கடன் அன்பை முறிக்கும் 16 – 2

“மாமா…”

 

அவர் அவனை எதுவும் பேச விடவில்லை. “தம்பி, உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். தெரிஞ்சும் நீங்க செய்தது பெரிய பிழை. அது காணாது எண்டு இன்னும் நீங்க எங்களோட விளையாடப் பாக்கிறீங்க எண்டு தெரியுது. ஆனாலும் நான் பொறுமையா போறதுக்குக் காரணம், இது என்ர பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கை எண்டதாலதான். இனி நீங்க என்ர மகளுக்கு வேண்டாம். அதில நான் தெளிவா இருக்கிறன். அதுக்காக இப்பிடி அவாவை தனியா வச்சிருக்கவும் நான் ரெடி இல்ல. எனக்கு டிவோர்ஸ் வேணும். அதுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டுப் போங்கோ. அவ்வளவுதான் நான் கேக்கிறது. அதுக்குத்தான் வரச் சொல்லுறன்.” என்றார் தெளிவாக.

 

“இல்ல மாமா. நானும் ஏமாத்த நினைக்கேல்ல. வரத்தான் இருந்தனான். உண்மையா பாஸ்போர்ட்ல பெயர் பிழையா இருக்கு.” என்று உண்மை போலவே அடித்துப் பேசினான் அருள்.

 

“ஓ! எங்க பாஸ்போர்ட்ட எடுத்துக் காட்டு.” என்றான் தூயவன் சட்டென்று.

 

அருள் விழிகளில் வேகமாகப் பயம் படர்ந்தது. “அது… அதை எம்பஸில குடு…” என்றவனை முடிக்க விடவில்லை.

 

“என்னடா எங்களைப் பாக்க உனக்கு எப்பிடி இருக்கு? கேனப்பயலுகள் மாதிரியா? செய்றதையும் செய்துபோட்டு நீ ஆயிரம் கதை சொல்லுவாய். அத நாங்க கேட்டுக்கொண்டு இருக்கோணுமோ? நான் சொல்லுறதைக் கேளு. மரியாதையா வந்திடு. இல்லை எண்டு வை. இப்ப சாதாரண கேஸ்லதான் உன்ர தம்பி உள்ளுக்க இருக்கிறான். பிறகு அது எப்பிடியான கேஸா மாறும் எண்டு எனக்கே தெரியாது. அப்பிடியே உன்ர அப்பாவும் பொம்பிளைக் கேஸ்ல உள்ளுக்குப் போவார். போக வைப்பன்.” என்றதும் பெரியவர்கள் இருவரும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்கள்.

 

அருளுக்குத் தொண்டை எல்லாம் உலர்ந்து போனது. அருளின் அப்பா தலையில் அடித்துக்கொண்டு அழவே ஆரம்பித்திருந்தார்.

 

அவர் புறமாகக் கைப்பேசியத் திருப்பிக் காட்டி, “நல்லா பார். அழுகைச் சத்தம் கேக்கிற இந்த வீட்டில ஒப்பாரிச் சத்தம் கேக்க வச்சிடாத!” என்றான் தூயவன்.

 

“உன்னக் கையெடுத்துக் கும்பிடுறன். நீ செய்த கேவலம் எல்லாம் போதும். தயவு செய்து சொன்ன திகதில வந்து இறங்கிடு. இல்லையா உன்னப் பெத்த பாவத்துக்கு நானும் உன்ர அம்மாவும் உயிரோட இருக்க மாட்டம். இத்தனை வயசுக்குப் பிறகு இதையெல்லாம் அனுபவிக்க என்னால ஏலாது.” என்று அழுதார் அவன் தந்தை.

 

“இல்ல இல்ல நான் வாறன். அப்பாவை ஒண்டும் செய்து போடாதீங்கோ.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த அருளுக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை.

 

*****

 

சுரபிக்கு உதிரப்போக்கு நின்றுவிட்டபடியால் ஏழாம் நாளுக்கே ஐயரைக் கூப்பிட்டுத் துடக்கு கழிக்க ஏற்பாடு செய்தார்கள்.

