அத்தியாயம் 24
கைகால்கள் எல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள அசையக்கூட முடியாதவளாய் அமர்ந்திருந்தாள் யாழிசை. கையிலிருந்த கைப்பேசியைக் கூடப் பட்டென்று கீழே போட்டிருந்தாள்.
இப்படியும் இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்கனவே வந்திருந்தாலும் அவனிடமிருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒற்றை விரலால் அவளைத் துச்சமாக எண்ணி விரட்டியது, கிடைத்த வரைக்கும் இலாபம் என்று ஊரான் வீட்டுச் சொத்தை வாங்கி வைத்திருந்தாயா என்று கேட்டது, பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் மரியாதை இல்லாமல் நடத்தியது, அவன் குடும்பத்தால் அவள் அனுபவித்த காயங்கள் என்று எல்லாம் கண்முன்னே வந்து போக, விழிகள் கலங்கிப்போயின.
இதை வீட்டில் சொல்வதா இல்லையா என்று தெரியாது கலங்கினாள். முதலில் எப்படிச் சொல்வது? அப்படியே சொன்னாலும் நடந்த எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். இத்தனை நாள்களாக ஏன் மறைத்தாய் என்று கேட்பார்கள். கடைசியில் அவள் குற்றவாளி போல் நிற்கவேண்டி வரும்.
இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தூயவன் மீது கசப்பும் வெறுப்பும்தான் உண்டாயிற்று. எதற்கு இப்படி அவள் வாழ்க்கையோடு விளையாடுகிறான்? அப்படி அவனுக்கு அவள் என்னதான் செய்துவிட்டாள்?
இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. என்ன நடக்குமோ என்கிற ஒரு பயத்திலேயே நடமாடிக்கொண்டிருந்தாள். தூயவன் அதன் பிறகு அழைக்கவில்லை. அதை நினைத்துக்கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அடுத்து என்ன செய்வானோ என்று ஒரு கலக்கத்திலேயே அவளை வைத்திருந்தான்.
இப்படி இருக்கையில்தான் மூன்றாம் நாள் துளசியின் கைப்பேசியிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. இதா அவனுடைய அடுத்த திட்டம் என்று அரண்டுபோனாள்.
பத்து நிமிடங்கள் கழித்து இரண்டாம் முறையும் அழைப்பு வரவும் மகளைக் கேள்வியாகப் பார்த்தார் கோகிலா.
“அது… துளசி அக்கா.”
“எடுத்துக் கதைங்கோவன். கலியாணத்துக்கு அந்தத் தம்பி வரச் சொன்னவர் எல்லா. நீங்க வரேல்லை எண்டுறதால கேக்க எடுக்கிறாவோ?” என்று அன்னை சொல்லவும் அப்படியும் இருக்குமோ என்று யோசித்தாள்.
இதற்குள் குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தாள். “ஹாய்மா, நான் குரு. ஃபிரீயா இருக்கேக்க துளசின்ர நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ.” என்று அனுப்பியிருந்தான் குரு.
அதையும் அன்னையிடம் காட்டினாள். அவர் அப்போதும் எடுத்துக் கதைக்கத்தான் சொன்னார்.
தூயவனைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயம் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். இப்போது அவர்கள் எதற்கோ தேடி அழைக்கையில் அழைப்பை ஏற்காமல் தவிர்ப்பது அழகில்லை என்று நினைத்தார்.
ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்து தானே அழைத்து, “சொறி அண்ணா, உடுப்புத் தோச்சுக்கொண்டு இருந்தனான். அதான் ஃபோன் பாக்கேல்லை.” என்று பொய் சொன்னாள்.
“அதுக்கு என்னம்மா? நானும் நீங்க வேலையா நிக்கிறீங்க எண்டுதான் நினைச்சனான்.” என்றவன் நலன் விசாரித்துவிட்டு, “ஏன் கலியாணத்துக்கு வரேல்ல? முறையா வீடு தேடி வந்து சொல்லேல்ல எண்டு கோவமோ?” என்று விசாரித்தான்.
“அச்சோ இல்ல இல்ல. உங்களுக்கே தெரியும் தானே அண்ணா. துளசி அக்கா வீட்டாக்களுக்கு எங்களை அவ்வளவாப் பிடிக்காது. அது தெரிஞ்சும் அங்க வந்து ஏன் சும்மா சங்கடப்பட எண்டுதான் வரேல்ல.” என்றதும் குருவுக்கு அடுத்துப் பேசச் சற்றுச் சிரமமாகத்தான் போயிற்று.
