அழகிய சவால் நீ – 19

அத்தியாயம் 19

 

‘The way to a man’s heart is through his stomach.’

– Fanny Fern

 

ஒலிவியா பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கேட்டபடி ஹோம் குக்கிங் தலைவரைச் சந்தித்தார், ஆரோன்.

 

என்ன ஏதென்று கேட்க முனைந்தார், அவர்.

 

”ப்ளீஸ்! வெரி ஏஜென்ட் அன்ட் இட்ஸ் பெர்சனல்!” என்றவர், “இந்தப் போட்டி, ஒலிவியாவின் வெற்றி எதற்குமே இதனோடு சம்பந்தம் இல்லை.” என்றுவிட்டார்.

 

அப்போதும் ஒலிவியா குடும்பம் இங்குதான் நிற்கிறார்கள் என்று சொல்ல வந்துவிட்டுக் கதை வளர்க்காது, அந்த மனிதரில் உள்ள மரியாதையும் நம்பிக்கையுமே அவள் பற்றிய விபரங்களைக் கொடுக்க வைத்திருந்தது. அதற்குள் கடைசிநேர ஃபிளைட் டிக்கெட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துவிட்டார், ஆரோன்.

 

“இதுபற்றி ஒருவருக்கும் தெரிய வேண்டாம். நான் விரைவில் வந்து விடுவேன்!” வெளிறிப்போன முகத்தோடு வெளியேறியவரை ஏற்றிக்கொண்டு, ஹோம் குக்கிங் கார் விமான நிலையம் நோக்கிப் பறந்தது.

 

அடுத்த அரை மணி நேரத்தில் சிட்னி நோக்கிப் பறந்து கொண்டிருந்தார், ஆரோன். அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேர விமானப் பயணம் ஆமடேல். மாலை ஆறு ஆறரை போல் போய்விடலாம். மனதுள் கணக்கிட்டுக்கொண்டவர் நினைவுகளோ, அந்த விமானத்தை விட அதிவேகமாக அவளிடம்…

 

கண்களை மூடிக்கொண்டார்.

 

“வாழ்வில் இனி ஒருநாளும் உன்னைச் சந்தித்துவிடும் சந்தர்ப்பம் வரவே கூடாது!” கசிந்த கண்களில் கோபாக்கினி பறக்க பறக்கச் சீறிச் சென்றவள் நினைவில் வந்தாள்.

 

அவர், தன் உலகம், பலம் என்று மிகவுமே நம்பியவர்கள் கைவிட்ட நிலையில், அநாதரவாக, தன் நீண்ட நாள்க் கனவைத் தேடி அலைந்த நேரம், உயிர்ச்சுவாசம் தந்து நம்பிக்கையும் ஆறுதலும் தந்து, இன்று, இவர் இப்படி நிற்க உறுதியான அடித்தளம் போடுவதற்குத் தோளோடு தோள் நின்று உதவியவள்!

 

அவள், அவரை என்றுமே ஏமாற்றியதில்லை. உடன் இருந்து அள்ளி அள்ளி அன்பைத் தந்தவள்! மூடியிருந்த விழிகளோரம் கண்ணீர்த்துளி தலைகாட்டி வடிந்தோடியது.

 

“நான்… நாம் கல்யாணம் செய்து கொள்வோமா ஆரோன்?” இறுதியாக அவள் கேட்டதும் அந்த நேரம், அவள் முகத்திலிருந்த மாறாத காதலும் இத்தனை வருடம் கடந்தும் ஆரோன் மனதுள் பசுமையாக நினைவில் இருந்தது.

 

அன்று, கணம் கூடச் சிந்திக்காது பதிலிறுத்து இருந்தார், ஆரோன்.

 

“என் மனைவியைத் தவிர வேறொருவரை என்னால் காதலிக்க முடியாது!” என்று அவர் சொன்னபோது, பலமாகத் தாக்குப்பட்ட விதத்தில் வெளிறிப் போனது, அவள் முகம். அந்த நேரம் அவளை மிகவும் ஏமாற்றிவிட்டோம், வலிக்கச் செய்துவிட்டோம் என்று விளங்கினாலும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

 

“உன் மனைவி குழந்தைகளை விட்டு விலகிவிட்டாய் என்ற பிறகுதான் நான் உன்னை விரும்பினேன்.” தழுதழுத்த குரலில் கோபம் சேர, கரடுமுரடாகச் சீறலாகச் சாடினாள்.

 

“அது பொய்யில்லை. ஆனால், இந்தப் பிறப்பில் அவள் தான் என் மனைவி!” என்றவரைத் தொடர விடவில்லை, அவள்.

 

“இதுவரை நீ கதைத்ததே போதும், நிறுத்து!” என்றவள், அப்போது ஆரோன் அறையில் இருந்தாள்.

 

பரபரவென்று தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு கதவை அடித்துச் சாத்திவிட்டுப் புயல் போலவே வெளியேறியவளைச் செய்வதறியாது பார்த்திருந்தார், ஆரோன். மறுநாள், வேலையையும் விட்டுவிட்டாள் என்று தெரிந்த போதுதான் ஒரேயடியாக விலகிப் போய்விட்டாள் என்று உறைத்தது.

 

கடந்தகால நினைவுகள் அவருள் சுழன்றடித்தன; மனம் சருகாகி நிலைகொள்ளாமல் அலைந்து திரிந்தது.

 

இயந்திரமாக சிட்னியில் சென்றிறங்கி ஆமடேல் செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்தார்.

 

ஆரோனை, அந்தப் பிரிவு வெகுவாகத் தாக்கியது. அதேநேரம், அவர் நொந்திருந்த போது எல்லாவுமாக இருந்தவளிடம் எந்த இடத்தில் காதலைச் சொன்னார்? உணர்த்தினார்? நினைவில்லை. பிறகு என்ன? அவள் மீது கோபம் தான் வந்திட்டு!