 

கோகிலா அவளுக்கென்று வைத்திருந்த அவரின் தாலிக்கொடியைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, இத்தனை காலத்தில் நளினி வேலைக்குப் போய்ச் சேர்த்த பணத்தையும் சேர்த்து, சுரபிக்கு ஏற்றாற்போல் சின்ன சின்னப் புது நகைகள் வாங்க வைத்திருந்தாள் யாழிசை.

 

“அது உனக்கு எண்டு அம்மா வச்சிருந்தது இசை.” என்ற தமையனிடம், “எனக்கு இப்போதைக்கு கட்டுற எண்ணம் இல்லை அண்ணா. நான் உழைச்சு, நானே சேமிச்சு, எனக்குச் செய்துகொள்ளுறன். இப்ப சுரபிக்குத்தான் முக்கியம்.” என்றுவிட்டாள் அவள்.

 

பேத்திக்குச் செய்வதில் கோகிலாவுக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், இருப்பதையும் அவளுக்குக் கொடுத்துவிட்டால் மகள் பாவமே என்று யோசித்தார்.

 

ஆனால், தங்கள் மகள் வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் தனக்காகச் சேமிப்புப் பணத்தை எடுத்த அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இதைச் செய்வதில் இசைக்கு மிகுந்த மகிழ்ச்சியே!

 

நளினி நெகிழ்ந்துபோனாள். யாழிசை உழைக்க ஆரம்பித்து, அதைச் சேமித்து, நகை சேர்த்து, எப்போது திருமணமாவது என்று பல கேள்விகள் உள்ளே ஓடினாலும் கணவன் சொன்னதுபோல, கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மகளின் விசேசத்தில் கவனம் செலுத்தினாள்.

 

இந்த முறையும் மாதவியை அவர்களாகக் கூப்பிட மிகவுமே தயங்கினார்கள். ஆனால், அந்த வேலையை மாதவி அவர்களுக்கு வைக்கவில்லை.

 

அவரே அழைத்துக் கேட்டு, எப்போது விழா என்று தெரிந்துகொண்டு, அன்று போலவே இன்றும் காலையிலேயே தயாராகி சுவர்ணாவோடு வந்து இறங்கியிருந்தார்.

 

விழா நல்லபடியாகவே நடந்தது. சுரபியைப் பார்க்க வந்தவர்களுக்கு மட்டும் சொல்லிச் செய்தார்கள். கை, கழுத்தில் தங்க நகைகள் இல்லாதபோதிலும் அழகான ஒரு சேலையில், தன்னைத் தானே அலங்காரம் செய்து, எல்லோர் கண்களையும் நிறைத்தபடி ஓடியாடி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த இசையிடமிருந்து அவரால் விழிகளை அகற்றவே முடியவில்லை.

 

அவளைத் தன்னிடம் அழைத்து உச்சி முகர்த்தார். “சுரபியோட சேத்து இண்டைக்கு இசைக்கும் சுத்திப் போடுங்கோ அக்கா.” என்று கோகிலாவிடம் சொன்னார்.

 

கோகிலாவும் அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தார். மகளுக்கு 22 வயதாகிறது, பெரிய பெண் என்று தெரிந்தாலும் அவளை இப்படிச் சேலையில் பார்த்த பொழுதுகள் மிக மிகக் குறைவே.

 

நளினி வேறு, “இசைக்கும் இனிக் கலியாணத்துக்குப் பாக்கோணும் போலத்தான் இருக்கு மாமி.” என்று சொல்லிவிட, கண்ணோரம் சேர்ந்துவிட்ட நீரோடு தலையசைத்துக் கேட்டுக்கொண்டார் கோகிலா.

 

அன்று மாதவி வந்துவிட்டுப் போன செய்தி அறிந்த கணமே யாழிசைக்கு ஜீவன் அழைத்திருந்தான். அப்போதும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. அவளுக்கு என்னவோ திரும்பவும் இதையெல்லாம் ஆரம்பிப்பதில் உடன்பாடில்லை.

 

அதனாலேயே இன்று மாதவி இங்கு வருகிறார் என்று தெரிந்து, அவரின் கைப்பேசிக்கு அழைத்தான் ஜீவன். அவர் ஏற்றதுமே, “இசைட்ட குடுங்கம்மா.” என்றுதான் சொன்னான்.

