உள்ளம் பழையபடி துக்கம் கொண்டது. அவனிடம் அதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமோ, அவன் சொன்னது போன்று எங்கு எப்படி நடக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று அவள் உள்ளம் மறுபடியும் அலைபாய்ந்தது.
என்னவோ தெரியவில்லை, தந்தை இறந்ததிலிருந்து நடக்கும் எதுவும் அவளுக்கு நன்றாகவே இல்லை. அவள் தவறு செய்கிறாளோ, இல்லை, வேறு எதுவுமோ என்று பிரித்தறியத் தெரியவில்லை. பழையபடி காரணமில்லாப் பயமொன்று அவள் உள்ளத்தை சூழ்ந்து, விழிகளைக் கலங்க வைத்தது.
இதற்குள் அஜந்தா பேசி முடித்துவிட்டு இவளை அழைத்தாள். அவள் முகம் முதல் இருந்ததை விடவும் இன்னும் பூரித்து மலர்ந்திருந்தது. திவாகாரோடு பேசியதன் விளைவு.
மணப்பெண் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கே மணமேடையில் சடங்குகள் நடந்துகொண்டிருக்க இங்கே நிரோஜனுடன் பேசிவிட முயன்றாள் யாமினி. அவள் குடும்பமும் அஜந்தாவின் குடும்பத்தினரும் இருக்கையில் நேரடியாக அவனிடம் சென்று பேச முடியவில்லை. இல்லாவிட்டாலும் நண்பர்களோடு அமர்ந்திருந்தான் அவன்.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மிஸ்ட் கோல் கொடுத்தாள், குறுந்தகவல் அனுப்பினாள். எதற்கும் பதில் இல்லை. கடைசியில் நவீனுக்கு அழைத்து நிரோஜனோடு தனியாகப் பேச விரும்புவதாகவும், அவனை மண்டபத்துக்குப் பின் பக்கம் அழைத்து வரும்படியும் மிகுந்த தயவுடன் கேட்டுக்கொண்டாள்.
அங்கே நவீன் போய் அவனிடம் சொல்வது தெரிந்தது. பதிலுக்குக் கண்கள் சிவக்க, அவனிடம் நிரோஜன் உறுமினான். தவித்துப்போனாள் யாமினி.
பாறையாக இருகியிருந்த அவன் முகம் பயமுறுத்தியது. செய்தது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டு, அவனைச் சமாதானப்படுத்துவோம் என்றால் எங்கே?
திருமணம் நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் புகைப்படங்களுக்கு நின்றார்கள். யாமினியும் தன் மொத்தக் குடும்பத்தினருடனும் சென்று நின்று, பரிசும் கொடுத்து, மனதார வாழ்த்திவிட்டு வந்தாள்.
நிரோஜன் குழு கடைசியாகத்தான் போனார்கள். முக்கியமாக வெளியே இழுத்துவிட்ட ஷேர்ட், மடுத்துவிடப்பட்ட கை, கலைந்த கேசம், இறுகிய முகம் என்று, அவனைப் பார்த்தால் ஒரு திருமணத்திற்கு வந்தவன் போலவே இல்லை.
மனம் வலிக்க அவனையே பார்த்து நின்றாள் யாமினி. அவள் சொன்னது தவறாகவே இருக்கட்டும். அதற்கென்று இப்படித்தான் நடப்பானா? ஒருவித இயலாமையுடன் அவள் நிற்க, அங்கே அஜந்தாவோடு பணிபுரியும் அனைவரோடும் குழுவாக நின்று புகைப்படம் எடுக்க விரும்பி யாமினியையும் மேடைக்கு அழைத்தார்கள்.
நிரோஜனின் அருகே சென்று நிற்கத்தான் ஆசை. ஆனால் எல்லோர் முன்னும் அதைச் செய்ய முடியாதே. திலினியின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் மெனக்கெட்டு வந்ததற்குக் கை கொடுத்து நன்றி சொன்னான் திவாகர்.
நிரோஜனின் முறை வந்தபோது, “அடுத்த கலியாணம் உங்களுக்குத்தான்!” என்று சொன்னான் திவாகர். அதற்கு ஒன்றும் சொல்லாமல் இறுக்கத்துடன் அளந்து புன்னகைத்தான் நிரோஜன். திவாகர் குழம்பிப்போய் அருகில் நின்ற மனைவியைப் பார்த்துவிட்டு, கேள்வியாக யாமினியைப் பார்த்தான். அஜந்தாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவளும் இவளைத்தான் பார்த்தாள். யாமினிக்கு முகம் கன்றிப்போயிற்று. காட்டிக்கொள்ளாமல் சமாளித்துச் சிரித்துவைத்தாள்.
