அத்தியாயம் 11
‘Change is a pesky notion. For many folks, the biggest challenge in changing their eating habits isn’t money, time, or education; it’s reframing their connection between food and love.’
Kris Carr
விடிந்தும் விடியாத பொழுதில் ஹீத்ரு விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள், ஹோம் குக்கிங் குழுவினர்.
“லஞ்ச் உங்களோடுதான், சந்திப்போமே!” அங்கிருந்தே விடைபெற்றுக்கொண்டார், ஆரோன் டேல். சற்றே தயங்கி ஒலிவியாவைப் பார்த்தவருக்கு, அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் போலிருந்தது.
வேர்த்க்குச் சொல்வது தானே தனக்கும். போட்டியின் நடுவராக, போட்டியாளர்களுடனான பழக்கம், நெருக்கத்துக்கு நிச்சயம் வரையறை தேவை என்பவர் அவர். இன்று…
“கவனம், நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு நகர்ந்தார்.
மற்றவர்களை அழைத்துச் செல்ல ஹோட்டல் வாகனம் தயாராக இருந்தது.
போட்டியாளர்கள் ஐவருக்கும் நடுவர்கள் இருவருக்குமாக மூன்றாம் தளத்திலும் நிகழ்ச்சிக்குழுவினருக்கு இரண்டாம் மாடியிலும் அறைகள் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
ஒன்று ஒன்றும், எல்லா வசதிகளும் கொண்ட நவீன ஒற்றைப்படுக்கை அறைகள்.
“சரியாக பன்னிரெண்டுக்கு, கீழே ரெஸ்டாரண்டில் சந்திப்பம்.” கிறிஸ்டினா சொல்ல, தலையாட்டிக்கொண்டே தத்தம் அறைக்குள் நுழைந்து கொண்டார்கள்.
எல்லோருக்கும் நீண்ட பயணம் செய்த களைப்பு. இதமான நறுமணம் தவழ்ந்த நவீன அறையை, வெள்ளை வெளேரென்ற விரிப்போடு அங்கு கிடந்த மெத்தென்ற கட்டிலைப் பார்க்கவும் தான் உடல் அசதி தெரிந்தது.
விழிகளைச் சுழற்றிப் பார்வையிட்ட ஒலிவியா, முதல் வேலையாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். உடல் நோவும் களைப்புமாக உணர்ந்தவள் அதை விரட்டியே தீர வேண்டும் என்று நன்றாக முழுகினாள். இருந்தும் மிகுந்த சோர்வாக உணர்ந்தவள், ‘தூங்கி எழுந்தால் சரிவரும்’ ரிசப்ஷனுக்கு அழைத்து, “பதினொண்டரைக்கு எழுப்பி விடுங்கோ!” சொல்லிவிட்டு, சில நிமிடங்களும் சென்றிராது ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து விட்டாள். அவள் மட்டுமல்ல, ஹோம் குக்கிங் குழுவே உறக்கம் தான்.
மதியப்பொழுது…
“ஹேய் கைஸ்…வாட் ஹாபன்ட்?” பதினொண்டரைக்கே ஹோட்டலுக்கு வந்த ஆரோன் டேல், போட்டியாளர்களும் நடுவர்களும் தங்கியிருந்த மூன்றாம் தளத்துக்கே வந்துவிட்டார்.
“ஒலிவியா இன்னமும் எழும்பவில்லை. ரிஷப்சனில் எலாரம் வைத்தாளாம், ஃபோன் பண்ணினால் எடுக்கவும் இல்லை. கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை. இப்பதான் நாங்களும் வந்தோம்” என்றார், கிறிஸ்டினா.
“அவள் எப்போதுமே லேட் தான். பாத்ரூமில் நிக்கிறாள் போலும்.” என்றபடி வந்த டொறதி, “மியா இருக்கும் வரைக்கும் எப்பவுமே இவளை எழுப்பி விட்டு விட்டுத்தான், தான் வெளிக்கிடவே போவாள்.” இது எங்களுக்குப் பழகியதொன்று என்றாள், சிரிப்போடு.
