வெளிச்சக்கீற்று 8 – 2

அவள் தனக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பதும், பிடிவாதமாக நின்று அன்னையை அழைப்பதும் அவனைச் சீண்டாமல் இல்லை. இருந்தாலும், அன்னையின் நிலையே முதன்மையானதாகத் தெரிய, “உங்களுக்கு அவாவத் தெரியும் எண்டா போங்கவன் அம்மா. நிக்க நிக்க உங்கட முகமும் சோர்ந்துகொண்டு போகுது. சின்னவாவ நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றவனை சிந்தாமணி மெல்லிய அதிர்வோடு பார்த்தார் என்றால், யசோதினி பொருள் விளங்காப் பார்வை பார்த்தாள்.

 

அது கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் எடுத்து யோசிக்க நேரமில்லாமல், “இது பள்ளிக்கூடம் முடியிற நேரம். கராஜ் காரன் வர எவ்வளவு நேரமாகுமோ தெரியா. நீங்க போங்கோ. இல்ல, உங்க மூண்டுபேரையும் ஒரு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிடுறன்.” என்றவன், ஆட்டோ ஏதும் வருகிறதா என்று வீதியை அலசினான்.

 

அவளை ஆட்டோவில் அனுப்பிவிட்டு அவளின் ஸ்கூட்டியை என்ன செய்வானாம்? முகத்தில் அடித்தாற்போல் பேசுகிறவனுக்கு மண்டைக்குள் ஒன்றுமில்லை போலும்! “அதெல்லாம் வேண்டாம். நீங்க வாங்கோ அன்ட்ரி. தூரி முன்னுக்கு வாம்மா.” என்றாள் யசோ.

 

சிந்தாமணி எழுந்துகொள்ள, தூரிகாவும் துள்ளிக்கொண்டு இறங்கி வந்து முன்னால் ஏறிக்கொண்டாள்.

 

“ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு போறது பயம். அவா என்னோட நிக்கட்டும். நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றான் அவன் மீண்டும்.

 

அப்படி, அவனை நம்பி மகளை விட்டுவிட்டுப் போவாள் என்று நினைத்தானாமா? யசோ மறுத்துரைக்கும் முன், “நான் இப்பிடி நிப்பன் அங்கிள். அம்மம்மாவையும் ஏத்திக்கொண்டு அம்மா எங்களை நெடுக இப்பிடிக் கூட்டிக்கொண்டு போறவா.” என்று வேகமாகப் பதில் சொன்னாள் தூரிகா.

 

சின்னவள் அப்படிச் சொன்ன பிறகு அவனால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. ஆனாலும், மனத்தில் இருந்த பயத்தில், “கவனம். வேகமாப் போகாதீங்க. அம்மாக்கு ஸ்கூட்டி பழக்கம் இல்ல.” என்றான்.

 

யசோதினிக்கு உள்ளூர எரிச்சல்தான் உண்டாயிற்று. அப்போதும் அவனுக்குப் பதில் சொல்லாது, “அன்ட்ரி, பயப்பிடாம என்னை இறுக்கிப் பிடிச்சுக்கொள்ளுங்கோ. நான் மெதுவாத்தான் போவன், சரியா. ஏதும் எண்டால் உடனே சொல்லவேணும்.” என்றுவிட்டு, மிக லாவகமாக, அவர் பயப்படாத வகையில் ஸ்கூட்டியைச் செலுத்தினாள்.

 

முகத்தில் படர்ந்த சினத்துடன் போகிறவர்களையே பார்த்திருந்தான் அகத்தியன். கோபத்தை விடுத்து அவன் பேசியும் பதில் சொல்லவில்லையே அவள். அவ்வளவு திமிர். அவள் மீதிருந்த எரிச்சலையும் தாண்டிக்கொண்டு, அவள் ஸ்கூட்டியை வலு கவனமாகச் செலுத்துவது கவனத்தில் பதிந்தது.