ஆனால், வேறு வழியில்லை. அவனுக்கு வந்திருக்கும் உத்தரவு அப்படியாயிற்றே.
அதில், “நானும் அப்பிடித்தான் நினைச்சனான் யாழிசை. அதான் அங்க துளசின்ர வீட்டுக்கும் உங்களைக் கூப்பிடேல்லை. ஆனா, நாங்க நாளைக்கு என்ர வீட்டுக்குப் போறம் மா. மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்ற மாதிரி அங்க வாறீங்களா?” என்று அழைத்தான்.
“அச்சோ அண்ணா. எனக்கு எண்ணத்துக்குச் சாப்பாடு? நாங்கதான் உங்களக் கூப்பிட்டு விருந்து வைக்கோணும். நீங்க ஒரு நாளைக்கு துளசி அக்கா, மிதுக்குட்டி எல்லாரையும் கூட்டிக்கொண்டு எங்கட வீட்டுக்குச் சாப்பிட வாங்கோ.” என்று அவள் அழைத்தாள்.
“கட்டாயம் வாறம்மா. அதுக்கு முதல் நாளைக்கு நீங்க வாங்க. மிதிலனும் சந்தோசப்படுத்தார்.” என்றவன் மிதிலனைக் கூப்பிட்டு, “உங்கட இசை அன்ட்ரிய சாப்பாட்டுக்கு வரச் சொல்லுங்கோ.” என்று சொல்லிக்கொடுத்துக் கொடுத்தான்.
அவனும், “இசை, சாப்பிட வாங்கோ. அம்மா ஐஸ், கேக், சொக்லேட் எல்லாம் வச்சிருக்கிறா. முறுக்கும் இருக்கு.” என்றதும் இரண்டு புருவங்களும் இணைந்தவன், ‘ம்?’ என்று முறுக்கைக் காட்டிக் கேட்டது மின்னலாக அவள் நினைவுகளுக்குள் மின்னி மறைய, அரண்டு போனாள் யாழிசை.
இதற்குள் இங்கே, “டேய் கள்ளா! உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் சொல்லுறீங்க என்ன?” என்று கேட்டு, மகனின் கையில் இருந்த கைப்பேசியை வாங்கிய துளசி, தன் பங்குக்குத் தானும் அழைத்தாள்.
அவர்களிடம் தொடர்ந்து மறுக்க மிகவுமே சங்கடப்பட்டாள் யாழிசை.
துளசி வேறு, “ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க இசை? இஞ்ச எங்கட வீட்டுக்கு வர யோசிக்கிறது கூட ஓரளவுக்கு எனக்கு விளங்குது. நாங்க இவரின்ர வீட்டுக்குத்தானே வரச் சொல்லுறம்? வேணுமெண்டா உங்கட அம்மா, அண்ணா, அண்ணி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாங்கோ!” என்றதும், ‘என்ன?’ என்று அதிர்ந்து நிமிர்ந்தான் குரு.
முதலுக்கே மோசமாகிவிடுமோ என்று அவனுக்குப் பயமாயிற்று. ஆனால், மனைவி சொல்லிவிட்ட பிறகு அவனால் எதுவும் செய்ய முடியாதே. தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
இதை அறிந்தால் தூயவன் தூக்கிப்போட்டு மிதிப்பானே!
கணவனின் நிலை அறியாது, “தம்பியோட தனியா தவிச்சுப்போய் நிண்ட எனக்கு நீங்க செய்தது பெரிய உதவி யாழிசை. அதுவும் என்ன பிரச்சினை எண்டு தெரியாமலேயே அந்த நேரம் அவ்வளவு கெட்டித்தனமா யோசிச்சு நடந்தனீங்க. அப்பிடியான உங்கள வாசலோட அனுப்பினது எனக்குச் சரியான கவலை. அதான் இஞ்ச வரமாட்டீங்க எண்டு இவரின்ர வீட்டுக்குக் கூப்பிடுறம். கட்டாயம் வாங்கோ யாழிசை. என்ர சந்தோசத்துக்காக.” என்று அன்பாய் அழைத்தாள் துளசி.
அப்படி அவள் எல்லோரையும் அழைத்து வரும்படி சொன்னதில் தன் பயம் அகல, “அம்மா, அண்ணாவோட கதைச்சுப்போட்டு சொல்லட்டா அக்கா?” என்று கேட்டுக்கொண்டு வைத்தாள் யாழிசை.
