அத்தியாயம் 10
அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமினிக்கு ஏழாவது பிறந்தநாள். அகத்தியன் குடும்பத்தில் அவனைத் தவிர்த்து, கஜேந்திரன் உட்பட மற்ற நால்வரும் யசோதினியைத் தனித்தனியாக அழைத்திருந்தனர்.
சிந்தாமணிக்கு முக்கியமான நேரத்தில் உதவிய அருமையான பெண் என்கிற காரணம். கூடவே, அன்றைய சறுக்கலை நேர் செய்ய விரும்பினார். இந்திராவுக்கு அன்னைக்கு உதவியவள். அதோடு, மகளின் நண்பி தூரிகா என்பது. தாமினிக்குத் தன் புதிய தோழி, தன் பிறந்தநாளுக்கு வந்தேயாகவேண்டும் என்கிற விருப்பம். நீங்களும் அழைத்தால்தான் வருவாள் என்று மனைவியும் மகளும் சொன்னதில் கஜேந்திரனும் இவர்களோடு சேர்ந்துகொண்டிருந்தான்.
இத்தனை பேர் விரும்பி அழைத்ததில் யசோதினியாலும் மறுக்க முடியாமல் போயிற்று.
அதுவும், அகத்தியனோடு பார்மசிக்கே வந்த தாமினி, “ப்ளீஸ் ப்ளீஸ், நீங்க தூரிகா அக்காவையும் சிந்தூரியையும் கூட்டிக்கொண்டு வரவேணும் அன்ட்ரி. இல்லாட்டி நான் கேக் வெட்டவே மாட்டேன்.” என்று உரிமையாய்ச் சொன்னது, அவள் மனத்தை நெகிழ்த்தியிருந்தது.
அது ஞாயிற்றுக்கிழமை என்பதும், தன் பிள்ளைகளும் எங்கேயும் செல்வதில்லை என்பதும் சேரச் சம்மதித்தாள். எல்லாவற்றையும் விட, தன் தமக்கை மகள் இந்த முறையும் கெஞ்சுகிறாள், இவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்கிற பார்வையோடு நின்றிருந்த அகத்தியனின் முன்னால், மறுக்க முடியாமல் போயிற்று.
“சரி சொல்லுங்கோ, பிள்ளைக்கு என்ன கிஃப்ட் வேணும்?” என்று கேட்டபோது, “நீங்க வந்தாலே போதும் அன்ட்ரி.” என்று அவள் பதிலளித்தது, கண்களைப் பனிக்கச் செய்திருந்தது.
சின்ன பெண். சொன்னதன் உண்மைப் பொருள் தெரியாமல் கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படி அவளையும் பிள்ளைகளையும் முக்கியமானவர்களாகக் கருதி, பிரத்தியேகமாக அழைப்பவர்கள் யாருமில்லாது இருந்தவள் தன்னைக் கட்டுப்படுத்த மிகவுமே போராடினாள்.
அதை, முன்னால் நிற்பவனிடம் காட்டாமல் மறைத்தபடி, “சரி, கட்டாயம் வருவம். சரியா?” என்றதும், “தேங்க்ஸ் அன்ட்ரி, தேங்க்ஸ் அன்ட்ரி, தேங்க்ஸ் அன்ட்ரி!” என்று துள்ளிக் குதித்தாள் சின்னவள்.
அவள் பார்வை, அவளையும் மீறி அகத்தியனிடம் தாவிற்று.
அதுவரை, அவளையே கவனித்துக்கொண்டு இருந்தவன், வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டு, “அதுதான் உங்கட அன்ட்ரி மனது வச்சு ஓம் எண்டு சொல்லிட்டாவே. இனியாவது போவமா? நேரமாகுது.” என்றபடி மருமகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
அதென்ன மனது வைத்து? குத்திக் காட்டுகிறானா? மறைமுகமாக அவளோடு தனகிக்கொண்டே இருக்கிறான். என்றைக்காவது ஒருநாள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவள் குறித்துக் கொள்கையில் அவன் மட்டும் திரும்பி வந்தான்.