 

அதன் பிறகுதான் அன்னையும் அவளும் அவனை ஏன் அப்படிப் பார்த்தார்கள் என்று யோசித்தான். அவளைத் தெரியுமா என்று கேட்டபோதுதான் பாத்தார்கள். அப்படியானால் அவனுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டும். இவளை எங்கே பார்த்தேன் என்று ஓடிய சிந்தனை, அந்த அம்மா மகள் சோடி கோயிலில் பார்த்தவர்களை நினைவூட்டிவிட, ‘அட! அந்த இரண்டு பெண் பிள்ளைகளின் அம்மா.’ என்று கண்டுபிடித்தது.

 

அதற்குமேல் அவளைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரமில்லை. கராஜ்காரனிடம் பைக்கை ஒப்படைத்துவிட்டு, போகிறவழியில் பற்றிஸ், வடை இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கட்டிக்கொண்டு ஆட்டோவில் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்தான்.

 

அதற்குள் சிந்தாமணியை வைத்தியரிடம் காட்டி, அவரை வோர்ட்டில் சேர்ப்பித்திருந்தாள் யசோதினி. களைத்துத் தெரிந்தவருக்கு ஏதாவது அருந்த வாங்கி வரலாம் என்று அவள் செல்ல, அங்கேயே அமர்ந்திருந்த தூரிகாவைத் தன்னருகே அழைத்தார் சிந்தாமணி.

 

“பிள்ளைக்கு என்ன பெயர்?”

 

“கி. தூரிகா.”

 

முகத்தில் முறுவல் அரும்ப, “எத்தினையாம் வகுப்புப் படிக்கிறீங்க?” என்று, அவள் தலையை வருடிவிட்டபடி வினவினார்.

 

“தரம் மூண்டு.”

 

“பிள்ளை கெட்டிக்காரி போல இருக்கே. பாட்டுப் பாடத் தெரியுமா?”

 

“ஓ! தோட்டம் நல்ல தோட்டம் பாடவா?” ஆர்வமாக வினவினாள் அவள்.

 

“ம் பாடுங்கோ பாப்பம்.”

 

“தோட்டம் நல்ல தோட்டம்

நம்மைச் சொக்க வைக்கும் தோட்டம்

கூட்டமாக நாமும் ஒன்றாய்க்

கூடி ஆடும் தோட்டம்

வண்ண வண்ண மலரால்

நம்மை மகிழ வைக்கும் செடிகள்

தின்ன தின்னப் பழங்கள்

மேலும் தின்னக் கொடுக்கும் மரங்கள்” என்று, வகுப்பில் சத்தமாகப் பாடுவது போலவே பாடியவளை, அப்படியே அள்ளியணைக்கும் ஆசை உண்டாயிற்று.

 

 

அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தான் அகத்தியன். அவள் பாடிய சத்தத்தில் அவன் முகத்திலும் முறுவல். அங்கிருந்த சிலரின் பார்வையும் சின்ன சிரிப்புடன் அவளில்தான்.

 

 

“என்னடா ஆஸ்பத்திரில பாட்டுச் சத்தம் கேக்குதே எண்டு பாத்தா எங்கட தூரிகா.” என்றவனின் பேச்சில் அவள் முகத்தில் பெரிய புன்னகை.

 

 

“நல்ல வடிவாப் பாடுறீங்க செல்லம்.” என்று பாராட்டிவிட்டு, கையில் இருந்த பையை அவளிடம் நீட்டினான்.

 

 

“இதில பற்றிசும் வடையும் இருக்கு. பிள்ளைக்குத்தான்.”

 

 

“இல்லை அங்கிள். வேண்டாம். அம்மா சாப்பாடு பார்மசில வச்சிருக்கிறா.” என்று மறுத்தாள் அவள்.

 

 

“இருந்தா என்ன? அதோட சேத்து இதையும் சாப்பிடுங்கோ.”

 

 

“இல்ல, வேண்டாம்.” தலையையும் பெரிதாக மறுத்து அசைத்துச் சொன்னாள் அவள்.

