கடன் அன்பை முறிக்கும் 21 – 2

அவள் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. அன்று உன்னைக் கொஞ்சக் கூப்பிடவில்லை என்றான். இன்று அப்படி என்ன செய்துவிடுவேன் என்று கேட்கிறான்.

 

“ஏன்… ஏன் எடுத்தனீங்க?” வார்த்தைகள் அவளுக்குத் திக்கின.

 

“நீ ஏன் நான் முதல் எடுத்ததும் எடுக்கேல்ல. அதுக்குக் காரணத்தைச் சொல்லு. அண்டைக்குச் சொல்லி எல்லா அனுப்பினனான், இனி நான் எடுத்தா நீ எடுக்கோணும் எண்டு.”

 

அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டதில் வார்த்தைகள் வரவேயில்லை.

 

“சொல்லு இசை. அந்தளவுக்கு அலச்சியமா? இல்ல, இவன் எல்லாம் ஒரு ஆளா எண்டு நினைக்கிறியா?”

 

“இல்…ல. அப்…பிடி இல்ல.” பயத்தில் அவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.

 

“நடிக்காத நீ! ஒழுங்கா உண்மையா சொல்லு. இல்லாம இண்டைக்கு உன்ன விடமாட்டன்.” என்று, அவள் முடிக்க முதலே சீறினான் அவன்.

 

அவளுக்கு ஒரு கணம் நடுங்கிப் போயிற்று. கைப்பேசிய வேகமாகக் காதில் இருந்து எடுத்துவிட்டு மீண்டும் பொருத்தினாள். பின் மெல்லத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “உங்களோட கதைக்க என்ன இருக்கு?” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஓ! ஏதாவது இருந்தாத்தான் கதைக்கோணுமோ? அதான் நான் தரவேண்டிய 490 இருக்கே. உன்ர அத்த இஞ்சதான் இருக்கிறா. மிதுக்குட்டி எண்டு கொஞ்சுவியே, அவனும் இஞ்சதான் இருக்கிறான்.”

 

‘அவயலோட கதைக்கோணும் எண்டா நேரா நான் அவேயோடயே கதைப்பனே. அதுக்கு ஏன் நான் இவனோட கதைக்க?’ அதை அவளால அவனிடம் கேட்கவா முடியும்? அவள் மீண்டும் அமைதியானாள்.

 

‘இவள் ஒருத்தி!’ தலையை அழுத்திக் கோதி, கண்களை இறுக்கி மூடித் திறந்தவன், “வகுப்பு இல்லையா உனக்கு?” என்றான் சற்றே நிதானப்பட்ட குரலில்.

 

இதுவும் அவளைப் பயமுறுத்தியது. பொங்கும் பாலாகக் கொதித்தவன் சட்டென்று தண்ணீர் தெளித்த பாலாக அடங்கிப்போனால் அவளும் என்ன நினைக்க?

 

அவன் பொறுமை பறந்தே போயிற்று. “அடியேய் எதையாவது கதையடி. இப்பிடிக் கதைக்காமையே இருந்து என்னைப் பைத்தியமாக்கி அலையவிடப்போறியா நீ?” என்றதும் பட்டென்று கைப்பேசியைத் துண்டித்திருந்தாள் யாழிசை.

 

‘இவளை!’ இப்படி அவள் அழைப்பைத் துண்டிப்பது இதோடு இரண்டாவது முறை. அவனுக்கு முகம் கோபத்தில் சிவந்து கொதித்தது.

 

வேகவேகமாகக் கீழே இறங்கி வந்து, வெளி வாசலை நோக்கி நடந்தவனை அழைத்தார் மாதவி.

 

“தூயவா, இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போங்கய்யா.”

 

ஒரு கணம் நின்று விழிகளை மூடித் திறந்து மூச்சை இழுத்து விட்டவன், “என்ன சித்தி?” என்றான் அவர் முன்னே சென்று நின்று.

 

“இசையைக் கேட்ட பெடியன்ர ஃபோட்டோ, ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாம் இதில இருக்கப்பு. அவன் வேலை செய்ற இடமும் இருக்காம். என்னத்துக்கு எண்டு சொல்லாம நேசனிட்ட கேட்டு வாங்கினனான். உங்கட ஃபோனுக்கு மாத்திக்கொண்டு ஒருக்கா விசாரிச்சுச் செல்லையா.” என்றார் அவர்.

 

அவருக்கு இசைக்குத் திருமணமே நிச்சயமாகிவிட்டது போன்ற பரபரப்பு. அவளின் திருமணக் கோலத்தை இப்போதே காண ஆரம்பித்திருந்தார்.

 

தூயவனுக்கு அவரின் கைப்பேசியையே தூக்கிப்போட்டு உடைக்கலாமா என்றிருந்தது.

