கடன் அன்பை முறிக்கும் 18 – 1

அத்தியாயம் 18

 

 

வவுனியா டவுனில் இருக்கும் நேசரி ஒன்றுக்குத்தான் மிதிலன் போய்க்கொண்டிருக்கிறான். பெரும்பான்மைப் பொழுதுகளில் கருணாகரன் அல்லது தூயவன்தான் அவனை ஏற்றி இறக்குவது. சில நேரங்களில் குரு கூட அந்த வேலை செய்வான். அப்படி மூவரும் இல்லாவிட்டால் பேருந்தில் துளசி போவாள்.

 

இப்போதெல்லாம் அடிக்கடி அவளே மகனை அழைத்துச் சென்று அழைத்து வரும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அப்படி வெளியில் போய் வருவது அவளுக்கு நன்றாக இருந்தது.

 

அன்றும் மகனை நேசரியால் அழைத்துக்கொண்டு வந்து சாந்தசோலைக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தாள்.

 

அப்போது இன்னொருவனோடு வந்த அருளின் தம்பி விமல், இவளைக் கண்டுவிட்டு பைக்கை நிறுத்திவிட்டு இறங்கவும் ஒரு பயம் பிடித்துக்கொண்டது.

 

மிதிலன் வேறு, “அம்மா, சித்தப்பா நிக்கிறார்.” என்றான் அவனைக் காட்டி.

 

“நிண்டா நிக்கட்டும். நீங்க அவேய பாக்கிறேல்ல. தாத்தா சொல்லி இருக்கிறார் எல்லா, அவேயோட நாங்க கதைக்கிறேல்ல எண்டு.” என்று நினைவூட்டினாள் அவள்.

 

தமையனை உள்ளே வைத்திருக்கும் கோபத்தில் மகனுக்கு ஏதும் செய்துவிடுவானோ என்று நினைத்த மாத்திரத்தில் இங்கே துளசிக்குக் கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தன.

 

அன்னை சொன்னதுபோல் அவர்களைப் பார்க்காமல் இருக்க முயன்றாலும் சின்னவனால் முடியவில்லை. அவன் தலை அடிக்கடி அந்தப் பக்கமாகத் திரும்பியது.

 

விமல், அவளைக் கண்டதும் வேண்டுமென்றுதான் அங்கே வந்து நின்றான். ஆரம்பத்தில் தமையன் மீது அவனுக்கும் மிகுந்த கோபமே. என்ன மனிதன் இவன் என்று வெறுத்தும் இருக்கிறான். மென்மையான, இனிமையாகப் பழகும் அண்ணியை அவனுக்கு மிகவுமே பிடிக்கும். அப்படியான ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் செய்வானா என்று திட்டியிருக்கிறான்.

 

ஆனால், என்றைக்கு அவனுக்காக இவனைத் தூக்கி உள்ளே வைத்து, அம்மா அப்பாவைக் கிட்டத்தட்ட வீட்டுச் சிறைக்கு மாற்றினார்களோ அன்றிலிருந்து தூயவனின் மேல் ஒரு கோபமும் வெறுப்பும் மூள ஆரம்பித்திருந்தது.

 

அதுவும் தந்தையின் ஒழுக்கத்தில் கை வைப்பேன் என்று தூயவன் சொன்னதிலிருந்து முற்றிலுமாக அவர்களை வெறுக்க ஆரம்பித்தான். அண்ணா செய்த தப்புக்கு எங்கள் வாழ்க்கையை அழிப்பார்களா என்று ஒரு ஆத்திரம்.

 

அது எல்லாம் போதாது என்று முறையாக விவாகரத்தைக் கொடுத்த பிறகும் பொய்யாகத் தமையனை உள்ளே வைத்து, அதுவும் இவர்கள் கூட அவனைச் சென்று பார்க்க முடியாத நிலையில் நிறுத்திவிட்டவர்கள் மீது, பெரும் வன்மமே வந்திருந்தது.

