அத்தியாயம் 18
‘Food, like a loving touch or a glimpse of divine power, has that ability to comfort.’
– Norman Kolpas
மறுநாள், புலர்ந்த பொழுதிற்குக் கூட வெகு ஆர்வமாக இருந்ததோ என்னவோ! ஹோம் குக்கிங் குழுவினர் அப்படித்தான் உணர்ந்தார்கள். போட்டியில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் அதே எண்ணம்தான். இறுதிப் போட்டியாளர்கள், அவர்கள் குடும்பங்கள் மட்டுமா? இந்த நிகழ்ச்சியின் இலட்சாதி இலட்ச இரசிகர்களுமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் கணம் இன்றுதான் நிகழப்போகிறது!
இறுதிப்போட்டியில் பங்கு பற்றுபவர்களின் குடும்பத்தினர், ஆரம்பத்திலிருந்து பங்கு கொண்டிருந்த போட்டியாளர்கள், நடந்து முடிந்த ஒன்பது சீசன்களின் இறுதிப் போட்டியாளர்களுள் அநேகர் என்று, அந்தப் பிரமாண்டமான மண்டபத்தின் இருபுறமும், ‘ப’ வடிவில் அமைந்திருந்த கேன்ட்ரியும் நிறைந்து போயிருந்தன.
மண்டபத்தின் உயர்ந்த மரக்கதவுகள் மெல்ல மெல்லத் திறபட, செஃப் ஆரோன் டேலின் கம்பீரக் குரல் கணீரென்று வரவேற்க, உள்ளே காலடி வைத்த மூன்று இறுதிப் போட்டியாளர்களும் இதுவரை போலில்லாது, தம் பெயர் எழுதப்பட்ட வெள்ளை செஃப் கோர்ட் அணிந்திருந்தார்கள்.
வெற்றியோ தோல்வியோ இதை விட வேறென்ன வேண்டும்? நிதானித்து நின்று தம்முள் பார்த்துக்கொண்டவர்கள், கட்டிப்பிடித்து ஒருவர் ஒருவரை வாழ்த்திக்கொண்டார்கள். கரகோசமும் வாழ்த்தொலியும் சூழ நகர்ந்தவர்கள் பார்வை சுற்றிச் சுழன்றது. கைகளைக் காட்டுவது, பறந்து வந்த முத்தங்களுக்குப் பதில் அனுப்புவது என்று முன்னேறியவர்கள், விறைப்பாக நின்ற நடுவர்கள் முன்னால் சென்று நிமிர்வாகவே நின்றார்கள்.
“வெல்கம் கைஸ்!” கணீரென்று ஆரம்பித்தார், கிறிஸ்டினா.
“சமையல் என்பது ஒரு இரசனை மிக்க கலை. குறுகிய காலத்தில் கடும் உழைப்பைப் போட்டு அந்தக் கலையில் தேர்ந்து எங்கள் முன்னால் வைக்கப்படும் எந்தவிதமான சவால்களையும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையோடு நிற்கும் மூவரையும் பார்த்து நாங்கள் வியக்கிறோம். உங்கள் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் தலை வணங்குகிறோம்!” மகிழ்வோடு கை தட்டியபடி சொன்னார், செஃப் ஆரோன் டேல்.
சேர்ந்து கைதட்டிய ஒலிவியா முதல்நாளைப் போலில்லாது மனதிலுள்ள அனைத்துத் தவிப்புகள் குழப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு, ‘மிகவும் திறமையாகத் தயாராகியுள்ளேன், எந்தவகையில் என்றாலும் என்னைச் சோதியுங்களேன் பார்ப்போம்!’ என்ற நம்பிக்கையும் சவாலுமாக நின்றாள், எனலாம்.
நடுவராக நின்ற வேர்த் நிலைதான் பரிதாபகரமாக இருந்தது. ஓரெட்டில் அணுகி இறுக அணைத்து அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் மனசார வாழ்த்த வேண்டும் போல் மனதுள் பரபரத்துப் போனவன், அவள் மீது படிந்த விழிகளை அகற்ற முடியாது தடுமாறி நின்றான்.
அடுத்ததாகக் கதைக்க வேண்டியவன் அமைதியாக நிற்கிறானே! சட்டென்று திரும்பிப் பார்த்தார், ஆரோன் டேல். புறங்கையால் ஒரு இடி கொடுத்தார், கிறிஸ்டினா.
