அத்தியாயம் 8
அன்று, தூரிகாவின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பெற்றார் சந்திக்கும் நாள். ஆசிரியர்களைச் சந்தித்து, அவள் பற்றிய குறை நிறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்தாள் யசோ.
அதே ஆசிரியர் பெற்றார் சந்திப்புக்காகக் கணவனோடு வந்திருந்த இந்திரா, யசோவைக் கண்டுவிட்டு, “டக்கெண்டு திரும்பிப் பாக்காம உங்கட இடப்பக்கமாப் பாருங்கோ கஜன். லைட் ப்ளூ கலர் சாறி, மகளோட போறா. அவாவத்தான் அண்டைக்குப் பாத்தனாங்க. இங்க பள்ளிக்கூடம் விட வரேக்க, பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போகேக்க எல்லாம் அடிக்கடி கண்டிருக்கிறன். பாக்க நல்ல மாதிரித்தான் தெரியிறா. இன்னொரு சின்ன மகளும் இருக்காம். இல்லாட்டித் தம்பிக்குக் கேட்டிருக்கலாம்.” என்று கணவனுக்குக் காட்டினாள்.
“ரெண்டு பிள்ளைகள் இருந்தா என்ன இந்திரா? தாமினியையே அப்பிடிக் கவனமாப் பாக்கிறவன், அந்தப் பிள்ளைகளை விட்டுடுவானா? அது பிறகு. அதுக்கு முதல், அவனை ஒரு கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்ல வை!” தன் வீட்டினரால்தான் அவன் தனியாக நிற்கிறான் என்கிற எண்ணம், அவன் மனத்திலும் இருந்ததில் சொன்னான்.
அவனே எத்தனையோ முறை சொல்லிவிட்டான். அகத்தியன் அசைந்து கொடுக்கவே இல்லை. ஒரு அளவு தாண்டி அவனாலும் வற்புறுத்த முடியவில்லை.
“அது உண்மைதான். எண்டாலும் இவா வேண்டாம். வளந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில அவன் என்னத்தப் பெருசா வாழ்ந்திடுவான்? காலத்துக்கும் அந்தப் பிள்ளைகளுக்காக ஓடத்தான் சரியா இருக்கும். அந்தப் பிள்ளைகளும் இவனைத் தகப்பனாப் பாக்குங்களா தெரியாது. ஏற்கனவே ரெண்டு எண்டேக்க இன்னொரு பிள்ளை பெறுர ஐடியாவே வராது. காலத்துக்கும் அவன் தனக்கெண்டு ஒரு பிள்ளை கூட இல்லாம வாழுறதா? வேறதான் பாக்க வேணும்.” என்று சொன்னவள், இனியும் அவனை விடக்கூடாது எனும் முடிவுக்கு வந்திருந்தாள்.
அன்று இரவு, கடையை மூடிவிட்டு வந்தவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, “சுசீலாக்கா ஒரு புரோக்கரின்ர நம்பர் தந்தவா. அவர், ரெண்டாம் தாரமாக் கட்டுற ஆக்களுக்கு எண்டே பாக்கிறவராம். அவரிட்ட உன்ர குறிப்பக் குடுக்கப்போறன்.” என்று அறிவித்தாள்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தமக்கையை நிமிர்ந்து பார்த்தான் அகத்தியன். “இந்தக் கொஞ்ச நாளாத்தான் நிம்மதியா இருக்கிறன். அது பிடிக்கேல்லையா உங்களுக்கு?” என்றான் புருவச் சுளிப்புடன்.
நெஞ்சுக்குள் சுருக்கென்று வலித்தாலும், “நிம்மதி சரி சந்தோசமா இருக்கிறியா? விடிஞ்சா உன்ர பாட்டுக்குக் கடைக்குப் போறாய். இரவானா வந்து சாப்பிட்டுப் படுகிறாய். இதுக்குப் பெயர் வாழ்க்கையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் தமக்கை.
