வெளிச்சக்கீற்று 9 – 1

அத்தியாயம் 9

 

 

இந்திரா மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள். யாருமே எதிர்பாராத, மிக இனிமையான அதிர்ச்சி. அவர்களின் வீடே வெளிச்சம் போட்டது போன்று பிரகாசமாயிற்று.

 

தாமினியின் மூன்றாவது வயதிலிருந்தே ஆவலாக எதிர்பார்த்து, நடக்காமல் போய், ஒரு குழந்தைதான் போலும் என்று ஏற்றுக்கொண்ட பின் இது நிகழ்ந்திருந்தது. கணவனும் மனைவியும் சந்தோசத்தில் திக்குமுக்காடி நின்றனர்.

 

விவாகரத்தானதிலிருந்து சவீதா இங்கு வருவதில்லை. நல்ல நாள்கள், விசேச நாள்கள் என்றால் மட்டும் தவமலரும் கதிரேசனும் வந்துவிட்டுப் போவார்கள். இந்தமுறை, செய்தி அறிந்த தவமலர், சவீதாவையும் அழைத்துக்கொண்டு வந்தார். அங்கிருந்த எல்லோர் முகமும் மாறிப் போயிற்று.

 

திகைப்பும் செய்வதறியாத தடுமாற்றமுமாகத் திரும்பி அகத்தியனைப் பார்த்தாள் இந்திரா. முகம் இறுக, எழுந்து உள்ளுக்கு நடந்தான் அவன். மருமகன் வீட்டினரைக் கவனித்தேயாகவேண்டிய கட்டாயத்தில்

அவர்களை வரவேற்று, அமரவைத்தார் சிந்தாமணி.

 

கஜேந்திரனுக்கும் அந்தக் கடினமான சூழ்நிலையைக் கையாள்வது சிரமமாக இருந்தாலும், மீண்டுமொருமுறை தந்தையாகியிருக்கும் சந்தோசமான இந்த நேரத்தில் அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

 

அதன்பிறகு, அடிக்கடி அவளோடு வந்துபோனார் தவமலர். இந்திராவும் சிந்தாமணியும் தடுக்க முடியாமல் நின்றனர்.

 

கஜேந்திரன் வேறு, “அவள் செய்தது எல்லாம் பிழைதான். எனக்கும் அவன்ர வாழ்க்கை இப்பிடியானதில சரியான கவலைதான் இந்திரா. அதுக்காக இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஒதுக்கி வைக்கிறது, சொல்லு? அதோட, நீ எப்பிடி உன்ர தம்பிக்கு அக்காவோ அப்பிடித்தான் அவளுக்கு அண்ணி. அதுக்கேற்ற மாதிரிக் கொஞ்சம் சமாளிச்சு நடக்கப்பார்.” என்று சொல்லிவிட, இந்திராவால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

 

அதன்பிறகு, மெல்ல மெல்ல எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்துபோக ஆரம்பித்தாள் சவீதா. ‘அண்ணி, இது நீங்க கட்டாயம் சாப்பிட வேணுமாம், உடம்புக்கு பலம் சேர்க்குமாம் எண்டு அம்மா தந்துவிட்டவா.’ என்று சொல்லிக்கொண்டு, அடிக்கடி எதையாவது கொண்டுவந்தாள்.

 

இந்திராவை உடற்சோர்வோடு சேர்த்து இதுவும் எரிச்சலாக்கிற்று. “எனக்கு ஒண்டும் வேண்டாமாம் எண்டு சொல்லிவிடு சவீதா. இல்லாட்டியும் அம்மா இருக்கிறா, செய்து தருவா. மாமிக்கு ஏன் வீண் சிரமம்?” என்று சொல்லிப்பார்த்தாள்.

 

“நல்ல கதையா இருக்கே அண்ணி. பிறக்கப்போறது எங்கட வீட்டு வாரிசு. நாங்க கவனிக்காம ஆரு கவனிக்கிறது? எனக்கும் அம்மாக்கும் உங்களுக்குச் செய்றதை விட வேற என்ன வேல இருக்கு?” என்றவளின் வாயிலேயே குத்தவேண்டும் போலிருந்தது இந்திராவுக்கு.

 

அதுவும், அகத்தியன் வரும் நேரங்களைக் கணித்து வந்து நிற்பதும், இயல்பு போன்று, ‘சாப்பாடு போடவா அகத்தியன்’, ‘தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ என்று அவனைக் கவனிக்க முயல்வதும் என்று, அவர்கள் மூவருக்கும் சொந்த வீட்டையே நரகமாக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

 

அதிலிருந்து, வீட்டில் இருக்கும் நேரத்தைச் சுருக்கிக்கொள்ள ஆரம்பித்தான் அகத்தியன். முப்பதின் பின்பகுதிக் காலத்தில் கருவுற்றிருப்பதால் இந்திரா வேலையை விட்டிருந்தாள். அதில், கஜேந்திரனுக்கு நேரமில்லாத நாள்களில் தாமினியை அழைத்துவரும் பொறுப்பை ஏற்றிருந்தான் அவன். அவளைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, உணவையும் முடித்துக்கொண்டு போவது வசதியாக இருந்தது.

