கடன் அன்பை முறிக்கும் – 25

அத்தியாயம் 25

 

 

அந்த வீட்டின் பின் பக்கக் கதவு, முன் பக்கக் கதவுகள் எல்லாம் திறந்துதான் இருந்தன. நீள் சதுர விறாந்தையின் ஒரு பக்கத்தில் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் புதிதாக வாங்கிப் போட்டிருந்தான் குரு.

 

அந்த விறாந்தையின் மறு பக்கத்தில் நடுவில் டீப்போ இருக்க, இருவர் அமரக் கூடியதான சோபா துண்டுகள் இரண்டு அதன் எதிரெதிர் திசையில் போடப்பட்டிருந்தன. சுவரோரமாக ஒரு தொலைக்காட்சிப்பெட்டி.

 

ஒரு பக்கச் சோபாவில் தூயவன் அமர்ந்திருந்தான். யாழிசை விறாந்தையின் நடுவில் நின்றிருந்தாள். அவள் பார்வை, கேட் வாசலில் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த குருவையே வெறித்திருந்தது.

 

அவள் நம்புகிற அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் அவளுக்குத் துரோகம் செய்வது தொடர்கதையாகவே நடந்துகொண்டிருப்பதில் முற்றிலும் உடைந்து நின்றாள்.

 

எப்போதும் யார் மனத்தையும் எதற்காகவும் நோகடித்துவிடக் கூடாது என்று நினைப்பாள். சுவர்ணா போன்றவர்கள் அவளை மாடாக்கி, வேலை வாங்குகிறார்கள் என்று தெரிந்தாலும் கூடச் சமாளித்துப் போகிறவள்.

 

அப்படியான அவளைத்தான் எல்லோரும் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

 

இதற்கெல்லாம் காரணம் அங்கே அமர்ந்திருப்பவன். அவனுக்கு அவள் அப்படி என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை. துரத்தி துரத்தி நோகடித்துக்கொண்டே இருக்கிறான்.

 

அவன் விருப்பத்தைச் சொல்லப்போகிறானாமே! சொல்லட்டும். அவனுக்கான பதில் அவளிடம்தானே உண்டு. அவளும் சொல்வாள்!

 

முடிவு மனத்தில் வந்ததும் தெளிந்து நிமிர்ந்தாள். “என்ன கதைக்கோணும் உங்களுக்கு?” என்றாள் அவனைத் திரும்பிப் பார்த்து.

 

அவ்வளவு நேரமாகத் தன் தொடைகளில் கைகளை ஊன்றித் தரையில் பார்வையைப் பதித்திருந்தவன் தலையை மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

 

அவள் பார்வையை அகற்றவில்லை. அவனையேதான் பார்த்திருந்தாள்.

 

அப்படி, நேர்கோட்டில் அவன் பார்வையை அவள் எதிர்கொண்ட விதமே அவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைச் சொல்லிற்று. கூடவே, முகத்தின் அதீத சிவப்பில் உச்ச பட்சக் கோபத்தில் இருக்கிறாள் என்றும் தெரிந்தது.

 

அந்தக் கோபத்தில் நியாயம் மட்டுமே உண்டு. மானை வலை போட்டுப் பிடிப்பது போல்தான் அவளையும் தன் முன்னால் பிடித்து நிறுத்தியிருக்கிறான்.

 

ஆனால், அந்தப் பக்கத்தில் அவளுக்கும் இந்தப் பக்கத்தில் இவனுக்கும் திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருக்கையில் அவனும்தான் என்ன செய்ய?

 

அவள் கோபம் நீங்கி, நிதானத்துக்கு வரும்வரையில் பொறுத்திருந்து, அதன் பின் தன்னை விளக்கி, மெது மெதுவாக அவள் மனத்தில் இடம் பிடிக்கிற அளவுக்கான கால அவகாசம் அவனிடம் இல்லை.

 

“என்ன கதைக்கோணும் எண்டு கேட்டனான்.” என்றாள் அழுத்தி.

 

ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்து தன் முன்னால் இருந்த இருக்கையைக் காட்டினான் அவன்.

 

எரிச்சலுடன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாகச் சென்று அமர்ந்தவள், “இப்ப சொல்லுங்க.” என்றாள்.

 

“கொஞ்சம் நிதானமா இரு இசை.” என்றான் கனத்த குரலில்.

 

திட்டம் போட்டுக் காய் நகர்த்திவிட்டு நிதானமாக இருக்கட்டுமாமே! ஆத்திரம்தான் வந்தது. ஆனாலும், வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“குருவில பிழை இல்ல. நான் கேட்டதாலதான் அவன் செய்தவன். அதால அவனோட கோவிக்காத.” என்றுவிட்டு அவள் முகம் பார்த்தான்.