 

அதைக் காட்ட முடியாமல் இருந்தவனால் துளசி தனியாக அகப்பட்டதும் சீண்டாமல் போக முடியவில்லை.

 

“இப்ப சந்தோசமா இருக்கிறீங்களா அண்ணி? சேச்சே துளசி. முறையா விவாகரத்துத் தந்திட்டான்தானே. பிறகும் என்னத்துக்கு இவ்வளவு கேவலமா நடந்தனீங்க? அவன்ர வாழ்க்கையை முழுசா கெடுத்து அப்பிடி என்ன சந்தோசத்தக் கண்டீங்க?” என்றவனின் கோபத்தில் அவளுக்குக் கண்ணீர் அரும்பிற்று.

 

“தம்பியும் நிக்கிறான் விமல். தேவை இல்லாமக் கதைக்காதீங்கோ.” என்றாள் நடுங்கிய குரலில்.

 

“உங்கட அண்ணா மட்டும் வயசான மனுசன் எண்டு எங்கட அப்பாவப் பாத்தவனா? என்ன எல்லாம் கதைச்சவன் எண்டு தெரியுமா? அதுதான் நீங்க வேணாம், உங்களப் பிடிக்கேல்ல எண்டு சொல்லிட்டான் எல்லா. பிறகும் என்ன?”

 

இதற்குள் அன்னையின் கண்ணீரைக் கண்டு பயந்து, தானும் உதடு பிதுக்க ஆரம்பித்த மிதிலன் சட்டென்று, “இசை!” என்று சத்தமாகக் கத்தி அழைத்தான்.

 

அவர்களைக் கவனிக்காமல் ஸ்கூட்டியில் அவர்களைக் கடந்துகொண்டிருந்த யாழிசை, ஸ்கூட்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அங்கே மகனைத் தூக்கி வைத்தபடி நடுங்கிக்கொண்டிருந்த துளசியையும், அவள் அருகில் நின்றிருந்த இரண்டு ஆண்களையும் பார்த்தவளுக்கு சூழ்நிலை சரியில்லை என்று நொடியிலேயே புரிந்து போயிற்று.

 

“துளசி அக்கா, இஞ்சயா நிக்கிறீங்க? நான் எல்லா இடமும் உங்களத் தேடிக்கொண்டு இருக்கிறன். வாங்க போவம்.” என்றதும் என்ன புரிந்ததோ துளசியும் ஓடி வந்து ஏறிக்கொண்டாள். மிதிலனைத் தூக்கி முன்னால், தன் கைகளுக்குள் நிறுத்திவிட்டு வேகமாக ஸ்கூட்டியை எடுத்தாள் யாழிசை.

 

சற்று நேரத்துக்கு இரு பெண்களும் பேசிக்கொள்ளவில்லை. பின்னால் வருகிறார்களா என்று கவனித்தபடி போய்க்கொண்டிருந்தார்கள்.

 

“அது… அருளின்ர… அது என்ர எக்ஸ் ஹபாண்ட்ர தம்பி.”

 

“ஓ!” என்ற யாழிசை மேலே எதையும் கேட்கவில்லை. ஆனால், அவளுக்கு விவாகரத்தானது தொடங்கி, அருள் சிறையில் இருப்பது வரை மாதவியின் மூலம் தெரியுமென்பதில் அந்தக் கோபத்தில் ஏதோ பிரச்சனை செய்திருக்கிறான் என்று ஊகித்துக்கொண்டாள்.

 

துளசிக்கு இன்னுமே பேச்சு வருவேனா என்றது. நெஞ்சின் படபடப்பும் அடங்கவில்லை. அவளே இப்போதுதான் தன் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர ஆரம்பித்தாள். அதற்குள் இப்படி ஒரு நிகழ்வு.

 

அதுவும், ‘நீங்க வேணாம், உங்களப் பிடிக்கேல்ல எண்டு சொல்லிட்டான் எல்லா’ என்ற விமலின் வார்த்தைகள் ஒரு பெண்ணாக அவளின் சுய மரியாதையை, தன் மானத்தை மொத்தமாய்க் கூறு போட்டன.