அவர்கள் எல்லோரும் மேடையை விட்டு இறங்குகையில் மற்றவர்களின் மறைவில் அவன் கரம் பற்றி, “உங்களோட கதைக்கோணும் நிரோ. வாங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சலாக அழைத்தாள்.
கையை இழுத்துக்கொண்டு இறங்கிவிட்டான் அவன். யாமினி திகைத்து நின்றுவிட்டாள். சமாளித்துக்கொண்டு இறங்கி வந்தவளிடம், “உங்கட ஃபிரெண்ட்ஸை கூட்டிக்கொண்டு வாங்கோ யாமினி. சும்மா கதைப்பம். என்று ஆனந்தனாகவே கேட்டான்.
அவனுக்கு மனத்தில் என்னவோ உறுத்திக்கொண்டே இருந்தது. அதுவும், சொல்லாமல் கொள்ளாமல் கொழும்பில் சென்று நின்றுகொண்டு, யாமினியைச் சந்திக்கலாமா என்று அவ்வளவு ஆர்வமாகக் கேட்ட நரேன், அவளைப் பார்த்துவிட்டு வந்து வேறு பெண்ணைப் பார்க்கப்போவதாக அவன் தந்தை மூலம் சொல்லிவிட்டது, இவனைக் கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
அவளைப் பார்க்கும் வரை நரேனும் நரேன் வீட்டினரும் இந்தச் சம்மந்தம் சரியாக வந்துவிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். அப்படி இருக்க இவன் எத்தனை முறை கேட்டாலும் நரேனின் தகப்பன் மேலதிக விபரம் தராமல், உடைத்துப் பேசாமல், “மகன் வேற பாக்க சொல்லுறார்.” என்று மட்டுமே சொன்னார்.
சீதனப் பிரச்சனையா. பெண்ணைப் பிடிக்கவில்லையா, வேறு எந்த எதிர்பார்ப்பு உண்டா என்று இவன் எவ்வளவு கேட்டும், அதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தர அவர் விரும்பவில்லை. ஏதோ மனப்பாடம் செய்தது போல், ஒரே பதிலையே திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
இந்த மாற்றம் யாமினியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு வந்தது. புகைப்படத்தைக் காட்டிலும் நேரில் இன்னும் அழகானவள், அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவள். அப்படியானவளை நேரில் பார்த்து மறுக்கிற அளவுக்கு எதுவுமில்லை.
அப்படியானால் யாமினி ஏதும் சொல்லியிருப்பாளா என்று ஓடிய கேள்வி, அப்படிச் சொல்ல அவளிடம் என்ன உண்டு என்று யோசிக்க வைத்து, அங்கே அவளுக்கு ஏதும் காதலாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது.
அதே நேரத்தில் காதல் என்றால் மறைக்க இங்கே ஒன்றும் இல்லையே என்றும் யோசித்தான். இந்த யோசனைகள்தான் அவள் நண்பர்களை நேரடியாகச் சந்திக்கும் உந்துதலை உண்டாக்கிற்று.
யாமினிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தானாக அமைந்து வருகையில் விடுவாளா? “ஒரு நிமிசம் அத்தான். எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாறன்!” என்றுவிட்டு ஓடினாள்.
அவனை மட்டுமல்லாது அவன் நண்பர்களைக் கூடக் காணவில்லை. மண்டபம் முழுக்கத் தேடிவிட்டு மண்டபத்துக்கு வெளியே வந்தாள்.
அங்கே அவர்கள் எல்லோரும் ஒரு பக்கமாக அமர்ந்திருந்தார்கள். இவளைக் கண்டதும் நிரோஜன் முகம் கடினமுற்றது என்றால் மற்றவர்களின் முகம் மாறின.
யாமினிக்கு ஒருமுறை சுருக்கென்றது. ஆனாலும் அவர்களை அவள் நெருங்க, நிரோஜனோடுதான் பேச வந்திருக்கிறாள் என்றெண்ணி, அவன் தோளில் அழுத்திக்கொடுத்துவிட்டு அவர்கள் நகர்ந்துபோனார்கள்.