 

அந்த முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தாள். அது அவனைப் பேச விடாமல் செய்வது போலிருக்க, “ப்ச்! கொஞ்சம் ஈஸியா இரு இசை.” என்றான் மெல்லிய தளர்வுடன்.

 

அவள் அசையவேயில்லை. அவனிடமிருந்து பார்வையை அகற்றவும் இல்லை.

 

ஒரு பிடிவாதத்துடன் தன்னையே பார்க்கிறாள் என்று விளங்க, அவளை ரசிக்கும் சின்ன முறுவல் அவனிடம். “என்னை உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா?” என்றான் சட்டென்று.

 

அவளிடத்தில் சட்டென்று ஒரு அதிர்வு. அவனை முறைத்துவிட்டு வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவன் முறுவல் நன்றாகவே விரிந்துபோயிற்று. சோபாவில் நன்றாகச் சாய்ந்துகொண்டு அவளையே பார்த்தான். கையாளக் கனமாக இருந்த அந்தச் சூழல் அப்படியே மாறிப்போயிற்று. இப்போது பேசுவதற்கும் இலகுவாக இருந்ததில், “சொறி!” என்றான் உள்ளத்திலிருந்து.

 

திகைப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள் அவள்.

 

“உன்னட்ட ஒருக்கா கூட நான் சரியா நடக்கேல்ல எண்டு எனக்குத் தெரியும். அப்பயெல்லாம் உன்னைப் பற்றித் தெரியாம, பிழையாத்தான் நினைச்சிருக்கிறன். என்னால நீ நிறையக் காயப்பட்டிருக்கிறாய் எண்டும் தெரியும். உண்மையா சொறி.”

 

அவனுடைய அந்த மன்னிப்பு வேண்டல் அவள் உள்ளத்தைத் தொடவே இல்லை. மாறாகக் கசந்த முறுவல் ஒன்று சின்னதாக வந்து போக, “நீங்க சொல்லுற இந்த சொறி நடந்து முடிஞ்ச எதையாவது மாத்தும் எண்டு நினைக்கிறீங்களா? இல்ல, அந்த நேரம் நான் பட்ட பாடுகள் எல்லாம் இல்லாம போயிடுமா?” என்று கேட்டாள் அவள்.

 

“எதுவுமே மாறாதுதான். அதுக்காக நான் செய்தது பிழை எண்டு தெரிஞ்ச பிறகும் சொறி கேக்காம இருக்கிறது சரி எண்டுறியா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

 

“இதச் சொல்லத்தான் இவ்வளவு பிளான் போட்டு என்னைக் கூப்பிட்டீங்களோ? இல்ல இண்டைக்குத்தான் நீங்க செய்தது எல்லாம் பிழை எண்டு உங்களுக்கு விளங்கினதா?”

 

“இதுக்கு முதல் உன்னோட கதைக்கிறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பமாவது நீ தந்திருக்கிறியா?” அவனும் விடாமல் கேட்டான்.

 

அவளும் விடவில்லை. “நான் தரேல்ல எண்டுறதுக்காக நீங்க உருவாக்கவே இல்லை. அப்பிடியா? இல்ல, உங்கள மாதிரி ஒருத்தரோட கதைப்பன் எண்டு எப்பிடி எதிர்பார்த்தீங்க? எங்களிட்ட உங்க அளவுக்குக் காசு பணம் இல்லைதான். அதுக்காக ரோச மானமும் இல்லை எண்டு நினைச்சிட்டீங்களோ? அண்டைக்கு அம்மா சொன்ன மாதிரி நாங்க சோத்தில போதுமான அளவுக்கு உப்புப் போட்டுச் சாப்பிடுற ஆக்கள்தான்.” என்றவள் பேச்சில் மலைத்துத்தான் போனான் தூயவன்.

 

“இவ்வளவு நாளும் பாத்தாலே பயந்து ஓடிப்போயிட்டு இப்ப எவ்வளவு தைரியமாக் கேள்விக்குக் கேள்வியாலேயே பதில் சொல்லுறாய்!” என்று சிலாகித்தான்.

 

அவன் பாராட்டுக்கு மயங்காமல், “இதுதான் நீங்க கதைக்க நினைச்சதா?” என்றதும் அவன் உதட்டில் நன்றாகவே முறுவல் மலர்ந்து போயிற்று.