 

இதற்குள் டவுன் கடந்து அவர்களின் ஊருக்குள் நுழைந்திருந்தாள் யாழிசை.

 

எதிரில் வாகனத்தில் குருவோடு வந்துகொண்டிருந்த தூயவன், முதலில் கண்டது மிதிலனையும் துளசியையும்தான். அதன் பிறகுதான் ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டிருந்தவளை கூர்ந்து பார்த்தவன் சட்டென்று பிரேக்கிட்டு வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

 

இதற்குள் அவன் வாகனத்தைக் கண்டுவிட்ட துளசியும், “அண்ணா வாறார் இசை. நிப்பாட்டுங்கோ!” என்று அவசரமாக அவளைத் தட்டிச் சொல்லவும், யாழிசையும் ஸ்கூட்டியை ஒதுக்கி நிறுத்தினாள்.

 

அவளை அவன் மருந்துக்கும் எதிர்பார்க்கவில்லை. இதயம் சத்தமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. பார்க்கத் துடித்த காலத்தில் கண்ணிலேயே படாதவள் பார்க்க வேண்டாம் என்று முடிவெடுத்த பின் வந்து நிற்கிறாள்.

 

அவனால் வாகனத்தை விட்டு இறங்கக் கூட முடியவில்லை.

“டேய் இறங்கு!” என்று குரு தட்டவும்தான் இறங்கி வந்தான்.

 

வாயைத் திறந்து அவன் எதையும் கேட்கவில்லை. புருவங்களை மட்டும் சுருக்க, வேகமாக அவனிடம் தாவிய மிதிலன், “மாமா, சித்தப்பா அங்க வந்து அம்மாவைப் பேசினவர்.” என்று பயந்த குரலில் நடந்ததை ஒப்பித்தான்.

 

நொடியில் சினத்தில் சிவந்துவிட்ட முகத்துடன், “அந்த ராஸ்கல் என்ன சொன்னவன்?” என்றான் துளசியிடம் பல்லைக் கடித்தபடி.

 

யாழிசைக்கு சட்டென்று தேகம் தூக்கிப்போட்டது.

 

‘இவள் ஒருத்தி!’ ஆத்திரம்தான் வந்தது தூயவனுக்கு. பார்வையாலேயே அவளை எரித்தான். அது அவளைச் சேர்வதற்கு அவள் நிமிர வேண்டுமே.

 

“சொல்லு!” என்றான் தங்கையிடம் திரும்பி.

 

கண்கள் கலங்க நடந்ததைச் சொன்னாள் துளசி.

 

“இவ்வளவு செய்தும் அடங்கேல்ல அவன்…” என்று பல்லைக் கடித்தவன், “நீ முதல் வேனுக்க ஏறு!” என்றான் துளசியிடம்.

 

“சரி அக்கா, நான் வாறன்.” என்று யாழிசையும் ஸ்கூட்டியை திருப்பப் போக, “மாமா, நான் இசையோட போகப் போறன்.” என்றான் மிதிலன்.

 

“அவா அவான்ர வீட்ட போகப்போறா. நாங்க எங்கட வீட்ட எல்லா போகோணும்.” விமல் மீதான கோபத்தை அப்படியே அடக்கிக்கொண்டு தங்கை மகனுக்கு இதமாக விளக்கினான் தூயவன்.

 

“இல்ல. நான் இசையோட வரப்போறன். இசையும் எங்களோட வரட்டும்.” என்றவன் தூயவனிடனிருந்து இறங்கி ஓடி வந்து, அவள் கைகளுக்குள் புகுந்து ஏறிக்கொண்டான். போதாக் குறைக்கு அவள் இடுப்பையும் கட்டிக்கொண்டு, “நான் இசையோடதான் வருவன்.” என்றான் பிடிவாதமாக.

error: Alert: Content selection is disabled!!