விடயம் அறிந்த அவள் வீட்டினரும் அவளைப் போலத்தான் சொல்லினர். “கலியாணமான புது சோடி அவே. அவேய கூப்பிட்டு நாங்கதான் விருந்து குடுக்கோணுமே தவிர அவே கூப்பிட்டு எங்களுக்குத் தருவினமா?” என்றாள் நளினி.
“அப்பிடி நாங்க கூப்பிடுறதும் வீண் பிரச்சினைகளுக்குக் காரணமாயிடும் நளினி.” என்றார் கோகிலா.
நேசனுக்கும் என்ன இருந்தாலும் துளசி கருணாகரனின் மகள். அதைவிட குடும்பமாகச் சென்று விருந்து உண்ணும் அளவுக்கு இங்கு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லையே. அப்படியே நடந்தாலும் அந்தக் குடும்பத்துடனான எதுவுமே வேண்டாம் என்றுதான் நினைத்தான்.
ஆனால், அவள் செய்த உதவிக்காகக் கணவனும் மனைவியும் வருந்தி அழைத்தார்கள் என்பதால், சுரபியோடு யாழிசை மட்டும் போய்விட்டு வரட்டும் என்று முடிவானது.
சுரபியும் வருவதால் கொஞ்சம் தைரியமாகத்தான் புறப்பட்டாள் யாழிசை. அங்கேயும் அவள் பயந்த எந்த அந்நிய சக்திகளும் அங்கில்லை. இன்முகமாகவே குருவும் துளசியும் வரவேற்றார்கள். அதுவும் இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்து தாவிய மிதிலன், அவளின் ஸ்கூட்டியில் அவர்களின் வீட்டு முற்றத்தில் இரண்டு வட்டம் அடித்த பிறகே வீட்டுக்குள்ளேயே விட்டான்.
ஆரம்பத்தில் என்னதான் அவர்களோடு இலகுவாகப் பேசி, மிதிலனோடு விளையாடினாலும் ஒரு இறுக்கம் அவளுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது.
நேரம் செல்ல செல்ல தூயவன் வராததும், அவன் பற்றிய எந்தப் பேச்சும் அங்கு இல்லாமல் இருந்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாகினாள். சுரபி மிதிலனோடு சேர்ந்துவிட துளசிக்குச் சமையலுக்கு உதவி செய்தாள் யாழிசை. குருவும் இறைச்சி வெட்டிக்கொடுத்து, அவித்த முட்டைகளுக்குக் கோதுடைத்து என்று உதவினான்.
சமையல் முடிகையில் அந்த வீட்டில் தானும் ஒருத்தி என்பதுபோல் சோறு, கறிகளை எல்லாம் தானே மேசைக்கு எடுத்துச் சென்று வைக்குமளவுக்குச் சாதாரணமாகியிருந்தாள் யாழிசை.
பரிமாற நின்ற துளசியைத் தடுத்து ஐவரும் சேர்ந்தே சாப்பிட ஆரம்பித்தனர். பேச்சு அவள் படிப்பு, எழுதப்போகும் கடைசிப் பரீட்சை என்று சுழன்றுகொண்டு வருகையில் வந்து சேர்ந்தான் அவள் வில்லன்.
உணவு தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள குருவையும் துளசியையும் மாறி மாறிப் பார்த்தாள் யாழிசை. குரு அவள் பார்வையை நாசுக்காகத் தவிர்த்தபடி, “என்னடா, அதுக்கிடைல கிளிநொச்சி போயிற்று வந்திட்டியா?” என்று நண்பனைப் பார்த்து விசாரித்தான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல், “பெரிய விருந்தெல்லாம் நடக்கிற மாதிரி இருக்கு.” என்றபடி குருவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் அவன்.
“நீங்களும் கையக் கழுவிக்கொண்டு வாங்கண்ணா. சாப்பாடு போடுறன்.” என்று அவனுக்குத் தட்டு எடுத்துவர எழுந்துபோனாள் துளசி.
அவள் சொன்னதுபோல் எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்த தூயவன் சுரபியைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவளோ அவனைக் கண்டு மிரண்டு விழித்தாள்.
‘சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் நல்லா பயம் காட்டி வச்சிருக்கிறாயடா!’ என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டவன் யாழிசையைப் பார்த்தான்.
விட்டால் தட்டுக்குள் தலையைப் புதைத்துவிடுவாள் போல் அமர்ந்திருந்தாள். அவள் அள்ளி வைக்கிற வாய்க்குள் நான்கு பருக்கைகளை இருந்தாலே அதிகம் போலிருந்தது.