“பிலிப் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் …” மறுபக்கம் திரும்பிச் சொல்லவும் செய்தார். கட்டை விரலை உயர்த்திக்காட்டி இந்த இடத்தில் கத்திரிக்கோல் போட்டுவிடுகிறேன் என்றான், அந்த பிலிப்.
“இன்னமும் சில மணிநேரம் தான் வேர்த், தயவு செய்து நடுவர் வேலையை மட்டுமே செய்கிறாயா நீ!” வாயில் கை வைத்து மறைத்தபடி சற்றே அவன் புறமாகச் சரிந்து அடிக்குரலில் சிடுசிடுத்தார், ஆரோன் டேல்.
“sure sure” என்றவன், ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தியபடி நிகழ்வைத் தொடர்ந்தான்.
“வெல்…அம்ம்ம்…இப்போது உங்களுக்கான இறுதிச்சவால் நடக்கவிருக்கிறது. அதை உங்களுக்குத் தரப்போவது நாங்கள் மூவரும் இல்லை. மதிப்பீடு செய்யப் போவதும் நாங்கள் மட்டும் இல்லை.” நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
புருவங்கள் உயரப் பார்த்தார்கள், ஃபைனலிஸ்ட்ஸ்.
“ஆமாம், அவுஸ்திரலியாவே கொண்டாடும், நீங்கள் ஒவ்வொருவரும் சந்திக்கத் துடிக்கும் டெஸர்ட் மன்னன், பல ரெஸ்டாரண்டுகளின் உரிமையாளர், சிறந்த செஃப், பூட் கிரிட்டிக் என எல்லாம் கடந்து சிறந்ததொரு மனிதன் எங்கள் இனிய நண்பர் செஃப் ஒலிவர்! அவரை, இந்த இறுதிப்போட்டிக்கு வரவேற்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம்! அதோ… எமது பிரியத்துக்குரிய செஃப் ஒலிவர்!” வாயில் நோக்கிக் கை காட்டினான். கதவுகள் விரிந்தன.
சதுர வடிவிலான பெரிய மரத்தட்டையும் தூக்கிக்கொண்டு முறுவல் மாறாது கம்பீரமாக உள்ளிட்டார், அந்த மனிதர்.
கரகோச ஒலியின் மத்தியில் வரவேற்கப்பட்டார், ஒலிவர். அவர் ஏந்திவந்த தட்டு அங்கிருந்த மேசையில் வாங்கி வைக்கபட்டது.
நடுவர்கள் தம்முள் அளவளாவிவிட்டு, போட்டியாளர்களிடம் திரும்பினார்கள்.
போட்டியாளர்களை வாழ்த்தினார், ஒலிவர். அவர்களோ, கரங்களைப் பிசைந்தபடி அவர் கொண்டுவந்திருந்த தட்டில் என்னதான் இருக்கும் என்ற அடக்க முடியாத ஆவலோடு நின்றனர்.
“உங்கள் பொறுமையைச் சோதிக்கவில்லை. வழமையாக இறுதிச் சுற்றுக்கு ஒரு டிஷ் தயாரிக்க வேண்டியிருக்கும். இம்முறை, இரண்டு!” என்று சொல்லி போட்டியாளர்கள் இதயத் துடிப்பை ஏற்றினார், ஒலிவர்.
“அதில் ஒன்று ஸ்வீட்(Sweet) மற்றது சேவரி(Savory). முதலில் சேவரி டிஷ் என்னவென்று பார்ப்போமா?” என்றபடி, கறுப்பு நிறத்திலான மட்பாண்ட மூடியை மெல்ல மெல்ல அகற்றினார், பார்வை போட்டியாளர்களில் இருந்தது.
அவர்களோ, சற்று எட்டிப் பார்த்தபடி நின்றவர்கள் முழுதாகத் திறந்ததும் “ஓஓஓஓஓஓஓஓ!” குரலெழுப்பினார்கள்.
கேன்ட்ரியில் நின்றவர்கள், “ ஓஓஓஓஓஓ …ஸ்குயிட் நூடில்ஸ் வித் கோஜி பட்டர்! (Squid Noodles with Koji Butter) வாவ்!” என்று குரலெழுப்பினார்கள்.
சிரித்தார், ஒலிவர். அவர் கை அடுத்ததைத் திறக்க ஆயத்தமாக, “இந்த ஸ்வீட் என் 3 மாத உழைப்பில் கண்டுபிடித்தது. சிக்கலானது தான், தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்!” என்றுவிட்டுத் திறந்தால்… போட்டியாளர்கள் மட்டுமல்ல, கேன்ட்ரியும் மூச்சு விடவில்லை. நடுவர்கள் கூட விழி விரித்தபடி நின்றிருந்தார்கள்.