 

 

அப்போது, ஏதோ ஒரு பானத்தைக் கொண்டுவந்தாள் யசோதினி. அங்கே நின்ற அகத்தியனைக் கண்டது போலவே காட்டிக்கொள்ளாமல், “கொஞ்சமாக் குடிங்கோ அன்ட்ரி. குடிச்சிட்டு மருந்தைப் போடுங்கோ. பெரும்பாலும் பின்னேரம் வீட்டை விட்டுடுவினம் எண்டு நினைக்கிறன்.” என்றாள்.

 

 

“விட்டுட்டா நல்லமாச்சி. என்னால இங்க நிக்கேலாது.” அவள் தந்த பானத்தைப் பருகியபடி சொன்னார்.

 

 

“இருங்கம்மா, டொக்டரப் பாத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு அகத்தியன் போக, “அப்ப நாங்க வெளிக்கிடட்டுமா அன்ட்ரி?” என்று வினவினாள் யசோதினி.

 

“ஓமாச்சி. உங்களுக்கு நேரமாகுது என்ன? பிள்ளையும் இன்னும் சாப்பிடேல்லை. நீங்க செய்தது பெரிய உதவியம்மா.” என்றவருக்கு இந்தப் பெண்ணைத்தானே வேண்டாம் என்றோம் என்று மனத்தில் குத்தியது.

 

அதற்கென்று இப்போதும் சம்மதிக்க முடியவில்லை.

 

அதில், “போதும் போதும் எண்டுற அளவுக்குக் குடும்பச் சுமையச் சுமந்திட்டான். கலியாண வாழ்க்கைலயும் அவன் பட்டது நிறைய. இனி அமையிற வாழ்க்கையாவது நல்லதா அமையவேணும் எண்டுதான் உங்களை வேண்டாம் எண்டு சொன்னனாங்க. அதைக் குறையா நினைக்காதீங்கோம்மா.” என்றார் கெஞ்சலாக.

 

முதலில் இதை ஏன் சொல்கிறார் என்று அவளுக்கு விளங்கவில்லை. அடுத்த நொடியே, தான் எதையோ அவரிடம் எதிர்பார்த்துத்தான் இந்த உதவியைச் செய்ததாக நினைத்துவிட்டாரோ என்று தோன்றியதும் முகம் மாறாமல் காப்பது பெரும் சிரமமாயிற்று.

 

அவரை நேராகப் பார்த்து, “அந்த இடத்தில நீங்க இல்ல வேற ஆர் நிண்டிருந்தாலும் நான் இதத்தான் செய்திருப்பன் அன்ட்ரி. அப்பிடி நான் செய்ததுக்குப் பின்னால, ஏலாம இருந்த ஒரு வயதான அம்மாவுக்கு உதவுற எண்ணம் மட்டும்தான் இருந்ததே தவிர, வேற ஒண்டும் இல்ல. அந்தளவுக்கு மோசமான குணம் எனக்கில்லை. தயவு செய்து நீங்களும் அப்பிடி நினைச்சிராதீங்கோ.” என்றாள் தெளிவாக.

 

“ஐயோ இல்லையம்மா. நானும் உங்களப் பிழையா நினைக்க…” என்றவரை இடைமறித்து, “கிட்டத்தட்ட என்ர அம்மான்ர வயசு உங்களுக்கு. பெருசாப் பழக்கம் இல்லாட்டியும் உங்களத் தெரியும் எனக்கு. அதாலதான் பாத்திட்டும் பாக்காத மாதிரிப் போக மனம் வரேல்ல. இதைத் தவிர வேற எந்த நோக்கமும் எனக்கு இல்ல அன்ட்ரி.” என்று இன்னும் தெளிவாக அவள் சொன்னபோது, அங்கு வந்து சேர்ந்தான் அகத்தியன்.

 

அதற்குமேல் அங்கு நிற்கவில்லை அவள். “சரி அன்ட்ரி, உடம்பப் பாத்துக்கொள்ளுங்கோ. நாங்க வாறம்.” என்றுவிட்டு மகளோடு புறப்பட்டாள்.

 

அப்போதுதான் கையில் இருந்த பையை உணர்ந்து, “இது உங்கட மகளுக்குத்தான் வாங்கினான். வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டா. சாப்பாடு பார்மசில இருக்காம்.” என்று, அதை அவளிடம் நீட்டினான்.