 

இப்போதெல்லாம் பகலில் வருவதேயில்லை. தாமினியையும் தன்னுடன் கடையிலேயே வைத்துக்கொண்டான். பகல் உணவைக் கடையில் உண்டான்.

 

அதைத் தாங்க முடியாமல், “இப்பிடி சவீதா அடிக்கடி வந்து போறது சரியா வராது கஜன். அவன் சாப்பிடக்கூட வீட்டுக்கு வாறானே இல்ல.” என்று கணவனிடம் சொன்னாள் இந்திரா.

 

“என்ன கதைக்கிறாய் நீ? அவன் வராட்டி வரச்சொல்லி அவனிட்டச் சொல்லு. என்ன இருந்தாலும் அவள் என்ர தங்கச்சி. ஒரேடியா வெட்டிவிடேலாது. இங்க நடக்கிற நாலு நல்லது கெட்டதுக்கு அவள் வந்து போகத்தான் வேணும். அப்ப எல்லாம் என்ன செய்யப் போறானாம் உன்ர தம்பி? அவே ரெண்டு பேருக்கையும் இருந்த உறவு முடிஞ்சிது. இப்ப அவள் என்ர தங்கச்சி. அவன் உன்ர தம்பி. அத மட்டும் மனதில வச்சு நடக்கச் சொல்லு!” என்று கண்டிப்புடன் சொல்லிவிட, அதற்குமேல் அவளால் ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று.

 

 

*****

 

 

தாமினியைப் பள்ளிக்கூடத்துக்கு விடப் போகும்போதோ, அழைத்துவரச் செல்லும்போதோ பள்ளிக்கூட வாசலில் வைத்து யசோதினியை அடிக்கடி காண்பான் அகத்தியன். அறிந்தவன் என்று சிறு தலையசைப்பைக் கூடத் தரமறுப்பாள் அவள். அதற்குக் காரணம் அன்னையின் பேச்சு என்று தெரிந்தது. அவனாக நாடிச்சென்று விளக்கம் கொடுக்க ஏதோ ஒன்று தடுத்தது. அதில் அவனும் ஒதுங்கிக்கொண்டான்.

 

ஆனால் அன்று, அவளைக் காண்போமா என்று விழிகளால் அலசினான். அவளும் வந்தாள். தாமினி முதலாம் வகுப்பு என்பதில் முதலே வந்திருந்தாள். இருந்தாலும் காத்திருந்தான். தூரிகா வந்ததும் தன் பைக்கை அவளருகில் கொண்டுசென்று நிறுத்தினான்.

 

சிறு திகைப்பும் கேள்வியுமாகத் திரும்பிப் பார்த்தாள் அவள். அந்தப் பார்வை கருத்தில் பதிந்தாலும் காட்டிக்கொள்ளாமல், ஒரு மருந்துச் சீட்டினை சட்டைப் பொக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டி, “இது உங்கட பார்மசில இருக்கா? ஒரு மூண்டு இடத்தில கேட்டுட்டன். இல்லை எண்டு சொல்லிட்டினம். அக்காக்கு அவசரமா வேணும்.” என்றான்.

 

வாங்கிப் பார்த்தாள். தாய்மையுற்ற பெண்கள் எடுப்பது என்று பெயரைப் பார்க்கவே விளங்கிற்று. “இருக்கவேணும். எதுக்கும் பொறுங்கோ, கேட்டுட்டுச் சொல்லுறன்.” என்றவள், உடனேயே மகிளாவுக்கு அழைத்து விசாரித்துவிட்டு, “இருக்காம். நான் எடுத்து வைக்கிறன். நேரம் இருக்கேக்க வந்து வாங்குங்கோ.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

 

இந்த இடைவெளிக்குள் இருவரின் பின்னேயும் அமர்ந்திருந்த சின்னவர்கள், தமக்குள் அறிமுகமாகி இருந்தனர். அவர்களும் கையாட்டி விடைபெற்றுக் கொண்டனர்.

 

அவள் ஸ்கூட்டியை கொண்டு சென்று பார்மசி வாசலில் நிறுத்த, அதனருகில் அகத்தியனின் பைக்கும் வந்து நின்றது. இதை எதிர்பாராத யசோ, என் பின்னாலேயே வந்தானா என்கிற புருவச் சுளிப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

 

அகத்தியனுக்கு எரிச்சல்தான் மிகுந்தது. என்ன இது, எப்போது பார்த்தாலும் இப்படிப் பார்ப்பது? அவனை என்ன, விடலைப் பெடியன் போன்று அவள் பின்னால் சுற்றுவதாக நினைக்கிறாளா?