“ஓ பிறகென்ன? உங்கட உங்கட வேலைகளைப் பார்த்திட்டு கீழே ரெஸ்டரோரண்ட் போங்கோ. மற்றவர்கள் அங்கு வந்து விட்டார்கள். இன்னும் ஒரு பத்து நிமிடம் வரை பொறுக்கலாம். இல்லையோ கதவை ஓபன் பண்ணிப் பார்க்கலாம்.” சொல்லி முடிக்கவில்லை, “இல்லை, இப்பவே ஓபன் செய்து பார்ப்போம்.” என்றான், வேர்த் .
“ஒலிவியா!” சற்றே சத்தமாகவே கதவைத் தட்டினார், ஆரோன் டேல்.
குளியலறை, முன்வாயில் ஓரத்தில் தான். காதைக் கதவில் வைத்து உன்னிப்பாகக் கேட்டான், வேர்த். உள்ளே வலு நிசப்தமாக இருக்கவும் கலவரத்தோடு ஆரோனைப் பார்த்தவன், “ஓபன் பண்ணிப் பார்க்கலாம் செஃப்.” தவிப்போடு சொன்னான்.
ஆரோனுள்ளும் கலவரம் தான். முதல் நாள் அவள் கண்ணீர் விட்டதும் தோளில் தலை சாய்த்து உறங்கியதும் காரணமில்லாது நினைவிலாடியது.
“சரி…” அடுத்த இரண்டாவது நிமிடம் ரிஷப்ஷனில் இருந்து அன்றைய பகல் பொழுதுக்குப் பொறுப்பானவன் வந்து சேர்ந்தான்.
அப்போதும் கதவில் தட்டிப் பார்த்துவிட்டே திறந்தார்கள். முதலில் உள்ளிட்ட கிறிஸ்டினா, படுக்கைக்குள் சுருண்டு கிடந்தவளைப் பார்த்துவிட்டு முறைப்போடு நின்றார்.
சட்டென்று கோபம் கொண்டார், ஆரோன் டேல்.
“இர்ரெஸ்பான்சிபிள் இடியட்!” சிறுபொழுதில் பதற்றம் கொள்ள வைத்துவிட்டாளே! முணுமுணுத்துக்கொண்டே வெளியேற முனைந்தவர், “ஒலிவியா!” அதட்டலாக அழைத்தார். கம்பளிப்போர்வையில் சிறு அசைவு தெரிந்தாலும் அவள் எழுந்துகொள்ளவில்லை.
“ஒலிவியா!” டொறத்தியும் கிறிஸ்டினாவும் சென்று தட்டி எழுப்ப முனைந்தவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
“இப்பிடி ஹீட்ட்டா இருக்கு! நல்ல காய்ச்சல்.” கதவடியில் நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார், கிறிஸ்டினா.
பதற்றத்தோடு வந்த ஆரோனும் வேர்த்தும், கண்ணீர்க் கோடோடு நடுங்கியபடி குயில்டுக்குள் குரண்டியவளைப் பார்த்துப் பயந்தே போனார்கள்.
நன்றாகத்தானே இருந்தாள்?
அடுத்த அரைமணி நேரம் அந்த இடம் பதற்றப் போர்வைக்குள்!
“நல்ல காலம், நாளை இரவு தான் ஷூட்டிங்!” சற்று நிம்மதியோடு முணுமுணுத்தான், வேர்த்.
பயணக் களைப்பு, ஈரத்தலையோடு உறக்கம் காரணமாக வந்த காய்ச்சல், பயப்படும் படி ஒன்றுமில்லை என்றார், மருத்துவர். ஆரோன் டேலின் நெருங்கிய நண்பர் அவர், ஹோட்டலுக்கே வந்து பார்த்திருந்தார். இல்லையோ, இலண்டன் மருத்துவ வசதி வாய்ப்புகள், முழி பிதுங்க வைத்துவிடும் நிலையில் இருக்கிறதே!
