கடன் அன்பை முறிக்கும் 23 – 2

அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த மிதிலன் வேகமாக எழுந்து, பெண்கள் மூவரும் பதறியதை எல்லாம் கேட்காமல் மேசையில் ஏறி, மாமனின் முன்னால் வந்து நின்று தோளால் இடிக்க முயல, முடியவில்லை.

 

அமர்ந்திருந்த மாமனை விடவும் மேசையில் நின்றிருந்த அவன் உயரமாக இருந்தான்.

 

மாமனின் முன்னாலேயே அவனுக்கு முதுகு காட்டி மேசையில் அமர்ந்து, பின்னால் சரிந்து, ஒரு மாதிரித் தன் தோளால் அவனுக்கு இடித்துவிட்டுப் போக, “இப்ப இந்தப் பெரிய மனுசன் என்னடா செய்தவன் ?” என்று கேட்டுச் சிரித்தான் தூயவன்.

 

“பின்ன, இனியும் நான் தனிக்கட்டை எண்டு நினைச்சியா? என்னைத் தொட்டியோ இந்த வீட்டுக்க ஒரு பூகம்பமே வெடிக்கும்.” என்றவன் மிதிலனைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு மீண்டும் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.

 

அப்போதுதான் நினைவு வந்தாற்போல் பேச்சை ஆரம்பித்தார் மாதவி.

 

“அத்தான், சூட்டோட சூடா இசைட்ட இருந்து வாங்கின சொத்தைத் துளசிக்கு மாத்திவிடுவமா?”

 

“அது என்னத்துக்குத் துளசிக்கு?” நடுவில் புகுந்து கேட்டான் தூயவன். உண்மையில் அவனுக்குக் காரணம் புரியவில்லை.

 

“எனக்கு என்னத்துக்கையா அந்தச் சொத்து? இந்த வீட்டில நானும் ஒருத்தியா வந்து இருக்கோணும் எண்டு மட்டும்தான் ஆசைப்பட்டனான். என்ர பிள்ளைகளுக்கும் குடுக்க வேண்டியதைக் குடுத்திட்டன். மிச்சம் மீதி இருக்கிறத துளசிக்கும் உங்களுக்கும் தாறனே.”

 

“உங்களுக்கு என்ன விசரா சித்தி? இசைக்கு நீங்க குடுத்தது உண்மையாவே பிழை. அதாலதான் அதத் திருப்பி வாங்கினனாங்க. பிறகும் அதத் தூக்கி எங்களுக்குத் தாறன் எண்டு சொல்லுவீங்களா?” என்று அதட்டினான் தூயவன்.

 

“நான் வச்சிருந்து என்னய்யா செய்ய?”

 

அதற்குத் தூயவன் பதில் சொல்லும் முன் கருணாகரன் இடையிட்டார்.

 

“இப்ப என்னத்துக்கு இந்தக் கதையெல்லாம் மாதவி? தம்பி சொன்ன மாதிரி அது ஆருக்கோ போகக் கூடாது எண்டுதான் நினைச்சனாங்க. இப்ப உங்களிட்ட இருக்கிறது அப்பிடியே இருக்கட்டும்.” என்று முடித்துவிட்டு எழுந்துபோனார்.

 

அவருக்குள்ளோ பெரும் புயல் ஒன்று வீசிக்கொண்டிருந்தது. மகன் மீது அப்படி ஒரு கோபம்.

 

அதைக் காட்ட வழி இல்லாமல் பல்லைக் கடித்தார். அதைவிட இசையாமே. ஒரு காலத்தில் அவள் பற்றிய பேச்சு வீட்டுக்குள் வந்தாலே முகம் சுளித்தவன் யாழிசை என்று கூடச் சொல்லவில்லை.

 

இதில், யாழிசைக்குப் பார்த்த பெடியனைப் பற்றி மாதவி விசாரிக்கச் சொன்னதற்கு இவன் சினந்துவிட்டுப் போனதை வேறு, ஒன்றும் தெரியாத மாதவி கருணாகரனிடம் அப்படியே சொல்லியிருந்தார்.

 

இனியும் பொறுக்க முடியாது என்றெண்ணியவர் காரியத்தில் இறங்கினார். அதன் எதிரொலி, ஏற்கனவே யாழிசையைப் பெண் கேட்டவர்கள் திரும்பவும் நேசனிடம் சென்று நின்றார்கள்.