“அதுக்காகத் தலையக் கொண்டுபோய்த் தண்டவாளத்தில குடுக்கச் சொல்லுறீங்களா?” என்றதும் அவளுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
“என்னடா கதைக்கிறாய்? அப்ப என்ன உன்ர கொத்தான் தலையைக் கொண்டுவந்து தண்டவாளத்துக்கையா வச்சிருக்கிறார்?”
“அத, அத்தானக் கேட்டாத்தான் தெரியும்.” என்றான் அவன் சிரிக்காமல்.
“டேய்!” என்றவளால் அதற்குமேல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், காரியத்தில் கண்ணாக இருக்கிறவளாக, “ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளை வச்சிருக்கிற அந்தப் பெட்டையே இன்னொரு கலியாணத்துக்கு ரெடி. உனக்குத்தான் விசர் பிடிச்சிருக்கு.” என்றதும் அவன் முகம் மாறிப் போயிற்று.
“அக்கா, எனக்கு விருப்பம் இல்லை. அது வேற. அதுக்கு ஆரோ ஒருத்தியப் பற்றி இப்பிடிக் கதைப்பீங்களா நீங்க?” என்று கண்டித்தான்.
“அவவைப் பற்றி நான் ஏன் கதைக்கிறன்? அவாவே கட்ட ரெடி உனக்கு என்ன பிரச்சினை எண்டுதான் கேக்கிறன். நல்ல ஒருத்திக்காக இப்பிடியே இருந்தாலும் பரவாயில்ல. பார் அவளை. தனக்கு ஒரு கலியாணம் நடந்து, டிவோர்சான எண்ணமே இல்லாம சுத்துறாள். மாமி அவளுக்கே வெளிநாட்டு மாப்பிள்ளை பாக்கிறாவாம். நீதான் என்னவோ வாழ்ந்து முடிச்சவன் மாதிரி ஆளும் கோலமும் தாடியும் எண்டு கன்றாவியாத் திரியிறாய்.” என்றாள் முகத்தைச் சுளித்துக்கொண்டு.
“விடுங்க அக்கா!” என்றான் அக்கறையற்று.
அதன்பிறகு அவள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் காதில் விழுத்தாதவனின் செய்கை, இந்திராவுக்குக் கோபமூட்டியது. ஒரு அளவுக்குமேல் அவனோடு வாதாடினால் இப்படி அமைதியாக இருந்தே மறுப்பைக் காட்டிவிடுவான்.
இந்தமுறை விடவே கூடாது என்று முடிவுபண்ணி, “எனக்குத் தெரியாது! நான் ஒரு பெட்டையைப் பாப்பன். நீ கட்டுறாய். அவ்வளவுதான். இல்லையோ, உன்ர கொத்தானையும் அவரின்ர வீட்டுக்கு அனுப்பிப்போட்டு, உன்னோட நானும் தனியா இருக்கிறன்.” என்று அறிவித்தாள்.
அதற்கெல்லாம் அசராமல், “நான் உங்கட கண்ணுக்கு முன்னால இருக்கிற வரைக்கும்தானே இப்பிடியெல்லாம் வெருட்டுவீங்க. இல்லாம எங்கயாவது போய்ட்டா?” என்று அமைதியாகக் கேட்டவனைக் கண்டு, அதிர்ந்துபோனாள் தமக்கை.
“டேய், என்ன கதைக்கிறாய்? வெருட்டிப் பாக்கிறியா?”
“பின்ன, வேற என்ன கதைக்க? உங்கள அப்பிடிப் பாக்கவா அந்தப் பாடெல்லாம் பட்டனான்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின. “அப்ப, எனக்கு மட்டும் உன்ன இப்பிடிப் பாக்கச் சந்தோசமா இருக்கும் எண்டு நினைக்கிறியா?” தழுதழுத்த குரலில் வினவினாள்.
“அதுக்கு என்னக்கா செய்யச் சொல்லுறீங்க? எனக்கு விதிச்சது அவ்வளவுதான்.”