மருந்தைக் குடித்து விட்டு அப்படியே குறண்டியவளுக்கு, தன்னைச் சுற்றி யார் நின்றார்கள் என்று கூட நினைவில்லை.
ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ஆவலாகக் கேட்டவள் அறைக்குள் முடங்கிக் கிடக்க, இப்போது வெளியில் செல்ல ஒருவருக்குமே மனம் வரவில்லை. இருந்தாலும் திட்டமிட்டபடி எல்லோரும் போய் வாருங்கள் ஒலிவியாவோடு நான் நிற்கிறேன், என்றார் கிறிஸ்டினா.
“அதுதான், நானும் நிக்கிறேன்.” ஆரோன் சொல்ல, வேர்த் “நானும்” என்றான். ஆரோன் விடவில்லை, நிகழ்ச்சிக்குழுவும் வேர்த்தும் மற்றைய நான்கு போட்டியாளர்களும் புறப்பட்டுச் சென்றிருந்தார்கள்.
ஒலிவியாவுக்கு சூப் வாங்கிக்கொண்டு சென்று எழுப்ப, சற்றே தெளிந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தவள், “சொறி!” முகத்தைக் கைகளால் தேய்த்துக்கொண்டாள்.
“சொறி எல்லாம் இல்லை, நாளைக்குப் பின்னேரம் ஷூட்டிங்குக்கு பழைய ஒலிவியா வர வேண்டும் எனக்கு, அவ்வளவும் தான்!” ஆரோன் டேல் குரலில் கண்டிப்பு இருந்தாலும், அவள் தலையை வருடியவர் பரிவையும் பாசத்தையும் அவளுள் கடத்தினார்.
அந்த அறையில் இருவர் அமரக்கூடிய அளவில் ஒரு சொகுசு இருக்கை இருந்தது. அதில் சென்று அமர்ந்தவர் மடிக்கணனியை உயிர்ப்பித்து, தன் வேலையில் ஆழ்ந்துவிட்டார்.
தனக்காக நடுவர்கள் இருவரும், அதுவும் எவ்வளவு பெரியவர்கள் தம் பிரத்தியேக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு இருப்பது அவளை மிகவுமே நெகிழ்ச்சி கொள்ள வைத்தது. ஆனால், வேர்த்? எதிர்பார்ப்பு பலமாகவே அடி வாங்கிற்று.
குளியலறை சென்று தன்னைச் சுத்தப்படுத்திவிட்டு வந்து சூப்பை அருந்தியவாறே கிறிஸ்டினாவோடு கதைத்துக்கொண்டு இருந்தாள், ஒலிவியா. அன்று மாலை ஓரளவுக்கு உடல் தேறிவிட்டவள், எல்லோரும் ஊர் சுற்றப் போனதுக்கு அப்போதிருந்து கவலைப்பட்டுக்கொண்டு இருந்தாள். அதிலும் மீண்டும் மீண்டும் வேர்த் நினைவில் வந்தான்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மனதுள் முறைப்பு எக்கச்சமானது. பெரிதாக அக்கறையுள்ளவன், அன்புள்ளவன் போல் நடிப்பான். இங்கு நான் காய்ச்சலில் கிடக்க ஊர் சுற்றப் போய்விட்டான். மனம் களைக்காது சிடுசிடுத்தபடி இருந்தது.
‘நீ என்ன அவன் காதலியா?’ மனம் கேட்க, பட்டென்று சிரிப்புத்தான் வந்திட்டு. சிரித்துவிட்டாள்.
“என்ன தனியாகச் சிரிக்கிறாய்?” கிறிஸ்டினா கேட்கவும் தடுமாறியவள் பார்வை, தன்னை நிமிர்ந்து பார்த்த ஆரோனிலும்.
“அது…ஒன்றுமில்லை.” சமாளித்தாள்.
அவள் முகத்தை ஊன்றிப் பார்த்து ஆராய்ந்தார், கிறிஸ்டினா. பின் சிறு சிரிப்போடு கதைத்தார்.
