வெளிச்சக்கீற்று 12 – 1

அத்தியாயம் 12

 

 

கடையை மூடி, கணக்குவழக்குகள் அனைத்தும் பார்த்து முடித்து, வீடு வந்து, சாப்பிட்டுக் கட்டிலில் சரிந்த அகத்தியனின் நினைவை விட்டு, தூரிகா அகலமாட்டேன் என்று நின்றாள். தனக்குத் தந்தையைத் தெரியும், தான் அவரைப் பார்த்திருக்கிறோம் என்பதை எவ்வளவு பெரிய செய்தியாகச் சொன்னாள்? அவள் விழிகளில் மின்னிய சந்தோசம்தான் எத்தனை?

 

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியே அவன் கண்களுக்குள் மின்னிற்று.

 

அவன் தந்தை இறந்தபோது அவனொரு முழுமையான ஆண்மகன். அப்போதே என்ன பாடுபட்டான்? சிலநேரங்களில் இன்னுமே அவரைத் தேடுவான். சில விசயங்களைச் செய்ய விருப்பமே இல்லாதபோதும், குடும்பத்துக்காக என்று சமாளித்துப் போகவேண்டி வரும்போதும் அப்பா இருந்திருந்தால் உறுதியாக முடிவெடுத்துச் செயல்படுத்தியிருக்க முடியுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறான்.

 

அப்படியிருக்க அவள்? தந்தை முகமே காணாத சிந்தூரி? அன்று, அன்னையின் இரு கைகளுக்குள்ளும் நின்றுகொண்டு வெட்கப்பட்டுச் சிரித்தது கண்ணில் வந்து போனது. சூழ்நிலைகளும் குடும்ப நிலையும்தான் மனிதர்களை வடிவமைக்கிறது போலும். இல்லாமல், அவளைவிடவும் பெரியவளான தாமினி இன்னுமே செல்லக் குழந்தையாக வளர, சின்னவள் பொறுப்பாக அன்னையின் கைகளுக்குள் நிற்பாளா?

 

*****

 

இப்போதெல்லாம் சிந்தாமணியின் பிரஷர் கீழே இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு உச்சியிலேயே நின்றது. காரணம், மகன் வாழ்க்கை. அதற்கு ஒரு விடிவு வரமாட்டேன் என்கிறதே எனும் வேதனை, அவர் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. மாத்திரைகள் வேறு கவனிக்காமல் விட்டுத் தீர்ந்து போயிருந்தன. இந்திரா உசாராக இருந்திருந்தால் முடிய முதலே வாங்கி வைத்திருப்பாள். அவள் ஒரு பக்கமாகப் படுத்து படுத்துக் கிடப்பதில் அவர்தான் இன்னுமே அல்லாடினார்.

 

என்ன நினைப்பாளோ என்கிற மெல்லிய தயக்கம் இருந்தாலும் யசோக்கு அழைத்து, பிரஷர் மாத்திரைகள் கொண்டுவந்து தரமுடியுமா என்று வினவினார். மகன் கடையில் கொடுக்கச் சொல்லலாம்தான். அவருக்கு அவளிடம் திருமணம் பற்றி நேரில் கேட்டுப்பார்க்கும் ஆசை வந்திருந்தது. முகத்துக்கு நேரே மறுப்பது இலகுவன்றே! அதில், இந்தச் சந்தர்ப்பத்தை நல்லபடியாகப் பயன்படுத்த நினைத்தார்.

 

யசோவுக்கும் அவனிடம் போவதற்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று கொடுப்பதே இலகுபோல் இருந்ததில் மறுக்கவில்லை. மாலை கொண்டுவந்து தருவதாகச் சொல்லிவிட்டு வைத்தாள்.

 

சிந்தாமணியின் அத்தனை திட்டங்களையும் கவிழ்த்துப்போடும் விதமாக, அன்று மாலை தன் முழுக் குடும்பத்தோடும் வந்து அமர்ந்தார் தவமலர். கஜேந்திரனும் வீட்டில் இருந்தான்.

 

அன்னை, மகள் இருவரும் கலக்கத்துடன் தமக்குள் பார்வையைப் பரிமாறிக்கொண்டு உபசரித்தனர்.

 

இந்திரா பற்றிய நலவிசாரிப்பு, குழந்தை எப்படி இருக்கிறது, வைத்தியர் என்ன சொன்னார் என்று கேட்டு நகர்த்திய பேச்சை, “என்ன முடிவு எடுத்தனீங்க? சும்மா நாளை வீணாக்கிறதில அர்த்தம் இல்லையெல்லோ.” என்று நயமாகவே அவர் திசைக்குத் திருப்பினார் தவமலர்.

 

“அண்டைக்குச் சொன்னதுதான். இன்னொரு கலியாணப் பேச்சை எடுத்தாலே கத்துறான்.” என்றார் சிந்தாமணி.