“அப்பிடி விடேலுமாடா? முதல், எல்லாரும் அவள மாதிரி இல்ல தம்பி. நல்ல பிள்ளைகள் ஓராயிரம் பேர் இருக்கினம்.”
“நானும் இல்லை எண்டு சொல்லேல்லையே! தப்பித்தவறி திரும்ப வாறவளும் அப்பிடியானவளா இருந்திட்டா என்ன செய்வீங்க எண்டுதான் கேக்கிறன். முதல் எனக்குக் கலியாண வாழ்க்கையில விருப்பமே இல்லாமப் போயிற்றுது.”
வேதனையோடு பார்த்தாள் தமக்கை. தன்னிச்சையாய் முதல் திருமணமும், அது முற்றான நாள்களில் அவன் முகத்தில் தெரிந்த செழிப்பும் நினைவில் வந்தன.
“அப்பிடி எல்லாம் சொல்லாதையடா!” என்றாள் கண்ணீரினூடு. “அவளின்ர சொந்த அண்ணாதான் இவர். இவருக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு குணம் ஒரே மாதிரி இருக்கா சொல்லு? ரெத்த சம்மந்தமான சகோதரமே ஒருத்தர மாதிரி இன்னொருத்தர் இல்ல. இதில நீ, ஒருத்தி மாதிரித்தான் இன்னொருத்தியும் இருப்பாள் எண்டு சொல்லுறது என்ன கதையடா?”
அவள் என்ன சொல்லியும் அவன் முடிவிலிருந்து அவனால் மாற முடியவில்லை. வாதத்தை வலுவாக எடுத்து வைப்பது வேறு! களத்தில் இறங்கி வாழ்ந்து பார்ப்பது வேறு! அவன் சூடு கண்ட பூனை. அவனால் இன்னொரு முறையும் சூடு வாங்க முடியவே முடியாது!
“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏலாது. என்ன இப்பிடியே விட்டுடுங்க!” என்றுவிட்டு எழுந்து போனான்.
அன்னை மகள் இருவர் முகமும் சோர்ந்து போயிற்று.
“சரி விடுங்கம்மா. இண்டைக்குத்தானே ஆரம்பிச்சு இருக்கிறம். போக போக வழிக்கு வருவான்.” என்று அன்னையைத் தேற்றினாள் இந்திரா.
சொன்னது போலவே இந்திரா விடவில்லை. கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவனைக் கரைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
*****
அன்று, பள்ளிக்கூடத்திலிருந்து மகளை அழைத்துக்கொண்டு பார்மசிக்கு திரும்பிக்கொண்டிருந்தாள் யசோதினி. என்ன சொல்லித் தந்தார்கள், என்னவெல்லாம் நடந்தது என்று தூரிகாவிடம் கேட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தவள், மறுபக்கத்தில் அகத்தியனும் சிந்தாமணியும் நிற்பதைக் கண்டாள்.
அவன் பைக்கை ஆராய்ந்துகொண்டிருந்தான். அருகில் இருந்த கல்லில் சோர்வுடன் அமர்ந்திருந்த சிந்தாமணி, சேலைத் தலைப்பால் தன்னைப் போர்த்திக்கொண்டிருந்தார்.
அவர்களைக் கடந்து வந்திருந்தாலும் அப்படியே போக மனம் வரவில்லை. சிந்தாமணியின் இயலாத தோற்றம் அவளைத் தொந்தரவு செய்தது. மனம் கேளாமல் மீண்டும் திருப்பிக்கொண்டு வந்து, “ஏன் இங்க நிக்கிறீங்க அன்ட்ரி? உடம்புக்கு ஏதும் ஏலாம இருக்கா?” என்று வினவினாள்.
யாருக்கோ கைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்த அகத்தியன் திரும்பிப் பார்த்தான். அவனால் அவளை யார் என்று இனங்கண்டுகொள்ள முடியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்தவள் போலும் என்றெண்ணிக்கொண்டு, மறுபுறம் அழைப்பை ஏற்றவரோடு பேசினான்.