அவள் கேள்வியாய் நோக்க, “எத்தினையோ நாளா இதைச் சொல்லோணும் எண்டு நினைச்சிருக்கிறன். ஆனா, நான் எப்ப கதைக்க வந்தாலும் என்னவோ வில்லனைப் பாக்கிற மாதிரியே பாப்பீங்க. அதால எனக்கும் சொல்லேலாமப் போயிற்றுது. அண்டைக்கு அம்மா ஆஸ்பத்திரில வச்சுக் கதைச்சதைப் பெருசா எடுக்காதீங்கோ. வயதான மனுசி. வருத்தத்தில வேற இருந்தவா. யோசிக்காமக் கதைச்சிட்டா. நீங்க போனபிறகு, அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது எண்டு சொல்லிக் கவலைப்பட்டவா. இனி, அப்பிடி எதுவும் நடக்காது. அத மனதில வச்சு வராம இருந்திடாதீங்க.” என்றுவிட்டுப் போனான் அவன்.
போகிறவனையே பார்த்திருந்தாள் யசோ. வருகிறேன் என்று சொல்லிவிட்டபோதும், அன்றைய சிந்தாமணியின் பேச்சினால் போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வி, எழுந்துகொண்டேதான் இருந்தது. அவன் தந்த விளக்கம் அதை அகற்றிவிட்டிருந்தது.
வீட்டினரிடம் பெரிய விளக்கங்கள் எதுவும் சொல்லாமல், தூரிகாவின் பள்ளிக்கூடத் தோழி என்று மட்டும் முடித்துக்கொண்டாள் யசோ.
பிள்ளைகளை அழகாகத் தயார் செய்தாள். அவளும் நல்ல ஆடைகளையே அணிந்துகொண்டாள். இப்படி, விழாவுக்கென்று அவர்கள் மூவருமாகப் புறப்பட்டுப் போவது நன்றாகவே இருக்க, நிறைய நாள்களுக்குப் பிறகு உற்சாக மனநிலையில் இருந்தாள்.
சரியான நேரத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். ஒருசில குடும்பங்கள் ஏற்கனவே வந்திருந்தார்கள். வீட்டுக்குள் நுழைகையில் இருந்த தயக்கம், இந்திராவும் தாமினியும் வாசலுக்கே வந்து வரவேற்றதில் அகன்று போயிற்று. அவளுக்குத் தெரிந்த முகமாகச் சுசீலாவும் இருந்ததில் இன்னுமே இயல்பாகினாள்.
குழந்தைகள் உடனேயே சேர்ந்துகொண்டனர். இவள் அவர்களுக்கு உதவியாகச் சமையற்கட்டுக்கு நகர்ந்துகொண்டாள்.
கேக், கேக் வெட்டும் இடம் எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டது. தாமினி கூடத் தயாராகிவிட்டாள். ஆனாலும் விழா ஆரம்பமாகக் காணோம். இன்னும் ஏன் தாமதிக்கிறார்கள் என்று யோசித்தாள்.
“அவளே நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்து நிக்கிறாள். இவனுக்கு என்னவாம்?” கைப்பேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்கதவால் வெளியே நடந்த இந்திரா புறுபுறுத்தது, இவள் காதிலும் விழுந்தது.
அப்போதுதான் அகத்தியன் அங்கு இல்லை என்பதையே கவனித்தாள். ஏனோ? அக்கா மகளைச் சொந்தப் பெண்போல அப்படிப் பார்த்துக்கொள்வான். அவளின் பிறந்தநாளுக்கு நிற்காமல் எங்கே போனான்?
அவளுக்குத் தெரிந்தவர் அங்கு சுசீலாதானே. அவள் அவரைப் பார்க்க, “மெரூன் கலர் சுடிதார் போட்டுக்கொண்டு, என்னவோ சொந்த வீட்டில இருக்கிற மாதிரி இருக்கிறாள் பாருங்கோ ஒருத்தி. அவள்தான் அகத்தியன்ர முதல் மனுசி. இந்திரான்ர மனுசன்ர தங்கச்சி. அவள் வந்திருக்கிறாள் எண்டுதான் அவன் வரேல்ல.” என்று, காதுக்குள் ரகசியம் சொன்னார் அவர்.