 

“படிக்கிற பிள்ளைக்கு இப்ப என்னத்துக்கு சித்தி கலியாணம்? அதெல்லாம் பொறுமையா பாக்கலாம்.” என்றுவிட்டு விறுவிறுவென்று அவன் வெளியேறிவிட, ஒன்றும் புரியாமல் விழித்தார் மாதவி.

 

தன் வேனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் ஒரு இடத்தில் நிறுத்தி, தன்னை செல்பி எடுத்து அவளுக்கு அனுப்பிவிட்டான். அப்படியே, “ஃபோன் எண்டபடியாத்தானே இப்பிடிக் கட் பண்ணுறாய். சரியா ஒண்டரை மணித்தியாலம். வெயிட்டுடி செல்லம். வந்து கதைக்கிறன் உன்னோட.” என்று பேசியும் அனுப்பிவிட்டான்.

 

யாழிசை பயந்துபோனாள். கொஞ்ச நேரம் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவே இல்லை. தன் கைப்பேசியில் அவன் புகைப்படம் இருக்கிறது என்பதே நடுக்கத்தை விளைவிக்க வேகமாக அதை முதலில் அழித்தாள். சொன்னதுபோல் வந்துவிடுவானா, இல்லை அவளை மிரட்டுகிறானா என்று கணிக்க முடியவில்லை.

 

அவன் எல்லாம் மிரட்டுகிற ரகம் இல்லையே. நேரில் சமாளிப்பதற்கு விடவும் கைப்பேசியில் சமாளிப்பதே பரவாயில்லை போலிருக்க வேகமாக அவனுக்குத் தானே அழைத்தாள்.

 

‘வாடி வழிக்கு!’ அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன் இந்த முறை மூச்சும் விடவில்லை.

 

“ஏன்? ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறீங்க?” அவள் குரல் கலக்கத்திலும் பயனற்ற கோபத்திலும் தடுமாறியது.

 

அவன் அமைதியாக இருந்தான்.

 

“ஹலோ”

 

“…”

 

“ஹலோ”

 

“…”

 

“லைன்ல இருக்கிறீங்களா?”

 

“…”

 

“நான்… நான் வைக்கிறன்.”

 

“ஓ! அவ்வளவு தைரியம். சரி வை!”

 

அவளுக்குக் கோபம் வந்தது. அதையெல்லாம் அவனிடம் காட்டும் அளவுக்கு அவளிடம் சக்தி உண்டா என்ன?

 

“இப்பிடி ஒரு பொம்பிளை பிள்ளைக்கு அரியண்டம்(தொந்தரவு) தாறது சரி எண்டு நினைக்கிறீங்களா? உங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறா எல்லா.” என்றவள் குரல் கலங்கிக் கரகாரத்தது.

 

அந்தக் குரலும் அவள் சொன்ன விடயமும் அவனைத் தாக்கியதில் சட்டென்று அமைதியானான்.

 

அவனிடம் சத்தமில்லாமல் போகவும், “ஹலோ!” என்றாள் திரும்பவும்.

 

அதென்ன எப்ப பார்த்தாலும் ‘ஹல்லோ?’ அவனுக்குப் பெயர் இல்லையா என்ன? அதைக் குறித்துப் பேசாமல், “அப்பிடி நான் உனக்கு எத்தின தரம் அரியண்டம் தந்திட்டன் எண்டு இப்பிடிக் கேக்கிறாய்?” என்றான் நிதானமாக.

 

இப்போது அவள் அமைதியானாள். பின்னால் துரத்திக்கொண்டு வருவது, அழைப்பை ஏற்கவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்புவது, பஸ்ஸில் பக்கத்தில் வந்திருந்து மறைமுகமாக மிரட்டுவது, இதோ இப்போது நீ பேசியே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவது எல்லாம் தொந்தரவுக்குள் வராதா என்ன?

 

அவள் வாய்விட்டுக் கேட்காதபோதும் அவளுக்குள் இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்ததில், “அண்டைக்கு பின்னால வந்ததுக்கு பஸ்ஸில வந்து கதைச்சதுக்கும் காரணம் சொல்லிட்டன். அத தாண்டி அதுக்கு முதலோ அதுக்கு பிறகு உனக்கு எடுத்தனானா?” என்றான் அவன்.

 

இல்லைதான். ஆனால், இப்போது ஏன் எடுத்தானாம்?

 

“அத நான் எடுத்ததும் நீ எடுத்திருந்தா சொல்லி இருப்பன்.” என்றான் அவன்.

 

அவளுக்கு ஒருமுறை திக் என்று இருந்தது. கைப்பேசி வழியாக அவள் இதயத்தை அலசும் மாயமந்திரம் ஏதும் செய்கிறானா என்ன? கைப்பேசியை ஒருமுறை எடுத்துக் பார்த்துவிட்டு மீண்டும் அவள் காதோரம் பொறுத்த, “நான் எடுத்தா நீ ஏன் கதைக்கிறேல்ல?” என்று வினவினான் அவன்.