 

அவரும் அழைக்க, “என்ன அத்த?” என்றுகொண்டு வந்தவள் கைப்பேசியில் வீடியோ கோலில் இருந்த ஜீவனை எதிர்பார்க்கவில்லை.

 

அவன் இவளை முறைத்துக்கொண்டிருந்தான். “எத்தின தரம் எடுத்திருப்பன். ஒரு நாள் எடுத்தியா நீ? அவ்வளவு பிடிவாதம் என்ன உனக்கு? உன்னோட கதைக்கவே கூடாது எண்டு நினைச்சாலும் மனம் கேக்கேல்லை.” என்று பொறிந்துவிட்டு, “எப்பிடி இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

 

“நல்லாருக்கிறன். நீங்க?”

 

பதில் சொல்லாமல் அவளையே பார்த்த ஜீவனின் விழிகளில் மெல்லிய வலி.

 

இதற்குள் கைப்பேசித் திரைக்குள் எட்டிப் பார்த்த விதுசாவைக் கண்டுவிட்டு, “ஹாய்!” என்றாள் யாழிசை.

 

“ஹாய், ஒரு நாள் கூட இவர் உங்களப் பேசாம இருந்ததே இல்ல. இலங்கைக்கு வந்தா உங்களோட பெரிய சண்டையே இருக்கு எண்டு சொல்லுறவர்.” என்று கலகலத்தாள் அவள்.

 

கேட்டிருந்தவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “நீங்க அத்தையோட கதைங்கோ. எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு.” என்று நழுவப் பார்த்தாள்.

 

“பாத்தியா எப்பிடி நாசூக்கா நழுவுறாள் எண்டு.” என்று மனைவியின் புறம் திரும்பிச் சொன்ன ஜீவன், “இப்ப அவா பெரிய மனுசி. எங்களோட எல்லாம் கதைக்க மாட்டா. மச்சான் எண்டு வாயில வரவே இல்ல. ஆரோடயோ கதைக்கிற மாதிரிக் கதைக்கிறா. ஓகே. நீங்க போய் உங்கட வேலையப் பாருங்கோ மேடம். நாங்க உங்கட டைம வேஸ்ட் ஆக்கேல்ல. ஓகேயா?” என்றான் கடுப்புடன்.

 

சின்ன வயதிலிருந்து சேர்ந்தே வளர்ந்தவர்கள். அவளுக்கு அவன் பாடமெல்லாம் சொல்லித் தந்திருக்கிறான். நடுவில் மனங்கள் சலனப்பட்டாலும் இயல்பான அந்தப் பாசம் அவளுக்குள் இல்லாமல் இல்லை. அதில் அவன் கோபத்தில் இலேசாக வலி இல்லாமலும் இல்லை.

 

ஆனாலும், “ஓகே! அத்தேட்ட குடுக்கிறன் கதைங்கோ.” என்றுவிட்டு, சொன்னது போலவே அவரிடம் கொடுத்துவிட்டுப் போனாள் அவள்.

 

இதை ஜீவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் அப்படிச் சொன்னால், ‘அப்பிடி எல்லாம் இல்ல மச்சான்’ என்று சொல்வாள் என்றுதான் எதிர்பார்த்தான்.

 

அதுவே அவள் எந்தளவில் தங்கள் எல்லோரையும் விட்டு விலகிவிட்டால் என்று சொல்ல, “என்னம்மா இவள் இப்பிடி இருக்கிறாள்.” என்றான் அன்னையிடம்.

 

அவருக்கும் அது தெரிந்துதான் இருந்தது. அத்தை என்று கூப்பிட்டு அவரை நன்றாகக் கவனிக்கிறாள்தான். ஆனால், முன்னர் எல்லாம் அவள் அழைக்கும் அத்தையில் பாசம் சொட்டும். இப்போது? அது சாதாரண ஒரு அழைப்பாயிற்று. அங்கே வைத்து அவரால் அதைப் பற்றி ஒன்றும் பேச முடியவில்லை.