“ஓம் பிள்ளை, பிரஷர் கூடிப்போச்சுது. ஒரே தலைச் சுத்தல். ஆஸ்பத்திரிக்கு எண்டு வெளிக்கிட்டு வந்தா மோட்டச்சைக்கிள் பழுதாயிற்றுது. என்னை ஒரு ஆட்டோவில அனுப்பிவிடு தம்பி எண்டு சொன்னாலும் கேக்கிறான் இல்ல. எங்கயாவது விழுந்து எழும்பிடுவேனாம் எண்டு சொல்லுறான்.” என்றார் அவர் சோர்ந்த குரலில்.
“பின்ன, நீங்க இருக்கிற நிலைக்குத் தனியா விடேலுமா?” கைப்பேசியைப் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு வந்தவனின் முகத்தில் மிகுந்த எரிச்சல் கோடுகள்.
“வேகமா வரச்சொல்லி எப்ப சொன்னனான். இப்பதான் வெளிக்கிடுறானாம். அவன் வந்து நாங்க போய்… பேசாம ஒண்டு செய்வம். பைக் இங்கயே நிக்கட்டும். நீங்க வாங்க, நாங்க ஆட்டோல போவம்.”
“உனக்கு என்ன விசராப்பு? எவனாவது பைக்கை தூக்கிக்கொண்டு போய்ட்டா என்ன செய்றது? எனக்கு ஒரு அவசரமும் இல்ல. அவன் வரட்டும். நீ அமைதியா இரு.” என்றார் சிந்தாமணி.
அவர்களின் நிலை மிக நன்றாக விளங்கிவிட உதவ முன்வந்தாள் யசோதினி.
“நீங்க என்னோட வாங்கோ அன்ட்ரி. நான் கூட்டிக்கொண்டு போறன்.”
“ஏன், அவாக்கு இருக்கிற வருத்தம் போதாது எண்டு ஸ்கூட்டில கூட்டிக்கொண்டு போய் விழுத்தி எழுப்பவா?” யார் மீதென்றில்லாமல் இருந்த எரிச்சலில் சுள்ளென்று கேட்டான் அகத்தியன்.
ஒருவிதத் திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் யசோ. கடுகடு என்று நின்றிருந்தான் அவன்.
என்ன மனிதன் இவன்? உதவ வந்த ஒரு பெண்ணிடம் இப்படித்தான் எரிந்து விழுவானா? அதைவிட, அப்படி எத்தனை பேரை அவள் விழுத்தி, அவன் பார்த்தானாம் என்று கேட்க வாய் உன்னினாலும் அடக்கினாள்.
பதில் சொல்லாமல் தவிர்ப்பதுதான் இவனுக்குத் தக்க பாடம் என்று எண்ணிக்கொண்டு, “என்ர அம்மாவை ஏத்திப் பழக்கம்தான் அன்ட்ரி. நீங்க வாங்க. உங்களைப் பாக்கவே தெரியுது, நல்லா ஏலாம இருக்கு எண்டு.” என்றாள் சிந்தாமணியிடம்.
சிந்தாமணிக்கும் போனால் என்ன என்று நினைக்கும் அளவில்தான் உடல்நிலை இருந்தது. அதில் மகனுக்கு உடன்பாடில்லை என்று தெரிந்ததில், “இல்லயம்மா பரவாயில்ல. நீங்க போங்கோ. இப்பதான் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தால கூட்டிக்கொண்டு வாறீங்க போலக்கிடக்கு. முதல் அவாக்குச் சாப்பாட்டைக் குடுங்கோ. பசிக்கப்போகுது.” என்று, ஸ்கூட்டியில் யசோவுக்குப் பின்னிருந்த தூரிகாவிடம் பார்வை சென்றுவரச் சொன்னார்.
“ஒருநாள் லேட்டானா ஒண்டும் நடக்காது அன்ட்ரி. நேரத்தை மினக்கெடுத்தாம நீங்க வாங்கோ.”
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் அகத்தியன்.