“போட்டி முடியும் வரை நாங்கள் மூவரும் நடுவர்கள். அதிலும் செஃப் தோமஸ் வேர்த் உன் நடுவர் என்பதை நினைவில் வைத்திரு என்ன! அதுதான் வெளி உலகிலும் போட்டியிலும் தேவையற்ற கதை பேச்சுகளைத் தவிர்க்க உதவும்.” திடுமென்று முகத்துக்கு நேரே சொல்லவும் முழித்தாள், ஒலிவியா.
“ஹா…ஹா…” வாய்விட்டே சிரித்தார், ஆரோன். ஆட்காட்டி விரல் அவளுக்குக் கவனம் வேறு காட்டிட்டு.
“அவன் அருமையான மனிதன் ஒலிவியா. அதோடு, இது உன் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் போட்டி முடிந்திரட்டும்.” பகிடியாகச் சொல்கிறார் போல் இருந்தாலும் விசயம் இதுதான் என்று சொல்கிறார்கள் என்பது விளங்காதிருக்க அவள் குழந்தையா?
மிகவுமே தடுமாறிப் போனாள், ஒலிவியா.
“அஹ்…அம்ம்… நீங்கள் மூவருமே என் பிரியத்துக்கும் மதிப்புக்கும் உரிய நடுவர்கள். நான் ஒருநாளும் அதை மறக்கவில்லை. உங்களை எல்லாம் நேரில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்தும் இருக்கவில்லை. உங்களோடு கழித்த இந்த நாட்களை மனதில் எப்போதுமே வைத்திருப்பேன்.”
கண்கள் கலங்கச் சொன்னவளுக்கு, கூட்டிக் கழித்துப் பார்த்தால் வேர்த் ஒதுக்கம் காட்டுவதன் காரணம் பிடிபட்டுவிட்டது.
அன்பு காட்டவும் நேசிக்கவும் சில நாட்கள் பொறுக்க முடியாதா என்ன? அதுவும் தனக்கே தனக்கென்று உள்ள எதுவும் தன்னைவிட்டுப் போகாது என்று தீர்க்கமாகவே நம்புபவள் அவள். அதை, சிறுவயதிலிருந்து அவள் அன்னை தான் இவளுள் புகுத்தி இருந்தார்.
‘உனக்கானது உன்னோடுதான் இருக்கும். இல்லை, எவ்வளவு பெறுமதியானதாக இருந்தாலும் உன்னைவிட்டு விலகினால் கடந்து வந்துவிடு!’ என்பவர், தன் உறவுகள் விடயத்தில் கடக்கவில்லை, வருந்துகிறார். சரி, அதை விடுவோம்.’ என்றெண்ணியவள், தானும் இனி அவனோடு தேவையற்ற கதைகள் வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.
எல்லாமே, அன்றிரவு கதவு தட்டப்படும் வரைதான். திறந்தால் கிறிஸ்டினாவும் வேர்த்தும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“உனக்கு இப்ப எப்படி இருக்கு?” என்றபடி உள்ளிட்டவனைப் பார்த்து, வாயைச் சுழித்து முறைத்தாள், ஒலிவியா.
“எனக்கு என்ன நான் எப்பவும் போல் நன்றாகத்தான் இருக்கிறேன்.” வெடுக்கென்று சொல்லவும் செய்தாள்.
“ஊர் சுற்றிவிட்டு வந்து விசாரிக்க வந்திட்டார்.” முணுமுணுத்தாள். அது வேர்த் எலிக்காதுகளை உரசிச் சென்றதே!
அவன் முகத்தில் பிரகாசம்!
“ஒலிவியா!” அவள் கரத்தைப் பற்றியவன் கெஞ்சலாக கிறிஸ்டினாவைப் பார்த்தான்.
“நீயும் நான்கு வருடங்கள் காதலித்துக் கல்யாணம் செய்தவள் ப்ளீஸ்!” என்றதும் தான் தாமதம் முறைப்போடு பார்த்தார், கிறிஸ்டினா.
“இந்த விளையாட்டு இங்க நடக்காது வேர்த்! சுகம் கேட்டுட்டு வருவம் என்றாயா கூட வந்தேன். கேட்டுவிட்டாய் என்றால் நட, எனக்குச் சரியா நித்திரை வருகுது.” கறாராகவே சொன்னார்.
