அத்தியாயம் 19
அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டவளுக்கு என்னவோ துரத்திக்கொண்டு வந்த புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட உணர்வுதான் உண்டாயிற்று. ஒரு வழியாக அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, வீட்டுக்கு வந்து, ஸ்கூட்டியை நிறுத்திய பிறகுதான் ஆசுவாசமானாள்.
அதற்குள் டொங் டொங் என்று வந்து விழுந்த குறுந்தகவல்களைக் கேட்டு அவள் நெஞ்சு அதிர்ந்தது. யார் என்று பார்க்க முதலே அவன்தான் என்று உள்ளம் அடித்துச் சொல்ல, எடுத்துப் பார்த்தாள். அவனேதான். அதைவிட வாயால் பேசி அனுப்பியிருக்கிறான் என்றதும் கைகளில் மெல்லிய நடுக்கம்.
எப்போதுமே வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மாமரத்தின் கீழேதான் ஸ்கூட்டியை நிறுத்துவாள். இன்றைக்கும் அப்படி நிறுத்தி இருந்தவள், யாராவது வெளியில் நிற்கிறார்களா என்று விழிகளைச் சுழற்றிப் பார்த்துவிட்டு, நடுங்கும் கரத்தால் அவன் பேசி அனுப்பியதை ‘ப்ளே’ செய்தாள்.
‘ஏய் லூசு! கூப்பிட்டு வச்சுக் கொஞ்சுறதுக்கு உன்னக் கோயிலுக்குக் கூப்பிடேல்ல!’ என்றதிலேயே அவள் நெஞ்சு அதிர்ந்துபோயிற்று. அதன் பிறகு சொன்னவை எல்லாம் அவள் கருத்தில் பெரிதாகப் பதியவில்லை என்கையில் தன்னை மீறி, ‘கவனமா இரு என்ன’ என்று அவன் கரைந்ததா கவனத்துக்கு வந்திருக்கப் போகிறது?
அவளுக்கு என்னவோ விமலை விட அவன்தான் ஆபத்தானவனாகத் தெரிந்தான். அதில் விமலைக் குறித்தெல்லாம் அவள் பெரிதாகப் பயப்படவில்லை.
திரும்பவும் அழைப்பானோ என்று தோன்றியதும் வேகமாகக் கைப்பேசியின் சத்தத்தை நிறுத்தி வைத்தாள். வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு நடந்தவற்றைத் தமையனிடம் சொல்வதா என்கிற தடுமாற்றம்.
ஆனால், மறைக்க விரும்பவில்லை. மாதவி மூலம் இங்கு வரை கதை வரும் என்றும் தெரியும். அதே நேரம், அவன் அவளுக்கு அழைத்ததையும், தன்னைத் துரத்தி வந்து கோயிலுக்கு வரச் சொன்னதையும், அனுப்பியிருக்கும் குறுந்தகவலைப் பற்றியும் சொல்லப் பயந்தாள்.
மாதவி மூலம் தன் எண்ணை எடுத்திருப்பான் என்று ஊகிக்க முடிந்தது. ஆனால், அண்ணாவோ அண்ணியோ ஒரு வார்த்தை சந்தேகமாகக் கேட்டுவிட்டால் கூட அவளால் தாங்க இயலாது.
அதில், டவுனில் வைத்துத் துளசியைப் பார்த்து ஏற்றி வந்ததையும், மிதிலனை அவர்களின் வீடு வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்ததையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டாள்.
நேசனுக்கு அவள் செய்ததில் தவறு இருப்பதாகப் படாததால், தூயவன் ஏதும் பிழையாகக் கதைத்தானா என்று மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
ஆனால், “நல்ல காரியம்தான் செய்திருக்கிறாய். எண்டாலும் தள்ளியே இரு. பிறகு மாதவி அக்காவை விட்டுட்டுத் துளசியச் சொத்துக்காகப் பிடிக்கப் பாக்கிறாய் எண்டு சொன்னாலும் சொல்லுவினம்.” என்று எச்சரித்தாள் நளினி.
சொல்லக் கூடியவர்கள்தான் என்பதில் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாள் யாழிசை. தன் அறைக்குள் வந்த பிறகும் அவளால் இயல்பாக முடியவில்லை.
அவன் தந்த பதற்றம் துரத்திக்கொண்டேயிருந்தது.
அதோடு அவன் பார்த்த பார்வைகளும், வீட்டுக்குள் வந்துவிட்டுப் போகும்படி அவனே அழைத்ததும், அவளுக்கு அழைத்து என்னவோ நெடுநாள் பழகியவன் போல் இசை என்று அழைத்ததும் கிலியைத்தான் பரப்பின.