 

“அதுக்கெண்டு அப்பிடியே விடுறதா? பிறகு என்னத்துக்கு வீட்டில பெரிய மனுசர் எண்டு நாங்க இருக்க? அந்தநேரம் அதையெல்லாம் மறைச்சது பிழைதான். ஒரே மகள், எல்லாரையும் மாதிரி அவளும் நல்லா வாழ்ந்துடோணும் எண்டுற ஆசை. வேணுமெண்டால் நான் உங்கள் எல்லாரிட்டையும் மன்னிப்புக் கேக்கிறன்.” உண்மையில் வாழ்க்கை கொடுத்த அடியில் உணர்ந்தே சொன்னார் தவமலர்.

 

“அம்மா!” என்று அதட்டினான் கஜேந்திரன்.

 

என்ன நடந்திருந்தபோதிலும் தன் முன்னே அவர் அப்படிச் சொன்னதை அவனால் தாங்க முடியவில்லை. என்ன செய்ய? எல்லோரும் எல்லா நேரமும் சரியாகவும் நியாயமாகவும் நடப்பதில்லையே! சில சந்தர்ப்பங்களில் நமக்கு நல்லது எனும்போது மற்றவரை யோசிக்காமல் விட்டுவிடுவதும் உண்டே!

 

“எப்பவோ நடந்து முடிஞ்சதுகளை இப்ப ஏன் கதைக்கிறீங்க தவம்?” என்றார் கதிரேசன்.

 

“வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? இது என்ர பிள்ளையின்ர வாழ்க்கை எல்லோ. அவள் முதலே மறைக்க வேண்டாம் அம்மா, இதெல்லாம் மறைக்கிற விசயம் இல்லை எண்டுதான் சொன்னவள். நான்தான் நீ சொல்லவே கூடாது எண்டு என்ர தலைல சத்தியம் வாங்கினான். கடைசில எல்லாம் இப்பிடியாகிப் போச்சுது.” என்றதும் அன்னை மீது பரிதாபம் உண்டாகிப் போனது கஜேந்திரனுக்கு.

 

“சரியம்மா, இப்ப என்னத்துக்கு அதையெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க, விடுங்க.” என்றான்.

 

இந்திராவுக்கு நடப்பவை எதுவும் சரியாகப் படவில்லை. தன் கணவனை உணர்வு ரீதியாகத் தாக்கி, தங்கை மீதான பாசத்தைத் தூண்டிவிட்டு, அவனைக்கொண்டே காய் நகர்த்தப் பார்க்கிறார் என்று புரிந்துபோயிற்று. என்னாகப் போகிறதோ என்கிற கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.

 

அந்த நேரம் பார்த்து அகத்தியனின் பைக் வந்து நின்றது.

 

கடவுளே! இன்றைக்கு என்று பாத்து இவன் ஏன் இந்த நேரம் வருகிறான்? எதுவும் செய்ய வழியற்று நின்றாள் இந்திரா. இத்தனை நாள்களாகப் பேசியும் பேசாமலும் இழுபட்டுக்கொண்டிருந்த விடயம், இன்றைக்கு ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதை மட்டும் நன்றாகப் புரிந்துகொண்டாள். அதற்கு முதல் என்னென்ன அனர்த்தங்கள் நிகழுமோ என்கிற பயம், அவள் நெஞ்சைக் கவ்விற்று.

 

அந்த நிமிடத்தில் தன் கணவரின் இல்லாமையை வெகுவாகவே உணர்ந்தார் சிந்தாமணி. அவர் இருந்திருக்க இத்தனை கலக்கம் இருந்திராதே. வீட்டின் தலைமகனாக நின்று இது எல்லாவற்றுக்கும் முடிவு கண்டிருப்பாரே. இப்போது, அத்தனை பாரமும் மகன் தோள்களில்.

 

பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்த அகத்தியன் கண்டது, தவிப்புடன் அமர்ந்திருந்த தமக்கையைத்தான்.

 

அங்கிருந்த கஜேந்திரனின் பெற்றவர்களைச் சம்பிரதாயத்துக்கு வரவேற்றுவிட்டு, சவீதாவைத் திரும்பியும் பாராமல், நேராக அவளின் முன்னே வந்து நின்றான்.

 

“என்னக்கா? ஏன் உங்கட முகம் ஒருமாதிரி இருக்கு?”

 

கணவனே கவனிக்கவில்லை. அவள் தம்பி வந்த நொடியே கண்டுகொண்டானே! உள்ளம் நெகிழ, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள்.

 

அன்னையின் பேச்சில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த கஜேந்திரனும் அப்போதுதான் கவனித்தான். “உண்மைதான். உன்ர முகம் ஒரு மாதிரித்தான் இருக்கு. உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்று எழுந்து வந்தான்.