 

அந்த நேரமே நேசனுக்கு அவர்களின் மகன் மீது இலேசான விருப்பம் இருந்தது. ஆங்காங்கே சும்மா விசாரித்த வரையிலும் அவர்களின் குடும்பமே திருப்தியானவர்களாக இருந்தனர். அவர்களாகச் சீதனம் வேண்டுமென்று கேட்காதபோதும் அந்தக் காணியும் வீடும் அவளுக்குத்தான் என்றும், தம்மால் முடிந்த நகையைப் போடுவதாகவும் நேசன் சொல்லியிருந்தான்.

 

யாழிசைக்குப் படிப்பு முடிவதை அறிந்து வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்ல, அவனுக்கும் வீட்டில் கதைக்கலாம் என்றுதான் தோன்றிற்று.

 

நளினி, கோகிலா இருவருக்குமே விருப்பம்தான். யாழிசைக்கும் இருபத்திநான்கு வயது என்கையில் முடிக்கலாம் என்றே எண்ணினர்.

 

யாழிசைக்கு இப்போது திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் தூயவன் ஒரு பயத்தை நெஞ்சில் விதைத்திருந்தான்.

 

அதில், “உங்களுக்கு அம்மாக்கு அண்ணிக்கு எல்லாம் ஓகே எண்டா எனக்கும் ஓகேதான் அண்ணா. எனக்கு எப்பவும் வேலைக்குப் போகோணும். அப்பிடியே மேல படிக்கவும் விருப்பம் இருக்கு. என்ர சம்பளத்தில ஒரு பங்கு மாதா மாதம் சுரபிக்கு சேமிப்பா சேரும். அதைத் தடுக்கக் கூடாது. இது மூண்டையும் மறைக்காமச் சொல்லிக் கதைங்கோ.” என்று சொன்னாள்.

 

யாழிசையும் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள் என்கிற செய்தி தேனாக மாதவியின் காதில் வந்து பாய, வீட்டில் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்.

 

கேட்ட தூயவன் கொதித்து எழுந்துவிட்டான். அவளைப் பெண் கேட்டவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று இருந்தது.

யாழிசை மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் அவள் மீதும் ஒரு கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

அவளை அணுக எந்த வழியும் இல்லாமல் செய்துவிட்டாளே. செய்திருக்க அவனுக்கு முதல் இவன் தன் மனத்தை உணர்த்தி இருப்பானே.

 

அந்த ஊரில் அவர்கள் வீடு ஒரு முனை என்றால் இவர்கள் வீடு இன்னொரு முனையில் இருந்தாலும் இவனைத் தெரியாதவர்கள் அரிதிலும் அரிது.

 

அதில் இவன் எங்கு நின்று யாரோடு கதைத்தாலும் வீட்டுக்குச் செய்தி வந்துவிடும். அவளோடு பாதுகாப்பாகக் கதைக்க அவனுக்கு இருக்கும் ஒரே வழி கைப்பேசிதான். அதையும் முற்றாகத் தடை செய்து வைத்திருக்கிறவளை என்ன செய்தால் தகும்?

 

ஆனால், இனியும் பொறுப்பதற்கில்லை.

 

அந்தளவில் அவனுக்குப் பார்த்த பெண் வீட்டினர் வேறு இவன் வீட்டுக்கு விருந்துக்கு வந்து போயிருந்தார்கள். அந்தப் பெண் அவ்வப்போது இவனுக்கு அழைக்க ஆரம்பித்திருந்தாள். அவளைத் தவிர்க்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறான்.

 

‘நம்பிக்கையை வளர்க்காதே, எனக்கு இப்போதைக்குத் திருமண ஆசை இல்லை.’ என்று பலமுறை சொல்லிவிட்டான். கருணாகரனின் உறவு என்பதால் ஒரு அளவு தாண்டிச் சீறிப் பாயவோ, எடுத்தெறிந்து பேசவோ முடியவில்லை.

 

வேறு வழியில்லாமல் புது சிம் ஒன்றை வாங்கிப் போட்டுகொண்டு அவளுக்கு அழைத்தான்.

 

புது இலக்கத்திலிருந்து அழைப்பு வரவும் யாழிசைக்கு முதலில் நினைவில் வந்தவன் தூயவன்தான். அவளுக்குத் திருமணத்திற்குப் பேசியவனாக இருக்குமோ என்றும் யோசித்தாள். அவன் என்றால் அண்ணா சொல்லியிருப்பார். ஆக, தூயவன்தான் போலும் என்றெண்ணி அழைப்பை முதலில் ஏற்கவில்லை.

 

முதல் முறை அழைப்பு ஓய்ந்து ஒன்றிரண்டு நிமிடங்கள் சென்று இன்னொரு முறை அழைப்பு வரவும் இந்தளவு நிதானமாக அவன் இருக்க மாட்டானே என்று எண்ணி அவள் அழைப்பை ஏற்க, “இசை.” என்றான் தூயவன்.

