வெளிச்சக்கீற்று 6 – 2

அப்படியேதும் என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்று? இதற்கு அவள் கணவனும் உடந்தையா என்ன? கடவுளே, அப்படித்தான் என்றால் இரண்டு குடும்பங்களினதும் நிலை என்ன? கண்ணீரும் கவலையும் அவள் உறக்கத்தைப் பறித்துவிட, அதற்குமேல் முடியாமல் கணவனை நேராகவே கேட்டாள்.

 

அவன், அவள் மீதுதான் கோபப்பட்டான். “என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? அப்பிடி எதுவும் இருக்காது. இவ்வளவு பெரிய விசயத்த அம்மா மறைப்பாவா? உனக்கு முதல் ஏன் இவ்வளவு அவசரம்? அவே ரெண்டுபேருக்கும் இன்னும் வயதிருக்கு இந்திரா. கொஞ்ச நாளைக்குப் பேசாம இரு எண்டு எத்தின தரம் சொல்லுறது?” என்று சினந்தான்.

 

“என்ன வயதிருக்கு? பிள்ளை இப்போதைக்கு வேண்டாம் எண்டு சொன்னா அது வேற. நாங்களும் அதுக்குத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறோம் எண்டு சவீதா சொன்னவள். சொல்லியே ஆறு மாதம் முடிஞ்சிது. ஆனா, அவளா இதுவரைக்கும் ஒண்டும் கேட்டது இல்ல. இந்த ஃபைலை பாருங்க, தம்பிக்கு ஒரு குறையும் இல்லையாம்.” என்று வைத்தியப் பரிசோதனையைக் காட்டினாள்.

 

வாங்கிப் பார்த்தவனின் புருவங்களும் சுருங்கின.

 

“மாமி இதைப்பற்றிப் பெருசா அலட்டவே இல்ல. சவீதாவும் நடக்கிறதுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை எண்டமாதிரி இருக்கிறாள். உண்மையச் சொல்லுங்க, உங்களுக்கு இதைப்பற்றி ஏதும் தெரியுமா, என்னட்ட எதையும் மறைக்கிறீங்களா?” விழிகளில் கூர்மையுடன் அவள் கேட்க, முகம் இறுக அவளை நிமிர்ந்து பார்த்தான் கஜேந்திரன்.

 

கணவனின் அந்த நேர்ப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டவளின் விழிகள் கலங்கிப் போயின. அதன்பிறகு பேசியவளின் குரல் தழுதழுத்தது.

 

“அவன் எனக்காக, என்னை நம்பிக் கட்டினவன். உங்கட தங்கச்சி எண்டுற ஒற்றை நம்பிக்கைலதான் நாங்க விசாரிக்கவும் இல்ல. எனக்கு அப்பா இல்ல. அந்த இடத்தில இருக்கிறவன் அவன். இப்ப வரைக்கும் எனக்கு எல்லாம் செய்றதும் அவன்தான். அவனுக்குக் கெட்டதா எதுவும் நடக்கக் கூடாது. இதுக்குமேல என்ன செய்றது எண்டு சத்தியமா எனக்குத் தெரியவும் இல்ல. நானோ அம்மாவோ எதையாவது கேட்டுக்கொண்டு போனா அதையே சாட்டா வச்சு மாமி சண்டைக்கு வருவா. இதுக்கு ஒரு முடிவை நீங்கதான் வாங்கித் தரவேணும். அவனுக்கு நீங்க அத்தான். அவன்ர வாழ்க்கை நல்லாருக்கோணும் எண்டுற அக்கறை உங்களுக்கும் இருக்கும் எண்டு நினைக்கிறன்.” என்றவள், அதற்குமேல் அதைப்பற்றி அவனிடம் பேசப்போகவில்லை.

 

நேர்மை மிகுந்த கணவன், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடித் தருவான் என்று நம்பினாள். கஜேந்திரனும் அவள் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. இந்தளவு தூரத்திற்கு வந்தபிறகு, இதற்குள் மறைந்து கிடக்கும் விடயம் என்ன என்று அறிய விரும்பி, அன்னையிடம் நேராகப் பேசினான்.