 

எது எப்படியானாலும் கணவன் மற்றும் தம்பியின் அக்கறை மனத்துக்கு இதம் சேர்க்க, “இவன்தான் சும்மா பதறுறான் எண்டா நீங்களுமா? ஒண்டுமில்லை கஜன். கொஞ்சம் சோர்வா இருக்கு. அவ்வளவுதான்.” என்றாள் இதமான குரலில்.

 

“என்ன ஒண்டும் இல்ல? பத்துநாள் சாப்பிடாத ஆள்மாதிரி இருக்கிறீங்க.” என்று கடிந்துவிட்டு, “அம்மா, அக்காக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க.” என்றவன் அவள் அருகிலேயே அமர்ந்துகொண்டான்.

 

இந்திராவுக்கு யானை பலம் வந்த உணர்வு.

 

யாரும் எதுவும் சொல்லாதபோதும், மொத்தக் குடும்பமும் வந்திருக்கிறார்கள் என்றால் எதற்கென்று தெரியாதா? உள்ளே ஒருவித அழுத்தம் உருவெடுத்தாலும், என்னவென்றுதான் பார்ப்போமே என்கிற முடிவுக்கு வந்திருந்தான் அகத்தியன்.

 

எப்போதும் சிறு தலையசைப்பும் சம்பிரதாய நலன் விசாரிப்புடனும் விலகிப் போய்விடுகிற அகத்தியன், இன்றைக்கு என்று பார்த்து அங்கேயே அமர்ந்துவிட, இடையில் நின்றுவிட்ட பேச்சை மீண்டும் ஆரம்பிக்க முடியாமல் நின்றார் தவமலர்.

 

ஆனால், ஒரு முடிவுக்கு வந்திருந்த அகத்தியன் ஆரம்பித்து வைத்தான்.

 

“என்ன அத்தான்?” என்றான் நேராக.

 

தவமலருக்கு அது போதுமாயிற்று. “ஒண்டும் இல்ல தம்பி. நீங்களும் சவீதாவும் இப்பிடியே எவ்வளவு காலத்துக்குத் தனியாவே இருப்பீங்க சொல்லுங்கோ? இப்ப, முதல் இருந்த கோபதாபங்களும் கரைஞ்சு போயிருக்கும். அதுதான், திரும்பவும் உங்கள் ரெண்டு பேருக்குமே ஒரு கலியாணத்தைச் செய்து வச்சா ரெண்டு பேரும் சந்தோசமா வாழுவீங்க எண்டு பாக்கிறம்.” என்றவர் மகன் புறம் திரும்பி, “என்ன தம்பி பேசாம இருக்கிறாய். உன்ர மச்சானுக்கு எடுத்துச் சொல்லன். நீ சொல்லி அவர் கேக்காம இருப்பாரா? இல்ல, நீதான் அவருக்குக் கெடுதிக்கு ஒண்டைச் செய்வியா?” என்று, அவனையும் இலாவகமாக இதற்குள் இழுத்துவிட்டார்.

 

அவனும், “அம்மா சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு அகத்தியன். நீங்க கொஞ்சம் யோசிக்கலாமே?” என்று வினவினான்.

 

“இதில யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு அத்தான்? திரும்பவும் கட்டுறதுக்கா மூண்டு வருசமா நாயாப் பேயா அலஞ்சு, தரமாட்டன் எண்டு நிண்ட உங்கட தங்கச்சிட்ட இருந்து விவாகரத்து வாங்கினனான்? அதுக்கெண்டு நான் சிலவழிச்ச காசும் கொஞ்ச நஞ்சமில்ல.”

 

முகம் மாற, “காச வேணுமெண்டா நான் தாறன் அகத்தியன்.” என்றான் கஜேந்திரன்.

 

“இங்க காசு விசயமே இல்ல அத்தான்.” என்றான் அவனும் இறுகிய குரலில்.

 

“சரி அகத்தியன். நடந்த விசயங்களில எனக்கும் உடன்பாடு இல்லதான். அதால, அதையெல்லாம் விட்டுப்போட்டு இப்ப என்ன செய்யலாம் எண்டு யோசிங்கோ.”

 

“முதல் சொன்னதுதான் அத்தான். உங்கட தங்கச்சி எனக்குப் படிப்பிச்சது, வாழ்க்கை முழுதுக்கும் போதுமான பாடம். அதால இன்னொரு கலியாணமே எனக்கு வேண்டாம். அதுவும் உங்கட தங்கச்சியோட… நினைச்சே பாக்கேலாது.”

 

கஜேந்திரனின் முகம் அப்பட்டமாகக் கறுத்துப் போனது.

 

இந்திராவுக்கும் சிந்தாமணிக்கும் இனி என்னாகுமோ என்று நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. மற்றவர்கள் அறியாமல், அமைதியாகப் பேசு என்பது போன்று அகத்தியனின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தாள் இந்திரா.

error: Alert: Content selection is disabled!!