குறுந்தகவலை அழித்துவிட்டாள். அவனை முற்றிலும் தடை செய்ய நினைத்தாலும் கொஞ்சம் பயந்தாள். அதைக் கவனித்துவிட்டு அவன் ஏதும் பிரச்னைக்கு வந்துவிட்டால்?
‘கடவுளே!’ என்று முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவளுக்கு அவனால் தலைவலி வந்ததுதான் மிச்சம்.
இங்கே வீடு திரும்பிக்கொண்டிருந்த தூயவனுக்கு இத்தனை தூரம் தன்னைத் தவிர்த்தவள் பதில் போடமாட்டாள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனாலும் பதில் ஏதும் வராதா என்று காதைத் தீட்டி வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
அங்கே கருணாகரன் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் முகமே சரியில்லை. உள்ளே வந்தவனிடம் கூட எதுவும் கேட்டார் இல்லை.
அங்கே, தன் அன்னையின் கையால் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த மிதிலன், ஓடி வந்து அவனிடம் தொற்றிக்கொண்டு, “மாமா, இசைன்ர ஸ்கூட்டில போவமா?” என்றதும் சட்டென்று தகப்பனைத்தான் பார்த்தான் தூயவன்.
மாதவி கூடக் கருணாகரன் இருக்கையில் யாழிசை பற்றிய பேச்சைப் பெரிதாக எடுக்கமாட்டார். ஆனால், சின்னவனின் பேச்சு அவர் காதில் விழவில்லை போலும். எந்த வித்தியாசமும் காட்டாமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தார்.
பக்கத்தில் நின்று அவருக்குத் தேவையானதைக் கவனித்துப் போட்டுக்கொண்டிருந்த தேவகி, “அவ்வளவு வேகமா பைக்கை எடுத்துக்கொண்டு எங்கயப்பு போனனீங்க? முதல், என்ன அவசரம் எண்டாலும் இப்பிடியா சீறிக்கொண்டு போறது. நான் பயந்தே போனன்.” என்று அவனை அதட்டினார்.
“அது ஒரு அவசர வேலை அம்மா. மறந்திட்டன். அதான்.” என்று சமாளித்தபடி மிதிலனைத் துளசியின் அருகில் திரும்பவும் இருத்தினான். அப்படியே போய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்து தானும் சாப்பிட அமர்ந்தான்.
அவனுக்கும் உணவைப் பரிமாறினார் தேவகி. மாதவி மருந்து மாத்திரைகள் எடுப்பதால் முதலே சாப்பிட்டுவிட்டு, சின்ன உறக்கத்துக்குச் சரிந்திருந்தார்.
தகப்பனின் தொடர் அமைதி வித்தியாசமாகப் பட, “என்னப்பா? விமலைப் பற்றி யோசிக்கிறீங்களா?” என்றான் வாயில் உணவை இட்டபடி.
அப்போதும் நிமிர்ந்தார் இல்லை அவர். இரண்டு வாய் உண்டுவிட்டு, “குருவோட கதைப்பம்.” என்றார்.
தேவகிக்குப் புரியவில்லை. “குருவோட கதைக்க என்ன கிடக்கு? இப்ப நீங்க வரேக்கதானே சாப்பிட்டுப் போனவன்.” என்றார் தேவகி.
“அவனைத் துளசிக்குப் பாப்பமா எண்டு யோசிக்கிறம் அம்மா.” மிதிலனும் இருந்ததில் மெல்லிய குரலில் சொன்னான் தூயவன்.
மிதிலன் அதைக் கவனிக்காதபோதும் காதில் விழுந்த செய்தியில் திகைத்து, மிக வேகமாகத் திரும்பித் தமையனைப் பார்த்தாள் துளசி.
பார்வை ஒருமுறை தகப்பனிடம் போய்வர, “எந்தப் பிழையுமே செய்யாம நீ ஏன் காலத்துக்கும் தனியா இருக்கோணும்? இல்ல, கடைசி வரைக்கும் அவன்ர நினைப்பிலேயே இருக்கிறதுக்கு அந்த நாய் என்ன அவ்வளவு நல்லவனா? குரு நல்ல சொய்ஸ் எண்டு அப்பாவும் நானும் நினைக்கிறம். நீயும் யோசி. அம்மா நீங்களும் யோசிங்க. சித்தியோடயும் கதைச்சுப்போட்டுச் சொல்லுங்க.” என்றுவிட்டு அவனும் உணவில் கவனமானான்.