கறுப்பு சேவீஸ் பிளேட்டில் டென்னிஸ் பந்தளவில் பொன்னிறத்தாள் சுற்றிய உருண்டை கண்ணைப் பறித்தபடி இருந்தது.
“கோல்டன் கிராக்கில்? (golden crackle)” ஆரோன் டேல் மெல்லக் கேட்டார். ஆமென்று தலையாட்டிய ஒலிவர், அருகில் வைத்திருந்த கரண்டியை எடுத்தார்.
ஒரு சிறு தட்டுத்தான், மேலே போர்த்தியிருந்த தங்கநிறத்தோடு ஒட்டியிருந்த சொக்லேட் மெல்ல வெடித்து விழ, உள்ளே, நாலைந்து நிறங்களிலான அரிசிப் பொரி! சரிசமமாக வெட்டிக் காட்டினார் ஒலிவர்.
“ஆறு மெல்லிய அடுக்குகளில் சொக்லேட் கேக், மூஸ், வைட் கரமல் கிரீம், புருனே ஜாம்(Prune Jam), சோல்ட்டட் ஓலோரோசோ காரமல் (salted oloroso caramel) மற்றும் டார்க் சொக்லேட் கனாச்(dark chocolate ganache)” என, ஒன்று ஒன்றாகச் சொன்னவர், “இந்த இரண்டுக்குமே ஸ்டெப் பை ஸ்டெப் ரெசிபி தரப்படும், சுவை பார்க்கத் தனித்தனியாக இரண்டு டிஷ்களும் தரப்படும்.” என்று முடித்தார்.
போட்டியாளர்கள் அதிர்விலிருந்து மீளவே இல்லை. ஒலிவியாவோ அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள். எவ்வளவு வேலை? மனம் மலைத்துப் போயிற்று.
“இது இரண்டும் செய்வதற்குச் சரியாக 140 ஸ்டெப்ஸ் உள்ளது. உங்களுக்கு ஐந்து மணி நேரம் தரலாம். பிறகு, எங்கள் முன்னால் வைத்து இரண்டையும் பிளேட் பண்ண, ஒவ்வொருவருக்கும் 25 நிமிடங்கள் தரப்படும்.” என்று, ஆரோன் சொல்ல மூவருக்கும் உயிர் வந்தது.
ஒருவர் ஒருவரைப் பார்த்தவர்கள், பின்வாங்கவா முடியும்? ஒரு கை பார்க்கலாம் என்று பார்வையால் சொல்லிக்கொண்டார்கள். கேன்ட்ரியில் நின்றவர்களோ, தலையில் கைவைத்தபடி, “ஓஹ் மை கோட்!” இராகமிழுத்தார்கள். அதுகூட போட்டியாளர்களுக்குச் சவாலாக, புத்துணர்வு தருவதாக இருந்தது. தமக்குள் கை கொடுத்துக்கொண்டு தயாரானார்கள்.
“தட்ஸ் எ ஸ்பிரிட்!” என்று கை தட்டியது மட்டுமல்லாது, ஓடிவந்து மூவருக்கும் வாழ்த்துச் சொன்னான் செஃப் தோமஸ் வேர்த், சும்மாவும் இல்லை, இலேசாக அணைத்து.
“உன்னில் முழு நம்பிக்கை இருக்கு. நீயும் வை!” ஒலிவியா காதோரம் முணுமுணுத்துவிட்டு, நடுவர்களோடு இணைந்து கொண்டவனை மேலிருந்து கீழாக ஒரு சாதியாகப் பார்த்தார், ஆரோன் டேல். பின் சற்றே அவன் காதடிக்குச் சாய்ந்தவர்,
“அடுத்த சீசனில் உனக்கு இந்த இடம் கிடைப்பது கடினம்.” அடிக்குரலில் சொன்னார்.
“வை செஃப் வை? நான் என்ன ஒவ்வொரு சீசனிலும் ஒருத்தியைக் காதலிக்கவா போகிறேன்? வாழ்வு முழுமைக்கும் ஒலிவியா மட்டும் போதும்!” கண்ணடித்துச் சொன்னவன் முதுகில் ஒன்று போட்டார், ஆரோன். ‘Made for each other’ அன்போடு மனதுள் சொல்லிக்கொள்ளவும் செய்தார்.