 

“நான் வைக்கவா?”

 

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு இசை?”

 

“எனக்கு வகுப்பு தொடங்கப்போகுது.”

 

“அது சரி, எவனோ வந்து உன்னக் கலியாணத்துக்கு கேட்டவனமே?ஆர் அவன்?”

 

இதையெல்லாம் இவன் ஏன் கேட்கிறான் என்று கோபம் வந்தாலும், “ஆர் எண்டு எனக்குத் தெரியாது.” என்று பதில் சொன்னாள் அவள்.

 

அந்தப் பதில் அவனைக் கொஞ்சம் ஆசுவாசமாக்கியது.

 

“இப்ப சொல்லு, ஏன் என்னோட கதைக்கிறேல்ல நீ?”

 

யாழிசைக்கு மெல்லிய சினம் உண்டாயிற்று. “ஏன் எடுத்தனீங்க? ஏதும் முக்கியமான அலுவலா? எனக்கு வகுப்புத் தொடங்கப்போகுது எண்டு சொன்னனே.” என்றாள், இலேசாக வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து.

 

“இசையரசிக்கு கோவம் எல்லாம் வருது போல இருக்கே.” என்றான் அவன் அதற்கும்.

 

அதென்ன புதிதாக இசையரசி? மெலிதாகத் தனக்குள் அதிர்ந்தாள் யாழிசை.

 

அவனுக்கும் ஏன் இப்படி அவளைப் போட்டுப் படுத்துகிறோம் என்று தெரியவில்லை. ஆனால், அழைப்பைத் துண்டிக்க மனமில்லை. இன்னும் அவளிடம் பேச்சுக்கொடு என்றுதான் மனம் உந்தியது. அப்படி அவளிடம் பேசுகையில்தான் அவன் இதயத்தின் தாகம் தீர்ந்துகொண்டிருந்தது.

 

ஆனால், யாழிசையின் உள்ளுணர்வு இதற்குமேல் அவனோடு பேசாதே என்று கடுமையாக எச்சரிக்கை, “நான் வைக்கிறன்.” என்றாள் பேச்சைக் கத்தரிக்கும் குரலில்.

 

அந்தத் தொனி அவனையும் சீண்ட, “தைரியம் இருந்தா வச்சுப்பாரன்!” என்றான் அவன் சவாலாக.

 

அந்தத் தைரியம் இருந்தா என்ற சொல் அவளைக் காயப்படுத்தியது. அது இல்லை என்றுதானே இப்படி எல்லாம் அவளைப் போட்டுப் படுத்துகிறான். அப்படியும் சொல்ல முடியாது. அவர்கள் எளியவர்கள்; வறியவர்கள். அதனால் மிரட்டும் இடத்தில் அவனும் பொறுத்துப்போகும் இடத்தில் அவளும் இருக்கிறாள் என்பதால் வந்த ஆணவம்தானே இது?

 

மனம் பொறுக்காமல், “என்ன வேணும் இப்ப உங்களுக்கு? நீங்க நடக்கிற விதம் கொஞ்சம் கூட நல்லா இல்ல. அலுவலா எடுத்தா பரவாயில்ல. என்ன இது?” என்று தன்னை மீறிச் சீறினாள்.

 

அவனையும் அது சுட்டுவிட, “இப்ப என்ன உனக்கு? எனக்கு உன்னோட கதைக்கோணும் மாதிரி இருந்தது. உன்ர குரலைக் கேக்கோணும் மாதிரி இருந்தது. அதான் எடுத்தனான். இப்ப என்ன செய்யப்போறாய் அதுக்கு?” அவன் கேட்டு முடிக்க முதலே அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.

 

அவனுக்கு முகம் கறுத்துப்போனது. முகத்தின் முன்னே வாசற்கதவை அடித்துச் சாத்தியதுபோல் மிகவும் அவமானமாக உணர்ந்தவன் திரும்பவும் அவளுக்கு அழைத்தான்.

 

இப்போது அழைப்புப் போகவில்லை. அவள் தன்னைத் தடை செய்துவிட்டாள் என்று தெரிந்தது. மனம் கொதிக்கக் கைப்பேசியைத் தூக்கிப் போட்டவனுக்குத் தன்னை நிதானத்துக்கு கொண்டு வர கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. ஸ்டேரிங்கில் கோபத்தோடு விரல்களால் தாளம் தட்டினான்.

 

‘எங்க போனாலும் இஞ்சதானே நீ வரோணும். வா, அப்ப இருக்கு உனக்கு!’ தன் கோபத்தை வாகனத்தில் காட்டிக் கிளப்பினான்.

error: Alert: Content selection is disabled!!