 

அவளும் வாங்கவில்லை. தாய் ஒரு விளக்கம் சொல்ல, மகன் உணவு வாங்கித் தந்து கடனைத் தீர்க்கப் பார்க்கிறானா?

 

உள்ளுக்குள் எழுந்த சீற்றத்தை அடக்கி, “உண்மைதான். அங்க சாப்பாடு இருக்கு. பிறகு அதைக் கொட்டவேண்டி வந்திடும். அதைவிட, இது எதையும் எதிர்பாத்து நான் எதையும் செய்யேல்ல.” என்றுவிட்டு நடந்தாள் அவள்.

 

குழம்பிப்போனான் அகத்தியன். “சின்ன பிள்ளை சாப்பிடேல்லை, எங்களுக்காக மினக்கெடுறா எண்டுதானேம்மா இத வாங்கினான். அதுக்கேன் இப்பிடிச் சொல்லிப்போட்டுப் போறா.” என்றான் ஒன்றும் விளங்காமல்.

 

“அது… என்னாலதான் தம்பி.” என்றவர் நடந்ததைச் சொல்ல, “என்னம்மா நீங்க?” என்றான் அவன் சலிப்புடன்.

 

“அவா செய்தது எவ்வளவு பெரிய உதவி. அதுவும் தேவையான நேரத்தில. அதைக் கேவலப்படுத்திற மாதிரி எல்லாம்மா கதைச்சிருக்கிறீங்க. முதல் ஏன் இதையெல்லாம் கதைக்கப் போனனீங்க?” என்றவனுக்கு அவள் கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தது.

 

“இல்லையப்பு. நானும் வேணுமெண்டு சொல்லேல்ல. அவா கலியாணத்துக்குப் பாத்துக்கொண்டு இருக்கிற பிள்ளை. உனக்கும் நாங்க பாக்கிறோம் எண்டு தெரிஞ்சிருக்கும். அதில, வீணா ஆசைய வளத்திடக் கூடாது என்டுதானப்பு சொன்னனான். அது இப்பிடியாகும் எண்டு நினைக்கேல்ல.” என்றவருக்கும் இப்போது, அப்படிக் கதைத்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றிற்று.

 

“அருமையான பிள்ளை தம்பி. நானும் விழுத்திப்போடுவாவோ எண்டு பயந்தனான். ஆனா, அவ்வளவு பக்குவமா கூட்டிக்கொண்டு வந்தவா. தாய்க்காரி ஸ்கூட்டியை நிப்பாட்டிப்போட்டு வாறதுக்கிடையில, சின்னவா கவனமா வாங்கோ அம்மம்மா எண்டு கையப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்தவா. பக்கத்திலேயே நிண்டு எல்லாம் கவனிச்சுச் செய்தவா. சின்னவளும் ஒரு குழப்படி செய்யேல்ல.”

 

“அப்பிடியெல்லாம் செய்தவாக்குத்தான் நீங்க இப்பிடிக் கதைச்சிருக்கிறீங்க.” என்று கடிந்தான் அவன்.

 

அவர் முகம் வாடிப்போயிற்று.

 

அதுவும் பிடிக்காமல், “சரி விடுங்க. திரும்ப எப்பயாவது பாத்தா நல்லாக் கதைங்க.” என்றான்.

 

“ஓம் அப்பு. ஒருக்கா வீட்டுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு குடுக்கோணும். உண்மையாவே கெட்டிக்காரி. ஆம்பிளைத் துணை இல்லாம, வேலையும் பாத்து, ரெண்டு பிள்ளைகளையும் நல்லபடியா வளக்கிறது எல்லாம் இந்தக் காலத்தில சாதாரண விசயம் இல்லையப்பு. ரோசக்காரியும்.”

 

ரோசக்காரிதான். இல்லாமல் அம்மா சொன்னதற்கு அவனிடம் காய்ந்துவிட்டுப் போவாளா?

 

error: Alert: Content selection is disabled!!