 

“பிறகு, அங்க வீட்டை வந்து கதைக்கிறன் தம்பி.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

மனம் கேளாமல் நேசனுக்கு அழைத்து எல்லோருடனும் கதைதான் ஜீவன். ஆனால், கோகிலா தொடங்கி யாழிசை வரை அளவாகப் பேசிப் பேச்சைக் கத்தரித்ததில் மிகவும் காயப்பட்டுப்போனான். பொறுக்க முடியாமல் காத்திருந்து இரவு மாதவி வீடு வந்ததும் அழைத்தான்.

 

நடந்து முடிந்த விசேசம் பற்றிக் கேட்டுவிட்டு, “இன்னும் கோவமாத்தான் இருக்கினம் போல என்னம்மா?” என்றான்.

 

“அண்டைக்கும் காசு வாங்கேல்ல. இண்டைக்கு ஒரு சின்ன செயின் வாங்கிக்கொண்டு போனனான். போட விடவே இல்ல.” விழிகளில் நீர் கோக்கச் சொன்னார் அவர்.

 

“இனி அவே ஆரும் பழையபடி எங்களோட கதைக்கப் போறேல்ல அம்மா.” மிக அருமையான மனிதர்களின் அன்பை இழந்த வலி இருவரிடத்திலும்.

 

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “ஃபோட்டோஸ் இருந்தா அனுப்பி விடுங்கம்மா. பாப்பம். இசை டக்கெண்டு பெரிய பொம்பிளை ஆனமாதிரி இருக்கு.” என்று ஜீவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அங்கே வந்தான் தூயவன்.

 

“என்ன சித்தி, விசேசத்துக்குப் போயிட்டு வந்தாச்சா?”

 

“ஓமப்பு. ஒரு குறையும் இல்லாம நிறைவா நடந்தது.” என்றுவிட்டு “இதுல இண்டைக்கு எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. தம்பிக்கு ஒருக்கா அனுப்பி விடப்பு.” என்று தன் கைப்பேசியை அவனிடம் கொடுத்தார்.

 

ஜீவனோடு கதைத்தபடியே இன்றைக்கு அவர் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான். அங்கே, இத்தனை நாள்களாக அவனை அலைய வைத்துக்கொண்டிருந்தவள், மாதவி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் அருகில் தரையில் முழங்கால்களை ஊன்றி அமர்ந்து, அவர் மடியில் கையை வைத்தபடி சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

 

இந்த முகத்தைப் பார்க்க அவனை ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்க வைத்துவிட்டாளே. அவன் கண்கள் முதலில் அவள் காதுகளையும் கழுத்தையும்தான் வேகமாக ஆராய்ந்தன.

 

சேலைக்கு ஏற்ற நிறத்தில் அணிகலன்கள் பூட்டி அழகாய் ஜொலித்தாலும் அதில் ஒன்று கூடத் தங்கமில்லை என்கிற உண்மை, கூர் ஈட்டியாய் அவன் நெஞ்சைக் கீறிக்கொண்டு போனது.

 

இதற்குள், “அண்ணா, அண்ணா கதைக்கிறது கேக்கேல்லையா?” என்று பலமுறை குரல் கொடுத்திருந்தான் ஜீவன்.

 

“நீ வை. நெட் வேலை செய்யேல்ல போல. நான் வெளில வந்து உனக்கு ஃபோட்டோஸ் அனுப்பி விடுறன்.” என்றவன் வெளியில் வந்து, முதல் வேலையாக அவர் கைப்பேசியில் இருந்த அவளின் புகைப்படங்களை அவனுக்கு மாற்றிக்கொண்டான்.

 

அவன் கைப்பேசியில் தரவிறக்கிக் கொண்டதும் அவர் கைப்பேசியில் அவனுக்கு அனுப்பி வைத்த தடத்தை அழித்தான். அப்படியே அவள் இலக்கங்களையும் எடுத்துக்கொண்டான். அதன் பிறகுதான், அதுவும் யாழிசை தனியாக இருந்த புகைப்படங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு மிகுதியை ஜீவனுக்கு அனுப்பிவைத்தான்.

 

error: Alert: Content selection is disabled!!