இதற்குள் துளசி அவனுக்கும் உணவைப் போட்டுக் கொடுத்தாள்.
அவ்வளவு நேரமாக இயல்பாகவும் இனிமையாகவும் கடந்த உணவு நேரம் அதன் பிறகு இறுக்கமாயிற்று. அதன் பிறகு யார் முகம் பார்த்தும் யாழிசையால் பேச முடியவில்லை.
உணவு முடிந்ததும் துளசியோடு சேர்ந்து மேசையை ஒதுக்கியதும், “அக்கா அண்ணா, நன்றி சாப்பாட்டுக்கு. நாங்க வெளிக்கிடப்போறம்.” என்றாள் யாழிசை.
அவ்வளவு நேரமாகத் தோழிக்கு ஒப்பாக இயல்பாகத் தன்னுடன் இருந்தவளை அப்படிச் சாப்பிட்டதும் உடனேயே அனுப்பி வைக்கத் துளசிக்கு விருப்பமில்லை. அதில், “இரு இசை. என்ன அவசரம்? பின்னேரம் போல நாங்களும் அங்க எங்கட வீட்டுக்குப் போயிடுவம். அப்ப நீயும் போகலாம்.” என்று தடுத்தாள்.
“இல்லை அக்கா. சுரபிக்கு கிளாஸ் இருக்கு.” என்றவளுக்கு ஒரு கணம் கூட அங்கு நிற்க முடியும் போலில்லை. மலைப்பாம்பு சோபாவில் சரிந்து கிடப்பதுபோல் உண்ட மயக்கத்தைத் தீர்க்கும் வகையில் வெகு இயல்பாய் சோபாவில் சாய்ந்திருந்து இவளையே பார்த்திருந்தவன் அவளைப் பதற வைத்தான்.
இதற்குள் நண்பர்கள் இருவரும் பார்வையால் பேசிக்கொண்டார்களோ என்று யாழிசை சந்தேகத்தோடு நினைத்து முடிப்பதற்குள், “துளசி, அந்தச் சந்திக் கடைல ஐஸ் இருக்கும். சின்னாக்களை கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் குடுத்துக் கூட்டிக்கொண்டு வா. அதுக்குப் பிறகு போகட்டும்.” என்று குரு சொல்லவும் நம்ப முடியாத திகைப்புடன் குருவைப் பார்த்தாள் யாழிசை.
குருவால் அவள் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. சங்கடத்துடன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். யாழிசையையும் கூட்டிக்கொண்டு போகட்டுமா என்பதுபோல் நின்ற துளசியிடம், “போ துளசி!” என்றான் அழுத்தி.
அவளும் சின்னவர்களோடு போய்விட, அவள் பயந்ததுபோல் எதுவோ நடக்கப்போவதை அறிந்துகொண்ட யாழிசைக்கு நெஞ்சு பயத்தில் அடித்துக்கொண்டது. அந்த நிமிடத்தில் அவர்களை நம்பி வந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி மிகவுமே நொந்தாள். ‘நீயா இப்படி’ என்று குருவையே வெறித்தவளால் அவனது பொய்த்துப் போனதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“நீங்க செய்றது சரியே இல்லை அண்ணா. உங்களை நம்பித்தான் வந்தனான். என்ர வீட்டுலயும் உங்கள நம்பித்தான் விட்டவே.” என்றதும் குருவுக்கு முகம் கன்றிப்போனது.
தன்னை இந்த நிலையில் நிறுத்திவிட்ட நண்பன் மீது அப்படி ஒரு கோபம் வந்தது. ஆனால், இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்துவிட்டு இனி எதையும் மாற்ற முடியாதே.
ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து, “சொறிமா. ஆனா சத்தியமா பிழையான எந்த எண்ணத்தோடயும் இதை ஏற்பாடு செய்யேல்ல. வெளில எங்கயும் நீங்க ரெண்டு பேரும் நிதானமா கதைக்கேலாது. அதால அதுக்கான ஒரு ஏற்பாடு மட்டும்தான் இது. அவன் அவன்ர விருப்பத்தைச் சொல்லட்டும். நீங்க உங்கட முடிவச் சொல்லுங்க. அவ்வளவுதான். ஆனாலும் சொறி.” என்றவன் தூயவனைப் பார்வையாலேயே எரித்துவிட்டுப் போனான்.

