு மட்டும் யாருமே அங்குத் தன்னை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லையே என்று எரிச்சல்தான் வந்தது. வேறு வழியில்லாமல் நின்றாள்.
அந்த நேரத்தில் உடைந்தாலும் யாழிசைக்கு அவரிடம் பழைய ஒட்டுதலும் நெருக்கமும் வரவில்லை. ஏதோ ஒரு விலகல். ஆனால், பாசம் அப்படியேதான் இருந்தது. கூடவே பாவமாகவும் இருந்தது. அதில் எப்போதும் போலவே அவரைக் கவனித்துக்கொண்டாள்.
அதற்குமேல் பொறுக்க முடியாத சுவர்ணா, “வெளிக்கிடுவமா அம்மா. இனித்தான் நான் போய்ச் சமைக்கோணும்.” என்று அழைத்தாள்.
மாதவிக்கு அங்கிருந்து புறப்படுவதை நினைக்கவே பிடிக்கவில்லை. அதில், “அப்ப நீ போய்ச் சமைச்சு, உன்ர வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு பின்னேரம் போல வாம்மா. அதுவரைக்கும் நான் இஞ்ச இருக்கிறன்.” என்று சொன்னார்.
“பிறகு பிள்ளைகள் வந்திடுவினம் அம்மா. பிறகு எனக்கு அவேயோடயே நேரம் சரியா இருக்கும்.”
“இண்டைக்கு ஒரு நாளைக்குத்தான பிள்ளை. சின்னாக்கள் ரெண்டு போரையும் அக்கா வீட்ட கொண்டுவந்து விட்டுட்டு அப்பிடியே வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோவன்.”
சுவர்ணாவுக்கு அதற்குமேல் அவர்கள் எல்லோர் முன்னும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு கோபம்தான் வந்தது. “இண்டைக்கு என்ன அலைய வைக்கப்போறீங்க!” என்று முணுமுணுத்துவிட்டுப் புறப்பட்டாள்.
அதன் பிறகு மாதவி சும்மா பேசிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஜீவன் இன்னும் கொஞ்ச நாள்களில் தாலி கட்டுவதற்காக விதுசாவுடன் இங்கு வரப்போகிறானாம் என்கிற செய்தியைப் பகிர்ந்தபடியே, வீட்டுக்கு வெளியே விறகடுப்பை மூட்டி, கறுத்த எள்ளை இலேசாக வறுத்தெடுத்தார்.
கூடவே மிளகு, சின்ன சீரகத்தையும் வறுத்தெடுத்து, அதைத் தனியாக அரைத்தெடுத்தார்.
வறுத்த கறுப்பு எள்ளு, மிளகு, சின்ன சீரகத் தூள் போதுமான அளவு, நாட்டுச் சக்கரை, வறுத்த உளுத்தம்மா, துளி உப்பு எல்லாம் சேர்த்து இசையையும் நளினியையும் கொண்டு உரலில் இடிக்க வைத்து, கையின் விரல் இடுக்குகளினால் நல்லெண்ணெய் வழிய வழிய அதைத் தானே உருண்டைகளாக இறுக்கிப் பிடித்தார்.
வேண்டாம் என்று மறுத்த சுரபியை விடாது இரண்டு வாய் உண்ண வைத்தவர் அப்படியே யாழிசைக்கும் தன் முதிர்ந்த கையாலேயே இரண்டு உருண்டைகளை ஊட்டிவிட அங்கிருந்த எல்லோர் விழிகளும் கசிந்துபோயின.
கோகிலாவும் நளினியும் சமைத்ததை வயிறும் மனமும் நிறையச் சாப்பிட்டுவிட்டு யாழிசையின் மடியிலேயே விறாந்தையில் சரிந்துகொண்டார். என்னவோ, விட்டுவிட்டுப் போகப்போகிறார் என்று தெரிந்து, வேலைக்குப் புறப்படும் அன்னையின் காலையே சுற்றும் குழந்தையைப் போல், யாழிசையைத் தன் கைப்பிடியிலேயே வைத்துக்கொண்டார்.
“அங்க துளசியும் உங்கள மாதிரித்தானம்மா. பாசமா கவனிப்பா. என்ன வாயில்லா பூச்சி. ஆனாலும் இப்பிடி உங்கட மடில படுத்துக் கிடக்கத்தான் மனம் நிம்மதியா இருக்கு.” அவர் அவர் பாட்டுக்குச் சொல்ல, துருத்திக்கொண்டு வந்த கண்ணீரை அவர் அறியாமல் சுண்டிவிட்டாள் யாழிசை.
“டொக்டரிட்ட போனனீங்களா அத்த? எப்பிடி அவே இப்பிடிக் கவனம் இல்லாம ரெத்தம் தண்ணியாகிற வரைக்கும் விட்டவே.” என்று பேச்சை மாற்றினாள்.
“எல்லாம் போறதுதான். நான் மறந்தாலும் தூயவன் மறக்கமாட்டார். ஆனா எனக்குத்தான் வர வர இப்பிடி ஒரு வாழ்க்கை வாழோணுமா எண்டு இருக்கு. எல்லாருக்கும் பாரமா, எல்லாரையும் நோகடிச்சுக்கொண்டு ப்ச்! உங்கட மாமா என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.” என்றதும் அவள் கண்ணீர் கன்னத்தில் வழிந்தேயிருந்தது.
மனத்தளவில் அவர் மிகவும் பலகீனமாகியிருப்பதை நன்றாகவே உணர முடிந்ததில் யாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கோகிலாதான், “மாதவி, என்ன கதை இதெல்லாம். கொஞ்சம் வயது வந்தா நோய் நொடியெல்லாம் வாறதுதான். அதுக்குச் சும்மா கண்டதையும் கதைக்காமக் கொஞ்சம் படுத்து எழும்புங்கோ!” என்று மூத்தவராக அதட்டி, அவரை உறங்க வைத்தார்.
அவர் உறங்கி எழுந்து தேநீர் அருந்தி முடிக்கவும் சுவர்ணா வரவும் சரியாக இருந்தது.
அப்போதும் மாதவிக்கு அங்கிருந்து போகவே மனமில்லை. ஆனால், வேறு வழியில்லையே. புறப்பட்டவர் சுரபியின் கையில் கொஞ்சப் பணத்தை எடுத்துப் பொத்தினார்.
அவ்வளவு நேரமாக இளகி இருந்த நேசன் சட்டென்று இறுகிப்போனான். மகள் கையில் இருந்ததை வாங்கி அவரிடமே திருப்பிக் கொடுத்து, “இண்டைக்கு உங்களில் கோபம் எண்டு பெருசா எதுவும் இல்லை அக்கா. அதுக்காக நடந்த எதையும் நாங்க மறக்கேல்ல. அதால இனி எந்தக் காலத்திலயும் காசு பணம் எங்களுக்க நடுவில வரவே வேண்டாம். தயவு செய்து இப்பிடி எல்லாம் செய்யாதீங்க.” என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட மாதவிக்கு வாயடைத்துப்போனது.
எப்படி கண்ணீருடன் அந்த வீட்டுக்குள் வந்தாரோ அப்படியே கண்ணீருடன் புறப்பட்டுச் சென்றார்.
இங்கே இத்தனையும் நடக்கையில் அங்கே ஒரு பருந்து, தன் கோழிக்குஞ்சு இதே ஊரில் இருப்பதை அறிந்துகொண்டதில் ஊர் முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தது.