 

அதே கையோடு மீண்டும் மனைவி, பிள்ளைகள், தன் குடும்பம் என்று தேடி இலண்டன் புறப்பட்டிருந்தார். அப்படிப் பார்த்தால், மீண்டும் இழந்த குடும்பம் கிடைக்கவும், என் நலன் விரும்பி, நண்பி என்றவளின் பிரிவு தந்த வலிதான் காரணம்! இத்தனை வருடங்கள் இப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை. அவர் வாழ்வு அந்தளவு பரபரப்பானது. அதில், அந்தப் பிரிவுக்குப் பிறகு வலியோ வேதனையோ இருக்கவில்லை. மகிழ்வு மட்டுமே!

 

அவள்? அவளுக்கு என்ன? ஒலிவியாவின் அன்னையாக லிசியைக் கண்டதும் இப்படித்தான் எண்ணினார். மகிழ்ந்தார்.

 

மிக மிக அருமையான குடும்பம். தேவதையே மகளாகக் கிடைக்கப் பெற்றும் இருக்கிறாள். அதுதான், அந்தச் சிறுபெண் சார்பாக அவர் மனத்தில் அத்தனை பாசம், அக்கறை சுரந்ததா? அவர் மிகப்பெரும் சொத்தெனக் கருதும் சமையல் செய்முறைப் புத்தகத்தை யாரிடம் கொடுத்திருக்கிறார்?

 

அந்தப் புத்தகத்தை, அவருக்கும் தனக்குமாக ஒரே மாதிரி வாங்கி வந்து, முதல் ரெசிபியை தன் கைப்பட எழுதியதே லிசி அல்லவா? உலகம் மிகச் சிறியது மட்டுமல்ல, விந்தைகளை நிகழ்த்த வல்லதும் தான்.

 

அவர் வீட்டில், நல்ல பெரிய சட்டத்தில், அவர் இங்கு வேலை செய்த ரெஸ்டாரண்ட் பணியாளார்களோடு எடுத்த படத்தில் வலக்கைக்குள் அணைந்து நிற்பவள் லிசியாச்சே!

 

இலண்டனில் தொடங்கி இப்போ வரையிலான ஒலிவியாவின் மனக்குழப்பத்தின் காரணம் அவருக்குப் புரிந்தது.

 

என்னிடம் கேட்டிருக்க, லிசியை முதலே சந்தித்திருப்பேன். இத்தனை வருடங்களின் பின்னர், அவள் அருமையான ஒரு குடும்பத்தில் இருக்கையில் என்னை நண்பனாகப் பார்க்கத் தயங்குவாளா என்ன?

 

இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டுதானே ஒலியாவின் விபரங்களைக் கேட்டார்.

 

‘ஆனால்…’ தலையை இறுக அழுத்திக் கொடுத்தார், ஆரோன்.

ஆமடேல் செல்ல இன்னமும் இருபது நிமிடங்கள் உள்ளதாம். நிமிடங்களே வலு நீளமானதாக உணர்ந்தார், ஆரோன்.

 

முதலில், ஒலிவியா பற்றிய விபரங்களைப் பார்க்கையில் எதுவும் தோன்றவில்லை. திரும்பவும் அவற்றில் மேய்ந்த விழிகள் அவள் பிறந்த மாதம், ஆண்டு பார்த்ததும் குத்திட்டு நின்று விட்டன. மனதுள் சுரீர் என்ற திகைப்போடியது. உடல் கிடுகிடுவென்று நடுங்கியது.

 

எப்படி அப்படி?

 

லிசியும் அவரும் நெருக்கமாகப் பழகினார்கள் தான். அதில், அவளுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. பிறகென்ன? அவருக்கும் அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அது மட்டுமா? ஏதோ ஒருவிதத்தில் மனைவியில் உள்ள கோபம் அவளைப் பழிவாங்குவதாக எண்ணி எண்ணி லிசியை நாடியிருந்தார்.

 

லிசியும் அவரும் பிரிந்த அதே வருடத்தில் ஏழரை மாதங்களின் பின் ஒலிவியா பிறந்திருந்தாள்?

 

அப்போ, அவள் அவர் மகளா? இரும்பன் என்று பெயர் எடுத்த ஆரோனுக்கு வாய்விட்டுக் கதறி அழ வேண்டும் போலிருந்தது.

 

ஒலிவியாவில் என்னைக் காண்கிறேன் என்று, சக நடுவர்களிடம் எத்தனை முறை சொல்லி இருக்கிறார். அன்று, அந்த பக்லாவா… அது லிசியின் அதே கைப்பக்குவத்தை நினைவுறுத்தியதே! அதோடு, அன்று ஒலிவியா கோபமாக ஒரு பார்வை பார்த்தாளே! அப்போது திகைத்துக் குழம்பி நின்றாலும் என்னவென்று பிடிபடவில்லை, இவருக்கு. அது அப்படியே லிசியின் பார்வை!

 

கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார், ஆரோன்.

தனக்கானதை அவ்வளவு இலகுவில் விட்டுத் தரமாட்டான் இந்த ஆரோன். அதில் என் மீதான நன்மதிப்பு, நற்பெயர் இன்னும் என்ன வேண்டும் என்றாலும் போகட்டும், கவலை இல்லை!

 

அடுத்த அரை மணித்தியாலத்தில், பசிய தோட்டத்தைக் கடந்து சென்று பெரிதாக இருந்த மாளிகை வீட்டின் முன்வாயிலில் நின்றார், ஆரோன்.

 

நடுங்கும் விரல் அழைப்பு மணியை அழுத்தியது.

error: Alert: Content selection is disabled!!