இரு பெண்களின் பார்வையும் கருணாகரனிடம் தாவியது. அவர் அப்போதும் சாப்பாட்டில்தான் கவனமாக இருந்தார். அவரின் அழுத்தமான அந்த அமைதியே பெண்களை வாய் திறக்க விடவில்லை.
ஆனாலும் மகன் உண்டு முடித்துவிட்டு முற்றத்துக்கு விளையாட ஓடியதும் கருணாகரனிடம் வந்து, “எனக்கு இன்னொரு கலியாணம் வேணாம் அப்பா.” என்று கரகரத்த குரலில் சொன்னாள் துளசி.
“அவசரப்பட்டு எந்த முடிவையும் சொல்லாதீங்கோம்மா. ஆறுதலா யோசிங்கோ. குருவும் உங்களுக்குத் பொருந்தி வருவானா எண்டு பாருங்க.” என்றார் அவர்.
தவிப்புடன் அன்னையைப் பார்த்தவளுக்கு இன்னொரு திருமணத்தில் உடன்பாடே இல்லை. அருள், அவனைப் பார்த்தது, ஆசை கொண்டது, கொஞ்சக் காலம் என்றாலும் அவனோடு அன்னியோன்யமாக வாழ்ந்தது என்று அனைத்தும் கண்முன்னே வந்து அவளைச் சுழற்றி அடிக்க, தொண்டையை அடைக்கும் துக்கத்தை அங்கிருந்த யாருக்கும் காட்டப் பிடிக்காமல் உள்ளே போனாள்.
உணவை முடித்த கருணாகரன், உண்ட களை ஆறுவதற்காகத் தன் சாய்வு நாற்காலியில் சரிந்துகொண்டார். அதற்காகவே காத்திருந்த மிதிலன் ஓடி வந்து, அவர் மடியில் ஏறி, இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு, அவர் மார்பில் வாகாகச் சாய்ந்துகொண்டான்.
விழிகளை மூடியிருந்த கருணாகரனின் ஒரு கை தலைக்கு மேலிருக்க, இன்னொரு கை பேரனை அணைத்துப் பிடித்திருக்க, சாய்வு நாற்காலி மெல்ல மெல்ல ஆடியது.
உணவை முடித்துக்கொண்டு மேலே தன் அறைக்குப் போன தூயவன், முதல் வேலையாகக் கைப்பேசியைத்தான் எடுத்துப் பார்த்தான். அவளிடமிருந்து சத்தமேயில்லை.
அலட்சியமும் அவமதிப்பும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத விடயங்கள். அவளானால் அவற்றை அவனுக்குச் சர்வ சாதாரணமாகச் செய்துகொண்டிருந்தாள்.
கோபம்தான் வந்தது. திரும்பவும் அவளுக்கு அழைக்க நினைத்தான். அவள்தான் எடுக்க மாட்டாளே. ‘சரிதான் போடி!’ என்று கைப்பேசியைத் தூக்கி எறிந்தான்.
அவள் அவன் தங்கைக்கு ஒரு உதவி செய்தாள். அதனால் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று அவன் அறிவுறுத்திவிட்டான். அவ்வளவுதான். இதில் அவள் அவனுக்குப் பதில் போட்டால் என்ன, போடாமல் விட்டால்தான் என்ன என்று அலட்சியமாக நினைத்துக்கொண்டான்.
அந்த நினைப்பு சில மணி நேரங்கள் கூடத் தாக்குப் பிடிக்க மாட்டேன் என்றது. துளசி மிதிலனோடு சேர்த்து யாழிசைக்கும் விமலால் ஆபத்து வரலாம் என்கிற விடயம், அவனை அழுத்த ஆரம்பித்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் அதைத் தாங்க முடியாதவன் தடதடவென்று இறங்கிச் சென்று, பைக்கை எடுத்துக்கொண்டு போனான்.
விழிகளைத் திறந்து மகன் போவதைக் கவனித்த கருணாகரன் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டார்.
சற்று முன் அவருக்கு அழைத்த உறவுக்காரர் ஒருவர், “கோயிலடியில வச்சு மாதவின்ர சொந்தக்காரப் பிள்ளையோட தூயவன் ஏதோ கதைச்சுக்கொண்டு நிண்டவனாம் எண்டு என்ர மனுசி வந்து சொன்னவா. எதுக்கும் கவனமாக இரு கருணாகரா. இந்த வயது என்னவும் செய்ய வைக்கும்.” என்று எச்சரித்துவிட்டு வைத்திருந்தார்.
கேட்ட கணத்திலிருந்து அவர் நிம்மதி தொலைந்திருந்தது.
மகன் அப்படி நடப்பானா என்கிற கேள்வி எழுந்த அதே நேரம், வெறும் நம்பிக்கையை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு மார்க்கண்டேயர் போன்று ஏமாற அவர் தயாராயில்லை.