‘ஓ!’ என்றவள் பார்வை, மற்றவர்களின் கவனத்தைக் கவராத அளவில் அவளை அளவிட்டது. குறை சொல்லும் அளவில் எதுவுமற்ற அழகான பெண். எதற்கு இருவரும் பிரிந்தார்கள்? அவள் சிந்தனையை அகத்தியனின் வரவு தடை செய்தது.
அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தைக் கண்டு இவளுக்கே இனம்புரியாத பயம் உண்டாயிற்று. ஏன் இப்படி இருக்கிறான்?
“ஆசையாக் கட்டிச் சந்தோசமா வாழ்ந்தவனம்மா. நம்ப வச்சுக் கழுத்தறுத்தா தாங்குவானா? அதுதான் அவனுக்கு அவளின்ர முகம் பாக்கவே விருப்பம் இல்ல.” மற்றவர்களின் காதில் விழாதவாறு, சுருக்கமாக அவனுக்கு நடந்ததைச் சொன்னார் சுசீலா.
அவளால் நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள்? எவ்வளவு பாவம் அவன்? உயிராய் வாழ்ந்த நபரை வெறுப்பதே கொடுமை. அப்படி வெறுத்து ஒதுக்கியவரைக் கண்முன்னால் வைத்துக்கொண்டு, சாதாரணமாக இருப்பது என்பது முடியவே முடியாத ஒன்று. அவன் மீது மெல்லிய இரக்கம் உண்டாயிற்று. தன்னையறியாது அவனையே கவனித்தாள்.
“அகத்தியன் அங்கிள்!” விளையாடிக்கொண்டிருந்த தூரிகா, அவனைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடிப்போனாள். “நாங்க வந்திட்டம் பாத்தீங்களா.” என்றாள் உற்சாகக் குரலில்.
அவன் முகம் அப்படியே மலர்ந்துபோயிற்று. அழகான சிவப்பு வண்ண ப்ரொக் அணிந்து, முகமெல்லாம் பூவாக மலர்ந்திருக்கச் சொன்னவளைக் கண்டு, பற்கள் தெரியச் சிரித்தான்.
“தூரிச் செல்லம் வருவா எண்டு எனக்கும் தெரியுமே!”
“ஆனா, நீங்கதான் லேட். நாங்க இன்னும் கேக் வெட்டாம உங்களைத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறம்.” அவனிடமே அவனை முறையிட்டாள்.
“சொறி செல்லம். வேலைய முடிச்சுப்போட்டு வாறதுக்கிடையில நேரம் போயிற்றுது. ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்கோ, மாமா ஓடி வாறன்.” விழாவுக்கு வந்திருந்தவர்களிடமும் அதையே சொல்லிவிட்டு, அவசரமாக அறைக்கு ஓடினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் வெளியே வந்தவன் குளித்து, வேறு உடையில் இருந்தான்.
தாமினி கேக் வெட்டினாள். எல்லோருக்கும் ஊட்டிவிட்டு வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டாள். அவர்கள் எல்லோரும் குடும்பமாக ஃபோட்டோவுக்கு நிற்க, அகத்தியனின் அருகில் வந்து நின்றாள் சவீதா. அடுத்த நொடியே, நெருப்புப் பட்டவன் போன்று விலகி, தமக்கையின் பக்கம் வந்து நின்றுகொண்டான் அகத்தியன்.
அங்கிருந்த அனைவருக்கும் ஒருநொடி என்ன செய்வது என்று தெரியாத திகைப்பு. எல்லோருக்கும் அவர்களுக்குள் நடந்தவை அனைத்தும் தெரியும். கஜேந்திரன் கூட முகச் சுளிப்புடன் அன்னையைப் பார்த்தான். சுசீலாதான் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஃபோட்டோ எடுத்தாச்சு எண்டால் சாப்பாட்டக் குடுக்கலாம். சின்னாக்களுக்குப் பசிக்கப் போகுது.” என்று சொல்லிச் சூழ்நிலையையும் சமாளித்தார்.