 

மகனே தலையிட்ட பிறகு, தவமலரால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

 

இத்தனை நாள்களாக ஆடிய நாடகத்தைத் தொடர முடியாமல், “அவளுக்கு பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பிரச்சினை தம்பி. பெரிய பிள்ளையானதில இருந்தே இருந்திருக்கு. நாங்க கவனிக்கேல்ல. அது மோசமாகி, பெரிய பெரிய நீர்க்கட்டி எல்லாம் வந்து, பிள்ளை ஏலாமையே போய்ட்டாள். நாங்க கவனிச்சுக் கொண்டுபோனது ஆக லேட்டாம். வேற வழி இல்லாம கர்ப்பப்பை எடுக்கவேண்டி வந்திட்டுது.” என்று அழுதார்.

 

அதிர்ந்து நின்றான் கஜேந்திரன். தங்கைக்கு நடந்தது பெரும் துயர்தான். அதற்கென்று அவன் மனைவியின் குடும்பத்துக்கு அவர்கள் செய்தது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்? அவனையும் சேர்த்தல்லவா முட்டாளாக்கி இருக்கிறார்.

 

“எனக்கு ஏனம்மா சொல்லேல்ல? இத நான் எப்பிடி அங்க போய்ச் சொல்லுவன்? எவ்வளவு பெரிய பிழையச் செய்துபோட்டுச் சாதாரணமாச் சொல்லுறீங்க.” என்றதும் கோபம் வந்தது அவருக்கு.

 

“என்ன பெரிய பிழை? இதே, கட்டின பிறகு நடந்திருந்தா என்ன செய்திருப்பினம்? உன்னை மாதிரி ஒரு பெடியன் எங்க தேடினாலும் கிடைக்குமாமோ அவேக்கு? உன்னையும் குடுத்து, தங்கச்சியையும் குடுத்திருக்கிறம். எங்கட மொத்தச் சொத்தும் அவேக்குத்தான் போகப்போகுது. அது கசக்குதாமா அவேக்கு? பிள்ளை பிறக்காது. அவ்வளவு தானே? மற்றும்படி அவளில குறை சொல்ல என்ன கிடக்கு? பிள்ளையே வேண்டாம், எனக்கு நீ உனக்கு நான் எண்டு வாழுவம் எண்டு சொல்லுற இந்தக் காலத்தில, இதையெல்லாம் ஒரு விசயம் எண்டு நீயே பெருசாக்காத தம்பி.” என்றவரை நம்ப முடியாமல் வெறித்தான் கஜேந்திரன்.

 

“இதுக்கு நீங்களும் கூட்டாப்பா?” அந்த வீட்டின் வாயில்லாப் பூச்சியான தந்தை கதிரேசனிடமும் கோபப்பட்டான்.

 

“நீங்க வெளிநாட்டில இருந்த சமயம், தங்கச்சிக்குக் காய்ச்சலாம் எண்டு ஆஸ்பத்திரில வச்சிருந்து அம்மா கூட்டிக்கொண்டு வந்தவா தம்பி. மற்றும்படி, உங்களுக்கு மாதிரி எனக்கும் இப்பதான் தெரியுது.” என்றார் அவர்.

 

எல்லாமே வெறுத்துவிட, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான் கஜேந்திரன்.

 

அகத்தியன் குடும்பம் இதையறிந்து மொத்தமாக உடைந்து போயிற்று. சிந்தாமணி தாங்க முடியாமல் உடைந்து அழுதார். ஒரே மகன். அவன் வம்சமே தழைக்காது என்றால் என்ன கதை?

 

“கடவுள் சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது மாமி. தெரிஞ்சா இப்பிடி ஒண்ட நடக்கவிட்டிருக்க மாட்டன் எண்டுதான் ரெண்டு பேருமாச் சேர்ந்து மறச்சிருக்கினம். உண்மையா சொறி அகத்தியன்.”