 

“இப்பவே வாங்கி வச்சிட்டா எனக்கு ஈஸி. இன்னொருக்கா வந்துபோக நேரமிருக்காது. அதோட, நீங்க எந்த பார்மசில வேலை செய்றீங்க எண்டும் எனக்குத் தெரியாது.” என்றான் எரிச்சலை அடக்கிய குரலில்

 

அப்போதுதான் தன் தவறு புரிய, “சொறி!” என்றாள் முணுமுணுப்பாக. கையோடு, அவனுக்குத் தேவையான மருந்தை எடுத்துக்கொடுத்தாள். இதற்குள், தூரிகாவுடன் நன்றாகச் சேர்ந்துகொண்ட தாமினிக்கு அங்கிருந்து போக மனமில்லை.

 

“நீங்களும் வாறீங்களா? என்ர மாமா, கடைல கரம்போர்ட் வச்சிருக்கிறார். விளையாடலாம்.” தூரிகாவிடம் ஆசையாக வினவினாள்.

 

தூரிகாவுக்கும் போக ஆசையாகத்தான் இருந்தது. அனுமதிக்காக அன்னையைப் பார்த்தாள்.

 

மகளின் அந்த ஆவல் நிறைந்த பார்வை, யசோதினியைப் பாதித்தது. ஆனால், மகளை அனுப்பி அவர்கள் மகனைப் பிடிக்கப் பார்க்கிறாள் என்கிற பேச்சு வந்தாலும் வரும் என்று உள்ளே ஓட, “அவாக்கு நேரமில்ல செல்லம். ஹோம்வேர்க் செய்யோணும். படிக்கோணும். வாற கிழமை மன்த்லி எக்ஸாம் வேற வருது.” என்று, நல்லபடியாகவே சின்னவளிடம் சொன்னாள்.

 

“கொஞ்ச நேரம் விளையாடிப்போட்டுப் படிக்கிறோம் அன்ட்ரி. ப்ளீஸ்!”

 

அப்படி அவள் தலை சரித்துக் கெஞ்சியபோது யசோவுக்கு மறுக்க மனமேயில்லை. ஆனாலும் கூட, “இல்லை அம்மாச்சி. எனக்கு அது சிரமமடா. இன்னொரு நாளைக்குப் பாப்பம். சரியா?” என்றாள் கனிவாகவே.

 

முதலாளிக்குப் பிடிக்காது என்பதில் அவளை இங்கே நின்று தூரிகாவுடன் விளையாடும்படி சொல்லவும் முடியவில்லை.

 

ஒற்றைப் பிள்ளையாக இருந்து, செல்லம் கொஞ்சி அனைத்தையும் சாதித்துப் பழகிய தாமினியும் விடுவதாக இல்லை. “இன்னொரு நாளைக்கும் வரட்டும் அன்ட்ரி. இண்டைக்கும் விடுங்கோ, ப்ளீஸ் ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.

 

“இப்பிடிக் கெஞ்சினா அன்ட்ரி பாவமெல்லா. எக்ஸாம் எல்லாம் முடியட்டும். பிறகு ஒரு நாளைக்குக் கட்டாயமா விடுறன். ஓகே!” என்று முடித்தாள்.

 

தாமினியின் முகம் அப்படியே வாடிப்போயிற்று. அவள் விடமாட்டாள் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டதில் சரியென்று தலையசைத்தாள்.

 

இதையெல்லாம் பார்த்திருந்த அகத்தியனுக்குக் கோபம்தான் வந்தது. சின்ன பிள்ளைகள், ஒரு கொஞ்ச நேரத்திற்குச் சேர்ந்திருந்து விளையாடினால்தான் என்ன? “தாமினி நாலுமணி வரைக்கும் நிப்பா. பிறகு, அத்தான் வந்து கூட்டிக்கொண்டு போயிடுவார். அதுக்குப் பிறகு நானே தூரிகாவைக் கொண்டுவந்து விட்டுவிடுறன்.” என்று தானும் கேட்டுப் பார்த்தான்.

 

“நேரமில்லை எண்டு கொஞ்சத்துக்கு முதல்தான் சொன்னீங்க.” என்றாள் அவள் உடனேயே.

 

அவன் முகம் மெலிதாகக் கன்றிற்று. மேலே அவனைக் கதைக்கவும் விடாமல், “அது எப்பிடியும் சரிவராது. விடுங்கோ!” என்றுவிட்டாள் அவள்.

 

பார்வையாலேயே எரித்துவிட்டுப் போனான் அகத்தியன். ஒரு சின்ன பெண்ணுக்கு மனமிரங்காத இவள் எல்லாம் என்ன பெண்?

error: Alert: Content selection is disabled!!