அதன்பிறகும் சவீதா சளைக்கவில்லை. அகத்தியனின் கண்ணில் படுவதுபோல் அங்குமிங்கும் நடப்பதும், அவன் இருக்கும் இடத்திலேயே இருப்பதும், அவனிடம் பேச்சுக்கொடுக்க முயல்வதுமாக இருந்தாள்.
அவளையே கவனித்த சிந்தாமணிக்கும் இந்திராவுக்கும் அகத்தியன் எப்போது வெடிப்பானோ, என்னாகுமோ என்று உள்ளுக்குள் பெரும் பதற்றம். வந்தவர்களைக் கவனிக்கக்கூட முடியாமல் தடுமாறினர்.
எல்லாவற்றையும் மௌனமாகக் கவனித்துக்கொண்டிருந்த யசோவுக்கு அகத்தியன் மீது இரக்கம் சுரந்தது. வெளியே எதையும் காட்டிக்கொள்ளாத போதும், தனக்குள் எந்தளவுக்குக் கொந்தளித்துக்கொண்டு இருப்பான் என்று ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.
வந்தவர்கள் விருந்துண்டு, பலகாரப் பைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். யசோவும் நேரமாவதை உணர்ந்து புறப்பட ஆயத்தமானாள்.
“கேக்காமையே எப்பவும் உதவி செய்றதுக்கு நன்றியாச்சி.” விருந்தினராக வந்திருக்கிறேன் என்று அமர்ந்திருக்காமல், வீட்டுப்பெண்ணைப் போன்று அவள் செய்த உதவிகளைக் கவனித்திருந்த சிந்தாமணி உணர்ந்து சொன்னார்.
இந்திராவும் அதையே சொல்ல, “என்ன அக்கா இது, உதவி அது இது எண்டு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க. அதெல்லாம் ஒண்டும் இல்ல.” என்றவள், சுசீலா அன்று இரவுக்கு அங்கேயே தங்கிவிட்டு, அடுத்த நாள்தான் போகப்போகிறாராம் என்று அறிந்து, அவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
சிந்தூரியும் தாமினியோடு நன்றாகவே சேர்ந்துகொண்டிருந்தாள். சின்னவர்கள் இருவருக்கும் அங்கிருந்து புறப்படவே மனமில்லை. கவலையோடு விடைபெற்றனர். ஸ்கூட்டியைத் தள்ளிக்கொண்டு அவள் கேட்டுக்கு வெளியே வர, அங்கே எங்கோ வெறித்துக்கொண்டு நின்றிருந்தான் அகத்தியன். இவர்கள் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.
“அகத்தியன் அங்கிள், பாய்!” என்று குரல் கொடுத்தாள் தூரிகா.
திரும்பிப் பார்த்தான் அகத்தியன். அவர்கள் புறப்படுவது கண்டு, “வெளிக்கிட்டாச்சா?” என்று கேட்டுக்கொண்டு, அவர்கள் அருகில் வந்தான்.
தூரிகா யசோவுக்குப் பின்னால் அமர்ந்திருக்க, சின்னவள் யசோவின் கைகளுக்குள் நிற்பதைக் கண்டவனின் பார்வை, ஒருமுறை யசோவிடம் சென்று வந்தது.
“கிஃப்ட் கிடைச்சதா?”
“ஓ! சிந்தாமணி அம்மம்மா ரெண்டு ரெண்டு தந்தவா.” என்றாள் தூரிகா.
அவன் சிந்தூரியைப் பார்க்க, வெட்கத்துடன் அன்னையோடு ஒண்டினாள் அவள்.
அதைக்கண்டு சின்ன முறுவல் ஒன்று அவனிடத்தில் அரும்பிற்று. “ஒரு நிமிசம்.” என்றுவிட்டு ஓடிப்போய், பலகாரம் அடங்கிய பை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.