 

அதனோடே, “நிறைய கதைக்கோணும் மாதிரித்தான் இருக்கு. ஆனா எதை எப்பிடிச் சொல்லுறது எண்டுதான் தெரியுது இல்ல.” என்று பிடறிக் கேசத்தைத் தன் இரு கைகளாலும் கோதிவிட்டவனுக்குச் சொன்னதுபோல் நெஞ்சுக்குள் நிறைய முட்டி மோதின.

 

ஆனால், அவளைச் சமாதானம் செய்வதுபோல், தன் விருப்பத்துக்குச் சம்மதம் சொல்ல வைப்பதுபோல் எதை, எப்படிச் சொல்வது என்று தெரியவே இல்லை.

 

முதலில் தன் விருப்புக்கு அவள் சம்மதிப்பாள் என்கிற நம்பிக்கை அவனுக்கே இல்லை. அப்படித்தானே கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டு அவனைத் திணறடித்துக்கொண்டு இருக்கிறாள்.

 

அதற்கென்று விடவா முடியும்? அதில், “காலம் முழுக்க உன்னோட வாழ ஆசையா இருக்கு எண்டு அண்டைக்குச் சொன்னேனே. அதுக்கு ஒரு பதிலும் நீ சொல்லேல்ல.” என்றான்.

 

“எனக்கு வீட்டில கலியாணம் பேசினம். அண்ணா யாரச் சொல்லுறாரோ அவரைத்தான் கட்டுவன்.” என்றதும் அவன் முகம் மாறியது.

 

“உன்ர கோபம் எனக்கு விளங்குது இசை. நான் இப்பிடி உன்னத் தனியா வர வச்சதும் பிழை எண்டு தெரியும். வேற வழியில்லாமத்தான் இதையெல்லாம் செய்தனான். அதுக்காக இப்பிடி எல்லாம் கதைக்காத!” என்றான் அவ்வளவு நேரமாக இருந்த இலகு பாவத்தைக் கைவிட்டு.

 

அவளுக்கும் கோபம் வந்தது. “இது என்ன அநியாயம்? நீங்க பதில் சொல்லச் சொன்னீங்க. நான் சொல்லிட்டன். இப்ப இப்பிடிக் கதைக்காத எண்டா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் அவள்.

 

உண்மையில் அவனுக்கு அவளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவேயில்லை. ஆடுகிற வரைக்கும் ஆடு ஆடு என்று ஆடிவிட்டு இன்றைக்கு என்னை ஏற்றுக்கொள் என்றால் அவளும் எப்படித்தான் ஏற்பாள்?

 

“என்னில இருக்கிற கோபத்தை விட்டுட்டு யோசிச்சுப் பதில் சொல்லு இசை.” என்றான் தன்மையாக.

 

“நானும் அவசரமா ஒண்டும் சொல்லேல்ல. நீங்க என்னட்ட அதச் சொல்லி நாலு நாள் ஆச்சே. இத்தின நாளும் யோசிக்காமையா இருந்திருப்பன்?” என்று கேட்டு அவன் வாயை அடைத்தவளுக்கு அது போதுமாக இல்லை. “உங்கட குடும்பமே பிடிச்சுத் தொங்குமே ஒரு சாதி. அத மறந்திட்டீங்களோ? உங்களுக்கு அதுதானே முக்கியம்.” என்றாள் எள்ளலாக.

 

அப்படி அவள் குடும்பத்தை இழுத்ததில் அவன் முகம் மாறியது. ஆனாலும், தவறு அவர்கள் பக்கம் என்பதில் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

 

 

“என்னை உனக்குப் பிடிக்கேல்லையா?”

 

“இல்ல பிடிக்கேல்ல!” அவன் கேட்டு முடிக்க முதலே அவள் பதில் சொன்ன விதம், கோபத்தோடு சேர்த்து அவனைச் சினம் கொள்ளவும் வைத்தது.

 

“வேணுமெண்டு இப்பிடி எல்லாம் கதைக்காத இசை!” என்று எச்சரித்தான்.

 

அவள் பயப்படவேயில்லை. எப்போதும் அவனுடைய இணைந்த புருவங்கள் அவளை மிரட்டும். இன்றைக்கு அதை அவள் கவனிக்கவே இல்லை. “நான் அண்ணா சொல்லுறவரத்தான் கட்டுவன்.” என்றாள் இப்போதும்.

 

“எனக்குக் கோவத்தக் கிளப்பாத இசை!” என்றான் அதட்டலாக.

 

“நான் அண்ணா சொல்லுறவரத்தான் கட்டுவன்.” அவளின் அந்தக் கூற்று அவனைக் கோபப்படுத்துகிறது என்று தெரிந்ததும் திரும்பவும் அதையே சொன்னாள்.