“கிறிஸ்டினா என்பவள் சற்றுமே இரக்கம் இல்லாதவள்!” சபித்தவன், “ஒலிவியா!” அவள் முன்னால் முழந்தாளிட்டான். அவள் திகைத்து ஓரடி பின் வாங்கினாள்.
“இங்க பார் பெண்ணே, பகல் நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று இப்படித்தான் முழங்காலில் இருந்து மன்றாடிக் கேட்டும் உனக்கு மிகவும் பிடித்த இந்த நடுவர்கள் இருவரும் என்னை அனுமதிக்கவில்லை!” நாடகபாணியில் வளைந்தபடி சொன்னவன் கழுத்தைப் பிடித்து நெரித்தார், கிறிஸ்டினா.
“உனக்கு இது வேலை. இது இல்லையோ ஒன்றுமே குறையப்போவதில்லை. உனக்கு என்று நல்ல பெயரும் தொழிலும் இருக்கு. நீ அச்சீவ் பண்ணிவிட்டாய் வேர்த். இவள் அதற்காகக் கடும் உழைப்பைப் போட்டுக்கொண்டிருக்கிறாள், ஆவலோடு காத்திருக்கிறாள். மறந்துவிடாதே!” கண்டிப்போடு சொன்னவர், “உனக்கு ஐந்தே ஐந்து நிமிடங்கள் தருகிறேன், வந்து சேர்!” விருட்டென்று வெளியேறி, “நான் இதில் தான் நிற்கிறேன், நினைவில் வைத்துக்கொள்!” கதவைப் படீரென்று சாத்தினார் .
எப்போதும் ஆரோன் டேல், வலக்கை கட்டி இடக்கையால் வாயைப் பொத்திக்கொண்டு நிற்பாரே, அதே நிலையில் நின்றாள், ஒலிவியா. விழிகள் கொட்டைப் பாக்காக விரிந்திருந்தன.
விசிலடித்தபடி எழுந்த வேர்த் விழிகள் சுருங்கின, நேசம் எக்கச்சமாகக் கசிய ஒலிவியாவை நெருங்கினான்.
“ஒலிவியா மை ஸ்வீட்டி!” என்றபடி அவள் கரம் பற்றியவன் சிறு சுண்டலில் அவளைத் தன்னுள் கொண்டு வந்திருந்தான். என்னதான் அவன் மனத்தைப் படித்திருந்தாலும் ஊகங்கள் ஒன்று ஒன்றும் நிதர்சனமாகையில்… அக்கணம் இதமாக அதிர்ந்தாள், ஒலிவியா.
“நாம் இருவரும் காதலிப்போமா?”அன்பு கசிய மெல்லக் கேட்டவன் விழிகளால் நேசம் வழிந்தது. அவளுள் இதத்தோடு சேர்ந்து பயம், தவிப்பு, சந்தோசம் எல்லாம் கலந்து கட்ட அவனுள் ஒன்றிவிட்டாள்.
‘இந்தக் கணத்தைச் சத்தியமாகவே எதிர்பார்க்கவில்லை.’ வார்த்தைகள் முட்டி நின்றன, நா அசையவில்லை.
அவனுக்கு, அவள் வாய்மொழியாகச் சொல்லும் தேவையே இருக்கவில்லை.
“அன்று என்னோடு இணைந்து பாடினாயே, அதையே உன் சம்மதமாக எடுத்துவிட்டேன் பெண்ணே!” என்றபடி, இறுகக் கட்டிக்கொண்டவன், “உன் விருப்புக்கு, முன்னேற்றத்துக்கு நம் காதல் ஒருபோதும் தடையாக இருக்காது! ஐ ப்ரொமிஸ்!” கிசுகிசுப்பாகச் சொன்னவன், தம் நேசத்துக்கு அச்சாரமாக ஆழ்ந்த முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு அடுத்த நிமிடமே வெளியில் சென்றிருந்தான்.