 

எதையும் வாய் திறந்து பேசும் நிலையில் அவன் இல்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உடலும் உயிருமாக வாழ்ந்த ஒருத்தி, அவனை ஏமாற்றியிருக்கிறாள். அதுவும் எந்த விடயத்தில்? தினம் தினம், மாதா மாதம் ஏமாற்றப்பட்டிருக்கிறான். மிகவும் அவமானமாக உணர்ந்தான். என்ன நினைத்திருப்பாள் அவனைப்பற்றி?

 

திருமணமாகி எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். சுற்றி எல்லோரும் இருப்பதால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை, வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை, சந்தோசமாக இருக்க முடியவில்லை என்று சொல்லி, அவள்தான் அவளுக்குச் சீதனமாகத் தந்த வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனாள்.

 

அக்கா அத்தானுக்கு அது உதவியாக இருக்கும் என்றெண்ணி அவனும் சம்மதித்திருந்தான். கூடவே, சில நேரங்களில் இவனிடம் அவள் அதிகப்படியாக நடந்துகொள்ளும் பொழுதுகளில் தாய் தமக்கையின் முன் இவன் சங்கடத்துக்குள்ளாகிவிடுவான். அவளையும் விட்டுக்கொடுக்க முடியாமல், அவர்களிடம் என்ன சொல்வது என்றும் தெரியாமல் திணறுவதற்கு இது எவ்வளவோ மேல் என்று எண்ணியிருந்தான்.

 

அவளுக்கான மாதவிடாய் நாள்களில், அவள் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டு அவனை இங்கே அனுப்பிவிடுவாள். கேட்டதற்கு, தனக்கு மிகவும் வயிற்றுவலியாக இருக்கும் என்றும், அந்த நாள்களில் அவனுக்குத் துன்பம் தர விரும்பவில்லை என்றும் சொன்னபோது உருகித்தான் போனான். அவசியமில்லை, இங்கேயே இரு, நானே உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதை அவள் கேட்டதே இல்லை.

 

அவன் மாமியாரும், ‘பரவாயில்ல தம்பி, இங்க நானும் சும்மாதானே இருக்கிறன். எனக்கும் மாதத்தில நாலு நாள் மகள் என்னோட இருந்தமாதிரி இருக்கும்.’ என்று சொல்லியிருந்தார். அதற்குமேல் அவன் மறுத்ததில்லை. எல்லோரும் ஒரே ஊர் என்பதும் அவர்களுக்கு வசதியாகிப் போயிற்று. கூடவே, தாய் தமக்கையைப் பார்க்க, அவர்களோடு இருக்கக் கிடைக்கும் நாள்களாக அவனும் அந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்வான்.

 

தன் மீதான அன்பில்தான் அப்படியெல்லாம் நடக்கிறாள் என்று அவன் எண்ணியிருந்தது பொய்யாகி, நாடகமாடியிருக்கிறாள் என்கிற உண்மை வெறுப்பாக அவன் நெஞ்சுக்குள் இறங்கிற்று.

பல உண்மைகள் அதன் பிறகுதான் புலப்பட்டது.

 

அன்பு என்கிற பெயரில் அவனை அங்கிங்கு அசையவிடாது கட்டிப் போட்டிருக்கிறாள். என்றாவது ஒருநாள் இதெல்லாம் தெரிய வந்து, பிரச்சனை வந்தால் கூட அவன் எதுவும் செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் உழைப்பு முழுவதையும் தன் கைவசப்படுத்தியிருக்கிறாள் என்று அறிந்தபோது வெட்கிப்போனான் அகத்தியன்.

 

எந்தளவுக்கு அவளை நம்பியிருந்தால் சின்ன உறுத்தல் கூட இல்லாது அத்தனையையும் செய்திருப்பான்.