 

தன்னைக் கோபப்படுத்துவதற்காகத்தான் திரும்ப திரும்பச் சொல்கிறாள் என்று அவனுக்கும் விளங்கியது. ஆனாலும், கொதித்துக்கொண்டு வந்தது அவனுக்கு. விழிகளை இறுக்கி மூடி மூச்சை இழுத்து விட்டான்.

 

“இன்னொருத்தனிட்ட உன்னக் குடுத்திட்டுக் கண்ணீர் வடிச்சுக்கொண்டு இருக்க என்னை என்ன கேனயன் எண்டு நினைச்சியா?” இழுத்துப்பிடித்த பொறுமையுடன் கேட்டான் அவன்.

 

“நீங்க ஆரா வேணுமெண்டாலும் இருங்க. எனக்கு அதைப் பற்றிக் கவலையே இல்ல. ஆனா அண்ணா சொல்லுறவரத்தான் கட்டுவன்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “ஏய் என்னடி, சீண்டிப் பாக்கிறியா? திரும்ப திரும்ப அதையே சொல்லுற!” என்று சீறிக்கொண்டு பாய்ந்து வந்தான் அவன்.

 

அவள் நடுங்கியே போனாள். விழிகளில் அனல் கக்க, முகம் சிவந்து கொதிக்க தன் முன்னால் நின்றவனைக் கண்டு சோபாவோடு சோபாவாக ஒன்றினாள். ஆனாலும் விடாமல், “டீ போட்டீங்க, தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

“போட்டா என்ன செய்வாய்? அடிப்பியோ? அடி அப்ப!” என்று அவளின் இரண்டு பக்கமும் கையை ஊன்றிக்கொண்டு அவள் முகத்தின் முன்னே தன் முகத்தை நிறுத்தினான் அவன்.

 

அவளால் அவன் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கவே முடியவில்லை. இணைந்திருந்த அந்தப் புருவங்கள் திரும்பவும் மிரட்டின. “எ…ன்ன செய்றீங்க? ஒரு பொம்…பிளைப் பிள்ளையைத் த…தனியா கூப்பிட்டு இப்பிடித்தான் நடப்பீங்களா? த…ள்ளிப் போங்க!” அவனைப் பாராமல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, ஒரு பக்கமாக முகம் திரும்பியபடி திக்கினாள் அவள்.

 

அவனிடம் சத்தமே இல்லை. போய்விட்டானா என்ன? மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தாள். சற்று முன் அவள் பார்த்த அவன் கோப முகம் பொய்யோ எனும்படியாக அவன் கண்களில் வேறு பாவம்.

 

அவளுக்குள் ஒரு வகைத் திகைப்பு. ஒரு கணம் கூட அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல், “த்த…தள்ளிப்போங்க ப்ளீஸ்!” என்று தன்னை மீறிக் கெஞ்சினாள்.

 

“கெதியா ஓம் எண்டு சொல்லு இசை. என்னால நிறைய நாளைக்குத் தள்ளி இருக்கேலாது.” கரகரத்த குரலில் சொல்லிவிட்டுச் சென்று பழையபடி அமர்ந்துகொண்டவனாலும் கொஞ்ச நேரத்துக்குப் பேசவே முடியவில்லை.

 

பயத்தில் படபடத்த விழிகளும் நடுங்கிய இதழ்களும் அவனை என்னவோ செய்தன. எழுந்துபோய் அங்கிருந்த மேசையில் இருந்த தண்ணீரை எடுத்துக் கடகடவென்று வாயில் சரித்தான். “உனக்கும் வேணுமா?” என்றான் அவளிடம் திரும்பி.

 

மறுப்பாகத் தலையை அசைத்தவளுக்கு நெஞ்சின் படபடப்பு அடங்குவதாக இல்லை. “நான் போகட்டா?” என்றாள் மெல்ல.

 

அவளை நன்றாகப் பயமுறுத்திவிட்டது விளங்கியது. “சும்மா சும்மா எனக்குக் கோவம் வரும்தான். அதுக்காக நீ பயப்பிடாத.” என்றான் சமாதானமாக.

 

“எனக்கு நேரமாகுது.” என்றவளுக்கு இன்னுமே உள்ளே வராமல் வெளியே நிற்கும் குருவின் மீதான ஆதங்கம் அதிகரித்துப் போயிற்று.

 

அண்ணா என்று அழைத்தால் மட்டும் அவன் அண்ணாவாகிவிடுவானா என்ன?

error: Alert: Content selection is disabled!!