 

தன் சந்தேகம் உறுதியானதில் கோபம் வந்தது. அதைவிட, தான் அவனைத் தடை செய்து வைத்திருக்க, புது இலக்கத்தில் வந்தவனின் செய்கை பிடிக்கவில்லை.

 

அதில், “ஏன் இப்பிடித் திரும்ப திரும்ப எடுத்து அரியண்டம்(தொல்லை) தாறீங்க?” என்றாள் மெல்லிய சினத்துடன்.

 

“பாரடா! இசையரசி இப்ப எல்லாம் அடிக்கடி கோவப்படுறாள். அப்ப பயம் கொஞ்சம் கொஞ்சமா போகுது எண்டு அர்த்தமா?” என்றான் அவன் ரசனையோடு.

 

அழைத்தது என்னவோ கோபத்தில்தான். அவளின் கோபம் அவனுக்குள் குளுகுளு என்று இறங்கியதில் குளிர்ந்துபோனான்.

 

அவளுக்கு எரிச்சல்தான் வந்தது. எத்தனை முறைதான் ஒதுங்கிப் போவது? இதில் இசையரசியாம்!

 

“நீங்க என்ன பிளான்ல இதையெல்லாம் செய்றீங்க எண்டு எனக்கு உண்மையா விளங்கேல்ல. ஆனா, நீங்க நடந்துகொள்ளுற முறை எனக்குப் பிடிக்கேல்ல. என்னை நிம்மதியா இருக்க விடுங்க. தேவை இல்லாத எந்தப் பிரச்சினைலையும் மாட்ட எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள் இப்போதும் பயப்படாமல்.

 

“என்ன பிளான்ல இருக்கிறன் எண்டு சொல்லுறதுக்கு நீ என்னோட கதைக்கோணும் இசை. ஓடி ஒளிய கூடாது.” என்றான் அவனும் கொஞ்சம் சூடாகவே.

 

பின்னே, பேசவே சந்தர்ப்பம் தராமல் இருந்துவிட்டு அவனைக் குறை சொல்லுவாளா?

 

“ஓடி ஒளியேல்ல. ஒதுங்கிப் போனனான். இப்ப சொல்லுங்க, என்ன கதைக்கோணும் உங்களுக்கு?” ஒரு முடிவுக்கு வந்திருந்தவள் தைரியமாகவே வினவினாள்.

 

இப்போது அவன் அமைதியானான். சட்டென்று மனத்தைத் திறக்க முடியவில்லை.

 

“ஹலோ!”

 

அவன் தலையைக் கோதினான்.

 

“ஹலோ!”

 

“எனக்கு என்ன ஹலோவா பெயர்? பெயரைச் சொல்லிக் கதை இசை.” என்றான் தூயவன்.

 

“இதச் சொல்லத்தான் எடுத்தனீங்களா?”

 

“உன்ன… கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா நீ?” அவன் படும் பாடு தெரியாமல் சொல்லு சொல்லு என்கிறவள் மீது கோபம் வந்தது.

 

சட்டென்று அமைதியானாள் அவள்.

 

தூயவன் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு அவளோடு கதைக்க தன்னை தயார் படுத்தினான். ஆனாலும் திணறியது. தானெல்லாம் என்ன பெரிய தைரியசாலி என்று யோசித்தான்.

 

“ஹலோ!” என்றாள் அவள் திரும்ப

 

“லைன்லதான் இருக்கிறன்.” என்று கடுகடுத்தான்.

 

“என்னோட என்ன கதைக்கோணும் எண்டு கேட்டனே.”

 

“ஓகே! இந்த இசையரசிய எனக்குப் பிடிச்சிருக்கு. நான் சாகிற வரைக்கும் என்ர இசையரசியோட திகட்ட திகட்ட ஒரு வாழ்க்கையை வாழ ஆசையா இருக்கு. அதைப் பற்றி எனக்கு உன்னோட கதைக்கோணும்.” என்று சொல்லி முடிக்க முதலே அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.

 

இந்தமுறை தூயவனுக்குக் கோபம் வரவில்லை. நிச்சயம் அங்கு அவளுக்குக் குளிர் காய்ச்சல் பிடித்திருக்கும் என்று தெரிந்ததால் சிரிப்புத்தான் வந்தது.

 

“படுத்திறாயடி!” செல்லக் கோபத்துடன் தலையைக் கோதியவனின் உதட்டில் மிக அழகான முறுவல். உள்ளத்தின் பாரமே இறங்கிப் போயிருந்ததால் மெல்லிய உல்லாசம் தொற்றிக்கொண்டது.

error: Alert: Content selection is disabled!!