 

உண்மையில் இன்று கடையைத் தவிர்த்து அவனிடம் எதுவும் இல்லை. வங்கியில் இருக்கும் வைப்புப் பணம் அவள் பெயரில், வாங்கிய காணி அப்படி. நகை நட்டுகள் கூட அவளுக்கானவை. கடையைக்கூட அவள் பெயரில் வாங்கியிருப்பான். கடனை மனைவி தலையில் கட்ட மனமில்லாமல் விட்டதில் அது தப்பியிருந்தது.

 

காசு பணத்தைத்தான் விட்டாலும் வாழ்க்கை? தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையைப் பற்றிய கவனமே இல்லாமல் மயங்கிக் கிடந்திருக்கிறான். அந்த நொடியில் தன்னையே வெறுத்தான் அகத்தியன். தாய் தமக்கையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தனக்குள் குறுகினான். மாமியாரும் சேர்ந்து அவனை முட்டாளாக்கி இருக்கிறாரே!

 

நினைக்க நினைக்க வெட்டிப்போடும் வெறியே கிளம்பிற்று. அவள் முகம் பார்க்கவே பிடிக்காமல் போயிற்று. தமக்கை வீட்டிலேயே இருந்துகொண்டான். இரண்டு நாள்கள் பொறுத்துப் பார்த்த சவீதா, மூன்றாம் நாள் தமையன் இல்லாத நேரமாகப் பார்த்து வந்தாள்.

 

“அதென்ன பிள்ளை பெத்துத் தந்தாத்தான் என்னோட வாழுவீங்களோ? இல்லாட்டி இல்லையோ? அப்ப, உங்களுக்கு நான் பிள்ள பெத்துப் போடுற மெசினா? இப்பிடியொரு நிலைமை உங்களுக்கு வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க? இப்ப என்ன, இன்னொருத்தியக் கட்டி வாழப்போறீங்களா? இல்ல, கட்டாமலேயே…” என்று, அவள் சொன்ன வார்த்தைகளை விடவும் சொல்லாமல் விட்ட வார்த்தைகளின் பின்னிருந்த அர்த்தத்தில் அருவருத்துப்போனான்.

 

அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஆத்திரத்தோடு அவளிடம் கதைக்கப் போனால் ஏதும் விபரீதமாகிவிடுமோ என்று பயந்துதான் இங்கேயே இருந்தான். அதற்கு என்னவெல்லாம் சொல்லிவிட்டாள்?

 

“என்ன சவீதா கதைக்கிறாய்?” ஆற்றமாட்டாமல் இந்திரா இடைபுக, “போதும் நிப்பாட்டுங்க! எல்லாம் உங்களாலதான். நிம்மதியா இருந்த எங்கட வாழ்க்கையை நாசமாக்கினதே நீங்கதான். இனியும் ஏதாவது கதைச்சுக்கொண்டு வந்தீங்க, குடும்பமாச் சேந்து பிள்ளை வேணும் எண்டு என்னைக் கொடுமை செய்றீங்க எண்டு போலீஸ்ல கொம்ளைண்ட் செய்வன்.” என்றதும் அகத்தியன் அதிர்ந்துபோனான்.

 

வேகமாகத் திரும்பி அம்மாவையும் அக்காவையும் பார்த்தான். நம்ப முடியாத திகைப்பில் சிலையாகிப் போயிருந்தனர். சிந்தாமணி நெஞ்சைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் அவனைப் பார்த்தார்.

 

அதற்குமேல் அவன் அங்கிருக்கவில்லை. அவர்கள் இருவருமாவது நிம்மதியாக இருக்கட்டும் என்றெண்ணி அவளுடனேயே புறப்பட்டிருந்தான்.

 

இன்னும் பிரச்சனைகள் பெரிதாகிவிடுமோ என்கிற பயத்தில் கஜேந்திரனிடம் இதைச் சொல்லாமல் மறைத்தாள் இந்திரா.

error: Alert: Content selection is disabled!!