கருணாகரன் மார்க்கண்டேயருக்கு நல்ல மருமகன், தேவகிக்கு அருமையான கணவர், பிள்ளைகளுக்கு மிகவும் பாசமான தகப்பன், பேரனுக்குக் கூட உயிரான தாத்தா.
ஆனால், அவரின் மனைவி மக்கள் கூட அறியாத ஒரு கருணாகரன் அவருக்குள் இருக்கிறார். அந்தக் கருணாகரனை உருவாக்கியது மார்க்கண்டேயர்தான். மார்க்கண்டேயருக்கு மருமகனாகி, அவரின் சொத்துப்பத்துக்குப் பாதுகாவலனாகி, அவருக்கான மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அத்தனையும் இவருக்கும் கிடைக்க ஆரம்பித்ததும், குவிந்துகிடக்கும் அத்தனை சொத்துக்கும் அதிபதி நான் ஒருவனே என்கிற பேராசை அவருக்குள் பெருமரமாக வளர்ந்திருந்தது.
அப்போதுதான் மார்க்கண்டேயர் சொத்தைச் சரி பாதியாகப் பிரித்தார். அது பெரும் அதிர்ச்சி. நான் பெருப்பித்துத் தந்ததை நீ எப்படி ஓடிப்போனவளுக்குக் கொடுப்பாய் என்று மார்க்கண்டேயரின் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு வெறியே வந்திருந்தது.
ஆனால், அவர்தான் நல்ல மருமகனாயிற்றே. அந்த விடயத்திலும் நல்லவனாகவே நடந்தார். மார்க்கண்டேயரும் மூத்த மகளுக்கு இணையாக அவர் பெயரிலும் பல சொத்துகளை மாற்றிக்கொடுத்தார்.
ஆனாலும், கருணாகரனுக்குப் போதவில்லை. மாதவிக்குக் கொடுத்ததில்தான் கண் இருந்தது. அப்போதுதான் மார்க்கண்டேயர் இறந்தார்.
அவரின் இறப்பையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மாதவியை வீட்டுக்குள் எடுத்தார். அதிலும் அவருக்கு நல்ல பெயரே. அதேபோல் யாழிசைக்குப் போன சொத்தைத் திரும்ப வாங்க வைத்துவிட்டார்.
அதை எப்படியும் துளசியின் அடுத்த திருமணத்தோடு துளசி பெயருக்கு மாற்றிவிடுவார்.
மாதவி நெடு நாள்களுக்கு இருக்கமாட்டார் என்பது அவர் கணிப்பு. அவர் இல்லை எண்டு ஆகிவிட்டால் சுவர்ணா எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. உன் கணவனுக்கு இரண்டு பஸ்சுகளை வாங்கித் தருகிறேன் என்றாலே இருக்கிற சொத்துகளைக் கைமாற்றக் கூடியவள்.
ஜீவன், அவனுக்குத்தான் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இதனால்தான் தன் வீட்டில் மாதவியை இன்னும் விட்டு வைத்திருக்கிறார். அதில் மனைவியின் சந்தோசமும் அடங்கியிருந்தது இன்னொரு காரணமாயிற்று.
இனி எல்லாம் அவர் விருப்பப்பட்டபடி நடக்கும் என்று எண்ணியிருக்கையில்தான் மகன் பற்றி இப்படி ஒரு செய்தி காதில் வந்து விழுந்தது.
உண்மையில் மிகவுமே கலங்கிப்போனார். அவரின் மிகப்பெரும் தூண் அவன். அவன் ஒரு ஏமாற்றத்தை அவருக்குத் தருவான் என்றால், நிச்சயமாக அவரால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.
அதே நேரம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இதனை மிக மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதும் நன்றாகப் புரிந்தது.
அவன் அவரின் சொற்படி நடக்கிற மகன்தான். அவருக்குப் பணிந்து போகிறவனும்தான்.
ஆனால், அவர் பயப்படுவதுபோல் அவன் மனம் அந்தப் பெண்ணிடம் சரிந்துவிட்டது உண்மையானால், அதில் அவன் ஆழமாக இறங்கிவிட்டான் என்றால், அதற்கு எதிராக அவர் நிற்கையில் அவன் எப்படி மாறுவான், என்ன செய்வான் என்பதை அவரால் கூடக் கணிக்க முடியவில்லை.
அடுத்துவந்த நாள்களில் யாழிசைக்கு எப்போது படிப்பு முடியும் என்பதை மாதவியிடம் கேட்டு அறிந்துகொண்டார்.