ஆரம்ப ஐந்து நிமிடங்கள் தேவையான பொருட்கள், உபகரணங்கள் என்று எடுத்து வைத்துவிட்டு, மூவரும் ரெசிபி பேப்பர்களை வாசித்து வாசித்து ஒவ்வொரு ஸ்டெப்களாக செய்ய ஆரம்பித்திருந்தனர்.
வழமைபோலவே நடுவர்கள் நால்வரும் சென்று சில வார்த்தைகள் கதைத்தார்கள். டிப்ஸ் கொடுத்தார்கள். நினைவூட்டினார்கள். பாராட்டலும் நடந்தது. ருசி பார்க்கவும் தவறவில்லை.
இப்படியே அரைவாசி நேரம் கடந்திருக்க, திடீரென்று ஒலிவியாவின் சமையல் பகுதியில் அவள் தலை தெரியாது முழித்தான், வேர்த். அவன் முணுமுணுத்ததைக் கேட்ட ஆரோன், விறுவிறுவென்று அவள் சமையல் பகுதிக்கு நடந்தார்.
அவளோ, விம்மியபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள்.
“ஒலிவியா! வாட் ஹேப்பெண்ட்? எதையாவது பிழையாகச் செய்துவிட்டாயா? ஒவ்வொரு ‘ஸ்டெப்’பும் பார்த்துத்தானே செய்கிறாய்?” ஆரோனுக்கே பதற்றம் வந்திருந்தது.
“எழுந்திரு ஒலிவியா?” அதட்டினார்.
“ஒலிவியா என்னைப் பார்?” என்ற கண்டிப்பான குரலில் எழுந்து நின்று நிமிர்ந்தாள், அவள். அன்று, உயிர் நண்டு சமைத்த போதும் இவர் தான் ஓடி வந்து அவளைத் தேற்றி வெல்லவே வைத்தார். இப்போதோ…
கண்ணீர் மளுக்கென்று வழிய நின்றவளைப் பெரிய மூச்சோடு கோபமாகவே பார்த்தார், ஆரோன்.
என்னவோ ஏதோவென்று எண்ணி வேர்த், கிறிஸ்டினா, ஒலிவர் கூட வந்துவிட்டார்கள்.
“இந்தக் கட்டத்தில் உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. சொல், உனக்கு இப்ப என்ன பிரச்சினை? இந்த மனநிலையில் சமைத்தால் நன்றாக வருமென்று எண்ணுகிறாயா?” அவர் போட்ட அதட்டல் வாயைத் திறக்க வைத்திருந்தது.
“அம்மா… என் அம்மா டெஸெர்ட் செய்வதில் அவ்வளவு கெட்டிக்காரி! எப்படியாவது இன்று வருவார் என்று நினைத்தேன்.” விம்மலோடு சொன்னவளை என்ன செய்வது?
“ஓ ஒலிவியா! அங்கே பார், உன் குடும்பத்தில் மிகுதி எல்லோரும் வந்திருக்கிறார்கள். என்னவோ ஏதோவென்று பதற்றத்தோடு எழுந்து நிற்கிறார்கள். இன்று மாலையில் உன் அம்மாவைச் சந்திக்கலாம் ஒலிவியா. அப்படியும் இல்லையோ… கம் ஹியர்… உன் அம்மாவாக என்னையே நினைத்துக் கொள் டார்லிங்!” உணர்ந்துதான் சொன்னார், ஆரோன்.
பின்னால் ஓரடி எடுத்து வைத்தாள், ஒலிவியா. அவரைத் தீர்க்கமாகப் பார்த்தாள். கணத்தில் சுதாகரித்திருந்தவள், “எனக்கு இரண்டே இரண்டு நிமிடங்கள் தர முடியுமா? டாட்…” என்று, தகப்பனை நிமிர்ந்து பார்த்தபடி கேட்டு முடிய முதலே ஆரோன் சம்மதமாகத் தலையாட்டி இருந்தார்.
டெனிஸ் மட்டும் கேன்ட்ரியில் நின்றுகொண்டிருந்தார். என்னவோ ஏதோவென்ற பதற்றத்தோடு நின்றவர் மகள் தன்னை நோக்கி வர, தானும் படிகளில் இறங்கி ஓடி வந்தார்.
ஓடிச்சென்று தகப்பனை இறுகக் கட்டிப் பிடித்து விம்மி அழுதாள், ஒலிவியா.

